Friday 29 November 2013

சௌராஷ்ட்ரா சமூகம் - குலதொழில்


சௌராஷ்ட்ரா குலத்தொழில்::


தமிழ்நாட்டில் வாழும் சௌராஷ்ட்ரா மொழி இன மக்களின் குலதொழிலாக சொல்லப்படுவது நெசவு தொழில்

தமிழ்நாட்டுல், வேறு மொழி இன மக்களும் நெசவு தொழில் செய்கின்றனர்

அன்றைய சௌராஷ்ட்ரா தேசத்தில் சௌராஷ்ட்டிரர்கள் நெசவு தொழிலில் சிறந்து விளங்கிய காரணத்தால் தான் அவர்கள் தமிழ்நாட்டில் குடியேற வாய்ப்பு கிடைத்தது என்று வரலாறு கூறுகிறது. நெசவு என்பது துணி நெய்தல் மட்டுமல்ல. அதற்கு சாயம் ஏற்றுதல், அதில் ஜாரிகை வேலைபாடு செய்தல், மற்றும் மெல்லிய ஆடைகள் நெய்வதில் சிறப்பு தன்மை பெற்றுவதும் இதில் அடங்கும்.

சௌராஷ்ட்டிரர்கள் நெசவு தொழிலில் சிறந்து விளங்க காரணம் என்ன ? . மற்ற தொழில்களில் குறிப்பாக விவசாயத்தில் ஈடுபட முடியாமல் போக காரணம் என்ன ?

இன்றைய கணக்குபடி, பருத்தி உற்பத்தியில் முதலிடம் வகிப்பது குஜராத் மாநிலம் அதிலும் சௌராஷ்ட்ரா பகுதியில் தான் பருத்தி உற்பத்தி அதிகம். இது முந்தைய சௌராஷ்ட்ரா தேசத்திலிருந்து தொடர்ந்து வரும் நிகழ்ச்சி. சௌராஷ்ட்ரா தேச பகுதிகளில் விவசாயத்திற்க்கு ஏற்ற நிலபகுதி அல்ல.

எங்கு பருத்தி உற்பத்தி அதிகமாக இருக்கிறதோ அங்கு தான் அதை சார்ந்த நெசவு தொழிலும் தொடங்கும். எனவே சௌராஷ்ட்ரா தேசத்தில் வாழ்ந்த பெரும்பான்மையான மக்கள் நெசவு தொழிலில் ஈடுபட்டது, அதை சார்ந்த பிற தொழில்களில் ஈடுபட காரணமாய் அமைந்திருக்கிறது.

குறிபிட்ட பகுதி மக்களில் பெரும்பான்மையான மக்கள் ஒரே தொழிலை செய்யும் போது, அந்த பகுதி மக்களின் குலதொழிலாக அது மாறிவிடுகிறது. அந்த வகையில் சௌராஷ்ட்ரா பகுதி மக்களின் குலதொழிலாக நெசவு தொழில் மாறியது. அவர்கள் தமிழ்நாட்டுக்கு குடிபெயர்ந்த பின்பும் பெரும்பான்மையான மக்கள் அதே தொழிலில் ஈடுபட்ட காரணத்தால், தமிழ்நாட்டில் வாழும் சௌராஷ்ட்ரா மக்களின் குலதொழிலாக நெசவு தொழில் கூறப்படுகிறது.

இன்றைக்கு அனைத்து சௌராஷ்ட்ரா மொழி இன மக்களும் நெசவு தொழில் செய்கின்றனரா என்றால் நிச்சியமாக இல்லை. இன்றைய சௌராஷ்ட்ரா மக்கள் தொகையில் 5% மக்கள் தான் நெசவு தொழிலில் ஈடுபட்டிருப்பார்கள்.

பெரும்பான்மையினர் நெசவு தொழிலை கைவிட்டுவிட்டு வேறு தொழிலுக்கு மாறிவிட்டனர்.
1. அவர்கள் அடிப்படையில் வேறு தொழிலில் ஈர்க்கப்பட்டு அந்த தொழிலுக்க்கு மாறியிருக்கலாம்.
2. நெசவு தொழிலில் கிடைக்கும் வருவாயை விட வேறு தொழில்கள் அதிக வருவாய் கிடைக்கிறது என்ற காரணத்தாலும் மாறியிருக்கலாம்.
3. கல்வியறிவு பெற்றதன் காரணமாக , நிலையான மாத சம்பளம் கிடைக்கும்  வேலைக்கு மாறியிருக்கலாம்.
4. நெசவு தொழிலில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளை சமாளிக்க முடியாமலும், கைத்தறி தோழிலுக்கு போட்டியாக விசைதறி தொழில் முன்னேற்றம் அடைந்ததால், தாக்குபிடிக்க முடியாமலும் வெளியேறியிருக்கலாம்.
5. கைத்தறி துணிகளுக்கு மக்களிடேயே விருப்பம் குறைந்த காரணத்தால், நெசவு தொழிலை விட்டு வெளியேறியிருக்கலாம்.

ப்போதும் , கைத்தறி நெசவு தொழிலில் பல குடும்பங்கள் ஈடுபட்டிருப்பதற்க்கு காரனம் என்னவென்று பார்த்தால் அவர்கள் சொல்லும் காரணம் (1) இது எங்கள் குலதொழில் என்பதும் (2) இதை தவிர எங்களுக்கு வேறு தொழில் தெரியாது என்பதும் தான்.

ஆனால், உண்மை அப்படியிருக்க வாய்பில்லை என்றே தோன்றுகிறது. குல தொழில் என்ற காரணத்தாலேயே எவரும் ஏழ்மையில் வாழ்ந்துகொண்டு அந்த தொழிலை தொடர்ந்து செய்து கொண்டிருக்கமாட்டார்கள்.

எங்களுக்கு வேறு தொழில் செய்ய தெரியாது என்பதும் காரணமாக இருக்கமுடியாது. வேறு தொழிலுக்கு சென்றவர்கள் இயற்கையாகவே வேறு தொழில் தெரிந்த காரணத்தால் சென்றார்களா என்றால் நிச்சியமாக இல்லை என கூறலாம். வேறு தொழிலில் போய் சேர்ந்த பின்பு அந்த தொழிலை கற்றுகொண்டிருப்பார்கள்.
 
இப்போது நெசவு தொழிலை செய்துகொண்டிருப்பவர்கள் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதும் ஏற்புடையதல்ல. வாய்ப்பு அவர்களை தேடி வராது. வாய்ப்புகளை தேடி செல்ல வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் போது உடனடியாக பயன்படுத்தி கொள்ள தெரிந்திருக்க வேண்டும்.

இன்றைக்கு, நெசவு தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெரும்பான்மையினர் , எங்களுக்கு கல்வி கற்க எங்களது பொருளாதரம் இடம் கொடுப்பதில்லை என கூறுகின்றனர்

நெசவு தொழிலில் போதிய வருவாய் இல்லை ஏழ்மையில் இருக்கிறோம் என்று கூறுபவர்கள் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். எந்த குல தொழிலை செய்பவர்களும் ஏழ்மையில் தான் இருக்கிறார்கள். வேறு தொழில் செய்தால் வசதியாக வாழலாம் என்றால் அந்த தொழிலுக்கு மாறுவதற்க்கு எது தடையாய் இருக்கிறது. யாராவது இவர்களை தடுக்கிறார்களா ? நிச்சியமாக இல்லை. இவர்களக்கு தெரியும் வேறு தொழில்களிலும் போதிய வருவாய் இல்லையென்பது. எனவே, அங்கு சென்று புதிய தொழிலை கற்று சிரமபடுவதை விட தெரிந்த தொழிலையே தொடர்ந்து செய்யலாம் என இதையே செய்து கொண்டிருக்கிறார்கள்.

கல்வி கற்க வசதியில்லை என்பது ஒரு காரணமாக சொல்லப்பட்டால், இது நெசவாளர்களுக்கு மட்டும் உள்ள பிரச்சனை அல்ல. போதிய வருவாய் இல்லாத எந்த தொழில் செய்பவருக்கும் இந்த பிரச்சனை உள்ளது.

கைத்தறி நெசவு தொழிலை புதிய முறையில் செய்ய முயற்சிசெய்யாமல் இருப்பதும், உற்பத்தி செய்த துணிகளை சரியான முறையில் விற்கவும் முயற்சி செய்யாமையும் முக்கிய காரணங்களாகும்.

அரசு உதவி செய்ய வேண்டும் என்பது ஏற்கதக்கது தான். ஆனால்,தொடர்ந்து, இலவசங்களையும், சலுகைகளையும் வழங்கி ஒரு தொழிலை எந்த அரசாங்கத்தாலும் வாழ வைக்க முடியாது. அல்லது, மக்கள் அனைவரும் கைத்தறி துணிகளை தான் பயன்படுத்த வேண்டும் என ஆனையிட முடியாது. கைத்தறி துணிகளை நெசவு செய்யும் நெசவாளிகளே கைத்தறி துணிகளை அதிக அளவில் பயன்படுத்துவதில்லை என்பது தான் வேதனைகுரிய விசயம்.

ஏதோ இன்றைக்கு தான் நெசவாளர்கள் துன்பபடுகிறார்கள் என்பது போல பேசப்படுகிறது. விசைதறிகள் மூலம் ஆடைகள் தாயரிப்பதற்கு முன்பே கூட நெசவாளிகன் நிலை இப்படி தான் இருந்திருக்கிறது. கைத்தறி ஆடைகளை மட்டுமே உபயோகிக்கப்பட்ட கால கட்டத்திலும், கைத்தறி நெசவாளர்களுக்கு போதிய வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை போதிய வருவாய் இல்லாமல் ஏழ்மை நிலையில் இருந்துள்ளனர். தொழில் செய்ய வாய்பிருந்த காலத்தில் கூட நெசவாளர்களே ஏழ்மை நிலையில் இருந்த போது, கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்திய மக்கள் உணவுக்கே சிரமபட்ட நிலையில் புதிய ஆடைகளை வாங்கி உடுத்தி, நெசவு தொழிலை மேம்படுத்த வாய்பில்லாமல் போனது.

1887ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் சௌராஷ்ட்ரா பிராமண மாநாட்டிலும் இது குறித்து பேசப்பட்டுள்ளது. நெசவாளர்கள் ஒரே விலையில் விற்க வேண்டும் (போட்டியின்  காரணமாக விலை குறைப்பு செய்ய கூடாது) தரமான கெட்டி சாயங்களை உப்யோகித்து துணிகளை தயாரிக்க வேண்டும், கூட்டுறவு முறையில் செய்ல்பட வேண்டும்,  இயந்திர உதவியுடன்(விசைதறி) துணிகளை உற்பத்தி செய்ய வேண்டும், அரசின் கவனத்திற்க்கு கொண்டு சென்று உதவிகள் பெற வேண்டும் என கேட்டுகொண்டதுடன் உதவி செய்யவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

ஒரு சிறிய சமுகத்தில், சில குடும்பங்களே செய்யும் தொழில் விருத்தியடைய , செய்யும் தொழிலை மாற்றிகொள்ள எத்தனை நூற்றாண்டுகள் தேவை.  125 ஆண்டுகளுக்கு பின்பும் அதே நிலை நீடிக்கிறது என்றால், அடிப்படையில் தொழிலில் உள்ள குறைபாடும், நெசவாளிகளிடம் உள்ள குறைபாடும் தான் காரணம்.

நெசவாளிகளின் ஏழ்மையை போக்க அனைத்து உதவிகளையும் அரசு செய்ய முடியாது. அரசியல்வாதிகள், மக்கள் ஏழ்மையில் இருந்தால் தான் அவர்கள் வாழ முடியும் என்பதை தெரிந்து வைத்துள்ளார்கள்

ஏழ்மை என்பது எப்போதும் இருந்துகொண்டு தான் இருக்கும். ஏழ்மை என்பதே ஒரு மனோநிலை தான். இன்றைக்கு இருக்கும் நெசவாளிகள் அனைவரிடமும் கேட்டு, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வருமானத்தை கொடுத்துவிட்டால் நாங்கள் வறுமையிலிருந்து வெளியே வந்துவிட்டோம் இனி எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று மகிழ்சியாக வாழ்வார்களா ? இல்லை. சில வருடங்களுக்கு பின்பு மற்றவர்களுடன் தங்களை ஒப்பிட்டுகொண்டு,  மீண்டும் ஏழ்மையில் தான் இருக்கிறோம் என்று சொல்வார்கள் . எனவே தான் ஒப்பிட்டுதல் என்பது இருக்கும் வரை ஏழ்மை என்ற சொல் இருக்கும்.

மேலும், குறிப்பாக சௌராஷ்ட்ரா சமூகத்தில் இருக்கும் நெசவாளிகள் தங்களது வாழ்க்கை முறையை மாற்றியமைத்து கொள்ள வேண்டும். புத்தியை பயன்படுத்தி முடிவெடுக்க  வேண்டிய விசயங்களை மணத்தால் யோசித்து முடிவெடுக்க கூடாது.

அரசு உதவி என்பது கோழி அடைகாப்பது போல. ஓரளவுக்கு தான் உதவிகளை செய்ய முடியும். முட்டையை உடைத்து கொண்டு குஞ்சு தானாக  வெளியே வந்து தனது வாழ்க்கையை ஏற்படுத்திகொள்ளவதை போல தான் நெசவாளர்களும் தங்கள் வாழ்க்கையை தானே அமைத்துகொள்ள வேண்டும். யாரும் முட்டையை உடைத்து குஞ்சை வெளியே கொண்டுவரமாட்டார்கள்.

Thursday 28 November 2013

சௌராஷ்ட்ரா சமூகம் - வருட பிறப்பு

சௌராஷ்ட்ரா விஜயாப்தம்,


தமிழ் நாட்டில் சௌராஷ்ட்ரா மொழி இன மக்களின் புத்தாண்டு தினம் எது எப்போது என்று தெரியவில்லை. 

உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் எல்லா 
இன மக்களுக்கும், மொழியினருக்கும் ஒரு வருட பிறப்பு தினம் உள்ளது. இது, ஆங்கில வருட பிறப்பை உலக மக்கள் ஏற்றுகொண்ட பின்பு, மற்றவர்களுக்கும் தங்களுக்கென்று ஒரு தினத்தை ஏற்பட்டுத்தியுள்ளனர். அவை சுமார் 2013 வருடங்களுக்கு சற்று முன்பாகவோ அல்லது சற்று பின்பாகவோ உள்ளது. அதற்கு முன்பு இந்த ஆண்டு கணக்குகள் இல்லையென்பது போல் பொருள்படுகிறது. இவைகளை உலகம் ஏற்றுகொண்டிருப்பதால், சௌராஷ்ட்டிரர்கள் ஏற்படுத்தியுள்ள இந்த ஆண்டு கணக்கையும் ஏற்கதான் வேண்டியுள்ளது.
கி.பி.2013 என்பதும் கற்பனை எண்களே. ஏதுநாதர் பிறந்த அன்று இவர் கடவுளாக மாறபோகிறார் எனவே இன்று முதல் கணக்கிட்டு வருடங்களை எண்களாக குறிப்பிட வேண்டும் என்று யாரும் தயார் நிலையில் இருந்ததில்லை. அவர் தோன்றி, வாழ்ந்து மறைந்து சில நூற்றாண்டுகளுக்கு பின்பே, அவரது பிறந்த தினம் என்று ஒருநாள் கணிக்கப்பட்டு பின்பு அதுமுதல் வருடங்களை எண்களாக கணித்திருப்பார்கள்.

தற்சமயம் சௌராஷ்ட்ரா ஆண்டை, சௌராஷ்ட்ரா விஜயாப்தம் என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது, சௌராஷ்ட்டிரர்கள் கி.பி.1025 வருடத்திலிருந்து  கணக்கிட்டு (2013 – 1025 =  988 ) இன்று 988வது சௌராஷ்ட்ரா வருடம் என்று குறிப்பிடபடுகிறது. வேறு சிலர் ,சௌராஷ்டிரர்கள் விஜய நகர் பேரரசில் குடியேறிய கி.பி.1312ல் ஆரம்பித்து, சௌரஷ்ட்ரா ஆண்டை கணக்கிடுகின்றனர். ( 2013- 1312 = 701) இப்படி குறிப்பிடுவது அண்மை காலத்தில் தான் ஏற்ப்பட்டுள்ளது. இது யாரல், எவ்வாறு ஏன் ஆரம்பிக்கப்பட்டது என தெரியவில்லைகி.பி.1025 என்பது , சௌராஷ்ட்ரா தேசத்திலிருந்து குடிபெயர்ந்த வருடம் என்ற கணிப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

1887ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சௌராஷ்ட்ரா பிராமண மாநாட்டில், 1300 வருடங்களுக்கு முன்பு வந்து குடியேறியவர்கள்  என்று குறிப்பிட்டுதான் பேசியுள்ளனர். அவர்கள் வெளியிட்ட புத்தகத்தில் கூட ஆங்கில ஆண்டு எண்ணை தான், 1887 என்று தான் குறிப்பிட்டுள்ளார்கள். சௌராஷ்ட்ரா வருடம் என்று எதையும் குறிப்பிடவில்லை. புத்தாண்டு தினம் எது என்று என்பது போன்ற விசயங்களை பேசவில்லை

சௌராஷ்ட்ரா வரலாற்று குறிப்பு எழுதியிருப்பவர்கள் அனைவருமே தோராயமாக தான், சௌராஷ்ட்ரா தேசத்திலிருந்து வெளியேறிய வருடத்தை குறிப்பிடுகின்றனர். அது 800 முதல் 1400 வரை என்று வேறுபடுகிறது.

இதில் 1025 ஆண்டுகள் என்று துல்லியமாக கணக்கிடபட்டது எவ்வாறு என்று தெரியவில்லைஒரு வாதத்திற்க்காக இது சரியானது தான் என்று  ஒப்புகொண்டாலும் இது யாரல் அறிவிக்கப்பட்டு எப்படி மக்களால் ஒப்புகொள்ளப்பட்டது என்பதற்க்கு எந்த ஆதாரமும் இல்லை. ஒரு சிலர் உபயோகபடுத்த ஆரம்பித்தவுடன் மற்றவர்கள் கேள்வி கேட்காமல் பின்பற்றியிருப்பார்கள் என தோன்றுகிறது.

வருடத்தை கணித்தவர்கள், வருட பிறப்பு தினத்தை ஏன் கணிக்கவில்லை. அதாவது 1025 ஆம் வருடம் எந்த தேதியில் வந்தார்கள் என்ற அடிப்படையில் கணிக்க முடியாது. முதன் முதலில் முதல் சௌராஷ்ட்டிரன் தமிழ்நாட்டில் காலடி வைத்த தினம் என்று எதையும் குறிப்பிட முடியாது.

இப்படிபட்ட நிலையில், கி.பி.1025 என்பதும் ஒரு கற்பனை எண்ணாக தான் இருக்கமுடியும்.

இந்த நிலையில், எந்த வித தலைமையும் இல்லாத சௌராஷ்ட்ரா சமூகம் எதை ஒன்றையும் தீர்மானமாக கூறிவிட முடியாது..

அண்மையில் வருட கணக்கை ஆரம்பித்தவர்கள், அங்கிருந்து ஆண்டுகளூக்கு பெயர்கள் ஏதேனும் வைத்தார்களா. (தமிழில் ஆண்டுகளுக்கு பெயர் உண்டு. 60 ஆண்டுகள் முடிந்து மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொடங்கும்.) அதுபோன்று சௌராஷ்ட்ரா வருடத்தை ஆரம்பித்தவர்கள் ஆண்டுகளுக்கு ஏதெனும் பெயர் வைத்தார்களா ?

தமிழில் இருக்கும் திருவள்ளுவர் ஆண்டு கணக்கையே தங்களுக்கு வைத்துகொள்ளாமல் தங்களுகென்று தனி ஆண்டு முறையை ஆரம்பித்தவர்கள், சௌராஷ்ட்டிரர்கள் வருட பிறப்பு தினத்தை ஏற்படுத்த தவறியது ஏன் என்று தெரியவில்லை. தமிழர்களின் வருட பிறப்பு தினத்தையே சௌரஷ்டிரர்களும் வருட பிறப்பு தினமாக கொண்டாடுகிறார்கள்

இன்றைய குஜராத் மாநிலத்தில் அமைந்திருந்த சௌராஷ்ட்ரா தேசத்திலிருந்து வந்தவர்கள் என்றால், இன்றைய குஜாரத்தின் வருட பிறப்பு தினத்தையே தமிழ்நாட்டு சௌராஷ்ட்டிரர்களும் கடைபிடிக்கலாமே.

இன்றைய குஜராத்திகளின் வருட பிறப்பு தினம் எவ்வாறு ஏற்ப்பட்டுள்ளது என்பதை கவனிப்போம்.

குஜராத் நாட்காட்டி (calendar) கணக்கின்படி கார்தக் ( Kaartak.) மாதத்தில் அதாவது ஆங்கில மாதம் அக்டோபர்(October)  தமிழ் மாதம் கார்த்திகை மாதத்தில் வருகிறது. குறிப்பாக தீபாவளிக்கு மறுநாள் குஜாதியர்களின் புதுவருடமாக கொண்டாடப்படுகிறது. குஜராத் புத்தாண்டை பெஸ்டு வரஸ்(Bestu Varas)மற்றும் வரஷா-பிரதிபா Varsha-pratipada அல்லது படவா Padwa  என்றும் குறிப்பிடுகிறார்கள்.

கிருஷ்ண பகவான் வரஜா மக்களுடன் சேர்ந்து மழையை நிறுத்த கோவர்தன பூஜை செய்ததாகவும் அன்றிலிருந்து அன்றைய தினத்தில் கோவர்தன மலையை பூஜை செய்ய ஆரம்பித்து அன்றைய தினத்தையே புத்தாண்டு தினமாக ஏற்றுகொண்டதாக வரலாறு கூறுகிறது.

வருட பிறப்பு தினத்தை ஏற்படுத்த தவறியவர்கள் ,மாதங்களின் பெயர்களையும் ஏற்படுத்த தவறிவிட்டனர். தமிழ் மாத பெயர்களையே  உபயோகிக்கின்றனர். புதிதாக ஏற்படுத்தியிருக்கலாமே.

தமிழ் மாதங்களின் பெயர்களை உபயோகிக்கும் சௌராஷ்டிரர்கள், ஏன் தமிழ் தின பெயர்களை – (திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஜாயிறு) என்று உபயோகிக்காமல், வடநாட்டவர்கள் உபயோகிக்கும் பெயர்களை பயன்படுத்துவது ஏன்.

அதாவது, வருடங்களை குறிப்பிட கிருஸ்துவ மத தொடர்பான எண்களையும், மாதங்களை குறிப்பிட திராவிடர்கள் (தமிழர்கள்) உபயோகிக்கும் பெயர்களையும், தினங்களை குறிப்பிட ஆரியர்கள் (வட இந்தியர்கள்) உபயோகிக்கும் பெயர்களை கலந்து உபயோகிக்கும் சௌராஷ்ட்டிர்ர்கள் தங்களுக்கென தனி அடையாளம் இருக்கிறது, சடங்கு சம்பிரதாயங்கள் இருக்கிறது என  வரலாற்றை பதிவு செய்வதன் மூலம் , ஒரு தவறான முன்னுதாரனத்தை ஏற்படுத்துகிறார்களோ என ஐயம் எழுகிறது. வரலாற்றை எழுதும் முன்பு இது போன்ற விசயங்களை ஆராய வேண்டும்.

எழுதப்படும் வரலாற்றை சரிபார்க்கவோ தணிக்கை செய்யவோ, விவாதித்து சரிபார்த்து திருத்தம் செய்யவோ, சமூகத்தில் எவ்வித அமைப்பும் இல்லை. இவைகளை அங்கீகரிக்கவோ, நிராகரிக்கவோ அரசு துறைகளோ இல்லை.

வரலாறு என்பது மர்மம் நிறைந்தது. அதை கண்டு வியப்படையலாம். பாரட்டலாம் பயப்படலாம்.கொண்டாடலாம். மர்மங்களை. அவிழ்க்க முயற்சி செய்யலாம்.

தங்களுக்கிருக்கும் சமூக அந்தஸ்து, ஆட்சி அதிகாரம், இவைகளை கொண்டு மீண்டும் மீண்டும் தெரியாத விசயங்களை இது தான் உண்மை என்பது போல எந்த சரித்திரம் பதிவு செய்வது சரிதானா?


Wednesday 27 November 2013

சௌராஷ்ட்ரா சமூகம் - மடாதிபதி நியமணம்


சௌராஷ்டரா மடாதிபதி::


தமிழ்நாட்டில் வாழும் சௌராஷ்ட்ரா மொழி இன மக்களின் மடாதிபதி யார் ? . அப்படி யாரவது இருந்தார்களா ? இருக்கிறார்களா என்ற கேள்விக்கு விடை கான்பதற்க்கு முன்னால் மடாதிபதி என்றால் யார் என்பதை பார்ப்போம்.
மடாதிபதி என்பவர்  (1) ஸ்மஸ்கிருத அறிவு பெற்றிருக்கவேண்டும்.(2) நான்கு வேதங்களைம் கற்றிருக்க வேண்டும்.(3)  ஆகம விதிகளை அறிந்திருக்கவேண்டும் (4)  தர்ம மற்றும் கிரியா சாஸ்திரத்தை அறிந்திருக்க வேண்டும். (5) சைவ சித்தாந்த அறிவு பெற்றிருக்க வேண்டும் (6) ஆச்சார அனுஷ்டான்ஙகளை கடைபிடிக்க வேண்டும். (7) தீட்சை பெற்றிருக்க வேண்டும்.(8) சைவ மந்திரங்கள் அறிந்திருக்க வேண்டும் (9) முத்திரைகள் அறிந்திருக்க வேண்டும். (10) கிரியை பற்றி அறிந்திருக்கவேண்டும். (11) தர்க சாஸ்திர அறிவு பெற்றிருக்க வேண்டும்.
மடம் என்றால் என்ன ?
மடம் என்பது தெய்வீகத்தின் இருப்பிடம். ஆன்மிகத்தின் உறைவிடம்.
மடாதிபதியின் கடமைகள் என்ன ?
புராதனமான ஆலயங்களைத் திறம்பட நிர்வகிப்பது, மொழியையும் கடவுள் பக்தியையும் வளர்ப்பதுவேதங்களை கற்றுகொடுப்பது என்பன
மடங்கள் எப்படி ஏற்படுகிறது ?
வாரிசுகளே இல்லாமல் இறந்து போனவர்கள், பெரும் செல்வந்தர்கள், மதத்தின் மீது தீவிரப் பற்று கொண்டவர்கள், கோயில் குளங்களை அதிகம் நாடிச் சென்றவர்கள் இப்படிப்பட்டவர்கள் நன்கொடையாக அள்ளிக்கொடுத் வீடுகள், நிலங்கள், தங்க ஆபரணங்கள், தோப்புகள் மூலம் கிடைத்த செல்வத்தின் மூலம் ஏற்படுத்தபட்டவை.
மடங்களின் கடமைகள் என்ன ?  
 மடங்களின் சொத்துகளை நிர்வாகித்து இதன் மூலம் கிடைக்கும் வருமானத்திலிருந்து  வேதங்களை கற்றுகொடுப்பது, கோவில்களை நிர்மானிப்பது பழைய கோவில்களை புணரமைப்பது, மக்களின் பொது நன்மைக்கு, தர்ம ஸ்தாபனங்களை உருவாக்குவது, கல்வி கூடங்கள் மற்றும் மருத்துவ வசதிகள் செய்வது மற்றும் தங்கள் பகுதியில் உள்ள பிராமணர்கள் செய்யும் வைதீக சடங்குகளை கண்கானிப்பது, அவர்களுக்கு பயிற்சி கொடுப்பது போன்றவை.
மடங்கள் யார் பெயரால் நிறுவபடுகிறது ?
இறைவன் பெயரிலும் , அரசர் பெயரிலும்,  நாயன்மார்கள் பெயரிலும், சமய அடியார்களின் பெயரிலும்,  குழுவினர் பெயராலும் மடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சௌராஷ்ட்ரா தேசத்திலிருந்து ,தமிழ்நாட்டில் வந்து குடியேறிய சௌராஷ்ட்ரா பிராமணர்கள், தாங்களும் தமிழ்நாட்டில் வாழும் பிராமணர்களுக்கு இனையானவர்கள் என்ற உரிமையை அன்றைய ராணி மங்கமாளிடமிருந்து சாசனம் எழுதி வாங்கிய பின்னர் வேறு ஒரு பிரச்சனையை சந்திக்க வேண்டி வந்தது.
சௌராஷ்ட்ரா பிராமணர்களை பார்த்து தமிழ் தெலுங்கு பிரமணர்கள் உங்களது குரு யார் என்ற கேள்வியையும், யாரிடம் தீட்சை பெற்றீர்கள் என்ற கேள்வியையும் எதிர் நோக்க வந்தது. இதற்கு யாரிடமும் எந்த பதிலும் இல்லை. சௌராஷ்ட்ரா பிரமணர்களுக்கு மடங்கள் இல்லை. தீட்சை கொடுப்பதற்க்கு மடம் சார்ந்த ஆசிரியர்கள் இல்லை. சிலர் பரம்பரையாக தாத்தா, தந்தை வழியாக கற்று குலதொழிலாக செய்து வந்துள்ளனர்.
இந்த காரணங்களுக்காக சௌராஷ்ட்ரா சமூகத்திற்க்கு மடாதிபதியை நியமிக்க வேண்டும் என்று தோன்றியுள்ளது.
1887 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் சௌராஷ்ட்ரா மாநாட்டிலேயே இது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகு நடந்த மாநாட்டிலும் விவாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநாட்டிலும் அடுத்த மாநாட்டில் இது குறித்து முடிவெடுக்கலாம் என தள்ளிபோட்டுகொண்டே வந்துள்ளனர். இதற்கு காரணம் என்னவென்று ஆராய்ந்தால் உண்மை புலப்படும்.
சௌராஷ்ட்ரா பிராமண வகுப்பில் சைவ பிரிவு, வைஷ்ணவ பிரிவு மற்றும் மார்த்துவ பிரிவுகள் இருந்தன இருக்கின்றன. இதில் எந்த பிரிவை சார்ந்தவரை மடாதிபதியாக நியமிப்பது என்ற பிரச்சனை . யாரும் யாருக்காகவும் விட்டுகொடுக்க தயாராக இல்லை. ஏனெனில், அந்த பிரிவை சார்ந்தவர்களின் ஆதிக்கம் தலை தூக்கும். அவர்களது சொல்படி மற்றவர்கள் வேலை செய்ய நேரிடும். மேலும் , மடாதிபதி நியமித்து, மடங்கள் நிறுவப்பட்டால், அதற்கு சொத்துகள் சேரும். அதை, மடாதிபதி சார்ந்த குழு நிர்வாகிக்கும். இதை ஏற்கவும் எந்த பிரிவினரும் தயாராக இல்லை. எனவே, இந்த பிரச்சனை ஒவ்வொரு ஆண்டும் தள்ளி போட்டுகொண்டே வந்துள்ளது.
இதற்கிடையில், சௌராஷ்ட்ரா பிராமணர்கள், தமிழ், தெலுங்கு மக்களுக்கு (பிராமணர் அல்லாதோர்) சுப அப காரியங்களில் புரோகிதம் செய்வதை விரும்பவில்லை. மேலும், வேறு பிராமணர்களிடம் தீட்சை பெறுவதையும் விரும்பவில்லை.
மடாதிபதி நியமனமும் ஏற்படவில்லை. தங்களுக்கு ஏற்படும் அவபெயரையும் காப்பாற்றியாக வேண்டிய சூழ்நிலை. பிராமண சமூகத்திலிருந்து வழி தவறி சென்றுகொண்டிருப்போரையும், சரி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதால், மடாதிபதியை நியமிக்கும் வரை, “ ஆசார விசாரனை தலைவர்என்ற ஒருவரை நியமிக்கலாம் என முடிவெடுத்துள்ளனர். அப்படி தேர்ந்தெடுக்கப்படுபவர், எல்லா விசயங்களையும் கற்றரிந்தவராகவும், அனைத்து பிரிவினரையும் அனைத்து செல்பவராகவும் இருக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளனர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர், சௌராஷ்ட்ரார்கள் வாழும் பகுதிகளுக்கு சென்று, பிராமணர்கள் சரியான ஆச்சார அனுஷ்டானங்களை கடைபிடிக்கின்றனரா என ஆராய்வதுடன் , அதற்கான உதவிகளை செய்ய வேண்டும் என முடிவெடுத்தாலும் இதை அவர்களால் செயல்படுத்த முடியவில்லை. அதற்கு காரணம் மேலே கூறியபடி பிராமணர்களில் இருந்த பாகுபாடே காரணம். இந்த காரணங்களினால், இறுதிவரை மடாதிபதி அல்லது ஆசார விசாரனை தலைவர் என்று ஒருவர் நியமிக்கபடாமலேயே சௌராஷ்ட்ரா பிராமண சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
இன்றைக்கு பிராமணர்களாக  புரோகிதர் மற்றும் அர்சகர்களாக இருப்பவர்கள் எந்த அளவுக்கு வேதங்களையும் மந்திரங்களையும் கற்று யாரிடம் தீட்சை பெற்றுள்ளனர் என்று அறிய முடியவில்லை. இப்படி அரை குறை அறிவு உள்ளவரை வைத்து கொண்டுதான் நாம் ஆச்சார அனுஷ்டான்ங்களை செய்து வருகிறோம் என்பதை அறியும் போது இவைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டியது அவசியமா என தோன்றுகிறது. மேலும், தமிழ் நாட்டிற்க்கு வெளியே வாழும் சௌராஷ்ட்டிரர்கள் அவர்கள் வாழும் பகுதியில் உள்ள பிற சமூகத்தை சார்ந்த பிராமணர்களின் உதவியுடன் சுப அப காரியங்களை செய்ய வேண்டியுள்ளது. அதில் பல மாறுபாடுகள் இருந்தாலும், சூழ்நிலைக்கேற்ப சமாதனப்படுத்திகொண்டு இவைகளை ஏற்றுகொள்ளவேண்டியுள்ளது.
இந்த நிலையில் இன்று சௌராஷ்ட்ரா சமூகத்திற்கு மடாதிபதி என்று யாரையும் நியமிக்க முடியும் என்று தோன்றவில்லை.
மடாதிபதி என்று ஒருவர் தோன்றியிருந்தால், சௌராஷ்ட்ரா மக்கள் ஏற்படுத்தியுள்ள பொதுசொத்துக்கள், சத்திரங்கள், கோவில்கள் மற்றும் தர்ம சபைகள் ஒரு மடத்தின் கீழ் வந்திருக்கும்.
ஆனால், இப்போது தனியாரல் நிறுவபட்ட அறகட்டளைகள், மற்றும் பொதுமக்களின் உதவியுடன் நிறுவபட்ட அறகட்டளைகளின் சொத்துக்கள் தனியார் வசமோ, அல்லது ஒரு குடும்பத்தின் வசமோ இருக்கிறது. இவைகளை அண்மை காலங்களில் தனிப்பட்ட சொத்துகளாக மாற்றி வருகின்றனர். 
இன்றைய நிலையில் மடங்களின் மீதும், மடாதிபதிகளின் மீதும் வரும் குற்றசாட்டுகளை பார்க்கும் போது, சௌராஷ்ட்ரா சமூகத்திற்க்கு மடமும் மடாதிபதியும் ஏற்படாமல் இருந்ததே சரியென தோன்றுகிறது..