Friday 31 October 2014

கடவுள் முருகன் தமிழ் கடவுளா ?



சிவன்-பார்வதியின் மகன் முருகன் தமிழ் கடவுளா?



கடவுள் முருகன் தமிழர்களின் கடவுள் என்று இப்போது அதிகமாக பேசப்படுகிறது. தமிழ் மொழியை வைத்து அரசியல் வியாபாரம் ஆரம்பித்துள்ள சிலர் இது குறித்து அதிகமாக பேசுகிறார்கள். 

இவர்கள் கடவுள் மறுப்பு இயக்கத்தை சார்ந்தவர்கள் என்று தங்களை கூறிக் கொள்பவர்கள், கடவுள் என்பவர் ஆரியர்களால் (பிராமணர்கள்) உருவாக்கப்பட்ட கற்பனை என்று கூறுபவர்கள். எல்லா கடவுள்களையும் (இந்து கடவுள்கள் மட்டும்) விமர்சிப்பவர்கள். கடவுளின் தோற்றம் மற்றும் அவர்களது அவதார நிகழ்வுகள் குறித்து கேள்விகளை எழுப்பி, தகாத வார்த்தைகளால் மேடையில் பேசுபவர்கள்.

இது போன்ற வாதங்கள் உலகமெங்கும் இருக்கிறது. வாதம் செய்ய அனைவருக்கும் உரிமையுண்டு.

ஆனால் கடவுள் இல்லை என்பவர்கள் முருகனை தமிழ் கடவுள் என்று எப்படி கூறுகிறார்கள் என புரியவில்லை. கடவுள் ஒன்று ஒருவர் இல்லாத நிலையில், மற்றவர்கள் கடவுள் என்று கும்பிடும் முருகனை மட்டும் ஏற்றுக்கொண்டு, முருகனை எவ்வாறு தமிழ் கடவுள் என கூறுகிறார்கள். சரி அவர் தமிழ் கடவுளாகவே இருக்கட்டும். அவர் தமிழ் கடவுள் என்று கூறுவதற்கு என்ன காரணம் அதை எப்படி கண்டுப்பிடித்தார்கள்.

முருகன் என்ற கடவுள் தமிழ் நாட்டில் மட்டும் கும்பிடப்படுவதால் அவர் தமிழ் கடவுள் என்று முடிவு செய்யப்பட்டதா  ?

தமிழர்கள் மட்டுமே முருகனை கும்பிடுவதால் அவர் தமிழ் கடவுள் என முடிவு செய்யப்பட்டதா ?

முருகனுக்கு தேவ மொழி என்று கூறப்படும் சமஸ்கிருத மொழி தெரியாது அவருக்கு தமிழ் மொழி மட்டுமே எழுத பேச படிக்க தெரியும் என்பதால் அவர் தமிழ் கடவுள் என முடிவு செய்யப்பட்டதா ?

முருகன் தமிழ் நாட்டில் பிறந்தார் என்று ஏதேனும் ஆதாரம் கிடைத்து அவர் தமிழ் கடவுள் என முடிவு செய்யப்பட்டதா ?

மேற்கூரிய காரணங்களால் முருகன் தமிழ் கடவுள் என அறியப்பட்டதால் அவரை மட்டும் தமிழர்கள் வணங்கலாம் என்று இவர்கள் சொன்னால், மற்றவர்களும் வேறு பல காரணங்களுக்காக வேறு பல பெயர்களில் இருக்கும் கடவுள்களை வணங்குவதில் என்ன தவறு. கடவுளே இல்லை என்ற வாதத்தை ஏன் வைக்க வேண்டும்.

முருகன் தமிழ் கடவுள் என்று வைத்துக்கொள்வோம். முருகன் மட்டுமே கடவுள் என்பதை ஒப்புக்கொள்வோம்.

முருகனின் அப்பா சிவன் அம்மா பார்வதி சகோதரன் விநாயகர் இவர்கள் எல்லாம் யார். இவர்கள் எல்லாம் இந்தி கடவுள்களா அல்லது அஸ்ஸாம் , ஒரியா, தெலுங்கு மொழி பேசும் கடவுள்களா அல்லது இவர்கள் சீனா தயாரித்து அனுப்பிய சீன மொழி கடவுள்களா ?

முருகன் தமிழ் கடவுள் என்றால் சிவன், பார்வதி, விநாயகர் அனைவரும் தமிழ் கடவுள்கள் தானே. அவர்களை கும்பிடுவதில் என்ன தவறு.

முருகன் தமிழ் கடவுள் என்று முடிவு செய்தாகிவிட்டது. தமிழன் என்று முடிவு செய்த பிறகு, அவர் என்ன ஜாதி என்பதையும் முடிவு செய்ய வேண்டும். அதை எப்படி யார் முடிவு செய்வது.

கடவுளுக்கு ஜாதி இல்லை என்று கூற முடியாது. முருக கடவுளை பொதுவாக உயர் ஜாதியினர் தான் வணங்குகிறார்கள். தாழ்த்தப்பட்ட ஜாதி என்று கூறும் மக்கள் முருகனை கும்பிடுவதில்லை. எனவே அவர் உயர் ஜாதி கடவுள் என்ற முடிவுக்கு வர முடியும். மேலும், அவர் தெய்வயானை என்ற பிராமண பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் சரித்திரம் உள்ளது. எனவே, இந்த இரண்டு காரணங்களை வைத்து அவர் உயர் ஜாதிகளுக்கான கடவுள் என்று முடிவுக்கு வர முடியும்.

ஆனால், ஏதோ காரணத்தால் அவர் தாழ்த்தப்பட்ட ஜாதி எனும் குறவர் சமூகத்திலிருந்து வள்ளி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

உயர் ஜாதியை சேர்ந்த கடவுள் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்த பெண்ணை ஏன் மணக்க வேண்டும்.

தேவ லோகத்தில் ஜாதிய இட ஓதுக்கீடு முறையில் ஏதேனும் சலுகைகள் பெற இவ்வாறு திருமணம் செய்தாரா ?

முருகனுக்கு எங்கே ஜாதி சான்றிதழ் வாங்குவது. யார் வழங்குவது.

கடவுள் என்பவர் மனிதன் வகுத்து வைத்துள்ள எல்லா எல்லை கோடுகளுக்கும் உள்ளே வராதவர் என்பதை உணர வேண்டும். சில பல சில்லறை காரணங்களுக்காக கடவுளை தமிழ் மொழி கடவுள் என்றும் தமிழர்கள் கடவுள் என்றும் ஒருவரை சொல்வதும், மற்ற கடவுள்களை சிறிதும் நாகரீகமில்லாமல் விமர்சிப்பதும் தவறு.

கடவுள் ஒன்று ஒருவர் இருக்கிறாரா என்பது குறித்து இறுதியான முடிவு ஏதும் இல்லை. அது மக்களின் நம்பிக்கை.

“ கண்டவர் விண்டதிலை – விண்டவர் கண்டதில்லை. கடவுளை கண்டதாக யாரும் சொன்னதில்லை. சொன்னவர்கள் கண்டதில்லை என்பது பொருள்.

அண்மையில் ஒரு கட்சி வைத்திருந்த பேனரை பார்த்ததன் விளைவாக இது எழுதப்பட்டது

அப்பனே சன்முகா, ஞான பண்டிதா, கந்தா கடம்பா கதிர்வேலா என்ன மட்டும் காப்பாத்துடா
 

Thursday 30 October 2014

சு.வெங்கடேசன் – காவல் கோட்டம் புதினம் – எனது பார்வையில்



சு.வெங்கடேசன் – காவல் கோட்டம் புதினம் – எனது பார்வையில்

1000 பக்கங்களுக்கு மேல் உள்ள ஒரு நாவலை சில பக்கங்களில் யாருக்கும் புரிய வைத்து விட முடியாது. தலைப்பு செய்திகளாக சிலவற்றை கூற முடியும்.
              
மதுரையை ஆண்ட மன்னர்கள், மதுரை மீது நடந்த படையெடுப்புகள், விஜய நகர சாம்ராஜ்யத்தின் ஆட்சியின் வரலாறு. திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் ஒர் சமூகத்துக்கு கொடுக்கப்பட்ட அந்தஸ்து அந்த சமூகம் வாழ்ந்த தாதனூர் என்னும் பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை.

மதுரை கோட்டை உருவாகிய விதம், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நகர விரிவாக்கம் என்று கூறி கோட்டையை இடித்த வரலாறு. அவர்கள் அரசு அமைத்த முறை. புகை வண்டி கொண்டு வருதல் , காவல் நிலையங்களை ஏற்ப்படுத்துதல், காவல் கூலி முறையை ஒழிக்க முயல்வது, தோல்வி அடைவது போன்றவை விவரிக்கப்படுகிறது.

வரி வசூல் அமைப்பில் வர மறுக்கும் மதுரை புறநகர் பகுதிகளுக்கு நீர்பாசன வசதி செய்து கொடுத்து, நில அளவை செய்து கொடுத்து அவர்களை ஆங்கிலேய ஆட்சி முறைக்கு கொண்டு வருவது விவரிக்கப்படுகிறது.

இதே நேரத்தில் அமெரிக்க மெசினரிகாளால் மக்கள் மத மாற்றம் செய்யப்படுவது குறித்தும் விவரிக்கிறது.

இதில் மன்னராட்சி பற்றிய வரலாற்று உண்மைகள் என்றும், தாதனூர் என்ற நிலப்பரப்பை கற்பனையில் உருவாக்கி, இந்த நாவல் உருவாக்க உழைத்த பத்தாண்டுகளில் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் , சொல் வழி மூலம் கேட்டறிந்த மக்களை கதாபாத்திரங்களாக தாதனூர் பகுதி மக்களாக சித்தரித்துள்ளார்.

அவர்களது தொழில் களவு செய்வது மற்றும் மதுரை நகரை காவல் காப்பது. மதுரை நகரை காவல் காக்க மக்களிடம் காவல் கூலி பெறுவது, கூலி கொடுக்க மறுக்கும் வீடுகளில் களவு செய்வது, பின்பு சமரச பேச்சு வார்த்தையில் ஈடு பெற்றுக்கொண்டு களவு செய்த பொருளை திரும்ப கொடுப்பது. தினமும் களவு செய்து தான் வாழ்க்கை நடத்துகின்றனர். பொருள் சேர்த்து எதிர்கால திட்டத்தை வகுப்பது என்ற வாழ்க்கை முறை இல்லை.

பஞ்ச காலத்தில் இந்த பகுதியின் பல மக்கள் கூலித் தொழிலாளிகளாக வெளியேறுவது விவரிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேயே ஆட்சி காவல் கூலி முறையை ஒழிக்க பாடுபடுவது, அதை தாதனூர் மக்கள் இறுதி வரை எதிர்ப்பது மற்றும் அவர்களது வாழ்க்கை முறையை விவரிப்பது தான் கதை. 

இறுதியில் அவர்கள் குற்ற பரம்பரையினராக அறிவிக்கப்பட்டு சிறிது சிறிதாக கைது செய்து தண்டிப்பது, நாடு கடத்துவது, தூக்கிலிடுவது இறுதியாக வேறு பகுதிக்கு அழைத்து சென்று அவர்கள் இருக்கும் இடம் எதுவென்று அவர்களும் அறியாமல் வெளியுலகமும் அறியாமல், அதிகாரத்தின் கீழ் அடிமைகளாக அழிந்து மடிவதை மிகவும் எளிமையான வார்த்தைகளால் விவரித்துள்ளார்.

மதுரையில் வாழும் மக்களுக்கு கூட மதுரையில் கோட்டை இருந்ததும் அது தகர்த்தப்பட்டு மதுரை விரிவாக்கம் செய்யப்பட்டது என்ற வரலாறு தெரிந்திருக்காது. மதுரையின் விரிவாக்க பகுதியாக கூறப்படும் இன்றைய பகுதிகளையும் கணக்கிட்டால் கூட , மதுரையின் பரப்பளவு அம்மன் கோயிலை மையமாக கொண்டு 5 கிலோமீட்டர் சுற்றளவு தான் இருக்கும். விரிவு படுத்தப்படாத மதுரை என கணக்கிட்டால் 3 கி.மீ சுற்றளவு தான் இருக்கும். அந்த நிலப்பரப்புக்கு தான் இத்தனை போர்கள் நடந்ததா என்று நினைக்கும் போது, இன்றைய நிலையில் வேடிக்கையாக இருக்கிறது.

மங்கம்மாள் காலத்துக்கு முன்பு முன்பு ஆண்டவர்கள் பொது மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த எதுவும் செய்யவில்லை என்றே நான் புரிந்து கொள்கிறேன். போர் புரிவதை மட்டுமே கடமையாக கொண்டு வாழ்ந்துள்ளனர்

இந்த கதையை படிக்க ஆரம்பிக்கும் போது இது குறித்து விரிவாக எழுத வேண்டும் என நினைத்தேன். சாகத்திய அகதெமி பரிசு பெற்ற கதை. இதைப்பற்றி எழுதுவதறக்கு முன்பு மற்றவர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என இனையத்தில் பார்த்தேன்.

பிரபல எழுத்தாளர்கள் ஜாதிய அடிப்படையிலேயே இதை அணுகியுள்ளார்கள். கதை விருது பெற தகுதியுடையதா என்ற வாதங்களையும் எழுப்பியுள்ளனர். ஒருவொருக்கொருவர் அடித்துக்கொண்டு குற்றுயிரும் கொலையிருமாக இனையத்தில் உலா வருகிறார்கள். எனவே, அந்த விமர்சனங்களை படித்து பாருங்கள்.

சரித்திரத்தை பின்னனியாக கொண்டு எழுதப்பட்ட கதை என்ற அளவில் எனக்கு பிடித்தது.

கடந்த கால சரித்திரத்தில் எந்த பகுதியை யார் ஆண்டார்கள் , யார் யாரை ஆதிக்கம் செலுத்தினார்கள் என்பதை விட, நிகழ்காலத்தில் ஆள்பவர்கள் சரியாக ஆள்கிறார்களா என்பதை ஆராய்ந்து, எதிர் காலத்தில் அனைத்து மத ஜாதி இன மொழி மக்களும் அமைதியுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம்.


 .

Thursday 23 October 2014

அகிரா குரோசோவா Akira Kurosawa - ஜப்பானிய இயக்குனர் - “இகிரு” IKIRU (வாழ்க்கை) திரைப்படம் .



அகிரா குரோசோவா Akira Kurosawa என்ற ஜப்பானிய இயக்குனரின்  இகிரு” IKIRU (வாழ்க்கை) என்ற திரைப்படம் பார்த்தேன்

மாநகராட்சி என்ற அமைப்பு போன்ற அரசு அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு ஊழியர். முப்பது வருடங்களாக அங்கேயே வேலை செய்கிறார். ஒரே மாதிரியான உணவை உண்கிறார். யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. சக ஊழியர்களின் ஏளனத்துக்கு ஆளாகிறார். அவருக்கும் MUMMY என்ற பட்டப்பெயர் உண்டு. மனைவியை இழந்தவர். மகன் மருமகள் உண்டு.

ஒரு நாள் வயிற்று வலி காரணமாக மருத்துவமனை செல்கிறார். காத்திருக்கும் போது, வேறோரு நோயாளி வயிற்று வலியா என கேட்கிறார். உள்ளே இருக்கும் மருத்துவர் இது குடல் புண்அல்சர் என்று கூறுவார். மருந்து சாப்பிட்டால் குணமாகிவிடும் என்று கூறுவார். உண்மையில் இது வயிற்று புற்று நோய். குணமாகாது. ஆறு மாதங்களிலிருந்து  ஒரு வருடத்துக்குள் மரணம் ஏற்ப்படும் என்கிறார்.

மருத்துவரை பார்க்கும் போது இது அல்சர் மருந்து சாப்பிட்டால் சரியாகி விடும் என்கிறார். வெளியில் அந்த நோயளி சொன்னது போலவே சொல்கிறார் அப்படியென்றால் தனக்கு புற்று நோய் தான் என்று உறுதி செய்து கொள்கிறார். அவருக்கு புற்று நோய் இருக்கிறது என மருத்துவர் செவிலியிடம் கூறுகிறார்.

அலுவலகத்தில் பொது மக்கள் மனு ஒன்றை கொடுக்கின்றனர். தங்கள் பகுதியில் உள்ள இடத்தில் குப்பைகளும் கொசுக்களும் இருப்பதால் வியாதிகள் பரவுவதால் அந்த இடத்தை சுத்தம் செய்து பூங்காவாக மாற்றி தரும் படி கேட்கின்றனர்.

அவர்களை ஒவ்வொரு துறையாக போகும் படி சொல்கின்றனர். 7 – 8 துறைகளை அனுகியபின் அவர்கள் வந்து சத்தம் போட்டு விரைவில் நிவாரணம் செய்து தரும்படி சத்தம் போடுகின்றனர்.

மகனும் மருமகளும் வெளியில் போய் விட்டு வீட்டுக்கு வருகின்றனர். மின்சாரம் இல்லை. மருமகள் இங்கு குளிராக உள்ளது என்கிறாள். மகன் நல்ல வீடு ஒன்றை புதிதாக வாங்க நிறைய பணம் தேவைப்படும் என்கிறான். மேலும் அப்பாவின் ஓய்வூதிய தொகை கிடைக்கும் கொஞ்சம் பணம் இருக்கிறது கொஞ்சம் கடன் வாங்கலாம் என்று பேசிக் கொள்கிறார்கள். மின்சாரம் வருகிறது. அப்பா இருட்டில் உட்கார்ந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தாலும் மருமகள் சமாளிக்கிறாள். மகன் தற்போது இது குறித்து அப்பாவிடம் பேச வேண்டாம் என்கிறான்.

ஒரே மாதிரியான வாழ்க்கை வாழ்ந்து விட்டோம் இறப்பதற்க்கு முன்னால் வாழ்க்கை வெளியில் எப்படியிருக்கிறது என்பதை அறிய ஆவல் கொள்கிறார். அலுவலகத்துக்கு செல்லவில்லை. 30 வருடத்தில் விடுமுறையே எடுக்காதவர் எங்கே போனார் என்று அலுவலகமும், மகனும் தேடுகின்றனர். வங்கியிலிருந்து 50000 பணம் எடுத்துள்ளது தெரிய வருகிறது.மது பான கடையில் ஒரு எழுத்தாளரை சந்திக்கிறார். அவர் பல மது சாலைகளுக்கும் பெண்கள் நடனமாடும் விடுதிகளுக்கும் அழைத்து செல்கிறார்

அவருக்கு அந்த வாழ்க்கை பிடிக்கவில்லை. தெருவில் நடக்கும் போது அவரிடம் வேலை செய்யும் பெண்ணை பார்க்கிறார். அவளும் அவரை தேடிக் கொண்டிருப்பதாக கூறுகிறாள். அவள் வேலையே விட இருப்பதாகவும் இந்த வேலை பிடிக்கவில்லையென்று கூறுகிறாள். அவளை பல இடங்களுக்கு அழைத்து செல்கிறார். அவளது ஏழ்மை நிலையை பார்த்து நல்ல ஆடைகள் வாங்கி தருகிறார்.

அவளுடன் வீட்டுக்கு வருகிறார். இருவரும் தனியறையில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மகனும் மகளும் வேலைக்காரியும் தவறாக நினைக்கிறார்கள்.

அவர் மகனிடன் தனது நோயை பற்றி சொல்ல முயற்சி செய்கிறார். மகன் அந்த இளம் பெண்ணுடன் இருக்கும் உறவை பற்றி கூறி ஊதாசினப்படுத்துகிறான். மருமகள் இவரது பணம் அந்த பெண்ணுக்கு போய் விடுமோ என சந்தேகப்படுகிறாள்.

அந்த பெண்ணுடன் ஒரு உணவகத்தில் இருக்கும் போது தனது நோயை பற்றி குறிப்பிடுகிறார். அதிர்ச்சியடைகிறாள். அவளை தன்னுடன் சில நாள் இருக்கும் படி கூறுகிறார். அவள் தவறாக நினைக்கிறாள். பின்பு எல்லா விசயங்களையும் கூறுகிறார். நீ ஏன் வேலையை ராஜினாமா செய்கிறாய் என கேட்கிறார். தனக்கு இந்த வேலை பிடிக்கவில்லையென்றும், பொம்மை செய்யும் வேலை தான் பிடித்திருக்கிறது என்றும் கூறுகிறாள். பொம்மை செய்யும் போது உலகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளிடமும் விளையாடுவது போல இருக்கிறது என கூறுகிறாள்.
சில மாதங்களுக்கு பிறகு இறந்து விடுகிறார்.

அவரது வீட்டில் மகன் இரங்கல் கூட்டம் ஏற்ப்பாடு செய்கிறார். துனை மேயரும் அவருடன் வேலை செய்தவர்களும் மற்ற துறை அதிகாரிகளும் கூடுகின்றனர். சம்பிரதாயங்கள் முடிந்த பிறகு, மது அருந்த உட்காருகின்றனர். அப்போது அவரை பற்றி எல்லோரும் பேசுகின்றனர்.
 
அந்த பழைய அசுத்தமான இடத்தை அவர் பூங்காவாக மாற்ற ஒவ்வொரு துறையாக அலைந்து அதை எப்படி செயல்படுத்தினார் என்பதை சொல்கிறார்கள். அந்த இடத்தில் பணக்காரர்  ஒருவர் விடுதி கட்ட முயன்றதையும் அவர் மிரட்டியதையும் அதை அவர் சமாளித்ததை பற்றியும் கூறுகின்றனர்.

அவருக்கு வயிற்றில் புற்று நோய் இருந்துள்ளது என்றும் அதற்க்காக தான் இறப்பதற்க்கு முன் ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்து செய்துள்ளார் என்று பேசிக்கொள்கின்றனர். மகன் அவருக்கு புற்று நோய் இருப்பது தனக்கு சொல்லவில்லை என்று கூறுகிறார்.

அவர் தன் முயற்சியால் ஏற்ப்படுத்தப்பட்ட  பூங்காவில் இரவு நேரத்தில் உஞ்சலில் ஆடிக்கொண்டே உயிர் துறந்தார் என்பதையும் கூறுகிறார்கள். அவர் மகிழ்ச்சியுடன் இருந்துள்ளார் என்றும் அவர் இறக்கும் போது தனக்கு பிடித்த பாடலை பாடிக்கொண்டே இறந்துள்ளார் என்றும் கூறுகின்றனர்.

அவரைப் போலவே நாமும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறி கலைந்து செல்கின்றனர். மறு நாள் காலையில் அலுவலகத்தில் உட்கார்ந்திருக்கும் போது, மக்கள் மனுக்களுடன் வருகின்றனர். வழக்கம் போல வெவ்வேறு துறையை கை காட்டுகின்றனர்.  ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்வதுடன் படம் முடிகிறது.
இந்த திரைப்படம் உலகின் சிறந்த திரைப்படமாக ஏன் பாரட்டப்படுகிறது என்பதை கவனிப்போம். சிறந்த திரைப்படம் என்று சொல்வதற்க்கான தகுதிகள் இருக்கிறதா அதிலும் தமிழ்நாட்டு மாற்று திரைப்படக்காரர்கள் பாரட்டும் அளவுக்கு என்ன இருக்கிறது என்பதை பார்ப்போம்.

1) ஜப்பானின் 1952ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்

அரசு அலுவலர்களின் மெத்தன போக்கு அலட்சிய தன்மையை சொல்கிறது. மனைவியை இழந்த தனிமனிதன் வாழ்க்கையில் பிடிப்பிலாமல் இயந்திர தனமாக வாழ்வதை காட்டுகிறது. மகனின் சுய நலமும் முதியவர்கள் மீது கரிசனமில்லா நிலையை கூறுகிறது. சமூகத்தின் மற்ற கேளிக்கை வாழ்க்கை முறையை முதிய தலைமுறை ஏற்க மறுப்பதை சுட்டி காட்டுகிறது. மனிதன் இறந்த பின்பே அவன் மதிக்கப்படுகிறான் என்பதையும் கூறுகிறது.

ஒரு காட்சியில் தான் தன் மகனை எப்படியெல்லாம் வளர்த்தேன் ஆனால் அவன் என்னை கவனிக்கவில்லை பொறுப்பில்லாமல் இருக்கிறான் என்று கூறுகிறார். உடன் இருக்கும் இளம் பெண் என் அம்மாவும் இப்படி தான் சொல்கிறார் என்று கூறுகிறாள். இதை ஏன் சொல்லி காட்ட வேண்டும். நாங்கள் விருபப்பட்ட பிறந்தோம் என்கிறாள்.

இந்த வசனம் எல்லோருக்கும் பொருந்தும். இதை நம்மில் பலர் சொல்லியிருப்போம். என்னை வளர்க்க முடியவில்லையென்றால் என்னை ஏன் பெற்றாய் என்று பலரும் கேட்டிருப்போம். யாரும் திட்டமிட்டு குழந்தை பெற்றுக்கொள்வதில்லை. குழந்தை பிறந்தால் என்னவாக வளர்க்க ஆசைப்படுகிறேன் எப்படி வளர்ப்பேன் என்று திட்டமிட்டு குழந்தை பெற்றுக்கொள்வதில்லை.

திருமணம் நடக்கிறது. திருமணத்திற்க்கு முக்கிய காரணம் தேவைப்படும் போதெல்லாம் காமம் அனுபவிப்பது மட்டுமே.  சார்ந்து வாழும் நிலை , நிரந்தர துணை என்பதெல்லாம் பின்பு ஏற்ப்படுகிறது. ஆரம்ப காலத்தில் காமம் மட்டுமே முதல் குறிக்கோள். குழந்தை பிறந்து விடுகிறது. ஆன்மையை நிருபிக்க மலடி என்ற சொல்லை தவிர்க்க குழந்தை பெற வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்ப்படுகிறது.

நான் கேட்டு தாய் தந்தை படைத்தானா இல்லை அவன் கேட்டு என் பிள்ளை பிறந்தானா ( பாடல் வரி சரியாக நினைவில்லை) என்ற தத்துவ பாடல் மிக எளிமையாக இதை விளக்குகிறது. மகன் உதாசீனப்படுத்துவது நமது நாட்டில் காலம் காலமாக நடைப்பெற்று வருகிறது. இது குறித்து பல படங்கள் வெளி வந்துள்ளது. “ பிள்ளையை பெத்த கண்ணீரு தென்னையை பெத்த இளநீரு என்ற பாடல் இதற்கு சான்று.

எனவே, இப்படிப்பட்ட கதையம்சம் கொண்ட படம் தமிழ் திரையுலகில் எடுக்கப்படவில்லையென்றும், ஜப்பானில் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறி இன்றைய மாற்று திரைப்பட ஆவலர்கள் கொண்டாடுவது தேவையற்றது

ஜப்பானின் அரசு ஊழியர்களின் பொறுபின்மையை வெளிப்படுத்தியதால் அது அங்கு புகழப்பட்டிருக்கலாம். நாம் இதை வாழ்க்கையில் தினமும் அனுபவிக்கும் நிகழ்ச்சி. இதை திரைப்படம் சொல்லி தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலை இல்லை. நம் நாட்டில் எல்லா திரைப்படங்களிலும் இது சொல்லப்படுகிறது. இப்போது வெளி வந்திருக்கும்கத்திபடத்திலும் மீத்தேன் வாயு, தண்ணீர் கொள்ளை பற்றி சொல்லியிருப்பதாக பேசி பல விதமான விமர்சனங்கள் வருகிறது . இந்த விசயத்தை பற்றி சொல்லியிருப்பதால் இது சிறந்த படம் என்று விருது கொடுக்க முடியுமா. இந்த ஒரு விசயத்தை மட்டும் சொல்லி படம் எடுத்தால் அது ஆவணபடம் என்ற பகுதிக்கு சென்று விடும். பொருளாதார ரீதியில் வெற்றி அடையாது. மக்கள் விரும்பும் அனைத்து அம்சங்களையும் கலந்து வெற்றி அடைய முயற்சி செய்யப்பட்டுள்ளது. அதனால் விருது கிடைக்காது.

அது போலவே அங்கும் அரசு ஊழியர்களின் பொருப்பின்மையை சொல்லியிருக்கிறது. அதற்க்காக அது விருதுக்கான சிறந்த படம் என்று சொல்ல முடியாது.

மனிதன் இறந்த பிறகு புகழப்படுவது எல்லா நாடுகளிலும் நடக்கும் நிகழ்வு. சிலர் உண்மையிலே இறந்த பிறகு தான் அவர்களது நல்ல எண்ணங்களும் நல்ல செயல்களும் தெரிய வருகிறது அல்லது அவரை விட மோசமான் ஒருவரை சந்திக்கும் போது அவர் எவ்வளவு நல்லவர் என்று உணர்ந்து புகழ முடிகிறது. சிலர் சம்பிரதாயமாக புகழ்ந்து விட்டு செல்கின்றனர். எனவே இந்த காரணத்துக்காகவும் விருது கொடுக்க முடியாது.

விருது கொடுக்கும் அமைப்புகளும் எந்த காரணத்துக்காக இது சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது என்று அறிவிப்பதில்லை. போட்டிக்கு வந்த மற்ற படங்களுடன் இது எந்த வகையில் சிறந்தது என்றும் அறிய முடிவதில்லை.

இந்த படத்தை பொறுத்த வரை  முக்கிய பாத்திரத்தில் வரும் நடுத்தர மனிதர் மூன்று நிலைகளில் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இயந்திர தனமாக அலுவலகத்தில் வேலை செய்யும் போது ஒரு முக பாவனை.

வெளியுலகில் மதுபான விடுதிகளில் அதை எதிர்கொள்ளும் போது வெளிப்படுத்தும் முகபாவம்.

பூங்கா அமைக்க வெவ்வேறு துறைகளில் போரடும் போது வெளிப்படுத்தும் முக பாவம்.

அவருக்கு பிடித்த பாடலை விடுதியில் பீயானோ வாசிப்பவனிடம் வாசிக்க சொல்லி விட்டு , அந்த இசைக்கு ஏற்ப அதை பாடும் போது நடிப்பு சிறப்பாக உள்ளது.

இந்த மூன்றையும் மிகவும் அழகாக செய்துள்ளார்.

இளம் பெண்ணாக வரும் நடிகையும் உணர்ந்து நடித்துள்ளார்.

இரங்கள் கூட்டத்தில் மது அருந்திவிட்டு எல்லோரும் பேசும் காட்சியில் அனைவருமே சில நிமிடங்கள் நன்றாக நடித்துள்ளனர். உண்மையிலேயே குடித்து விட்டு நடிக்க சொல்லியிருப்பார்களே என்னவோ.

ஒலி, ஒளி பற்றிய நிச்சியமாக எழுதுவும் சொல்ல முடியாது. இனையம் வழியாக கனினியில் பார்ப்பதால் இவை தெளிவாக இல்லை. திரையரங்கிள் பார்த்தால் அதைப்பற்றி கூற முடியும். மேலும் 1952ஆம் ஆண்டு இருந்த தொழில் நுட்பத்தை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம். இன்றைக்கு இருக்கும் தொழில் நுட்பத்துடன் ஒப்பிட்டு கருத்து சொல்வது சரியாக இருக்காது.

அரசு அலுவல அமைப்பு நமது இந்திய அரசு அலுவலம் போலவே உள்ளது. பெரிய மேஜை. அதை சுற்றி 6 பேர் அமர்ந்து வேலை செய்வது. மேஜை முழுக்க கோப்புகள். பக்கவாட்டு அலமாரிகளில் நிரம்பி வழியும் கோப்புகள். மங்கிய வெளிச்சம் அந்த காட்சி அமைப்பு சிறப்பாக இருந்தது

 அவர் பூங்காவில் இரவில் ஊஞ்சலில் அமர்ந்து அசைந்து கொண்டே பாடும் பாடல் காட்சியில் அருமையான ஓளி ஒலிப்பதிவு..
 Ikiru poster.jpg

Tuesday 21 October 2014

தீபாவளி

தீபாவளி கொண்டாடலாமா கூடாதா, பட்டாசு வெடிக்கலாமா கூடாதா என்ற விவாதம் அவ்வப்போது சிலரால் விவாதிக்கப்படுகிறது.

தீபாவளி கொண்டாட கூடாது என்பது தான் எனது நிலை -
அதாவது , தீபாவளி கொண்டாடபடுவதற்க்கு சொல்லப்படும் காரணங்களுக்காக , இந்த தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடில்லை.

தீயவன் ஒருவனை நல்லவன் ஒருவன் கொன்று வெற்றி வாகை சூடிய தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது என்பது ஏற்ப்புடையது அல்ல. ஒரு துயர சம்பவத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது தவறு என்பது எனது எண்ணம்.

அவன் தீயவன் என்று எப்படி முடிவெடுக்கப்பட்டது. நல்லவர்களை கொடுமை படுத்தினான் பிறன் மனைவியை அபகரித்தான் என்பது குற்றச்சாட்டு. பிறன் மனைவியை அபகரிக்கும் வழக்கத்தை இந்த மன்னன் தான் ஆரம்பித்து வைத்தானா? அதற்கு முன் இந்த வழக்கம் பூமியில் இல்லாமல் இருந்ததா ? கடவுள் அவதாரம் எடுத்து, பிறன் மனைவியை அபகரிப்பவனுக்கு இது தான் கதி என்று நீதி புகட்டியதாக இருந்தாலும், இந்த நிகழ்ச்சிக்கு பின்பு பிறன் மனைவியை அபகரிக்கும் செயல்கள் நின்று விட்டதா ? இன்றும் தொடர்கிறது. நாளையும் தொடரும். கடவுளின் அவதாரத்தால் நிரந்தரமாக ஒழிக்க முடியாத ஒரு செயலின் நிகழ்ச்சியின் அடிப்படையில் ஒரு தினத்தை விழாவாக கொண்டாடுவது எத்தனை மூடநம்பிக்கை ?

இதை சொன்னால் இது நாத்திக வாதம் என்றும் , இந்து மத பண்டிகையை மட்டும் ஏன் குறை சொல்கிறாய் என்று கேட்பார்களே தவிர பதில் சொல்ல மாட்டார்கள். அவர்களிடம் பதில் இல்லை.

நல்லவன் தீயவனை ஒழித்தது கொண்டாட படும் நிகழ்ச்சி என்றால் அப்படி நிறைய நிகழ்ச்சிகளை மகிழ்ச்சியாக கொண்டாடலாம்.

அன்மை கால வரலாற்றில் இது போன்று பல தீயவர்கள் போரில் கொல்லப்பட்டுள்ளார்கள். அமெரிக்கா தினமும் தீபாவளி கொண்டாடலாம். ஸ்ரீலங்காவும் வெற்றி தினத்தை கொண்டாடலாம்.

வெற்றி பெற்றவன் எல்லாம் ராமனும் அல்ல. தோற்றவன் எல்லாம் இராவனனும் அல்ல. தோற்றவர்கள் போர் திறமை இல்லாமல் தோற்கடிக்கப்பட்டவர்கள் அல்ல. துரோகத்தாலும், சூழ்ச்சியாலும், வஞ்சகத்தாலும் கொல்லப்பட்டவர்கள்.

காட்டிக் கொடுப்பவனுக்கும் கூட்டி கொடுத்தவனுக்கும் சரித்திரத்தில் நல்ல பெயர் இருக்கிறது.

இராவணன் சகல துறைகளிலும் சிறந்து விளங்கியவன். அவனது புகழ் சரித்திரத்தில் நீங்கா இடம் பெற கூடியவை. அதை பொருத்து கொள்ள முடியாத ராமன் என்னும் அரசன், அவனை தந்திரத்தால் கொல்ல நினைத்து செய்த ஏற்பாடே சீதையின் கடத்தல் நாடகம். பெண்ணை கடத்தினான் என்றால் அவன் அயோக்கியன் என்ற விசம பிரச்சாரத்தை தூண்டி விட்டு, மற்றவர்களின் ஆதரவை நாடியதல்லாமல், அவனுக்கு யாரும் ஆதரவளிக்க முடியாத சூழ்நிலைய ஏற்ப்படுத்தினான். பெண்களை தவறாக பயன் படுத்திய முதல் அரசனாக தான் ராமனை பார்க்க முடிகிறது. அது இன்றளவும் தொடர்கிறது.

ஒருவனின் புகழுக்கு களங்கம் விளைவிக்கவும், அவனது செல்வத்தை கவரவும் இன்றும் பெண்களை பயன்படுத்தி பாலியல் புகார் கொடுக்கப்பட்டு அவனை ஒழித்து கட்டுகின்றனர். அந்த வகையில் எல்லா வகையிலும் சிறந்து விளங்கிய இராவணனை ஒழிக்க திட்டமிட்டு செய்யப்பட்ட சதி தான் , சீதையின் கடத்தல் , வீபுசனின் துரோகம், இறுதி போர் அனைத்துமே.
எனவே இந்த காரணத்துக்காக கொண்டாடப்படும் தீபாவளியை நான் ஏற்க்கவில்லை. எனினும் மற்றவர்களை போல நானும் தீபாவளி கொண்டாட போகிறேன்.

எல்லா நாட்களை போல வருடம் முழுவதும் வாழ்க்கையை நடத்தாமல் சில நாட்களை சந்தோசமாக வாழ்வதை பண்டிகை என்று கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடு உண்டு. அந்த வகையில் நான் நாளை தீபாவளி கொண்டாட போகிறேன்.

இருப்பவனுக்கு எல்லா நாளும் தீபாவளி என்பார்கள். உண்மை தான். அதற்க்காக மற்ற நாட்களில் பட்டாசு வெடித்து புது ஆடை அணிந்து நமக்கு பரிசு பொருட்களை கொண்டு வந்து கொடுத்தால் அவர்களை நாம் பைத்தியகாரர்கள் என்று தான் சொல்வோம். எனவே பெரும்பான்மையினர் ஒரு குறிப்பிட்ட நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் போது, அதில் அனைவரும் பங்கு கொண்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இது சமூக நிர்பந்தம்.

எந்த தினமாக இருந்தாலும் இரண்டு வேளை சாப்பாட்டுக்கு அவதி படும் மக்கள் உலகம் முழுவதும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு இருக்கும் போது, ஒரு பகுதியினர் ஆடம்பரமாக கொண்டாடுவது தேவையா என்ற எண்ணமும் ஏற்ப்படுகிறது. அவர்கள் அனைவருக்கும் நல்ல வாழ்க்கை அமைந்த பிறகு தான், கொண்டாட்டங்கள் நிகழ்த்த வேண்டும் என்று நினைத்தால் அது எப்போதும் நடைப்பெறாது. அலை ஓய்ந்த பிறகு தான் கடலில் குளிப்பேன் என்பது போல் காத்திருக்க வேண்டியது தான்.
மிகவும் ஆடம்பரமாக கொண்டாடாமல் இந்த தினத்தை மகிழ்ச்சியாக அமைத்து கொள்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

பொருளாதார ரீதியில் வசதி படைத்த உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பரிசுகளை கொடுத்து வாழ்த்தி கொண்டாடும் மக்களை தடை செய்ய முடியாது. ஆனால் அவர்கள் அவற்றில் பத்தில் ஒரு பகுதியையாவது ஏழைகளுக்கு கொடுத்து அவர்கள் வாழ்விலும் ஒரு நாள் மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தலாம்.

நமக்கு வீட்டு வேலை செய்யும் பெண்கள், தெரு கூட்டுபவர்கள், துணிகளை இஸ்திரி செய்து கொடுப்பவர்கள் இன்னும் பல விதத்தில் உதவியாக இருப்பவர்களின் குடும்பங்களுக்கு நாம் செய்யும் கொண்டாட்ட செலவில் ஒரு பகுதியை அவர்களுக்கு கொடுக்கலாம். தீபாவளிக்கு மறு நாள் அவர்கள் வந்து தீபாவளி இனாம் கேட்கும் போது முகம் கோனாமல் முடிந்த அளவுக்கு கொடுக்கலாம்.

வாழ்க்கையின் அடிப்படை தேவைகளான உணவு, உடை இருப்பிடம் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும். உடை இருப்பிடம் இல்லாமல் கூட பல நாட்கள் இருந்து விட முடியும். உணவு இல்லாமல் உறங்குவது என்பது கொடுமையானது. ஒருவன் பசியுன் உறங்க கூடாது என்பது எனது எண்ணம்.

அனைவருக்கும் அந்த அடிப்படை தேவைகள் நிறைவேற வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த நாளில் உங்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களை கூறுகிறேன்.