Showing posts with label எழுத்தாளர்கள். Show all posts
Showing posts with label எழுத்தாளர்கள். Show all posts

Tuesday, 17 February 2015

சுஜாதா சிறு கதைகள்



நகரம்

மருத்துவ மனையில் தனது குழந்தையை சேர்க்க தெரியாத படிப்பறிவில்லாத ஏழை தாயின் அவலத்தை கூறும் கதை.

படிப்பறிவில்லாதது அவளது குற்றமல்ல. மருத்துவ மனை ஊழியர்கள் அனைவரும் அவரவர் வேலையில் மும்முரமாக ஈடுப்பட்டிருக்கும் போது தனிப்பட்ட ஒருவருக்கு உதவி செய்வது இயலாத காரியம். அங்குள்ள பொது மக்களுக்கும் அவர் அவர் பிரச்சனை அவர்களுக்கு. இதில் யாரும் யாரையும் குறை சொல்ல முடியாது.

கை வைத்தியமும் கடவுள் நம்பிக்கையுமே நோயளியை காக்க முடியும் என்ற நம்பிக்கையில் வாழ்க்கையை கடத்துவதே மனித வாழ்வின் யதார்த்தம்.

காரணம் 

தந்தையின் காமத்தை கானும் எட்டு வயது மகன் , தனது வகுப்பு மானவியிடம் சில்மிசம் செய்ய, அறிவுரை கூறும் ஆசிரியரை பழி வாங்க, அவர் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்ததாக தலைமை ஆசிரியருக்கு கடிதம் எழுத ஆசிரியர் வேலையிலிருந்து விலகுகிறார். 

ஒரு ஆண் மற்றோரு ஆணிடம் தவறாக நடந்து கொள்ள முடியுமென எட்டு வயது சிறுவனுக்கு தெரியுமளவுக்கு காமம் எங்கும் பரவியிருப்பதும் அதை தங்களுக்கு எந்த விதத்திலும் பயன் படுத்திக்கொள்ள முடியும் என்ற மன நிலை இருப்பதும், சமூக சீரழிவின் ஒர் அங்கமாக மாறிவிட்டது 

கால்கள் 

ஆங்கிலேய ஆட்சி காலத்தில் காவல் துறையில் பணியாற்றிய போது ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த மனிதர்களை சுட்டுக் கொல்லாமல், கால்களை குறி வைத்து சுட்டதை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். மக்கள் நொண்டி நொண்டி ஓடியதை ரசித்து  பேசுகிறார். சுதந்திரத்துக்கு பிறகு அனைத்தும் சீர்கேடு அடைந்து விட்டது என்பதும், ஆங்கிலேய ஆட்சியே சிறந்தது என்பது அவரது எண்ணம்.

அவரது கால்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இயற்கை உபாதை கழிக்க கூட எழுந்து நடக்க முடியாத நிலையில் இருக்கிறார். 

இன்று இவர் நடக்க முடியாமல் இருக்க அவர் செய்த அந்த செயல்களுக்கு இறைவன் / இயற்கை கொடுத்த தண்டனையா ?

ஜன்னல் 

ஒரே விதமான வேலையை பல வருடங்களாக செய்து வரும் வங்கி ஊழியனுக்கு சாகும் எண்ணம் வருவதாக கூறி மருத்துவரை பார்க்கிறான். மருத்துவர் இது இயற்கை என்றும் தனக்கும் எல்லா நேரமும் நோயாளிகளை பார்த்து கொண்டிருப்பது சலிப்பு தருகிறது என்றும் தானும் இதிலிருந்து விலக நினைப்பதாக கூறிவிட்டு, அவனுக்கு மருந்து எழுதி தந்து விட்டு வெளியே அனுப்புகிறார். மற்றோரு நோயளியை பார்க்கும் போது தெருவில் வேகமாக செல்லும் வாகனம் ஒன்று தீடிரென நிறுத்தப்படும் ஓசை கேட்கிறது.

அந்த மனிதன் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தானா அல்லது விபத்து நேர இருந்ததா அதில் அவன் பிழைத்தான செத்தானா என்பதை வாசகனின் கற்பனைக்கு விட்டு விடுகிறார்.

இளநீர் 

இரு மாநிலங்களுக்கு இடையில் ஏற்ப்பட்டுள்ள பிரச்சனையால் ஊர் அடங்கி இருக்கும் இடத்தில் ஒரு கிழவன் இதை அறியாமல் இளநீர் விற்றுக் கொண்டிருக்கிறான்.ஒரு மாநிலத்தில் வன்முறையில் ஈடுப்படும் கும்பல் அந்த கிழவனிடம் தகராறு செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த சமயம் இளம் தம்பதிகள் காரில் வருகிறார்கள். இளநீர் குடிக்க நிற்கும் போது இந்த வன்முறை கும்பல் அவர்களை கொல்கிறது.

எங்கோ யாரோ பிரச்சனையை கிளம்பினால் அதற்கு சம்மந்தமில்லாதவர்கள் பாதிக்கப்படுவதை குறிப்பிடுகிறார்.

எப்படியும் வாழலாம்

விலை மாதுவை பேட்டி எடுப்பது போன்ற கதை. அவளுக்கு தனது வயது தெரியாது. ஏன் இந்த தொழிலுக்கு வந்தாய் என்று கேட்டால் திமிர் பிடித்து வந்ததாக கூறுகிறாள். வறுமையோ அல்லது நிர்பந்தமோ 
இல்லையென்றும் ஆரம்பத்தில் தனக்கு பிடித்தே பல ஆண்களுடன் தொடர்பு கொண்டதாகவும் பின்பு இந்த தொழிலுக்கு வந்ததாகவும் கூறுகிறாள் . கேவலம் என்றோ இழிவு என்றோ கருதவில்லை. இதை விட்டு விட்டு வேறு கவுரவமான தொழில் செய்யலாம் என்றும் மறு வாழ்வு மையத்துக்கு செல்லலாம் என்று கூறினாலும், மறுவாழ்வு மையத்தில் நடக்கும் ஊழலை சொல்கிறால். தன்னிடம் வந்தவர்களை பற்றியும் கூறுகிறாள்.

இறுதியாக பேட்டியில் தன்னை யாரவது கல்யாணம் செய்து கொண்டு வாழ்க்கை கொடுப்பதாக கூறினால் அவ்வாறு வாழ தான் தயார் என்று பேட்டியில் பிரசுரிக்கும் படி கூறுகிறாள்.

இதன் மூலம் இந்த தொழிலில் ஈடுப்படுவர்கள் எல்லாம் வஞ்சிக்கப்பட்டவர்கள் அல்ல என்றும் விரும்பியே இதில் ஈடுப்பட்டுள்ளவர்கள் இருக்கிறார்கள் என கூற முயற்சி செய்கிறார்.

எல்டோராடா

எட்டு வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய மகன் தந்தை சாக கிடக்கும் நிலையில் அவரை பார்க்க வருகிறான். வீட்டில் அவனை யாரும் மதிக்காமல் வெளியேற்ற நினைக்க  , அவன் தந்தையை பார்க்கிறான். தந்தை தான் இங்கு இருக்க விருப்பம்மில்லையென்றும், தன்னை அவனுடன் அழைத்து செல்லும் படியும் கூறிகிறார். பழைய இனிய விசயங்களை பேசுகிறார்கள். அன்று இரவே இறந்து விடுகிறார்.
சொத்தெல்லாம் தனது பெயருக்கு எழுதி வைத்திருப்பதாகவும் , அதை அண்ணன் பெயருக்கு மாற்றி தருவதாகவும் கூறி வெளியேறுகிறான்.
தந்தைக்கும் மகனுக்கும் இருக்கும் இனிய உணர்வுகளை பதிவு செய்துள்ளார்.

கர்ஃபுயூ 

கர்ஃப்யூ இருக்கும் நேரத்தில் ஹைதராபாத் வருபவர்கள், கடைத்தெருவில் பொருட்கள் வாங்கி கொண்டிருக்கும் போது, கலவர கும்பல் கணவனை தாக்க வரும் போது, அதில் ஒருவன் அவண் தன் அண்ணன் போல் இருப்பதாக கூறி காப்பாற்றி விடுகிறான்.

அரிசி

காரை பழுது பார்க்க வந்த இடத்தில் விபத்தை பார்க்கிறான். போலிசுக்கு போன் செய்கிறான். இன்ஸ்பெக்டர் சாட்சி சொல்ல இவனது விவரங்களை கேட்க சாட்சி சொல்ல மனமில்லாமல் தான் வெளியூர்காரன் என விலகி விடுகிறான். போன் செய்யும் போது சாட்சி சொல்வதால் வரும் பிரச்சனைகளை அங்கு ஒருவர் சொல்வதால் இவன் விலகி கொள்கிறான். ஆனால் ஒன்பது வருடமாக இதே ஊரில் இருப்பவன்.

விபத்து சமயத்தில் அங்கு சிந்திய அரிசியை கூட மக்கள் அள்ளி செல்லும் அவலத்தையும் பதிவு செய்கிறார்.

நமது போலிசும் நீதி மன்றமும் சாட்சிகளை படாத பாடு படுத்துவதால் யாரும் சாட்சியாக இருக்க விரும்புவதில்லை.

அம்மா மண்டபம் 

நாத்திக வாதம் பேசும் கணவனுடன் திருவரங்கம் வரும் மனைவி தனது கணவனை கோயிலுக்குள் அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்து அன்று உறவு கொண்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் எப்படி அழைத்து செல்வது என நினைத்திருக்கும் போது, காவேரி கரையில் கணவன் குளிக்கும் போது நகை பணம் கையில் வைத்திருக்கிறாள். திருடன் திருடி கொண்டு ஓடுகிறான். புகார் கொடுக்க காவல் நிலையம் சென்றால், இன்ஸ்பெக்டர் கோவில் சன்னதியில் இருப்பதை அறிந்து புகார் செய்ய போகிறார். அங்கு ரங்கநாதனிடம் புகார் அளிக்கப்படுகிறது. இரவு உறவும் ஏற்ப்படுகிறது.

கடவுள் நாத்திகனையும் தன்னிடம் வரும் படி அழைத்து விடுகிறார்
















Tuesday, 4 November 2014

நெடுங்குருதி புதினம் – எஸ்.ராமகிருஷ்ணன்


நெடுங்குருதி புதினம் – எஸ்.ராமகிருஷ்ணன் – எனது பார்வையில்



 

தான் பார்த்து கேட்ட கிராமங்களின் அடிப்படையில் வேம்பலை எனும் கிராமத்தை மையமாக கொண்டு இந்த புதினத்தை படைத்துள்ளார். இந்த கற்பனை கிராமம் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கதை நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.

வேம்பலை கிராமத்தின் தட்ப வெட்ப நிலைகளை விரிவாக விவரிப்பதன் மூலம் அதை சமாளித்து அதில் வாழும் களவு தொழிலில் ஈடுப்படும் மக்களின் வாழ்க்கையை சித்தப்ரிப்பது.  கதை நடந்த ஆண்டு என எதையும் குறிப்பாக சொல்லவில்லை. மன்னராட்சி, ஆங்கிலேய ஆட்சி, கிராம நிர்வாகம் போன்ற எதை பற்றியும் சொல்லவில்லை. அந்த கிராமத்தின் வாழும் சில குடும்பங்களின் அடிப்படையில் கதை புனையப்பட்டுள்ளது.

கிராமத்தின் வெயிலை விவரிக்கும் அளவுக்கு இரவையும் விவரிக்கிறார். களவுக்கு இருள் துனை புரிவதாலும், இருளில் வாழ்க்கை நடத்தும் மனிதர்களாக இருப்பதால் இருளை விவரிக்க வேண்டிய அவசியம் ஏற்ப்படுகிறது.

இந்த நாவலில் இருளை வர்ணிக்கும் போது, திரு. சு.வெங்கடேசன் அவர்கள் எழுதியுள்ள “ காவல் கோட்டம்” புதினம் நினைவுக்கு வருகிறது. அவரும் இருளை இவ்வாறு தான் விவரித்திருப்பார். ( இரண்டு நாவல்களையும் ஒன்றன் பின் ஒன்றாக படித்ததால் மிக எளிதாக இந்த ஒற்றுமையை காணமுடிகிறது  சு. வெங்கடேசன் அவர்கள் இவருக்கு நண்பர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். )

இந்த கிராமத்தை விட்டு வெளியேறும் மனிதர்களும், இந்த கிராமத்தில் குடியேறும் மனிதர்களும், தங்கள் வாழ்வில் கிராமத்தை மறக்க முடியாமல் உழன்று கொண்டிருக்கிறார்கள்.

களவு என்பதை ஒரு தொழிலாக தான் பார்த்துள்ளாரே தவிர , அதை ஒரு குற்றமாக எங்கும் வெளிப்படுத்தவில்லை. ஆனால், களவை தடுத்து நிறுத்த ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த குற்ற பரம்பரை சட்டத்தை இவர்களுக்கு எதிராக கொண்டு வந்து கொடுமைப்படுத்தியதாக உணரும் வகையில் நிகழ்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை நேரடியாக சொல்லவில்லை.

இந்த களவை தொழிலாக கொண்ட மக்கள் மதுரையை சுற்றி வாழ்ந்ததாக சுட்டி காட்டும் இவர் எந்த பகுதியென குறிப்பாக சொல்லவில்லை. ஒரு கற்பனை கிராமம் என்று முன்னுரையில் சொல்லப்படுகிறது. இவர்கள் கள ஆய்வு செய்த போது இவர்களுக்கு எந்த பகுதியென்றும் இன்றைக்கு அந்த மக்கள் எந்த ஜாதி பெயரால் அடையாளம் காணப்படுகிறார்கள் தெரிந்திருக்கும். அதை குறிப்பிடுவதால் ஜாதி பிரச்சனை ஏற்ப்படும் என்பதால் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த கற்பனை வேம்பலை கிராமத்தில் சாயம் காய்ச்சுபவர்களும் வாழ்ந்தார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் சாயம் காய்ச்சும் தொழிலும் நெசவு தொழிலும் பட்டுநூல்காரர்கள் என்று அழைக்கப்பட்ட சௌராஷ்டிரர்கள் செய்து வந்தனர் என்று பலருக்கும் தெரியும். ஆனால் அந்த இன மக்கள் தான் என்று கூட குறிப்பிடாமல் தவிர்த்திருப்பதன் மூலம், அந்த கிராமத்தை இனங்கான முடியாத படி செய்துள்ளார். 

( சு. வெங்கடேசன் அவர்களும் தனது காவல் கோட்டத்தில் வடக்கிலிருந்து வந்த நெசவாளர்கள் என்றும் பட்டுநூல்காரர்களிடம் சேலை வாங்கினார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார் )

ஜாதி பார்க்காமல் அமெரிக்க மெசினரிகள் இந்த மக்களுக்கு கல்வியறிவு வழங்கி அவர்களை மதம் மாற்ற  பயன்படுத்தியுள்ளனர் என்பதையும் குறிப்பிடுகிறார்.

புதினத்தின் கடைசி பகுதியில் “தோழர்” என்று அழைத்து பேசும் சித்தாந்தவாதியின் பகுதியை நுழைத்திருப்பது அவசியமா என்ற கேள்வியெழுகிறது. அதில் குறிப்பிடப்படும் வாசகங்களின் மூலம் ரஷ்ய புரட்சி பற்றி குறிப்பிடுவதால் கதை 1920க்கு நகர்ந்து விட்டது என அறிய முடிகிறது. கதையில் போதகர் பயிற்சி பெற்று வரும் நபர் மனம் மாற இந்த சித்தாந்தம் வழி வகுத்தது என கொள்ளலாம்

ஆங்கிலேய ஆட்சி, ரஷ்ய புரட்சியை குறிப்பால் உணர்த்தும் ஆசிரியர் இந்திய சுதந்திர போரட்ட நிகழ்ச்சியை ஒரு வார்த்தையில் கூட உணர்த்தாதது வியப்பளிக்கிறது.

மொத்த புதினத்திலும் வட்டார வழக்கு சொற்களை பயன் படுத்தாது பலமா பலவீனமா என சரியாக தீர்மானிக்க முடியவில்லை.

ஒரு கதாபாத்திரத்தின் அடிப்படையில் முழு புதினத்தையும் அமைக்காமல் ஒரு சிறு நிலப்பரப்பில் எவ்வாறு காலம் கடந்து சென்றது என்பதன் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.

மிக எளிமையான எழுத்து நடையின் மூலம் காட்சிகளை கண் முன் நிறுத்துகிறார்.

ஒவ்வொரு கதாபாத்திரத்தின் கதையும் சிறு கதைகளாக அமைகிறது.

இந்த புத்தகத்தில் திரு.பிரபஞன், திரு. தமிழ்ச் செல்வன் திரு.ந. முருகேச பாண்டியன் அவர்கள் கூறிய கருத்துக்கள் அட்டை பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்கள் குறிப்பிட்ட அளவுக்கு மாபெரும் காவியம் அல்ல. சிறந்த புதினங்களில் ஒன்றாக குறிப்பிடலாம்.
 

Thursday, 30 October 2014

சு.வெங்கடேசன் – காவல் கோட்டம் புதினம் – எனது பார்வையில்



சு.வெங்கடேசன் – காவல் கோட்டம் புதினம் – எனது பார்வையில்

1000 பக்கங்களுக்கு மேல் உள்ள ஒரு நாவலை சில பக்கங்களில் யாருக்கும் புரிய வைத்து விட முடியாது. தலைப்பு செய்திகளாக சிலவற்றை கூற முடியும்.
              
மதுரையை ஆண்ட மன்னர்கள், மதுரை மீது நடந்த படையெடுப்புகள், விஜய நகர சாம்ராஜ்யத்தின் ஆட்சியின் வரலாறு. திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் ஒர் சமூகத்துக்கு கொடுக்கப்பட்ட அந்தஸ்து அந்த சமூகம் வாழ்ந்த தாதனூர் என்னும் பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை.

மதுரை கோட்டை உருவாகிய விதம், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நகர விரிவாக்கம் என்று கூறி கோட்டையை இடித்த வரலாறு. அவர்கள் அரசு அமைத்த முறை. புகை வண்டி கொண்டு வருதல் , காவல் நிலையங்களை ஏற்ப்படுத்துதல், காவல் கூலி முறையை ஒழிக்க முயல்வது, தோல்வி அடைவது போன்றவை விவரிக்கப்படுகிறது.

வரி வசூல் அமைப்பில் வர மறுக்கும் மதுரை புறநகர் பகுதிகளுக்கு நீர்பாசன வசதி செய்து கொடுத்து, நில அளவை செய்து கொடுத்து அவர்களை ஆங்கிலேய ஆட்சி முறைக்கு கொண்டு வருவது விவரிக்கப்படுகிறது.

இதே நேரத்தில் அமெரிக்க மெசினரிகாளால் மக்கள் மத மாற்றம் செய்யப்படுவது குறித்தும் விவரிக்கிறது.

இதில் மன்னராட்சி பற்றிய வரலாற்று உண்மைகள் என்றும், தாதனூர் என்ற நிலப்பரப்பை கற்பனையில் உருவாக்கி, இந்த நாவல் உருவாக்க உழைத்த பத்தாண்டுகளில் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் , சொல் வழி மூலம் கேட்டறிந்த மக்களை கதாபாத்திரங்களாக தாதனூர் பகுதி மக்களாக சித்தரித்துள்ளார்.

அவர்களது தொழில் களவு செய்வது மற்றும் மதுரை நகரை காவல் காப்பது. மதுரை நகரை காவல் காக்க மக்களிடம் காவல் கூலி பெறுவது, கூலி கொடுக்க மறுக்கும் வீடுகளில் களவு செய்வது, பின்பு சமரச பேச்சு வார்த்தையில் ஈடு பெற்றுக்கொண்டு களவு செய்த பொருளை திரும்ப கொடுப்பது. தினமும் களவு செய்து தான் வாழ்க்கை நடத்துகின்றனர். பொருள் சேர்த்து எதிர்கால திட்டத்தை வகுப்பது என்ற வாழ்க்கை முறை இல்லை.

பஞ்ச காலத்தில் இந்த பகுதியின் பல மக்கள் கூலித் தொழிலாளிகளாக வெளியேறுவது விவரிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேயே ஆட்சி காவல் கூலி முறையை ஒழிக்க பாடுபடுவது, அதை தாதனூர் மக்கள் இறுதி வரை எதிர்ப்பது மற்றும் அவர்களது வாழ்க்கை முறையை விவரிப்பது தான் கதை. 

இறுதியில் அவர்கள் குற்ற பரம்பரையினராக அறிவிக்கப்பட்டு சிறிது சிறிதாக கைது செய்து தண்டிப்பது, நாடு கடத்துவது, தூக்கிலிடுவது இறுதியாக வேறு பகுதிக்கு அழைத்து சென்று அவர்கள் இருக்கும் இடம் எதுவென்று அவர்களும் அறியாமல் வெளியுலகமும் அறியாமல், அதிகாரத்தின் கீழ் அடிமைகளாக அழிந்து மடிவதை மிகவும் எளிமையான வார்த்தைகளால் விவரித்துள்ளார்.

மதுரையில் வாழும் மக்களுக்கு கூட மதுரையில் கோட்டை இருந்ததும் அது தகர்த்தப்பட்டு மதுரை விரிவாக்கம் செய்யப்பட்டது என்ற வரலாறு தெரிந்திருக்காது. மதுரையின் விரிவாக்க பகுதியாக கூறப்படும் இன்றைய பகுதிகளையும் கணக்கிட்டால் கூட , மதுரையின் பரப்பளவு அம்மன் கோயிலை மையமாக கொண்டு 5 கிலோமீட்டர் சுற்றளவு தான் இருக்கும். விரிவு படுத்தப்படாத மதுரை என கணக்கிட்டால் 3 கி.மீ சுற்றளவு தான் இருக்கும். அந்த நிலப்பரப்புக்கு தான் இத்தனை போர்கள் நடந்ததா என்று நினைக்கும் போது, இன்றைய நிலையில் வேடிக்கையாக இருக்கிறது.

மங்கம்மாள் காலத்துக்கு முன்பு முன்பு ஆண்டவர்கள் பொது மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த எதுவும் செய்யவில்லை என்றே நான் புரிந்து கொள்கிறேன். போர் புரிவதை மட்டுமே கடமையாக கொண்டு வாழ்ந்துள்ளனர்

இந்த கதையை படிக்க ஆரம்பிக்கும் போது இது குறித்து விரிவாக எழுத வேண்டும் என நினைத்தேன். சாகத்திய அகதெமி பரிசு பெற்ற கதை. இதைப்பற்றி எழுதுவதறக்கு முன்பு மற்றவர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என இனையத்தில் பார்த்தேன்.

பிரபல எழுத்தாளர்கள் ஜாதிய அடிப்படையிலேயே இதை அணுகியுள்ளார்கள். கதை விருது பெற தகுதியுடையதா என்ற வாதங்களையும் எழுப்பியுள்ளனர். ஒருவொருக்கொருவர் அடித்துக்கொண்டு குற்றுயிரும் கொலையிருமாக இனையத்தில் உலா வருகிறார்கள். எனவே, அந்த விமர்சனங்களை படித்து பாருங்கள்.

சரித்திரத்தை பின்னனியாக கொண்டு எழுதப்பட்ட கதை என்ற அளவில் எனக்கு பிடித்தது.

கடந்த கால சரித்திரத்தில் எந்த பகுதியை யார் ஆண்டார்கள் , யார் யாரை ஆதிக்கம் செலுத்தினார்கள் என்பதை விட, நிகழ்காலத்தில் ஆள்பவர்கள் சரியாக ஆள்கிறார்களா என்பதை ஆராய்ந்து, எதிர் காலத்தில் அனைத்து மத ஜாதி இன மொழி மக்களும் அமைதியுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம்.


 .