Showing posts with label புத்தக ஆய்வு. Show all posts
Showing posts with label புத்தக ஆய்வு. Show all posts

Friday, 16 January 2015

ஆஷாபூர்ணா தேவி எழுதிய “ ப்ரதம் ப்ரதிஸ்ருதி - மதிப்புரை



ஆஷாபூர்ணா தேவி எழுதிய ப்ரதம் ப்ரதிஸ்ருதி

ஆஷாபூர்ணா தேவி எழுதிய ப்ரதம் ப்ரதிஸ்ருதி ” எனும் வங்க மொழி கதை தமிழில் “ முதல் சபதம் “ எனும் பெயரில் புவனா நடராஜன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
                
வங்க தேசத்தில் பழமையான சம்பிரதாயங்களில் வாழும் ஒரு பிரமாண குடும்பத்தில் பிறந்த சத்தியவதி என்ற பெண், பல தடைகளை கடந்து வாழ்க்கையில் முன்னேறுவது தான் கதை.

சத்தியவதியின் தந்தை ராம்காளி வைத்தியர் வசதியானவர். பெரிய கூட்டு குடும்பம். சகோதரர்கள், சகோதரிகள், மருமகன்கள், மருமகள்கள் மற்றும் இவர்களில் விதவையானவர்கள், இவர்களது குழந்தைகள் பேரன் பேத்திகள் என கூட்டாக வாழும் குடும்பம்.

ஒவ்வொருவரது வாழ்க்கையும் விவரிக்கப்படுகிறது. அந்த காலத்தில் எட்டு வயதிலேயே குழந்தைகளுக்கு திருமணம் செய்து, பெரியவள் ஆன பிறகு கணவன் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் பழக்கம் இருந்ததையும் , அந்த முறையினால் பலர் குழந்தை பருவத்திலேயே விதவையான விவரங்களையும் அந்த பழக்கத்தை மாற்றி கொள்ள விரும்பாத மனிதர்களையும் பற்றிய கதை.

இதில் அவரது பெண் சத்தியவதி தானாகவே எழுத படிக்க கற்று, கணவன் வீட்டுக்கு மிகவும் தாமதமாக சென்று, அங்கு தனக்கு விதிக்கப்பட்ட தடைகளை கடந்து தனது படித்த கணவனுடன் கல்கத்தா நகரம் வந்து, ஆங்கிலேய அரசு பணியாளராக அமரும் கணவருடன் வாழ்கிறார்.

கல்கத்தாவில் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் நவாபாக இருந்தாலும் தாழ்த்தப்பட்ட வகுப்பாக இருக்கும் காரணத்தால், அவர் குடியிருப்பவர்களை தனது பிரஜைகள் என்று அழைப்பதை விரும்பவில்லை. பிராமண பெண்ணுக்கு நவாபாக இருந்தாலும் காலில் விழந்து வணங்க வேண்டுமென எதிர்ப்பார்க்கிறார். 

இவருக்கு இரண்டு ஆன் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் பிறக்கிறார்கள். ஆன் பிள்ளைகள் கல்லூரி படிக்கும் வயதில் பெண் பிள்ளை சிறிய வகுப்பில் படிக்கிறார். பெண் பிள்ளைக்கு பதினெட்டு வயது வரை திருமணம் செய்ய கூடாது என்று முடிவெடுக்கிறார். அதை கணவரிடமும் தெரிவிக்கிறார். இந்த கால கட்டத்தில் குடும்ப சொத்துக்களை பகிர்ந்து கொடுத்து விட்டு தந்தை ராம்காளி காசிக்கு சென்று விடுகிறார்.

பெரிய மகனுக்கு திருமணம் நிச்சயிக்க , தந்தையும் எட்டு வயது சிறிய மகளும் கிராமத்துக்கு செல்கின்றனர். இவர் திருமணத்திற்க்கு முன்பு செல்வதாக திட்டம். ஆனால் கிராமத்துக்கு உடனடியாக புறப்பட்டு வரும்படி செய்தி வர கிளம்பி செல்கிறார். அங்கு தனது எட்டு வயது மகளுக்கு திருமணம் செய்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து யாரிடமும் பேசாமல் கல்கத்தா திரும்பி வருகிறார். தானும் காசிக்கு சென்று தனது தந்தையிடம் வாழ முடிவு செய்வதுடன் கதை முடிவடைகிறது.

பிராமண குடும்பத்திலிருக்கும் பழக்க வழக்கங்களுக்கு எதிராக போராடி செயல்படும் இந்த பெண் மற்ற சமூகத்தாரை கீழாக நினைப்பதுடன் பிராமணர்களுக்கு மரியாதை தந்து தான் வாழ வேண்டும் என்ற நிலையில் இருப்பது மிகவும் முரண்பாடு. கல்வியினால் தான் சமூகம் முன்னேற்றமடையும் என்று கருதும் இவர், கல்வி கற்று தரும் ஆசான் எடுக்கும் முடிவுகளுக்கு பல சமயங்களில் எதிராக செயல் படுவதும் பின்பு தனது தூரத்து சொந்தகார மிக இளம் வயது பெண்ணை பாதுகாப்பு கருதி, வயதில் மிகவும் மூத்தவரான ஆசிரியருக்கு மனமுடித்து கொடுப்பது நேர் முரன்.

கதாசிரியர் ஆஷாபூர்ணா தேவியும் இளம் வயதில் கல்வி கற்காதவர். பின் பகுதி வாழ்க்கையில் கல்வி கற்று 250 நூல்களுக்கு மேல் எழுதியவர். இந்த கதை மிகவும் பிரபலமடைந்துள்ளது. இது ஞானபீட விருது பெற்ற நாவல்.

பதிப்பகத்தார் பிழை திருத்தம் சரியாக செய்யவில்லை.


 

Wednesday, 24 December 2014

நகுலன் கதைகள்



எழுத்தாளர் திரு. நகுலனின் எட்டு கதைகள் அடங்கிய புத்தகம் படிக்க வாய்ப்பு கிடைத்தது.
1. நிழல்கள் 1965
2. நினைவுப்பாதை 1972
3. நாய்கள் 1974
4. நவீனன் டயரி 1976
5. சில அத்தியாயங்கள் 1983
6. இவர்கள் 1992
7. வாக்கு மூலம் 1992
8. அந்த மஞ்சள் நிற பூனைக்குட்டி 2002

இலக்கியம் என்றால் என்ன என்ற குழப்பம் எனக்கு தொடர்ந்து இருந்தாலும் கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து புத்தகங்கள் படித்து வருகிறேன். இதன் மூலம் ஏதேனும் ஒரு கால கட்டத்தில் இலக்கியம் என்றால் என்ன என்பது புரியும் வாய்ப்பு ஏற்ப்படும் என்ற நம்பிக்கை.
எந்த புத்தகமாக இருந்தாலும் முழுவதுமாக படித்து முடித்து விடுவேன். சில புத்தகங்களை தொடர்ச்சியாக படித்து விட்டு தான் கீழே வைப்பேன். சிலவற்றை சிறிது சிறிதாக படிப்பேன். பொதுவாக முழுமையாக படித்து விடுவேன்.
முழுமையாக படிக்க இயலாத புத்தகம் இந்த ஒன்று தான். இதில் இருந்த நிழல்கள், நினைவுப்பாதை இரண்டு கதைகளை படிப்பதற்க்குள் எனக்கு ஏற்ப்பட்ட அனுபவங்களை வெளிப்படையாக கூறினால், யாராவது வழக்கு தொடரலாம் அல்லது அடிக்க வரலாம். என்னால் தொடர்ந்து படிக்க இயலவில்லை மற்ற கதைகளை படிப்பதில்லை என முடிவு செய்து விட்டேன்.
படித்த கதைகளை பற்றி விமர்சனம் எழுதலாம் என நினைத்தால் என்ன படித்தோம் என்று நினைவுக்கு வர மறுக்கிறது. இத்தனைக்கும் பத்து நாட்களுக்கு முன்பு தான் படித்தேன். இந்த நிலையில் தற்போது சென்னையில் நடந்து வரும் புத்தக கண்காட்சியில் ஒரு பதிவாளர் இவர் எழுதிய “நாய்கள்” என்ற கதை புத்தகத்தை விரும்பி விலை கொடுத்து வாங்கியதாக படித்தேன்.
எனக்கு புரியாத ஒரு புத்தகத்தை சிலர் இன்றைக்கும் விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்றால் அதில் ஏதேனும் சிறப்புகள் இருக்கும் என தோன்றியது. எனவே, இனையத்தில் இவரைப் பற்றியும் இவரது எழுத்துக்களைப் பற்றியும் யார் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம் என தேடிப்பிடித்து படித்தேன்.
இதற்க்கிடையில் அந்த “ நாய்கள் ‘ என்ற கதையையும் படித்தேன். இது ஒரு சிறந்த கதை என்று தான் இனையத்தில் சிலர் எழுதியிருந்தனர். எனக்கு சுத்தமாக புரியவில்லை.
இதை எழுதுவதற்க்கு ஒரு மணி நேரம் முன்பு ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தேன். ஒரு ஓட்டையை முகர்ந்து கொண்டு எட்டு நாய்கள் விரட்டிக்கொண்டிருக்கும் காட்சியை பார்த்தேன். என்னுடன் அங்கு நின்று கொண்டிருந்த பத்து பதினைந்து நபர்களும் பார்த்து கொண்டிருந்தனர். எந்த நாய்க்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆவல் பார்த்துக்கொண்டிருந்த அனைவருக்கும் இருந்தது. போக்கு வரத்து அதிகமாகி விட்டதால் நாய்களும் மனிதர்களும் கலைந்து சென்று விட்டனர்.
ஏதோ ஒரு நாய்க்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். பார்த்து கொண்டிருந்த பத்து நாய்களில் பலவற்றுக்கு இந்த டெல்லியின் ஏழு டிகிரி குளிரில் இன்று இரவு வாய்ப்பு கிடைக்கும்.
“நாய்கள்” கதையிலும் கிட்ட தட்ட இது தான் சொல்லப்பட்டிருப்பதாக தோன்றுகிறது. ஆனால் சொன்ன விதம் கொடுமை. புரியவில்லை.

தமிழ் மொழி எழுத படிக்க பேச தெரிந்தாலே அனைத்தையும் படித்து புரிந்து கொள்ள முடியும் என்ற எனது எண்ணத்தை சிதறடிக்க செய்து விட்டார். இவர் எழுதியுள்ள மொழி நடையே பிடி படவில்லை புரியவில்லை என்கிற போது அதில் உள்ள இலக்கிய தன்மையை புரியாதது ஒன்றும் ஆச்சரியமில்லை.
இவரது எழுத்துக்கள் நிஜத்தையும் புனைவும் கலந்தது என்று கூறப்படுகிறது. ஒரு வித மனநிலை பாதிக்கப்பட்டவர் அல்லது வயதான நிலையில் சுய நினைவில்லாமல் , பழைய நினைவுகளையும் தற்கால நிகழ்ச்சிகளையும், கற்பனைகளையும் கலந்து பேசிக்கொண்டிருப்பது போல உள்ளது இவரது எழுத்துக்கள்.
எழுத்தில் இது ஒரு யுக்தி என்று சொல்லப்படலாம் அல்லது கதை சொல்லும் பாணியில் இது ஒரு புதிய முயற்ச்சி என்று சொல்லலாம். ஆனால் வாசகனுக்கு எந்த அளவு அது சென்றடையும் என்பதை அவர் உனர்ந்திருப்பாரா என தெரியவில்லை. வாசகனுக்கு புரியாமல் அல்லது அவனை குழப்புவதின் மூலம் தன்னுடைய படைப்புகளை இலக்கிய படைப்புகளாக அவர் சமூகத்தின் முன் வைத்திருந்தாலும், என்னை பொருத்த வரை சாதாரண வாசகனுக்கு புரியாது.
வாசகனோ அல்லது வேறு எழுத்தாளர்களோ தனக்கு புரியவில்லை அல்லது பிடிக்கவில்லை என்று நேரடியாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அப்படி ஒப்புக்கொண்டால், அவர்களது இலக்கிய அறிவும் ரசனையும் கேள்விக்குறியாக்கப்படுவதுடன் ஏளனத்துக்கும் ஆளாவர்கள். எனவே, அவரைப்பற்றி எழுதியவர்கள் அவரது படைப்பை பற்றி எழுதியவர்கள் , பொதுவாக அவரை பற்றியே எழுதியுள்ளார்கள். அவரது எழுத்துக்கள் மூலம் என்ன அறிந்து கொண்டார்கள் என்பதை இனையத்தில் யாரும் எழுதி வைக்கவில்லை.
பத்து சிறந்த வாசகர்களும் பத்து இன்றைய எழுத்தாளர்களும் அவரது கதைகளை படிக்க வைத்து விவாதிக்க ஏற்ப்பாடு செய்தால் அதை கேட்கும் மற்றவர்கள் நேரடியாக அவர்களே சென்று மனநோய் மருத்துவமனையில் சேர்ந்து விடுவார்கள்.
எனக்கு இலக்கியம் புரியவில்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறேன்.

Wednesday, 3 December 2014

கங்கணம் – புதினம் – பெருமாள்முருகன்


கங்கணம் – புதினம் – பெருமாள்முருகன் 



 

கவுண்டர் ஜாதியை சார்ந்த 35வயது முதிர் இளைஞன் ஒருவனின் கதை. ஆரம்பகாலத்தில் அவனது தாய் பொறுப்பில்லாமல் அவனுக்கு வந்த திருமண உறவுகளை தட்டிகழிக்கிறாள். அப்பா இது குறித்து கவலையில்லாமல் வாழ்கிறார். 

அவனது நண்பர்களுக்கும் சுற்றியிருப்பவர்களுக்கும் அவனை சார்ந்து வாழ்பவர்களுக்கும் இள வயதில் திருமணம் முடிகிறது. அதே சமயம் அவனைப்போலவே அவனது சமூகத்தில் திருமணம் முடியாதவர்கள் இருப்பதையும் அவன் அறிவான்.

எங்கு சென்றாலும் எல்லோராலும் அவனது திருமண விசயம் பேசப்படுகிறது. அவமானம் அடைகிறான். தனித்து வாழ முயன்று இயலாமல் தவிக்கிறான். 

திருமணம் நிச்சயக்கப்படும் சமயங்களில் யாரவது சொல்லும் சொல்லால் செய்யும் செயலால் திருமணம் தடைப்படுகிறது.

தானாகவே திருமணம் நிச்சயித்து கொள்ள பல வழிகளில் முயற்சி செய்கிறான். அம்மாச்சியின் உறவு முறிகிறது. பாட்டியுடன் இணக்கமாக வாழ்கிறான். தாயிடம் தகாத சொல் சொல்ல வேண்டிய நிலமை ஏற்ப்படுகிறது.

அவனது சக்கிலிய வகுப்பை சார்ந்த நண்பன் செய்யும் ஏற்ப்பாட்டை தயக்கத்துடன் ஏற்றுக்கொண்டு திருமணம் நிச்சயக்கப்படுகிறது. ஏதேனும் தடங்கள் ஏற்ப்பட்டு விடுமோ என்ற பயத்திலேயே பல சமரசங்களை செய்து கொண்டு திருமண வேலைகளை செய்கிறான். இந்த நிலையில் பாட்டி இறந்து விட்டால் திருமணம் தடைப்பட்டு விடுமோ என்ற அச்சமும் இருக்கிறது.

இறுதியில் திருமணம் முடிகிறது. இதில் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை அவனுக்கு திருமணம் முடியுமா என்ற ஆவலை தூண்டும் வகையில் எழுதியிருப்பது தான் எழுத்தாளரின் சிறப்பு. இதன் அடிப்படையில் குடும்பத்தில் உறவுகளில் ஏற்ப்படும் சிக்கல்களை விவரிப்பதுடன், மனிதர்களின் பலவீனமான நம்பிக்கைகளையும் சித்தரிக்கிறார்.
திரு. பெருமாள் முருகனின் நான்காவது நாவல் என குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது நாவல்களில் நான் படித்த முதல் நாவல் இது.
இந்த புத்தகத்திற்க்கு அவர் எந்த முன்னுரையும் எழுதவில்லை. யாரும் அணிந்துரையும் எழுதவில்லை. பதிப்பகத்தாரின் சிறு குறிப்பு மட்டுமே இருக்கிறது
============================================================================
திருமணம்,  வாழ்க்கையில் முக்கிய அம்சமாக சமூகம் தீர்மானித்துள்ளது. சரியான வயதில் மனதிற்க்கு பிடித்தவாறு இந்த உறவு ஏற்ப்பட்டுவிட்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைந்து விடுகிறது. அப்படி அமைந்த வாழ்க்கையை சரியாக அனுபவிக்க தெரியாமல் சிக்கலாக்கி கொண்டு பிரியும் நிலைக்கும் சென்று விடுகின்றனர். அவர்கள் திருமணமாகாதவர்களிடம் பேசி பழகினால் தான் அதன் அருமை பெருமைகளை உணர முடியும்.

திருமணம் என்பது  பெரிய கொள்கைகளுடன் கனவுகளுடன் திட்டமிட்டு செய்து கொள்வது அல்ல. உடலில் தோன்றும் ரசாயன மாற்றங்களின் விளைவுகளால் ஏற்ப்படும் உடல் தினவுகளை தீர்த்து கொள்ள சமூக அங்கீகரிப்பின் மூலம் செய்து கொள்ளும் நிகழ்வே திருமணம். 

திருமணத்தின் மூலம் இனவிருத்தி செய்வது இன்றியமையாததாக மாறிவிட்டது. இனவிருத்தி செய்யவில்லையெனில் அவர்களின் தன்மை சந்தேகத்துக்குள்ளாகி ஏளனத்துக்கும் சங்கடத்துக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.

திருமணம் செய்யாமல் இருக்கும் நபர்களை பற்றியும் சமூகம் மிகக் கொடுரமான விமர்சனங்களை முன் வைக்கிறது.

திருமணம் செய்து கொள்ளதவர்களிடமிருந்து உறவுகள் விலக ஆரம்பிக்கின்றன . உறவுகளுக்கு இவர்களிடம் ஒரு எச்சரிக்கை தன்மையும் பயமும் உருவாகிறது. தனது உறவுகளிடம் இவர்கள் உறவாடி விடுவார்களோ என்ற பயம் இவர்களிடம் ஏற்ப்படுவதால் அவர்களை விலக்கி வைக்கின்றனர்.

திருமணமாகதவர்களின் மனநிலையை பற்றி உறவுகள் கவலைப்படுவதில்லை. திருமணமாகாதவர்கள் பெரும்பான்மையோர் முறையான உடல் உறவுக்கே காத்திருக்கின்றனர். சமூகத்தில் கிடைக்கும் இலவச உறவுகளிடமோ விலை கொடுத்தால் கிடைக்கும் உறவுகளிடமோ உறவு வைத்துக்கொள்ள தயங்குகின்றனர்.

திருமண வயதில் ஜாதி அந்தஸ்து என பல காரணங்களை கூறி ஆரம்ப காலத்தில் தட்டி கழித்து பின்பு வயது முதிர்ந்த காலத்தில் இவைகள் அனைத்தையும் ஒதுக்கி விட்டு யார் கிடைத்தாலும் எந்த நிலையில் கிடைத்தாலும் பரவாயில்லையென சமரசம் செய்து திரும்ணம் செய்து வாழ்க்கையை அமைத்து கொள்கின்றனர். இதன் மூலம் உடல் தேவைகள் நிறைவேறுவதுடன் சமூக அங்கீகாரமும் கிடைக்கிறது.

சமரசம் செய்யாமல் வாழ்நாள் முழுவதும் தனிமையில் வாழ்ந்து மடிபவர்களும் இன்னமும் சமூகத்தில் இருக்கின்றனர்.


இன்றைக்கும்  பல வயது முதிர்ந்தவர்களின் திருமண ஆசையை விளம்பரங்களின் மூலம் கான முடிகிறது. இவர்கள் பரஸ்பரம் ஒருவரை ஒருவன் அணுகி ஏன் சேர்ந்து வாழ முடியாது. வாழ முடியாமல் போக காரணம் ஜாதி அந்தஸ்து அழகு என பல காரணங்கள் கூறப்பட்டாலும் அவைகளை சமரசம் செய்து கொண்டால் இவர்களின் ஏக்க தாபங்கள் நிறைவடையும்.

பெண் குழந்தையின் திருமணம் பெரிய சுமை என்ற காரணத்தால் பல ஆண்டுகளாக பெண் குழந்தைகள் தவிர்க்கப்பட்டதான் விளைவை தற்போது ஆண்கள் அனுபவித்து வருகின்றனர்.