Showing posts with label விழுதுகள். Show all posts
Showing posts with label விழுதுகள். Show all posts

Tuesday, 22 July 2014

வேர்களை தேடும் விழுதுகள் – விழுதுகளை தேடும் வேர்கள்



வேர்களை தேடும் விழுதுகள் – விழுதுகளை தேடும் வேர்கள்

இன்றைய நிலையில் தான் தனது குடும்பம் என்ற நிலைப்பாட்டுடன் வாழ்ந்தாலும் நமது முன்னோர்களை அறிய பல சமயம் விருப்பம் ஏற்ப்படுகிறது.

குறைந்தபட்சம் தனது வம்சா வழியில் தந்தை, தாத்தா, தாத்தாவின் அப்பா என்கிற அளவில் மட்டும் தான் அறிய முடிகிறது. இதுவும் அனைவருக்கும் சாத்தியமில்லை. இன்றைய தலைமுறை தாத்தாவின் பெயரை கூட அறிய முடிவதில்லை.

கூட்டு குடும்ப சிதைவே இதற்கு முக்கிய காரணம். குடும்ப சடங்குகள் நடைபெறுவதும் குறைந்து வருகிறது.

கல்யாண பத்திரிக்கை அடிக்கும் போது தாத்தாவின் பெயர் பயன் படுத்தப்படுகிறது. மகனுக்கு கல்யாணம் செய்யும் தந்தை, அவரது தந்தையின் பெயரை தவறாமல் பதிவு செய்கிறார். ஆனால், தாய் தந்தை  ]இல்லாதவர் தனது திருமணத்திற்க்கு பத்திரிக்கை அடிக்கும் போது , தாத்தாவின் பெயரை அறியாதவர்களே அதிகம்.

சில சமயம் ஈம சடங்கு செய்யும் போதும் தந்தை தாத்தா பெயர்களை நினைவு படுத்தி கொள்ள வேண்டிய அவசியம் ஏற்ப்படுகிறது.

இந்த மூன்று தலைமுறை பெயர்களை நினைவு படுத்தி கொள்வது ஆண்களே. பெண்களுக்கு அந்த நிலை ஏற்ப்படுவதில்லை. இந்த சமூகம் ஆண் வழி வம்சத்தை மட்டுமே நினைவுபடுத்த ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எனது வம்சம் எனது பரம்பரை பாரம்பரியமானது என்று கூறி கொள்வது எந்த அடிப்படையில் என்று புரியவில்லை. நாலு தலைமுறையை நினைவு வைத்து கொள்ள முடியாதவர்கள் பாரம்பரிய பெருமை பேசுவது போலித்தனம். பரம்பரை பேர் சொல்ல ஒரு மகன் வேண்டும் என்று தவமிருந்து ஆண் பிள்ளையை பெற்று கொள்ள முயற்சி செய்கின்றனர். பேர் சொல்ல பிள்ளை ஒன்று வேண்டும் என்பது பழமொழியாகி விட்டது.

மிகப்பிரபலமானவர்களின் பரம்பரையை கூட அறிய முடிவதில்லை. வெள்ளையர்கள் நம்மை ஆள வருவதற்க்கு முன்பு இருந்த மன்னர் பரம்பரையினர் இன்றைக்கும் இருப்பார்கள். அவர்களால் கூட இந்த பரம்பரையை நினைவு வைத்துக்கொள்ள முடிவதில்லை.

நாம் அனைவருமே வேர்களை தேடும் விழுதுகளாக தான் இருக்கிறோம்.

இன்றைக்கு 90 வயதை கடந்தவர்கள் அவர்கள் உருவாக்கிய  பரம்பரை வாரிசுகளை கூட நினைவுபடுத்தி கொள்ள முடிவதில்லை. அவர்கள் பெற்ற பிள்ளைகள் எத்தனை, அவர்களுக்கு பிறந்த பிள்ளைகள் எத்தனை, அவர்களது பிள்ளைகள் எத்தனை என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. 

சிலருக்கு அவரது வாரிசுகளின் எண்ணிக்கை ஐம்பதை தாண்டி விடுகிறது.
அவர்கள் அனைவரையும் இவர்களால் நினைவு படுத்திகொள்ள முடிவதில்லை. நேரில் பார்த்தாலும் இந்த வாரிசுகளின் நேர் வரிசையை அறிய முடிவதில்லை. அவர்களே அறிமுகப்படுத்தி கொள்ள வேண்டியுள்ளது. அனைவரையும் ஒரு சேர பார்த்தாலும் அனைவரையும் யார் யாருடைய வாரிசு என்று அறிய முடிவதில்லை.

வயது முதிர்ந்த நிலையில் நினைவு சக்தி குறைந்த காரணம் முக்கியமானதாக இருந்தாலும், வாரிசுகள் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், அனைவரும் கூடி குடும்ப நிகழ்சிகளில் கலந்து கொள்ளாததும்  காரணம்.

நாம் அனைவருமே விழுதுகளை தேடும் வேர்களாக தான் இருக்கிறோம்.

வேர்களை அறிவதும் விழுதுகளை அறிவதும் அவசியமாகிறது.
வேர்களையும் விழுதுகளையும் நேரில் சந்திக்க முடியாத நிலையில் குறைந்த பட்சம் அவர்களது பெயர்களையாவது அறிந்து கொண்டு அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல, ஒரு ஆவனத்தை ஏற்ப்படுத்தி வைக்கலாம். குடும்ப மரம் ( FAMILY TREE) என்ற மென்பொருள் இனையத்தில் இலவசமாக கிடைக்கிறது. அதன் மூலம் முடிந்த வரை நமது  வேர்களையும் நமது விழுதுகளையும்  உருவாக்கி , நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் வேர்களுக்கும் விழுதுகளுக்கும் புரிய வைக்க முயற்சி செய்யலாம்.