Saturday, 22 February 2014

ஆலய தரிசனம் - ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில்

தஞ்சை பெரியகோயில்::


அண்மையில் மேற்கொண்ட தமிழக சுற்றுப்பயணத்தில், ஆறாவதாக   (06.02.2014) சென்ற கோவில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். 12 ஜோதிர்லிங்க தலங்களில் ராமேஸ்வரமும் ஒன்றாகும். ராமாயணம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது ராமேஸ்வரம். ராமபிரான் சிவலிங்கம் ஸ்தாபித்து அவரை வழிபட்ட காரணத்தினால் இத்தலத்திற்கு ராமேஸ்வரம் என்று பெயர் ஏற்பட்டது

காலை நேரத்தில் சென்றோம். கூட்டம் இருந்தது. ஆனால், வரிசையில் நின்று போக வேண்டிய அவசியம் ஏற்ப்படவில்லை. இங்கு இரண்டு சிவலிங்கங்கள் இருக்கிறது. ஒன்று ராமலிங்கம் என்றும் மற்றோன்று காசி விஸ்வநாதர் என்றும் அழைக்கப்படுகிறது.

சிவலிங்கம் பெரிதாக இருந்தது. அருகிலிருந்து தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அம்பிகை பர்வதவர்த்தினியின் சந்நிதி ராமநாதரின் வலப்பக்கம் அமைந்திருக்கிறது. அம்பிகை கோவிலின் வடமேற்கு மூலையில் பள்ளிகொண்ட பெருமாள் ஆகாயத்தை நோக்கியபடி  திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். சிவனும், பெருமாளும் ஒரே இடத்தில் இருப்பது சிறப்பு


தென்மேற்கு மூலையில் சந்தான கணபதியின் சந்நிதி அமைந்திருக்கிறது. ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. ராமநாதர் சந்நிதிக்கு பின்புறம் இரண்டாவது மற்றும் மூன்றாவது  பிரகாரங்களுக்கிடையே சேதுமாதவர் சந்நிதி அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு 1212 தூண்களைக் கொண்ட இக்கோவிலின் மூன்றாம் பிரகாரம் ஆகும். உலகிலேயே மிக நீளமான பிரகாரம் என்ற பெருமையைப் பெற்ற இப்பிரகாரம் உலகப்பிரசித்தி பெற்றதாகும்.

முத்துராமலிங்க சேதுபதி அவர்களால் 1740- 1770 ஆண்டுகளில் இந்த மூன்றாம் பிரகாரம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த பிரகாரம் வெளிப்புறத்தில் கிழக்கு, மேற்காக 690 அடியும், வடக்கு தெற்காக 435 அடி நீளமும் கொண்டது. உள்புறத்தில் கிழக்கு மேற்காக 649 அடியும், வடக்கு தெற்காக 395 அடி நீளமும் கொண்டது.

இந்த பிரகாரங்கள சுற்றி வர நீண்ட நேரம் எடுத்துக்கொண்டோம். தற்போது வண்ணப்பூச்சுகள் நடைப்பெறுகிறது. பிரகாரங்கள் சற்று இருண்டு காணப்படுகிறது. தீப ஓளியுடன் பார்த்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனத்தை விட தீர்த்தமாடுவது தான் மிக சிறப்பாக கருதப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே 22 தீர்த்தங்களும் வெளியே 22 தீர்த்தங்களும் உள்ளன. ஆலயத்தின் உள்ளே உள்ள தீர்த்தங்கள் எல்லாம் கிணறுகளாகவே அமைந்துள்ளன.  பக்தர்கள், கோவிலின் உள்ளே உள்ள தீர்த்தங்களில் நீராடுவதால், கோவில் பிரகாரங்கள் எல்லாம் ஈரமாக உள்ளது.
கோவிலில்உள்ள22தீர்த்தங்கள் :

1.மகாலட்சுமிதீர்த்தம்
2.சாவித்திரிதீர்த்தம்     
3.காயத்திரிதீர்த்தம்     
4.சரஸ்வதிதீர்த்தம்     
5.சங்குதீர்த்தம்     
6.சக்கரதீர்த்தம்     
7.சேதுமாதவர்தீர்த்தம்
8.நளதீர்த்தம்     
9.நீலதீர்த்தம்     
10.கவயதீர்த்தம்     
11.கவாட்சதீர்த்தம்
12.கெந்தமாதனதீர்த்தம்
13.பிரமஹத்திவிமோசனதீர்த்தம்
14.கங்காதீர்த்தம்
15.யமுனாதீர்த்தம்
16.கயாதீர்த்தம்
17.சர்வதீர்த்தம்
18.சிவதீர்த்தம்
19.சாத்யாமமிர்ததீர்த்தம்
20.சூரியதீர்த்தம்
21.சந்திரதீர்த்தம்
22.கோடி தீர்த்தம்  

பக்தர்கள் ஒவ்வொரு தீர்த்தம் உள்ள கிணற்றுக்கு சென்றால் அங்குள்ள ஊழியர்கள் கிணற்றிலிருந்து நீர் இறைத்து, பக்தர்களின் தலையில் ஊற்றுகின்றனர். பக்தர்கள் ஆண் பெண் குழந்தைகள் வித்தியாசமின்றி அனைத்து தீர்த்தங்களுக்கும் சென்று குளிக்கின்றனர்.

பக்தர்கள் ஈர உடையுடன் கோவிலை சுற்றி வரும் போது கவர்ச்சியாகவும், அசிங்கமாகவும் தெரிகின்றனர். அவர்களின் உள்ளாடை அப்பட்டமாக தெரிகிறது. 

பொதுவாக பெண்களை குளிப்பதை பார்க்க கூடாது என்பார்கள். அப்படி எவேரேனும் பார்த்துவிட்டால், மிகப்பெரிய பிரச்சனையாக்கி விடுகிறார்கள். அப்படியிருக்கும் பொது இவர்கள் பொது இடத்தில் அனைவர் முன்பும் குளிப்பதும் ஈர உடையுடன் வலம் வருவது தவறல்லவா. இவர்கள் பொதுஇடத்தில் ஆண்களுடன் சேர்ந்து குளித்தால், அதை மற்றவர்கள் பார்த்தால் தவறில்லை ஆனால், ஆணகள் வேறு இடத்தில் பெண்கள் குளிப்பதை பார்த்தால் குற்றம். எப்போதும் நியாயம் ஒரே மாதிரி இருக்கவேண்டும். இது கோயிலில், தீர்த்தத்தில் குளிப்பதை இப்படி காமகண்களுடன் பார்க்ககூடாது, அதை பற்றி விமர்சிக்க கூடாது என்றால், இவர்கள் குற்றால அருவியிலும் (தனியாக) குளிக்கிறார்கள். அங்கும் பல ஆண்களின் பார்வையில் படுகிறார்கள். இவர்கள் செய்தால் சரியானது. ஆணகள் செய்தால் தவறானது என்ற போக்கு மாற வேண்டும்.

கோவிலுக்கு உள்ளே செல்லும் முன்பு பொருட்களை வைத்து விட்டு போக பெட்டகங்கள் இருக்கின்றன. கிட்டதட்ட எல்லா மாநில மக்களும் தங்கும் படியாக விடுதிகளும் சத்திரங்களும் உள்ளன. கோவிலுக்கு உள்ளே செல்லும் முன்பு சோதனையிட்டு அனுப்புகின்றனர். பல மொழிகளில் வழிகாட்டி அறிவுப்புகள் செய்யப்படுகிறது. வெளிமாநில பக்தர்கள் நிறைய பேர் இருந்தனர்.

ஒரு வெளிநாட்டு பெண்மணி, சிவப்பு நிற புடவை கட்டி, பொட்டு வைத்து, தலைநிறைய மல்லிகை பூ வைத்து கொண்டு நடந்து சென்றுகொண்டிருந்தார். பார்க்க மிகவும் அழகாக இருந்தது.

கடற்கரைக்கு சென்றோம். 4 படித்துறைகள் இருந்தன. கடற்கரை அமைதியாகவும் அழுக்காகவும் இருந்தது. அலைகள் இல்லாத கடற்கரை. அலைகள் இல்லாததால் அது கடலா குளமா என சந்தேகமாக இருந்தது. 4 படித்துறைகளும் வட இந்திய சாமியர்களின் ஆசிரமத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும், சாமியார்கள் கோடிக்கணக்கில் பணம் சேர்த்துள்ளனர். ஆனால், அவர்கள் படித்துறைகளோ, சத்திரங்களே, அன்னதான்ங்களோ செய்யவில்லை. வட இந்திய ஆசிரமத்தை சார்ந்தவர்கள் இலவச சாப்பாட்டுக்கு பக்தர்களை வருந்தி வருந்தி அழைத்துகொண்டிருந்தனர். நாங்களும் உள்ளே சென்று சாப்பிட்டோம். சாதம், சாம்பார், மோர், முட்டைகோஸ் பொரியல், சப்பாத்தி, சுமாராக இருந்தது. வயிறு நிறைய சாப்பாடு போடுகிறார்கள். ஆனால், தினமும் வந்து சாப்பிடும் உள்ளூர்காரர்களை இனி வரக்கூடாது என எச்சரிக்கிறார்கள்.

பின்பு பாம்பன் பாலம் பார்க்க சென்றோம். கடலில் இருக்கும் பாலம் . ரயில் வண்டி இதில் வருகிறது. கப்பல வரும் போது, ரயில் பாலம் தூக்கப்பட்டு கப்பல் சென்ற பிறகு மீண்டும் ரயில் பலமாக மாறுமாம். பாலம் திறக்கப்படும் போது பார்க்க வாய்ப்பு ஏற்ப்படவில்லை. இதன் அருகில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன வழியாக தான் இப்போது அனைத்து வாகனங்களும் சென்று வருகிறது. கடற்கரை வழியே பயனம் செய்வது நிறைவை தந்தது வழியெங்கும் மீன் வாடை அடித்தது. மீன் சாப்பிட வாய்ப்பு கிடைக்கவில்லை.

ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் துற்புறுத்தப்பட்டார்கள், சிறைபிடிக்கப்பட்டார்கள் என்ற செய்தி நினைவுக்கு வந்தது..

http://upload.wikimedia.org/wikipedia/commons/3/3e/Rameswaram_temple_%2811%29.jpg



ஆலய தரிசனம் - ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்::


அண்மையில் மேற்கொண்ட தமிழக சுற்றுப்பயணத்தில், நான்காவதாக   (03.02.2014 – இரவு) சென்ற கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்.  இரவு 8.30 மணிக்கு கோவிலுக்குள் நுழைந்தோம். ஆசியாவில் உள்ள கோவில்களிலேயே மிக உயரமான கோபுரம் கொண்ட பெருமை கொண்டது. சிலர் தென்னிந்திய கோவில்களிலே மிக உயரமான கோபுரம் கொண்ட கோவில் என்கிறார்கள். 1987ஆம் ஆண்டு தான் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது என்கிறார்கள் என்கிறார்கள். இந்த கோபுரம் 17ம் நூற்றாண்டை சார்ந்தது என்றாலும் வெளி கோபுரத்திற்க்கு பின்பு உள்ளே பல கோபுரங்கள் உள்ளன. ஒரு சிறய நகரமே உள்ளது. .

இங்கும் நீண்ட வரிசை. எனவே முழுகோவிலையும் சுற்றிப்பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. சிறப்பு தரிசண வரிசையும் உண்டு. ரூ.25 மற்றும் ரூ.250. நாங்கள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் கோவிலில் மக்களை அனுமதிக்கவில்லை என தோன்றியது. 10 மணிக்கு கோவில் மூடப்பட இருந்ததால், ஏற்கனவே வரிசையில் இருந்த மக்களுக்கு தான் தரிசனம் கிடைக்கும் என மேற்கொண்டு மக்களை அனுமதிக்கவில்லை. நேரம் கடந்து கொண்டிருந்தது. எனவே பொதுவரிசையில் நின்றிருந்தவர்களை , சிறப்பு தரிசன வரிசையில் செல்ல அனுமதித்தனர். எங்களுக்கு பின்னால் சுமார் 25 பேர் தான் இருந்தனர்.

நாங்கள் இறுதியாக பள்ளிகொண்ட பெருமாளை தரிசித்தோம். இறுதியாக தரிசித்ததால் சிறிது நேரம் நின்று சிலையை தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது. கருப்பு நிறத்தில் பள்ளிகொண்ட பெருமாள், தலைப்பகுதியில் ஐந்து தலை நாகத்துடன் உறங்கிகொண்டிருந்தார். காலடியில் மகாலட்சுமி இருந்தார்களா என கவனிக்கமுடியவில்லை. இந்த சிலைக்கு எந்த அலங்காரமும் இல்லை. இந்த சிலைக்கு முன்பு வேறு ஒரு சிலை வைக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

நான் தசவதாரம் படம் பார்த்த போது, முதல் காட்சியில் கோவிலின் உள்ளே கமலாஹாசன் வந்து சிலையை பாதுகாப்பது போல காட்சி வரும். அப்போதிருந்தே அது போன்ற சிலை உள்ளதா என்று பார்க்க ஆவல் கொண்டிருந்தேன். அந்த அளவுக்கு பெரிதாக இல்லையென்றாலும், அதே போல் இருந்ததும், அதை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பும் கிட்டியது.

புளியோதரை பிரசாதம் வாங்கி சாப்பிட்டோம். கோவில் பிரசாத புளியோதரையின் சுவையே தனி.

இங்கும் பட்டு மாமிகள் அதிலும் இளம் வயது பெண்கள் மடிசார் புடவையில் பார்க்கும் வாய்ப்பும் அவர்கள் பேசும் மொழி அவா இவா என்ற வார்த்தைகளும் கேட்ட வித்தியாசமாகவும் நன்றாகவும் இருந்தது. ஆனால், அவர்கள் இது போன்று நம்மிடம் பேசும் போது அவ்வளவாக ரசிக்கமுடியவில்லை.

தினமும் இப்படி சிலமணி நேரம் வரிசையில் நின்று தான் தரிசனம் செய்யவேண்டியிருப்பதால், உள்ளூர் மக்கள் வருவதில்லையென்றும், சில மாதங்களில் கூட்டமே இருக்காது என்றும், நேரடியாக தரிசிக்கலாம் என்றும் அந்த நாட்களில்  உள்ளூர் மக்கள் செல்வார்கள் என அறிந்தேன்.
வெளியூரிலிந்து வரும் மக்கள் தங்கள் பொருட்களை வைத்துவிட்டு கோவிலுக்கு சென்று வர வசதியாக வெளியில் பொருட்களை வைத்து பூட்டிகொண்டு வரும்படியாக பாதுகாப்பு பெட்டகங்கள் வசதியை , கோவில் நிர்வாகமோ அல்லது அரசு தரப்பிலோ செய்ய வேண்டும்.

இந்த பெரிய கோபுரம் 1987ஆம் ஆண்டு, தமிழக முதல்வர் திரு. எம்.ஜி.ஆர். அவர்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கோவிலை கட்டிய மன்னர்களை பற்றிய குறிப்புகள் எப்படி கல்வெட்டுக்களில் செதுக்கப்பட்டுள்ளதோ அது போன்று இவரது பெயரையும் இவரது பணிகளையும் குறிப்பிட்டு வைக்கவேண்டும்.

இது போன்று குறிப்புகள் சரியகா எழுதப்படாத காரணத்தினால் தான், பல கோவில்களின் வரலாறுகள் இன்று வரை முழுமையாக கிடைக்கவில்லை.




Friday, 21 February 2014

ஆலய தரிசனம் - மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில்

மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில்::


அண்மையில் மேற்கொண்ட தமிழக சுற்றுப்பயணத்தில், நான்காவதாக   (03.02.2014 - மாலை) சென்ற கோவில் மலைக்கோட்டை – உச்சிபிள்ளையார் கோவில், திருச்சியில் மலையுச்சியில் அமைந்திருக்கும் இந்த கோயில் சுமார் 1800 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது என கூறப்படுகிறது. 150 அடி உயரம் கொண்ட இந்த கோயிலை அடைய 417 படிகள் ஏற வேண்டியுள்ளது.

நாங்கள் மாலை நேரம் சென்றதால், வெய்யிலின் தாக்கம் இல்லாததால் சற்று சிரமம் இல்லாமல் ஏற முடிந்தது. எனினும் 417 படிகள் என்பது மலைக்க வைக்க கூடிய தூரம். இந்த கோயிலில் அப்படி என்ன சிறப்பு என்பதை அறியும் பொருட்டு சிரமப்பட்டு ஏறினோம்.

மிகவும் சாதாரண பிள்ளையார் கோயில் தான். அதிக விசேசம் இல்லை. கூட்டமும் இல்லை. வரிசையில் போக வேண்டும் என்ற அவசியமில்லை. சிறிய பிரகாரம். மற்றப்படி விசேசம் ஏதுமில்லை. 
இந்த மலையில் சிவனின் சந்நிதானம் தாயுமானவர் என்ற பெயரில் உள்ளது.

நாங்கள் சென்றிருந்த போது, சில இஸ்லாமிய இளம் பெண்களும் கோவிலில் இருந்தனர். அவர்களுடன் காதலர்கள் இருந்தனர். நாங்கள் சென்ற போது, பட்டு புடவை மடிசாராக கட்டிகொண்டு பல இளம் கிழம் மாமிகள் சிரமப்பட்டு படியேறிக்கொண்டிருந்தனர். மடிசார்  பார்ப்பதற்க்கு நன்றாக தான் இருக்கிறது.

கீழே இருக்கும் குடவரை கோயில்களை பார்க்கமுடியவில்லை. அது மூடப்பட்டிருந்தது.

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாய் அமையட்டும் என்று வாழ்த்தியதால், முருகன் கோயில் மலைகளில் இருப்பதாய் அறிகிறன். அப்படியிருக்கும் போது, இந்த மலையுச்சியில் மட்டும் முருகனுக்கு போட்டியாக பிள்ளையார் அமர்ந்திருப்பது ஏன். 

மாம்பழத்தை அழுகுனி ஆட்டம் ஆடி பறித்து கொண்ட பிள்ளையார், முருகனின் ஒரு வீட்டையும் பரித்துகொண்டிருப்பது தவறு என்று ஏன் ஒருவரும் சொல்லவில்லை.
திரும்பும் வழியில் ஆட்டோவில் வந்தோம். ஆட்டோ ஒட்டுனரிடம் பேச்சு கொடுத்தேன். 

நான் : நீங்கள் அடிக்கடி உச்சி பிள்ளையார் கோவிலுக்கு போவீர்களா ?
ஓட்டுனர் : காதலிக்கும் போது நிறைய முறை போயிருக்கிறேன். காதலர்களுக்கு சிறந்த இடம். தெரிந்தவர்களிடமிருந்து மறைந்து உட்கார்ந்து காதலிக்க சிறந்த இடம். திருச்சியில் காதலர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் இடம்.
நான்: திருமணம் செய்து கொண்டீர்களா ?
ஒட்டுனர் : இல்லை
நான்.: ஏன்
ஓட்டுனர். நான் பாய் ( இஸ்லாமியன்) அவள் இந்து. பெரியவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அவளை வேறு இடத்தில் திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள்.
நான்: இப்போது உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா ?
ஓட்டுனர்: எனக்கு எனது சமூகத்திலேயே திருமணம் ஆகிவிட்டது. 10வது படிக்கும் ஒரு மகன் இருக்கிறான்.

காதலர்களுக்கு மறைவிடமாக இருக்கும் இடத்தில் இருக்கும் பிள்ளையார் எத்தனை காதலர்களை சேர்த்து வைத்தார் எத்தனை பேரை பிரித்து வைத்தார் என தெரியவில்லை.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88


ஆலய தரிசனம் - சமயபுரம் மாரியம்மன் கோவில்

சமயபுரம் மாரியம்மன் கோவில்::


அண்மையில் மேற்கொண்ட தமிழக சுற்றுப்பயணத்தில், மூன்றாவதாக  (03.02.2014 - மதியம்) சென்ற கோவில் சமயபுரம் மாரியம்மன் கோவில். இது, திருச்சிக்கு வடக்கே காவிரியின்  வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
இந்த கோயிலில் மதிய நேரத்தில் கோயிலை மூடும் வழக்கமில்லை என்று தெரிகிறது. மக்கள் கூட்டம் அலைமோதியது. இதுவும் கோயில் என்ற நிலையை தாண்டி, சுற்றுலா தளம் போல் கூட்டம் அலைமோதுகிறது.
கோவிலுக்குள் செல்லும் மண்டபத்தின் இருபுறத்திலும், பாசிமணி ஊசிமணி கடைகளும், பிரசாத கடைகளும் காணப்பட்டன. நடைபாதையின் இருபுறத்திலும் கடைகள் இருப்பதால், மக்கள் ஓய்வெடுக்க நடைபாதையின் நடுபகுதில் அமர்ந்திருந்தனர். கோவிலின் முன்பகுதியில் எண்ணை விளக்கேற்றி கும்பிட்டுகொண்டிருந்தனர்.
கூட்டம் அதிகமென்பதால், தடுப்பு அமைத்து உள்ளே அனுப்புகின்றனர். வழக்கம் போல சிறப்பு தரிசனமும் உண்டு. ரூ. 25 மற்றும் ரூ.250. சுமார் 2 மணி நேரத்திற்க்கு பிறகு தரிசனம் கிடைத்தது. அர்ச்சனை தட்டு வாங்கியிருந்தோம். வழக்கம் போல அம்மனை தரிசிக்கும் முன்பு வேறு ஒருவர் (இவரை பூசாரி என்று சொல்வதா அல்லது அர்ச்சகர் என்று சொல்வதா – பொதுவாக இது போன்ற மாரியம்மன் கோயில்களில் பிரமாண வகுப்பை சார்ந்த புரோகிதர்கள் இருப்பதில்லையென்றும் , பிற சமூகத்தை சார்ந்தவர்களே பூசாரிகளாக இருந்து பூசை செய்வார்கள் என கேள்விப்பட்டுள்ளேன்) தேங்காய் உடைத்து நம்மிடம் கொடுத்து விடுகிறார். அர்ச்சனை தட்டில் ஒரு பன்னீர் பாட்டில் வைத்து கொடுக்கிறார்கள். அதை அவர் தனியாக எடுத்து வைத்து கொள்கிறார். (அநேகமாக அது மீண்டும் கடைக்கு விற்பனைக்கு வரும் என்று தோன்றுகிறது) இதை நான் தூரத்திலிந்து கவனித்துவிட்டதால், பன்னீர் பாட்டிலை எடுத்து வந்து விட்டேன்.
தடுப்பு சுவர் வழியாக போதும் போது சில இடங்களில், மக்கள் உப்பு போட்டு வழிபடுகின்றனர். அது வழியெங்கும் சிதறி கிடக்கிறது. செருப்பு போடாமல் இதன் மேல் நடக்க வேண்டியிருப்பதால், காலை உறுத்துகிறது. மக்கள் மாலை வாங்கி வருகின்றனர். மேலும் அர்ச்சனை தட்டில் உள்ள பூவையும் அம்மனுக்கு சாத்த முடிவதில்லை. எனவே மக்கள் நிலைப்படியின் மேல் விசூகின்றனர். அது கீழே விழுந்து மக்களின் கால்களில் மிதிப்படுகிறது. அர்ச்சனை செய்யப்படாத இடத்தில் அர்ச்சனை தட்டு ஏன் விற்க்கப்படுகிறது என தெரியவில்லை. எல்லாம் வியாபரம் . காசு காசு துட்டு துட்டு.
பெரும்பாலான பெண்கள் மஞ்சள் புடவை கட்டியும் சிலர் குங்கும நிறத்தில் புடவையும் கட்டி வந்திருந்தனர்.  யாரோ கடைக்காரர் , சுற்றுலா பயணிகளிடம் மணிமாலைகள் எதோ காரணம் சொல்லி விற்றிருக்கிறார். சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் மணிமாலைகள கழுத்து முழுவதும் அணிந்திருந்தனர். நிறைய பேர் வளையல்களை காணிக்கையாக செலுத்தவேண்டும் என எண்ணி, வளையள்களை வாங்கி தடுப்பு அமைக்கப்பட்டிருக்கும் கம்புகளில் மாட்டியிருந்தனர்
வழக்கம் போல நின்று நிதானித்து தரிசிக்க முடியவில்லை . சிலையை கூட சரியாக பார்க்க முடியவில்லை. அவ்வளவு கூட்டம்
அம்மனாக இருந்தால் என்ன அய்யாவாக இருந்தால் என்ன. ஏதெனும் காரணத்திற்க்காக அந்த இடம் புகழ் அடைந்துவிட்டால், கோவில் என்ற புனித ? தன்மையை இழந்து வியாபார தளமாக மாறிவிடுகிறது. ஆனால், சில மக்கள் எது எப்படியிருப்பினும் மிகவும் நம்பிக்கை வைத்து வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.

நாங்கள் சென்ற போது, வெளி வாசலிலிருந்து ஒரு பெண்மணி முட்டி போட்டுக்கொண்டு நடந்து உள்ளே சென்று கொண்டிருந்தார். நாங்கள் வெளியே வரும் போது கோவிலின் உள்ளே இருந்தார். மிகவும் களைப்பாக இருந்தார். அவர் அம்மனை தரிசிக்க வெதுதூரம் போக வேண்டியிருந்தது இவரும் வரிசையில் சிலமணி நேரம் காத்திருந்து தரிசிக்க வேண்டுமா அல்லது, முதலில் உள்ளே விடுவார்களா என தெரியவில்லை. இது போன்று வேண்டுதளை நிறைவேற்றும் பக்தர்களுக்கு சலுகை அளித்து, விரைவில் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும்.