Friday, 21 March 2014

மதமும் ஜாதியும்

விவேகனந்தரின் மதமும் ஜாதியும்::


இந்த சந்தர்ப்பத்தில் சென்னை மாகாணத்திற்கு முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச விரும்புகிறேன். தென்னிந்தியா முழுவதும் திராவிடர் என்ற வர்க்கத்தார் இருந்ததாகவும் , வட இந்தியா முழுதும் ஆரியர்கள் என தனி வர்க்கத்தார் இருந்ததாகவும், தென்னிந்தியாவிலிருக்கும் பிராம்மணர்கள் மாத்திரம் வட இந்தியாவிலிருந்து வந்த ஆரியர்களென்றும், தென்னிந்தியாவிலிருக்கும் மற்ற அனைவரும் அவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்ட திராவிடர்களென்றும் சொல்லப்படுகிறது. இந்த ஆராய்ச்சிக்காரர்களுக்கு மிகுந்த வணக்கத்துடன் நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அவர்கள் கூற்று முற்றிலும் அதாரமில்லாதது. இவ்வாததிற்க்கு ஒரே ஒரு காரணம் தான் உண்டு; அதாவது தென்னிந்தியாவிலும் வட இந்தியாவிலும் வேறு பாஷைகள் வழங்கி வருகின்றனவென்பதுதான். அவர்கள் இருவருக்கும் பாஷையைத் தவிர, வேறு ஒரு வித்தியாசமும் எனக்குத் தெரியவில்லை. வட இந்தியர்கள் பலர் இக்கூட்டதிலிருக்கிறார்கள். நம் ஐரோப்பிய நண்பர்களை, தென்னிந்தியர்களிடமிருந்து அவர்களைப் பொறுக்குயெடுக்கச் சொல்லிப்பாருங்கள். அவர்களால் இருவருக்குமுள்ள வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடியாது. பாஷையையொட்டிய இச்சிறு வித்தியாசத்தை தவிர நமக்குள் வேறு வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாது. இதிலிருந்து பலத்த வாதங்களைக் கிளப்பியிருக்கிறார்கள். பிராம்மணர்கள் சமஸ்கிருதத்தைப் பேசிக் கொண்டிருந்த தனி வர்ககத்தினராம். அப்படியானல், அவர்கள் திராவிட பாஷையை மேற்கொண்டு தங்கள் பாஷையான சமஸ்கிருதத்தேயே மறந்து விட்டார்கள் போலும். மற்ற ஜாதியினரும் ஏன் அப்படியே செய்திருக்கக்கூடாது ? மற்ற ஜாதியினரும் வட இந்தியாவிலிருந்து வந்து, இத்திராவிட பாஷையை ஏற்றுத் தங்கள் பாஷையை ஏன் மறந்திருக்கக் கூடாது ? இந்த வாதம் இரன்டு பக்கத்திற்கும் பேசுகிறது. இம் மாதிரி அறிவற்ற வாதங்களை நம்பாதீர்கள். திராவிடர்கள் என்ற ஒரு ஜாதி மக்கள் இருந்திருக்கலாம்; அவர்கள் நாளடைவில் மறைந்திருக்க வேண்டும். எஞ்சியிருக்கக்கூடிய சிலர் மலைகளிலும் காடுகளிலும் வசித்துக் கொண்டிருக்கலாம். அவர்கள் பாஷையையும் மற்றவர்கள் எடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், இங்கு இருப்பவர்கள் எல்லாம் வட இந்தியாவிலிருந்து வந்த ஆரியர்கள்தான். இந்தியா முழுவதிலும் ஆரியர்கள்தான் இருக்கிறார்கள். வேறு மக்கள் ஒருவரும் இல்லை.

இன்னுமொரு வாதமும் சொல்லப்படுகிறது. அதாவது இப்பொழுது சூத்திரர்கள் என்று சொல்லப்படுகிறவர்களெல்லாம் இந்தியாவின் ஆதி மக்களாம். அவர்கள் ஆரியர்களால் அடிமையாக்கப்பட்டவர்களாம். மற்ற நாட்டுச் சரித்திரங்களில் நடந்திருப்பதுபோல் இங்கும் நடந்திருக்கிறதென அவ்வாராய்ச்சிக்காரர்கள் உரைக்கிறார்கள். அமெரிக்கர்கள், ஆங்கிலேயர்கள், டச்சுக்கார்ர்கள், போர்ச்சுகேயர்கள் முதலியவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து நீக்ரோக்களைக் கொண்டுவந்து, தாங்கள் சுகமாயிருந்துகொண்டு அவர்களிடம் வேலை வாங்கிக்கொண்டிருந்தார்கள். அந்த நீக்ரோக்களுக்கு பிறந்த கலப்பு ஜாதியினரை அடிமைகளாக வைத்துக்கொண்டிருந்தனர். இந்நிலைமை நெடுங்காலமிருந்து வந்தது. இந்த விசித்திரமான உதாரணத்தை வைத்துக்கொண்டு, இந்தியாவிலும் பல்லாயிர வருஷங்களுக்கு முன் இவ்விதம் நடந்திருக்க வேண்டுமென்று நமது ஆராய்ச்சிக்காரர்கள் கனவு காண்கிறார்கள். இந்த ஆரியர்கள் எங்கிருந்து வந்தவர்கள் ? அவர்கள் மத்திய திபேத்திலிருந்து வந்ததாகச் சிலர் சொல்லுகிறார்கள். மத்திய ஆசியாவிலிருந்து வந்ததாகச் சிலர் சொல்லுகிறார்கள். ஆங்கிலேயர்கள் அவர்களுக்குச் சிவப்பு மயிர் இருந்ததாகச் சொல்லுகிறார்கள். வேறு சிலர் அவர்களுக்குக் கறுப்பு மயிர் இருந்ததாக ஊகிக்கிறார்கள். தங்களுடைய மயிர் கறுப்பாயிருந்ததால், ஆரியர்களுடையதும் அவ்விதமிருந்ததென அவர்கள் நினைக்கிறார்கள். கடைசியாக, சுவிசர்லாந்து குளக்கறையில், அவர்கள் ஆரம்பத்தில் வாழ்ந்து கொண்டிருந்த்தாக ஒரு புது ஹோஷ்யம்  தோன்றியிருக்கிறது. இந்த ஹோஷ்யங்களனைத்தும் , இத்துடன் இவ்விவாதமனைத்தும் அக்குளத்திலேயே விழுந்து மூழ்கிப்போனால், அதற்காக நான் வருத்தப்படமாட்டேன். சிலர் ஆரியர்கள் வட துருவத்திலிருந்து வந்ததாகச் சொல்லுகிறார்கள். ஆண்டவனருளால் அவர்கள் எங்கு வேண்டுமானாலும் இருந்துபோகட்டும். ஆனால், நம்முடைய சாஸ்திரங்களைப் பொறுத்தமட்டில் , இவற்றிற்கு யாதொரு ஆதாரமும் இல்லை. இந்தியாவுக்கு வெளியிலிருந்து அவர்கள் வந்தார்களென்று சொல்வதற்கே அதில் ஆதாரமொன்றும் இல்லை. பழங்காலத்து இந்தியாவில் ஆப்கானிஸ்தானமும் சேர்ந்திருந்தது சூத்திரர்கள் எல்லாம் ஆரியர்கள் அல்லாதவர்களென்றும், அவர்கள் மிகப் பெரும்பான்மையோராக விருந்தார்களென்றும் சொல்லும் வாதமும் தர்க்கத்திற்கும் அறிவுக்கும் ஒவ்வாதாயிருக்கிறது. அந்தக் காலத்தில் ஒரு சில ஆரியர்கள் வந்து குடியேறி, லட்சக்கணக்கான் அடிமைகளுடன் வாழ்ந்துவந்தார்கள் என்று சொல்வதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவில்லை. இந்த அடிமைகள் அவர்களை ஐந்து நிமிடங்களில் தொவையலாக்கிச் சாப்பிட்டுருப்பார்கள். நம் ஜாதி வித்தியாசத்திற்கு உண்மைக் காரணம் மகா பாரதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.  சத்தியயுக ஆரம்பத்தில் பிராம்மணர்களென்ற ஒரு ஜாதிதான்  இருந்தது. அதாவது அப்பொழுது எல்லோரும் பிராம்மணர்களாகவிருந்தார்கள். அதற்குப் பிறகு தொழில் வேறுபாட்டால், அவர்கள் பலவிதமான் ஜாதிகளாகப் பிரிந்துகொண்டே போனார்கள். இதுதான் புத்திபூர்வமாக இருக்கிறது..

சுவாமி விவேகானந்தர் சென்னையில் பேசிய பேச்சின் ஒரு பகுதி. இந்த பேச்சை மொழிபெயர்த்தவர் திரு.து.சு.அவினாசிலிங்கம். சுவாமி விவேகானந்தரின் பேச்சுக்களை தொகுத்து, “ இந்தியப் பிரசங்கங்கள்என்ற தலைப்பில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. ஒன்பதாம் பதிப்பு (1943)– இந்த பிரசங்கம்எதிர்கால இந்தியா  என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பக்கம் 186 -190



இவர் என்ன சொல்கிறார். அனைவரும் ஆரியர்கள்ஆரியர்கள் அனைவரும் 

பிராமணர்கள். இந்த பகுதியில் (தமிழகத்தில்). அதாவது, ஆரிய இனத்தில் திராவிடர்கள் 

என்ற ஜாதி இருந்திருக்கலாம் என்று கூறுகிறார்.



இன்றைய நிலைப்படி ஆதி திராவிடன் என்ற பட்டியலில் பல ஜாதிகள் இருக்கின்றன.  

பிராமணர்கள் என்ற பிரிவும் இருக்கிறது. இந்த இரண்டு பிரிவிலும் வராதவர்களுக்கு 

பொதுப்பெயர் என்ன?. சிலர் சொல்வது போல தமிழன் என்று சொல்லிக்கொள்வதா ? அது 

பேசும் மொழி சார்ந்த பொது பெயராக தான் இருக்கும். எல்லோரும் ஆரியர்கள் என்றால்,  

ஆரியர் என்ற சொல் எதற்கு. இரண்டு அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட இனம் இருந்தால் 

தானே தன்னை அடையாளப்படுத்தி கொள்ள ஒரு பெயரை ஏற்ப்படுத்தி கொள்ள 

வேண்டும். எல்லோரும் ஆரியர் என்றும் பிராமணர் என்றும் சொல்லிக்கொள்ள வேண்டிய 

அவசியம் என்ன வந்தது.



இவர் ஒரு மத போதகர். இந்து மத பெருமைகளை சொல்லிகொண்டு  பிரசங்கங்களை

செய்வதுடன் நிறுத்தாமல், ஜாதிகளை பற்றி பேச வேண்டிய அவசியம் ஏன் ஏற்ப்பட்டது.

 அவர் யாரிடம் பேசினாரோ அவர்கள் அனைவரும் இந்துக்கள். அவரகள் தங்களை 

ஆரியர்கள் என்று சொல்லிக்கொண்டாலென்ன அல்லது திராவிடர்கள் என்று 

சொல்லிக்கொண்டாலென்ன ? இவரும் இன்றைய மதவாதிகள் போல் தான் மதத்தைப்பற்றி

 பேசும் போது ஜாதி பிரச்சனையை பேசியுள்ளார். மதத்தைப்பற்றி பேசும் போது, பிற 

 
மதங்களை விமர்சித்துள்ளார். இவருக்கும் எதிர்ப்புகள் இருந்திருக்கும். ஆனால்,\

 அவரைப்பற்றி எழுதி வைத்தவர்கள் அதை மறைத்து அவர் புகழ் பாடியுள்ளனர்.

Thursday, 20 March 2014

திரைப்பட விமர்சனம்

இந்தி திரைப்படம் - QUEEN




இந்தி திரைப்படம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது என்று கேள்விப்பட்டு 19.03.2014 காலை காட்சி 11 மணிக்கு சென்றேன். டிக்கெட் கிடைக்கவில்லை HOUSE FULL. விடுவேனா. இன்று காலை 11.00 மணி காட்சி பார்த்தேன்.


பிரபலமான கதாநாயகன் இல்லை. கதாநாயகியும் மிகவும் பிரபலம் இல்லை. மிகவும் பேசப்படுபவர். சற்று கவர்ச்சியாக நடிக்ககூடியவர். நடிப்பிலும் பிரமாதமானவர் இல்லை. ஆனாலும், படம் நன்றாக ஓடுகிறது. அதுவும் கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம்., கவர்ச்சி காட்சிகளுக்காக அல்லது காமக் காட்சிகளுக்காக எடுக்கப்பட்ட படமாகவும் தெரியவில்லை.  என்னத்தான் இருக்கிறது அதில் என்று பார்த்துவிடுவது என நினைத்தேன். (படம் பார்க்க இது ஒரு காரணம்)

கதாநாயகி Kangana Ranaut டெல்லியில் வசிக்கும் நடுத்தர குடும்ப பெண். திருமணத்திற்க்கு 2 நாட்களுக்கு முன் மருதாணி வைக்கும் சடங்கு நிகழ்ச்சியுடன் படம் ஆரம்பிக்கிறது. மணமகன் Rajkummar Rao அன்று அவளை தனிமையில் அழைத்து, நீ எனக்கு ஏற்றவள் அல்ல என்றும் திருமணத்தில் விருப்பம் இல்லையென்றும் கூற திருமணம் தடைப்படுகிறது.
திருமணத்திற்க்கு பிறகு அவள் மிகவும் நேசிக்கும் இடத்திற்க்கு பாரிஸ்(PARIS)  தேன்நிலவு செல்ல ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமணம் நின்ற பிறகு தனியாக தேன்நிலவு செல்கிறாள். அங்கு ஏற்படும் ஒரு பெண்ணின் அறிமுகத்துடன் ஊரை சுற்றிப்பார்க்கிறாள். சில இடர்பாடுகளையும் சந்திக்கிறாள். அங்கு அவள் போட்டு பார்க்கும் நாகரிக உடைகளை புகைப்படம் எடுத்து தோழிக்கு அனுப்பும் போது , தவறுதலாக அது தன்னை புறக்கனித்த மணமகனுக்கு அனுப்பியிருப்பதை அறிகிறாள். பின்பு அம்ஸ்டர்டாம் நகருக்கு செல்கிறாள். ஒரு விடுதியில் தங்குகிறாள். அதாவது நகரில் இடபற்றாக்குறை இருப்பதால் நான்கு பேருடன் அறையை பகிர்ந்துகொண்டு தங்க ஒப்புக்கொள்கிறாள். மற்ற மூன்று பேரும் ஆண்கள் ஒருவன் ரஷ்யா, ஒருவன் ஃப்ரான்ஸ் மற்றோருவன் ஜப்பான்காரன். ஆரம்பத்தில் தயங்கினாலும் பின்பு நட்புடன் பழகி ஊரை சுற்றி வருகிறாள். அவர்களை பற்றி அறிந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைக்கிறது. பல அனுபவங்கள் கிடைக்கிறது. இவையனைத்தும் டெல்லியில் அவளுக்கு மறுக்கப்பட்ட விசயங்கள்.  மிகவும் நன்றாக அனுபவிக்கிறாள்.
இதற்கிடையில் நிராகரித்த மணமகன் இவளை தேடிக்கொண்டு, ஃபாரிஸ் வருகிறான். செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு மணக்க விரும்புகிறான். அவனை டெல்லியில் சந்திப்பதாக கூறிவிட்டு, இறுதியாக, அந்த 3 நண்பர்களுடன் இசைநிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரியா விடை பெறுகிறாள்.
இந்தியா திரும்பும் போது, வீட்டிற்க்கு போகும் முன் மணமகன் வீட்டிற்க்கு செல்கிறாள். அங்கு அவனை சந்தித்து, நிச்சியதார்த்த மோதிரத்தை திருப்பி தந்து விட்டு மகிழ்ச்சியுடன் சுதந்திரமாக வீடு திரும்புகிறாள்.
இது ஒன்றும் பெண்ணியத்தை வலியுறுத்தும் கதையல்ல. எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று போதிக்கும் படமும் அல்ல. முன்பே சொல்லியதை போல காதல், கவர்ச்சி, காமம் எதுவும் அதிகப்படியாக இல்லை. அழுது அழுது புலம்பி பரிதாபத்தை சம்பாதிக்கும் கதையுமல்ல. ஆனால், இவரது முந்தைய படங்களில் இருந்து மாறுப்பட்ட நடிப்பு. சிறப்பாக நடிக்க முயற்ச்சி செய்துள்ளார். தொடர்ந்து நடித்தால் சிறப்பான நடிகையாக உருவாகலாம்.
அவர் சிறந்த நடிகையாக உருவானாலும், சில பல படங்களுக்கு பிறகு, வயதாகிவிட்டது என்ற காரனத்தால் அல்லது புதிய நடிகைகள் வரவு காரணமாக இவர் புறக்கணிக்கப்படுவார்.
எப்படியிருப்பினும், இவரை நம்பி ஒரு படத்தை எடுத்த இயக்குனர் Vikas Bahl ம் தயாரிப்பாளரையும் பாரட்டதான் வேண்டும். இசை சுமாராக இருக்கிறது. ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது. பார்த்த கதை தான்.
இந்த நேரத்தில் இங்கு வேறு யாருடைய பிரபலமான கதாநாயர்களின் படமும் வெளிவராத காரணத்தால்,( பள்ளிகளில் பரிட்சை நேரம் ) இந்த படம் வெற்றியடைய ஒரு காரணமாக இருக்கலாம்.
பார்த்தால் வருத்தமடைய ஒன்றுமில்லை

Sunday, 16 March 2014

மதமும் ஜாதியும்

விவேகானந்தர் - மதமும் ஜாதியும்::


இந்த அறிவாளிகளாகிய சீர்திருத்தக்காரர்களால் நடத்தப்பெறும் பத்திரிக்கையைப் படித்தேன். அதில், நான் ஒரு சூத்திரன் என்றும், ஒரு சூத்திரன் சன்னியாசியாவதற்கு என்ன உரிமையிருக்கிறதென்றும் அட்சேபிக்கப்பட்டிருக்கிறேன். இதற்கு நான் கூறும் மறுமொழியென்னவென்றால், - என்னுடைய வம்சம் சூத்திர ஜாதியானால், பின் அந்த பத்திரிக்கை அதிபரின் வம்சம் நீச ஜாதியாகும். “ யமாய தர்ம ராஜாய சித்ரகுப்தாய வைந்ம “ என்ற மந்திரத்துடன் யாருடையா பாதங்களில் சரணமடைகிறார்களோ அவருடைய வழியைச் சேர்ந்தவன் நான். ஒவ்வொரு மனிதனுடைய நல்வினை தீவினைகளையும் அவ்வப்போது பதிவு செய்துவருபவரும், தர்மங்களுக்கெல்லாம் அதிதேவதயுமான யமதர்ம ராஜனின் அடிகளை வணங்குபவன் நான். சத்திரியர்களெல்லாம் யாருடைய வம்சத்தில் தோன்றியிருக்கிறர்களோ , அவரின் பாதங்களில் பணிபவன் நான். உங்கள் காவியங்களிலேலனும் புராண இதிகாசங்களிலேனும் நம்பிக்கை சிறிதளவேனும் இருக்குமானால் என் வம்சத்தார், தாங்கள் பண்டை நாளில் செய்த அரும்பெரும் காரியங்கள் ஒரு புறமிருக்க, இந்தியாவிற் பாதியை அநேக நூற்றாண்டுகள் அரசாண்டு வந்துளரென்பதை இவ்வங்காள சீர்திருத்தக்கார்ர்கள் உணரட்டும். என்னுடைய ஜாதியானது மதிக்கப்படாது புறக்கணிக்கப்படுமாயின் பின் இக்கால இந்திய நாகரிகத்தின் பெருமையென்ன இருக்கிறது.

இந்நாகரிக வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் காரண புருஷர்களாய்த் தோன்றி நலம்புரிந்த சீரியோர் அனைவரும் எனது ஜாதியிலேயே தோன்றியுள்ளனர். வங்காளத்தை மாத்திரம் எடுத்துக்கொண்டாலும், தத்துவ ஞானத்தில் எவரினும் மேம்பட்டவரும், கவிகளுள் சிரேஷ்டரும், சரித்திரமெழுதுவதில் வன்மை பெற்றவரும், புராதன வஸ்து சாஸ்திரங்களை ஆராய்ந்துணர்வதில் சிறந்தவரும், முதன்மை பெற்ற மதாசாரியர்களும் ஆக இவர்களெல்லோரும் எனது வம்சத்திலென்றோ தோன்றியிருக்கின்றனர். நவீன சாஸ்திர ஆராய்ச்சிக்காரர்களுள் முதன்மை பெற்றவர், இந்தியாவில், எனது வம்சத்திலேயே தோன்றியுள்ளார். என்னுடைய ஜாதி சூத்திர ஜாதியா ? பின் இந்த பத்திரிக்கை அதிபர், மறுமுறையும் கூறுகிறேன், பறையனாவார். குற்றங்கூற முன் வந்த இவர் நமது சரித்திரங்களைச் சற்று ஆராய்ந்துணர்ந்திருத்தல் வேண்டும்; பிராம்மண ஷத்திரிய வைசியர்களுல் எவருக்கும், சன்னியாச ஆசிரமம் ஏற்க பாத்யம் உண்டென்பதையும், இம் மூவருணத்தினர்க்கும் வேதங்களில் சமமான உரிமையுண்டு என்பதையும் அவர்கள் உணர்ந்திருக்கவேண்டும்.

சுவாமி விவேகானந்தர் சென்னையில் பேசிய பேச்சின் ஒரு பகுதி. இந்த பேச்சை மொழிபெயர்த்தவர் சுவாமி ருத்ரானந்த சவாமிகள். சுவாமி விவேகானந்தரின் பேச்சுக்களை தொகுத்து, “ இந்தியப் பிரசங்கங்கள் “ என்ற தலைப்பில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. ஒன்பதாம் பதிப்பு (1943)– இந்த பிரசங்கம் “ எனது போர் முறை “ என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பக்கம் 140 -142

தன் வாழ்நாள் முழுவதும் இந்து மத பெருமைகளை விளக்கி பிரசங்கங்கள் செய்தவரும், இந்த இந்து மதம் தாழ்ந்த நிலையில் இருப்பதற்க்கு காரணம் ஜாதி வேற்றுமையே என்றும், ஜாதிகள் ஒழிக்கப்படுவதற்க்கு , கீழ் ஜாதிக்காரர்களை மேல் ஜாதிகாரர்களாக மாற்ற வேண்டும் என்று போதித்தவர் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு கோபமாக மறுமொழி கூறியது எந்த வகையில் நியாயமானது என்று புரியவில்லை.

அவரை சூத்திரர் (கீழ் ஜாதிகாரர்) என்று குறிப்பிட்டிருந்தால், அவர் தன்னுடைய ஜாதி இன்னது என்று சுருக்கமாக கூறியிருக்கலாம். அல்லது இது குறித்து கருத்து கூறாமல் ஊதாசினப்படுத்தியிருக்கலாம். ஆனால், தன்னை விமர்சித்தவரை அவரை விட மோசமாக அவர் நீச ஜாதிக்காரர் என்றும் பறையன் என்றும் விமர்சிப்பது, தன்னை சந்நியாசி என்று கூறிக்கொண்டவருக்கு பொருந்துமா. ? தன்னுடைய ஜாதி மதிக்கப்படவில்லையென்றால் இந்திய நாகரிகத்திற்க்கு பெருமையில்லை என்கிறார்.,

தனது ஜாதி பெருமைகளை நீட்டி முழக்கியிருப்பது அவருக்கு தனது ஜாதியின் பேரில் இருக்கும் அபிமானத்தை உணர்த்துகிறது. ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று கூறியவருக்கே இவ்வளவு பெருமை இருக்கிறது என்றால், தங்களது ஜாதியை தாங்கி பிடிக்கும் மக்களுக்கு எவ்வளவு அபிமானம் இருந்திருக்கும் என்பதை அவர் ஏன் உணர மறந்துவிட்டார்.

ஜாதியை ஒழிக்க முடியாது என்பதும், ஜாதீய பிரச்சனைகளை ஒழிக்கமுடியாது என்பதும் அவருக்கு புரியாமல் போனது ஆச்சரியமே.

இவற்றுக்கும் மேலாக, இவரும் சூத்திரர்களை இழிவு படுத்தியே பேசியுள்ளார். இவர் என்ன கூறுகிறார் என்று பாருங்கள் “பிராம்மண ஷத்திரிய வைசியர்களுல் எவருக்கும், சன்னியாச ஆசிரமம் ஏற்க உரிமை உண்டு என்கிறார்.  ஆனால், சூத்திரர்கள் சந்தியாசம் ஏற்க்ககூடாது என்பதை சொல்லாமல் சொல்கிறார். ஏன் சூத்திரர்கள் சந்நியாசம் ஏற்க கூடாது என்பதை சொல்லவில்லை. ஜாதியை ஒழித்து அனைவரும் சமமாக வாழவேண்டும் என்பவர் ஏன் ஒரு ஜாதியினரை சந்நியாசம் ஏற்க கூடாது என்பதை ஆதரிக்கிறார்.

இவர் ஒரு மத போதகர். , மற்ற மத போதகர்களை விமர்சித்துள்ளார். இவர் மதம் மாற்றும் செய்கையை செய்யவில்லையென்றாலும், உலகம் முழுவதும் இந்து மதத்தை பரப்பவேண்டும் என்று பிரசங்கம் செய்துள்ளார். இவருக்கு இந்து மதத்தை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்று ஆசை இருப்பதை போல மற்ற மதத்தினருக்கும் அத்தகைய ஆசை இருக்கும் என்பதை ஏன் உணர மறுத்துவிட்டார்.


எனவே தமக்கும் தனது மதத்துக்கும் ஒரு கொள்கையும் மற்ற மதத்தினருக்கு வேறு ஒரு கொள்கையையும் பேசியவர் ஒரு சந்நியாசியாக இருக்கமுடியாது. இவரும் ஆசைகளுக்கும் பந்தங்களுக்கும் அடிமைப்பட்ட ஒரு சாதாரண மனிதராகவே வாழ்ந்துள்ளார்.


இந்துக்கள் என்பதில் பெருமையுண்டு. இந்த மதம் இந்து மதம் 

அனைவரையும் அரவனைத்து செல்லும் மதம். இது தான் அதன் பலமும்

பலவீனமும் கூட. நான் இந்து என்பதில் பெருமையடைகிறேன்.

Saturday, 15 March 2014

பருக்கள் வந்த பருவத்தில்



1970ளின் ஆரம்பங்களில் பள்ளி இறுதி வகுப்பை நோக்கி எவ்வித பயமும் இல்லாமல் நகர்ந்து கொண்டிருந்த காலகட்டம்.

அரசு பள்ளிகளில் தமிழ் வழி கல்வி கற்றுக்கொண்டிருந்த நான் 9ஆம் வகுப்பில்  தியாகராயா நகரில் அமைந்திருந்த THE RAMAKRISHNA MISSION (BOYS) HIGH SCHOOL, MAIN, T.NAGAR பள்ளியில் சேர்க்கப்பட்டேன். அதுவும் திமிழ் வழி கல்வி பள்ளி தான். 10 மற்றும் 11ஆம் வகுப்பில் மட்டும் சிறப்பு பாடம் (ELECTIVE SUBJECT) ஆங்கிலத்தில் படிக்க வேண்டும். அப்போது 10 + 1 + 3 கல்வி முறை. அதாவது 11வது வகுப்பு வரை பள்ளிகளில் படிக்க வேண்டும். பின்பு ஒரு வருடம் P.U.C  எனப்படும் PRE UNIVERSITY COURSE கல்லூரிகளில் படிக்க வேண்டும். பின்பு 3 வருட பட்டப்படிப்பு அல்லது 5 வருட படிப்புகள் ஏதேனும் படிக்கலாம்.

நான் படித்த பள்ளியில் உயர் வகுப்பு பிராமண சமூகத்தை சார்ந்தவர்கள் அதிகம் படிக்கும் பள்ளி. அந்த பள்ளியின் நிர்வாகம் பொதுவாக உயர் வகுபினரிடம் இருக்கும். மேலும், பள்ளி அமைந்திருந்த பகுதியில் நிறைய பிராமண வகுப்பை சார்ந்தவர்கள் இருந்ததால் அது இயற்கையாக அப்படி அமைந்து விட்டது. ஆனால், அரசு ஆணைப்படி அனைத்து சமுதாயத்தினரும் படிக்க சேர்க்கப்படவேண்டுமென்பதால், மற்ற சமுதாயத்தினரும் சேர்ந்து படிக்க வாய்பிருந்தது. அதே போல மற்ற சமூக வகுப்பை சேர்ந்தவர்களும் ஆசிரியர்களாக பணியாற்றினார்கள். ஆனால், பிரமாண சமூக ஆதிக்கம் இருந்தது என்பது அனைவருக்கும் தெரிந்தது. அந்த பள்ளியில் இடம் கிடைத்து படிப்பது அந்த காலத்தில் பெருமையான விசயம்.

பள்ளி காலை 10 மணி முதல் 4 மணி வரை. உணவு இடைவேளை உண்டு. 6 மணி நேர படிப்பில் ஒரு மணி நேரம் உணவு இடைவேளை. மீதி 5 மணி நேரத்தில் ஐந்து பாடங்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம், பூகோளம் மற்றும் சரித்திரம். 10 ஆம் வகுப்பிலும் 11ஆம் வகுப்பிலும் சிறப்பு பாடம் ஒருமணி நேரம். அதாவது வாரத்திற்க்கு இரண்டு நாள் அந்த இரண்டு நாளில் பூகோளம் அல்லது சரித்திர பாட வகுப்பு இருக்காது.

இதில் விசேசம் என்னவென்றால், சில நாட்களில் பள்ளி ஆரம்பமாகும் நேரம் காலை 11 மணிக்கு என்று அறிவிப்பு பலகையில் எழுதியிருப்பார்கள். அது எனக்கு முதலில் தெரியாமல் 10 மணிக்கு சென்று காத்திருப்பேன். அநேகமாக ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் இப்படி அமைந்துவிடும்.

அதாவது பிராமண ஆசிரியர்கள்  தலைமை ஆசிரியர் உட்பட ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று பூஜை செய்துவிட்டு வருவதற்க்கு ஏதுவாக ஒரு மணி நேரம் பள்ளியை தாமதமாக ஆரம்பிப்பார்கள். சில மாதங்களில் 2 நாட்கள் கூட இப்படி அமைந்துவிடும்.

பொதுவாக பஞ்சகட்சம் வேட்டி கட்டி, பூஜை செய்துவிட்டு அதே கோலத்தில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவார்கள். சில மூத்த வயதான ஆசிரியர்கள் சட்டை போடாமல், அங்கவஸ்திரத்தை போர்த்திகொண்டு வருவார்கள். குடுமியும் நாமுமும் அங்கவஸ்திரமும், பஞ்சகட்ச வேட்டியும் கட்டிக்கொண்டுவந்து வகுப்பில் பாடம் நடத்தும் போது, கோயிலில் அர்ச்சகர் மந்திரம் சொல்வது போல இருக்கும். அவர் கேள்வி கேட்பது அர்ச்சனை செய்வதற்க்கு ராசி கோத்திரம் கேட்பது போல இருக்கும். பதில் சொல்லாவிட்டால் அவர் நமக்கு அர்ச்சனை செய்வார்.

இந்த தினங்களில் மாணவர்களுக்கிடையே ஒரு போட்டி நடக்கும். அதாவது, இன்று ஆசிரியர் எந்த  கலர் ஜட்டி போட்டுகொண்டுவருவார் என்பதே. காரணம் 8 முழ வேட்டியை ஒற்றபட்டையாக பஞ்சகட்சம் கட்டுகொண்டு வருவதால் அவர் உள்ளே போட்டிருக்கும் ஜட்டி அப்பட்டமாக தெரியும். அதனால், இப்படிபட்ட நாட்களில் இது குறித்து மாணவர்களுக்கிடையே இப்படியான போட்டி நடக்கும்.

நான் 11ஆம் வகுப்பு படிக்கும் போது, 10 வகுப்புகள் (செக்சன் ஐ வகுப்பு கிடையாது) இருந்தது. ஒரு ஆங்கில வகுப்பு (ENGLISH MEDIUM) ஒரு தெலுங்கு (TELUGU MEDIUM) மற்றவை தமிழ் வகுப்பு(TAMIL MEDIUM). நான் K  பிரிவில் தமிழ் மீடியம் படித்தேன்.

ஜாதி, மதம், கடவுள், பூஜைகள் இவை பற்றி எதுவும் தெரியாமல்  மிகவும் சந்தோசமாக இருந்தேன். அவைகளை அடுத்த பகுதிகளில் தெரிவிக்கிறேன்.


Thursday, 13 March 2014

சௌராஷ்ட்ரா சமூகம் - கலாச்சாரம்

மஞ்சள் பையும் - வெண்பொங்கலும் வெங்காய சாம்பாரும்


சௌராஸ்ட்ரா மொழி இன மக்களுக்கும் வெண்பொங்கலுக்கும் ஒரு நெருங்கிய தொடர்புண்டு.

இது ஒரு முக்கிய உணவு என்பதுடன் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று. ஆனால், தமிழ்நாட்டில் தமிழர்கள் வீட்டில் செய்து சாப்பிடும் உணவல்ல. பின்பு எப்படி இந்த உணவு தமிழ்நாட்டில் வாழும் இந்த மக்களிடம் ஏற்பட்டது என்று ஆராய்வோம்.

இன்றும் வடநாட்டில் எல்லா இடங்களிலும், கிச்சிடி என்ற ஒரு உணவு உண்டு. பொதுவாக ஏழை மக்களும், மற்றவர்கள் உடல் நிலை இல்லாத போது சாப்பிடும் உணவு. தற்சமயம் விரிவாக உணவு தாயரிக்க நேரம் இல்லாத போது இதை செய்து சாப்பிடுகிறார்கள். 

அரிசியும் பருப்பும் சேர்த்து உப்பு போட்டு வேக வைத்து சுடச்சுட சாப்பிடுவார்கள். பொங்கல் போல கெட்டியாக இருக்காது. நெய் சேர்ப்பவர்களும் உண்டு. சற்று தண்ணிராக இருக்கும். இதற்கு எதை வேண்டுமானலும் தொட்டுக்கொள்ள வைத்துகொள்வார்கள். இதன் சற்று மாறிய வடிவம் தான் பொங்கல். இதில் சற்று நெய்யோ , டால்டாவோ கலந்து , மிளகு சீரகம் சேர்த்து செய்கிறார்கள்.

இன்றைக்கும் எங்கள் வீட்டில் வெண்பொங்கல் செய்தோம் என்று கூறினால், கிச்சிடியா என்று தான் கேட்கிறார்கள்.

எனவே சமூக சரித்திரம் எழுதுபவர்கள் இதை குறிப்பிட்டும், வலுவான ஆதாரம் சேர்க்கலாம்.

சமூகத்தில் சற்று மந்தமான நிலையில் சுறுசுறுப்பாக இல்லாமல் தெளிவாக பேசாமல் இருப்பவர்களை இன்றைக்கும் அவண் சரியான “பொங்கல்” என்று கேலி செய்யும் வழக்கம் உள்ளது. இது கூட இந்த வெண் பொங்கலை விரும்பி சாப்பிட்டதன் விளைவாக DNA வில் ஏற்ப்பட்ட மாற்றமாக இருக்ககூடும்.

சமூகத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் வீட்டு கல்யாண நிகழ்ச்சிகளில் விருந்து செலவை சிக்கனமாக முடிக்க மதிய உணவாக வெண்பொங்கலும், சாம்பாரும் அல்லது கத்திரிக்காய் சட்னியும் செய்வார்கள். இனிப்புக்கு மிக எளிமையாக ரவா கேசரி செய்வார்கள். இன்றைக்கு மிகவும் ஆடம்பரமாக உணவு வகைகள் செய்தாலும், வெறும் வெண்பொங்கலும் வெங்காய் சாம்பாரும் செய்து விருந்தை முடிப்பவர்கள் உண்டு.

சமூகம் சார்ந்த பொது நிகழ்ச்சிகள், கடவுள் வழிபாடு கூட்டங்கள், சமூக சேவை அமைப்புகள் மற்றும் அரசியல்வாதி செய்யும் கூட்ட ஏற்பாடுகளில் கூட இந்த வெண்பொங்கலும் வெங்காய சாம்பரும் முக்கிய பங்கு வகிக்கும்.
.
தற்போது அரசியல்வாதிகளின் நிகழ்ச்சிகளில் பிரியானியும், குவாட்டரும் பணமும் கொடுக்கப்படுகிறது என அறிகிறேன்.

இப்படி எளிமையாக திருமணங்கள் செய்யப்பட்ட காலத்தில் நடந்த நிகழ்வுகள் சமூகத்தின் வறுமையையும், மக்களின் மனநிலையையும் பிரதிபலிப்பதாக இருந்தது.

கல்யாண வீட்டிற்க்கு வருபவர்கள் திருமண நிகழ்ச்சி முடிந்தவுடன் , சமையல் அறைக்கு சென்று தாங்கள் கொண்டு வந்திருக்கும் தூக்கு சட்டியில் பொங்கலும், சாம்பாரும், கேசரியும் எடுத்து செல்வார்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு அல்லது பள்ளிக்கு சென்ற குழந்தைகு என்று எடுத்து செல்வார்கள். ஒருவருக்கு என்று சொல்லி நாலு பேர் சாப்பிடும் அளவுக்கு எடுத்து செல்வார்கள். இரவு விருந்து இல்லையென்றால் அதையே வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சாப்பிடுவார்கள். இல்லையென்றால் உறவினர்களுக்கும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் கொடுப்பார்கள். இதை தவிர சாப்பாடு, மதிய உணவாக இருந்தால், தூக்கு சட்டியுடன் கேரியரும் எடுத்து வந்து எல்லா காய்கறிகளையும் மற்ற உணவுகளையும் எடுத்து செல்வார்கள். ஆனால், இளம் பெண்கள் இப்படி எடுத்து செல்ல கொஞ்சம் வெட்கப்பட்டு கொண்டு, பாவாடை தாவனியில் வரும் பெண்கள் முந்தானையை நீளமாக வைத்து கட்டி வருவார்கள். தூக்கு சட்டியை முந்தானையை தொங்கவிட்டு மறைத்து எடுத்து செல்வார்கள்.

முதலிலேயே இப்படி எடுத்து சென்றதால், பந்தியில் சாப்பாடு பற்றாக்குறை ஏற்படும். மீண்டும் அவசர அவசரமாக சமைத்து கொண்டிருப்பார்கள்.

மொத்த குடும்பமும் வந்து சாப்பிட்டுவிட்டு, பார்சலும் எடுத்து செல்லும் நபர்கள் செய்யும் மொய் பணம் வெறும் இரண்டு ரூபாய்  அல்லது அதிக பட்சம் ஐந்து ரூபாயாக இருந்தது. மேலும், உறவினர்களுக்கு திருமண பலகாரம் கொடுக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு முறுக்கு ஒரு மைசூர்பாக்கு. இதில் ஏற்ப்படும் பிரச்சனைகள் சொல்லி மாளாது. வீட்டிற்க்கு கொண்டு வந்து கொடுக்கவில்லையென்றால் குற்றம் குறைவாக கொடுத்தாலும் குற்றம். குற்றம் கண்டுபிடிப்பதற்கென்றே கூட பிறந்தவர்கள்  இருப்பார்கள்.

இது போன்ற திருமண நிகழ்ச்சிகளில் வீட்டு மாப்பிளைகள் செய்யும் அராஜகம்  அளவில்லாதது. அதாவது மாப்பிள்ளை/மணப்பெண்ணின்  அத்தை கணவர்கள்  அல்லது அவர்களது சகோதரிகளின் கணவர்கள் செய்யும் அட்டுழியம் அதிகம். அதிலும் குறிப்பாக அந்த மஞ்சள் பையை யார் வைத்துகொள்வது என்பது தான் முக்கிய பிரச்சனையாக இருக்கும். மஞ்சள் பையில் இருக்கும் சில்லறை காசுகளை புரோகிதருக்கு அவ்வப்போது கொடுத்துகொண்டேயிருக்கவேண்டும். இதுதான் மஞ்சள் பையின் மகிமை.

சகோதிரியின் கணவரிடம் கொடுத்தால், அத்தை கணவர் கோபித்துகொள்வார். அத்தை கணவரிடம் கொடுத்தால் சகோதிரியின் கணவர் கோபித்துகொள்வார். இதனால் திருமண நேரத்தில் வெளிநடப்பு செய்பவர்களும்  உண்டு. இவர்களை சமாதனப்படுத்த தனி திறமை வேண்டும்.

அடுத்து தாலி கட்டியவுடன் இந்த மாப்பிள்ளைகளுக்கு காப்பி அல்லது குளிர் பானம் வாங்கி கொடுக்க வேண்டும். இப்படி இவர்களை இதற்காக வெளியே அழைத்து செல்லும் போது அருகில் இருக்கும் முக்கிய  உறவினர்களையும் அழைக்க வேண்டும். பெண்கள் குழந்தைகளை போக சொல்லி வலுக்கட்டாயமாக அனுப்பி வைப்பார்கள். இதில் காலதாமதம் ஆனாலும் பிரச்சனை வெடிக்கும்.

அடுத்து இந்த மாப்பிள்ளைகளை பந்திக்கு அழைத்து சென்று அருகில் இருந்து உணவு பரிமாறுவதை பார்வையிட்டு உபசரிக்க வேண்டும். இதிலும் பிரச்சனை வெடிக்கும்.

எனது திருமண சமயத்தில் இப்படி செய்யகூடாது என்று சமயலறையில்
“ பார்சல் கிடையாது “ என்று போர்டு வைக்க போவதாக கூறினேன். முதல் எதிர்ப்பே என்னுடைய அம்மாவிடமிருந்து தான் வந்தது. நீ போடும் ஒரு வேளை சாப்பாட்டுக்கு இத்தனை கெடுபிடியாக என திட்டியதால் திட்டம் கைவிடப்பட்டது. நான் மொத்தம் ரூ.13,000/= செலவு (1986) செய்து விமர்சையாக திருமணம் செய்து கொண்டேன் என்று சொல்லியாக வேண்டும்.

இந்த வெண்பொங்கலுக்கும் வெங்காய சாம்பாருக்கும் விலை போன மக்கள் சமூகத்தில் மாற்றங்கள் ஏற்ப்பட நீண்ட வருடங்கள் தேவைப்பட்டது. 

தற்போது இந்த பழக்கம் குறைந்து விட்டது அல்லது முழுவதுமாக நின்று விட்டது என தோன்றுகிறது.  ஆனால் இந்த மஞ்சள் பை, காப்பி குடிப்பது, விருந்து உபசரிப்பது போன்றவை இன்னமும் இருக்கிறது. ஆனால் முன்பு செய்தது போல ஆர்பாட்டம் இல்லையென தெரிகிறது.