Saturday, 21 June 2014

பரவசம் தரும் தமிழ் மொழி



தமிழ் மொழியின் சிறப்பை பற்றி பலரும் பலவிதமாக எழுதி வருகின்றனர். அதை படிப்பதற்க்கும் கேட்பதற்க்கும் நன்றாக இருக்கிறது.
ஆனால் சில சமயங்களில் மிகைப்படுத்தப்பட்டதாக தோன்றுகிறது. சில பதிவுகளில் படித்த சில வரிகளின் அடிப்படையில் இதை கூறுகிறேன்.

1. தமிழ் தான் உலகில் தோன்றிய முதல் மொழி என்றும் தமிழன் தான் உலகில் தோன்றிய முதல் மனிதன் என்று கூறும் தமிழர்களிடம், மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான் என்று கூறினால் நம்ப மாட்டார்களாம். ஆனால் அந்த குரங்கு தமிழ் குரங்கு என்று சொன்னால் ஏற்றுக்கொள்வார்களாம்.

இது நகைச்சுவையாக கூறியதாக தோன்றினாலும், தமிழனின் மடமையை இதை விட கேவலமான முறையில் எடுத்துரைக்க முடியாது.

இதை படிப்பவர்கள் தமிழ் தான் முதல் மொழி என்பதற்க்கும் தமிழன் தான் முதல் மனிதன் என்பதற்க்கும் பல உருவாக்கப்பட்ட ஆதாரங்களுடன் விவாதிப்பார்கள். அந்த விவாதத்தில் கலந்து கொள்ள விருப்பமில்லை.

தமிழ் எனக்கு பிடித்த மொழி. அதை நேசிக்கிறேன். எனக்கு அந்த மொழி தெரியும் என்பதில் பெருமையடைகிறேன்.

2. தமிழின் பெருமையை கூற வேறு ஒருவர் இப்படி கூறுகிறார். உலகில் எந்த நாடாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் உடல் உறவு கொள்ளும் போது அவர்கள் எழுப்பும் ஒலி “ அ , ஆ “ என்ற தமிழ் எழுத்தின் ஓசையாம். 

இதை எந்த பொருளில் எழுதினார் என தெரியவில்லை. மனித இனம் பரவச நிலை அடையும் போது உலகில் தோன்றிய முதல் மொழியான தமிழ் மொழியின் முதல் எழுத்தை உச்சரிக்கிறாராம். பரவசத்தை தரும், வெளிப்படுத்தும் ஒலி தமிழ் மொழியை சார்ந்தது என்பதன் மூலம் தமிழ் மொழி பரவசப்படுத்த கூடியதும், இனிமையானதும் என்று கூறுகிறார்.

மனிதன் பரவசம் அடைவது உடல் உறவின் போது மட்டும் தானா ? பரவசம் அடையும் நிலைகள் பல உள்ளது. எல்லா தருணங்களிலும் “ அ ஆ என்ற எழுத்தின் ஒலியை எழுப்பி வெளிப்படுத்துவதில்லை.

தமிழ் மொழியின் சிறப்பை கூற எத்தனையோ விசயங்கள் இருக்கும் போது இதை அவர் தேர்ந்தெடுத்தது வியப்பை அளிக்கிறது.

உடல் உறவின் பரவச நிலையில் அந்த ஒலி எழுகிறது என்பது உண்மை என்றாலும், அந்த ஒலிக்கான மொழி அதனால் சிறப்படைகிறது என்பது அந்த தமிழ் குரங்கு கதையாக இருக்கிறது.

இவர் சொல்லிய பிறகு, அந்த பரவச நிலையில் வேறு ஏதேனும் ஒலி எழுப்புபவர்கள் இருப்பார்களா என எண்ண தோன்றுகிறது. சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். இதை பாலியல் சம்மந்தப்பட்ட விசயமாக பார்க்காமல், மொழி பெருமை என்ற அளவில் அவரவர் சுய பரிசோதனை செய்து கருத்துக்களை தெரிவிக்கலாம்.

“ ஆஆஆஆஆஆஆஆஆஆஆ “ இது அந்த பரவச நிலையில் எழுந்த ஒலி அல்ல.

உடலில் வாயு தொல்லை அதிகமாகும் போது இடுப்பில் ஒரு பயங்கரமான வலி எனக்கு உண்டாகும். அப்போது நான் இப்படி ஒலி எழுப்புவது வழக்கம். இதனால் நான்.  இதை வேதனையை வெளிப்படுத்தும் ஒலியை எழுப்பும் எழுத்தை கொண்ட தமிழ் மொழி வேதனை தரும் மொழி என்று கூற முடியுமா.

தமிழ் மொழியின் பெருமை என கண்டதையும் கூறி அதனை இழிவுபடுத்தாமல் இருப்பது நலம்

விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா ?



நடுத்தர மக்களும் அதற்கு மேல் உள்ளவர்களும், மிகவும் உயர்தரமான ஆடை வாங்கி உபயோகிக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இது சமூகத்தில் தன்னை ஒரு அந்தஸ்தில் நிலை நிறுத்தி கொள்ள தேவைப்படுகிறது என்ற காரணத்தாலும், ஆசைக்காகவும், நிறைய பணம் இருப்பவர்கள் மற்றவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்தி காண்பிக்கவும் வாங்கி குவிக்கின்றனர்.

நானும் இவ்வாறு செய்துள்ளேன். தற்போது அதிகம் செய்வதில்லை.

இவ்வாறு வாங்கும் விலை உயர்ந்த ஆடைகளை பராமரிப்பதற்க்கு தனி கவனம் தேவை. அதை எப்படி சுத்தம் செய்வது என்ற குறிப்பை ஆடையில் சிறு துணி இனைத்து எழுதியிருப்பார்கள். அதை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் அதில் எழுதியிருப்பதை போல அந்த ஆடையை கையான்டிருப்பார்களா என்பது கேள்வி குறி.

அந்த ஆடையில் குறிப்பிட்டிருப்பதை போல அதை பராமரித்தான தான் அதன் தன்மை நீடித்திருக்கும்.

அதில் என்ன எழுதியிருக்கிறது என்று பாருங்கள்


மிருதுவான சலவை தூள் - Use Mild Detergents

எனக்கு தெரிந்து மிருதுவான கடினமான சலவை தூள் அல்லது சலவை கட்டி இருக்கிறதா என தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் நாம் அவ்வாறு தேர்ந்தெடுத்து வாங்குவதில்லை. நடிகர் நடிகைகள் எந்த பொருளுக்கு விளம்பரம் செய்கிறார்களோ அதை வாங்குகிறோம். மேலும், அந்த கறை இந்த கறை எந்த கறையாக இருந்தாலும் போய்விடும் என்கிறார்கள். கறை நீக்கப்பட துணியை காண்பிக்கிறார்கள். விளம்பரத்தின் கீழே கண்ணுக்கு புலப்படாத அளவுக்கு சிறிய எழுத்துக்களில் இது creative visualisation கற்பனையாக சித்தரிக்கப்பட்டது என்று எழுதியுள்ளனர். ஒவ்வொரு முறை விளம்பரம் பார்க்கும் போதும், அதில் உள்ளவர்களை பார்த்து, வா, வந்து என் வீட்டில் துவைத்து காட்டு என்று புலம்புவது என் வாடிக்கை.

மேலும், துணிகளை வெண்மையாக்க என்று ஒரு பொருள் வருகிறது. அதை அறிமுகம் படுத்தும் போது இலவசமாக கொடுத்தார்கள். அதை உபயோகிக்கும்படி மனைவியிடம் கூறினேன். இது புதுசு. எப்படியிருக்குமோ என உபயோகிக்க மறுத்துவிட்டாள். பின்பு தொடச்சியான விளம்பரங்களுக்கு பிறகு அது விலைக்கு விற்க்கப்பட்டது. இப்போது அதை என் மனைவி வாங்கி உபயோகப்படுத்துகிறாள். இலவசமாக கொடுத்தால் நல்ல பொருளா என்று சந்தேகம் வருகிறது. விலை அதிகமாக இருந்தால் அது தரமான பொருள் என்று நினைக்கிறார்கள். 

மொத்தத்தில் கடினமான மிருதுவான சலவை தூள் அல்லது சலவை கட்டி என்று கிடையாது.

வெளுக்க வேண்டாம் - Do not Bleach

வெளுக்க வேண்டாம் என்பதன் பொருள் சலவைகாரனிடம் கொடுத்து வெள்ளாவி வைத்து வெளுக்க வேண்டாம் என்பது. ஆனால், சலவை கடையில் கொடுக்கும் போது, இவ்வாறு வெளுக்க வேண்டாம் என்று நாம் சொல்வதில்லை. பொதுவாக இப்பொதெல்லாம் Dry Cleaning  உலர் நிலையில் சுத்தப்படுத்துதல் – அதாவது துணியை தண்ணியில் முக்கி சலவை தூள் மூலம் சுத்தப்படுத்தாமல், உலர் நிலையிலேயே சுத்தப்படுத்துதல். 

இதுவும் ஒரு விதத்தில் நல்லது தான். சலவைக்காரர்கள் துணி துவைக்கும் முறையை பார்த்தால் கண்களில் நீர் வந்து விடும். காய்ந்து போன ஆற்றில் தேங்கி நிற்கும் குட்டை நேரில் தோய்த்து அதிலேயே அலசி, காய வைத்து, இஸ்திரி செய்து கொடுப்பார்கள். அதனால், தோல் நோயகள் ஏற்ப்பட வாய்புண்டு. அதனால் தான் இந்த dry cleaning  முறை கொண்டு வரப்பட்டது.

மிதமான இஸ்திரி - Warm Iron

துணி துவைத்த பிறகு வீட்டில் இஸ்திரி போடும் போது, இஸ்திரி பெட்டியில் குறிப்பிட்டுள்ள படி துணி வகைகளுக்கு ஏற்ப வெப்பத்தை கூட்டுவது குறைப்பது கிடையாது. பட்டுப்புடவை, நமது கோட் சூட் இஸ்திரி போடும் போது சற்று கவனம் செலுத்துகிறோம். மற்றப்படி அனைத்து துணிகளுக்கும் ஒரே சூட்டில் தான் இஸ்திரி செய்கிறோம்.

நிழலில் உலர வைக்கவும் - Dry in shade

இதை நாம் நிச்சியமாக செய்வதில்லை. சீக்கிரம் காய வேண்டும் என்பதற்க்காக வெய்யிலில் தான் காய வைக்கிறோம். நிழலில் காய வைப்பதில்லை.

கசக்கி பிழிய  வேண்டாம் - Do not Wrinkle

இப்போது துணிகளை கசக்கி பிழிவது குறைந்துள்ளது. பொதுவாக இயந்திரத்தில் துவைப்பதால், அரை குறையாக அதுவே உலர்த்தி கொடுப்பதால் பிழிய வேண்டிய அவசியம் ஏற்ப்படுவதில்லை. ஆனால், வேலைக்காரிகள் துணி துவைத்தால் கசக்கி பிழிகிறார்கள்.

பெண்கள் குறிபாக மனைவிகள் எந்த விதிமுறைகளையும் பயன் படுத்துவதில்லை. ஆனால், எல்லோரும் இப்பொதெல்லாம் தரமான துணிகள் வருவதில்லை. நம்மிடமிருந்து காசை கொள்ளையடிக்கிறார்கள் என்று புலம்புகிறோம்.

நமக்காக நாமே நமது வீட்டிலேயே விதி முறைகளை பின்பற்றி வேலை செய்வதில்லை. ஆனால், பிறர் விதிமுறைகளை பின்பற்றாத போது அவர்களை குற்றவாளி கூண்டில் நிறுத்தி நீதிபதிகள் ஆகி விடுகிறோம்.

மனைவிகள் துணிகளை மட்டுமல்ல கணவர்களையும் இவ்வாறு தான் கையாள வேண்டும்.

இதமான  திட்டுடன், மிதமான சூட்டுடன், போட்டு வெளுக்காமல், வீட்டுக்கு உள்ளே கசக்கி பிழியாமல் கணவனை கையாள வேண்டும். ஆனால், யாரும் அப்படி செய்வதில்லை.

இனிமேலாவது நீங்கள் செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா

Thursday, 19 June 2014

துறவறம் கொள்வது சாத்தியமா ?



அண்மை காலமாக துறவறம் போக வேண்டும் என்று தோன்றுகிறது. துறவறம்  என்றால், காவி வேட்டி கட்டிக்கொண்டு, ருட்சாத்திர மாலை போட்டுக்கொண்டு, பஜனை செய்து கொண்டு, போலியாக ஆசைகளை விட்டு விட்டதாக வேசம் போடுவதல்ல. 

ஆசிரமம் அமைத்து கோடிக்கனக்கான பணத்தை சேமித்து அதற்க்காக குற்றங்களை செய்து மேலும் ஒரு சிக்கலான வாழ்க்கையை அமைத்து கொள்வதல்ல. 

சந்தியாசம் என்ற பெயரில் சார்ந்துள்ள மத கருத்துக்கள் தான் உயர்ந்த்து என்று மற்றவர்களை தாழ்த்தி பேசி சமுயாதயத்தில் கலவரத்தை தூண்டுவதுமல்ல.

தனித்து வாழுதல். எவ்வளவு தான் ஆசை படாமல், பிறருடைய விசயங்களில் தலையிடாமல் வாழ்ந்தாலும் தற்போதைய நடைமுறை வாழ்க்கையில் அது ஒத்து வராது. சமூகம் எப்படியாவது இந்த நரக வாழ்க்கையில் இழுத்துக்கொண்டிருக்கும். புதை சேற்றில் மாட்டிக்கொண்ட வாழ்க்கை இது. இதிலிருந்து மீளுவது எளிதான காரியமல்ல.

சந்நியாசி ஆக வேண்டுமென்றால் “ கூறாமல் சந்நியாசம் கொள் “ என்று எழுதி வைத்துள்ளனர்.  அப்படியெல்லாம் மற்றவர்களை ஏமாற்றி விட்டு ஒடி ஒளிந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் இல்லை. எல்லோரிடமும் சொல்லி விட்டு , அவ்வப்போது இருக்கும் இடத்தையும் நிலைமையும் தெரிவித்து விட்டு ஒதுங்கி வாழ வேண்டுமென்பது.

விலகி வாழ்பவன் மீண்டும் ஏன் தொடர்புகளை வைத்துக்கொள்ள வேண்டுமென்றால், வாழ்ந்த வாழ்க்கையில் என்னுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் நம்பிக்கையை அவ்வளவு எளிதில் விலக்கிவிட முடியாது என்பதுடன் என்னை சார்ந்தவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும், சடங்கு சம்பிரதாயங்களையும் விலக்கி அவர்களை துன்பத்திற்க்கு ஆளாக்க முடியாது என்பதும் காரணம். 

சுமங்கலியாக வாழ்வதா, பிண்டம் வைப்பதா இல்லையா என்ற குழப்பத்தை குடும்பத்தார்க்கு வைக்க விரும்பவில்லை.

இது வாழ்க்கையை கண்டு பயந்து ஓடுவதோ அல்லது பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் தப்பித்து ஒடும் செயலோ அல்ல.

தன்னை நம்பி வந்தவர்களை தவிக்க விட்டு வெளியேறுவது கோழைத்தனம் என்ற வாதமும் சரிபடாது. நம்பி வந்தவர்களையும், காம இச்சையால் உருவாக்கப்பட்டவர்கள் அனைவரும் வசதியாக வாழ ஏற்பாடு செய்து விட்டு , தனக்கான தனக்கு பிடித்தமான வாழ்க்கையை தேர்ந்தெடுப்பது.

இப்போது வாழ்க்கையில் என்ன குறை என்று கேட்டால் ஒரு குறையும் இல்லை. வாழ்ந்த வாழ்க்கையும், வாழும் வாழ்க்கையும், வாழப்போகின்ற வாழ்க்கையும் நன்றாகவே உள்ளது.

இந்த வாழ்க்கையை இத்தனை காலம் வாழ்ந்தாகிவிட்டது. வேறு ஒரு வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கலாம் என்ற எண்ணம் தான். இங்கு இழப்பதற்க்கு ஒன்றும் இல்லை அங்கு சென்று அடைவதற்க்கும் ஒன்றும் இல்லை. இப்படிப்பட்ட நிலையில் ஏன் புதிய வாழ்க்கையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கேள்விக்கு இறுதியான பதில் இல்லை. மாற்றம் ஒன்றே மாறாதது மாற்றி வாழ்ந்து பார்ப்பதில் என்ன தவறு என்ற எண்ணம் தான்.
சந்நியாசம் என்றால் தெய்வ நம்பிக்கை அதிகமாகி விட்டது என்று பொருள் அல்ல. சிந்தனை திறன் உடையவன் எந்த காலத்திலும் குருட்டு தனமாக எதையும் ஏற்றுக்கொள்ளமாட்டான்.

நிறைய விசயங்களை அறிந்திருப்பதால் அதை மற்றவர்களுக்கு போதித்து அவர்களை நலவழி படுத்துவதற்க்கு என்பதும் பொருள் அல்ல.

எவ்வித பந்தங்களும் இல்லாமல் , கடமைகள் என்று சுமைகளை ஏற்றிக்கொள்ளாமல் , எந்த நேரத்தில் எது தோன்றுகிறதோ அதை செய்து வாழுவது. நேற்று நடந்ததை பற்றி கவலைப்படாமல்., நாளைக்கு நடக்க போவதை பற்றி கவலைப்படாமல், வாழும் ஒவ்வொரு நிமிடத்தையும் அதன் போக்கில் வாழவேண்டுமென்பது.

மண் ஆசை, பொண் ஆசை, பெண் ஆசை இவைகளை துறந்து விட்டு போக முடியுமா என்ற கேள்வி எழும். அது அவ்வளவு விரைவில் சாத்தியமில்லைல். ஏதெனும் ஒரு சந்தர்ப்பத்தில் இவை அனைத்தும் நம்மை விட்டு விலகி செல்லத்தான் போகிறது. அவை நம்மை விட்டு விலகும் முன், நாமே அதை விலக்கி விட்டால் அது நம்மை குறைவாகவே பாதிக்கும்.

சந்தியாசம் வாங்கிவிட்டால் இந்த ஆசைகள் விலகிவிடும் என்றால் அதை விட முட்டாள்தனம் ஏதுமில்லை. எங்கு எப்படி விலகினாலும், வசிப்பதற்க்கு, இயற்க்கையில் இருந்து பாதுகாத்து கொள்வதற்க்கு தலைக்கு மேல் கூரை தேவை. அதை தேடித்தான் ஆக வேண்டும். இது தான் மண் ஆசை. ஆகாயத்தையே கூரையாக நினைத்து வெட்ட வெளியில் வாழ்ந்து விட முடியாது.

பிச்சை எடுத்து உண்டாலும் ஒரு திருவோடு  வேண்டும். அதை பாதுகாக்க சிரமப்பட வேண்டும். இது பொருள் ஆசை.

பெண் ஆசையை ஒழிக்க முடியுமா. முடியாது. நம் எதிரே வருபவர் பெண் என்று இனங்காண முடியுமென்றால், அதை தொடர்ந்து அதற்க்கான எல்லா எண்ணங்களும் தோன்ற தான் செய்யும்.

எனவே இந்த ஆசைகளை முற்றிலுமாக விலக்கி விட முடியாது. குறைத்து கொள்ளலாம். இப்படி நினைத்து வாழ வேண்டும் என்பதே ஒரு ஆசை தானே. அப்படியிருக்கும் போது ஆசைகளை ஒழித்து விட்டேன் என்பது போலித்தனம்.

முதல் படி எடுத்து வைப்பதற்க்கு, தற்போது கைவசம் இருக்கும் பொருட்கள் உறவுகளை விட்டு விலக வேண்டும். ஆசையின்றி ஆடையின்றி கூட விலகி விட முடியும். ஆனால்,

இன்று வரை சமூக நிர்பந்தத்தால் பொருள் ஈட்ட மட்டுமே பயன் படுத்த பட்ட கல்வி, அதன் மூலம் அறிந்தவை , இதன் மூலமாக அடைந்ததாக கருதப்படும் அறிவு எனும் சிந்தனை திறனையும் , இது வரை அடைந்த அனுபவங்கள் மூலம் பெற்ற அறிவையும் விட்டு விட்டு சந்தியாசம் என்ற வாழ்க்கையை நோக்கி பயனிக்க முடியுமா. அவை எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கும். இவைகள் இருக்கும் வரை, நடப்பவைகள் அனைத்தையும் அதன் போக்கிலேயே ஏற்று வாழ்வது இயலாத காரியம். நடப்பவைகள நமக்கு சாதமாக்கி கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருந்து கொண்டெயிருக்கும். அறிவு  என்ற ஒன்றை விலக்க முடியாத போது , எப்படி எல்லாவற்றையும் துறந்து விட்டு துறவறம் மேற்கொண்டதாக சொல்ல முடியும்.

இந்த அறிவையும் விலக்கி விட்டு நிகழ்கால வாழ்க்கையிலிருந்து விலக முடியுமா.

மூளைச்சாவு என்கிற நிலையில் தான் அது சாத்தியமாகும். ஆனால் அப்போது உடலும் இயங்காது. வாழும் வாழ்க்கை என்ன என்று புரியாத நிலையில் வாழ்வது சாத்தியமில்லை.

சிலருக்கு விபத்து போன்ற காரணங்களில், பழைய நினைவுகள் முற்றிலுமாக அழிந்து , புது வாழ்க்கை ஆரம்பிக்கிறார்கள். அப்போது கூட கடந்து வந்த வாழ்க்கையில் ஏதொ ஒரு நிலையிலிருந்து வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையை வேண்டுமானால் அறிவு உட்பட அனைத்தையும் துறந்து துறவறம் மேற்கொண்டதாக கூறமுடியும். ஆனால் அதை அவனாலும் உணர முடியாது. மற்றவர்களும் உணர மாட்டார்கள். மனநிலை பாதிக்கப்பட்டவன் என்ற சொல்லின் மூலம் தனியொரு அடையாளத்தை சமூகம் சூட்டிவிடும்.

எனவே எல்லாவற்றையும் துறந்து விட்டு துறவறம் மேற்கொள்வது என்பது சாத்தியமில்லை. அரண்மனை வாழ்க்கையை விட்டு வெளியேறியவர்களும், இறுதி வரை ஆசை இல்லாமல் வாழ்ந்தார்கள் என்று கூற முடியாது. தான் அடைந்த ஞானத்தை பிறருக்கு போதிக்க வேண்டும் என்று நினைப்பது கூட ஒரு வகை ஆசை தான். ஆசையை துறந்தவர்கள் என்று யாரும் இல்லை. குறைத்து கொண்டவர்கள் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

இன்றைக்கு இதை எழுதிகொண்டிருக்கிறேன் என்றால் , சிறிதளவேனும் வாழ்க்கையிலிருந்து விலக ஆரம்பித்துள்ளேன் என்று தோன்றுகிறது.
முதலில் இந்த முகநூலிலிருந்து விலகுவதே சரியாய் இருக்குமோ ?

Saturday, 14 June 2014

பொழுது போகல



காலை ஒன்பது மணி. கடும் கோடையில் 45 டிகிரி வெப்ப நிலையில் தவித்த மக்களுக்கு இப்போது பெய்து கொண்டிருக்கும் மழை மிகப் பெரிய ஆறுதல்.

மழை பெய்ய ஆரம்பித்தவுடன், என் வீட்டிற்க்கு எதிரில் இருக்கும் மின்சார கம்பத்தில் வான வேடிக்கை நடந்தது. பொதுவாக நான் வசிக்கும் பகுதியில் சற்று காற்று வீசினாலோ அல்லது தூறல் போட்டாலோ மின்சாரத்தை துண்டித்து விடுவார்கள். ஆனால், காலையில் சற்று கவன குறைவாக இருந்த காரணத்தால், வான வேடிக்கை நடந்துவிட்டது. இப்போது மின்சாரம் இல்லை.

என் வீட்டு வாசலில் இருக்கும் பெரிய வேப்ப மரத்தின் கீழ் ஒரு மிதி வண்டிகாரர் மழைக்கு ஒதுங்கி நிற்கிறார்.  வீட்டிற்க்கு எதிரில் தள்ளு வண்டியில் காய்கறி விற்கும் முன்று பேரும் தங்களது வண்டியை நெகிழியால் போர்த்துகின்றனர்.

பழைய செய்திதாள்கள் மற்றும் பல்வேறு பொருட்களை வாங்கி வியாபாரம் செய்யும் நபரும், தனது வண்டியில் இருக்கும் பொருட்கள் நனையாமல் இருக்க நெகிழி கொண்டு மூடுகிறார். காற்றில் நெகிழி பறக்கிறது. மழைக்கு ஒதுங்கி நின்ற மிதிவண்டிகாரர் அவருக்கு உதவி செய்கிறார்.  அவர் நனைவதை பற்றி கவலைப்படவில்லை. உதவி செய்யும் பொருட்டு அவர் நனைவதை அவர் அறியவில்லை என தோன்றுகிறது. இருவரும் மீண்டும் மரத்தடியில் வந்து நிற்கின்றனர். போலியான நன்றி என்ற வார்த்தையை அவருக்கு உபயோகிக்க தெரியவில்லை. இருவரும் பேசிக்கொள்கின்றனர். வேறு ஒரு மிதி வண்டிகாரரும் அங்கு வந்து அவர்களுடன் பேச ஆரம்பிக்கிறார். என்ன பேசிக்கொண்டிருப்பார்கள். மழை வந்து தங்களது பிழைப்பை கெடுத்து விட்டது என்றா அல்லது மழை வந்ததால் வெப்பம் குறைந்தது என்றா அல்லது தனது கிராமத்தில் விவசாயத்திற்க்கு இந்த மழை உதவும் என்றா.  எல்லோரும் பிழைப்பு தேடி இங்கு வந்தாலும், அவர்களது சொந்த மண் வறண்ட நிலமாக இருந்தாலும், அதைப்பற்றி பேசிக்கொள்வதில் சிறிது மகிழ்ச்சி உண்டாகிறது.

இரண்டு மிதி வண்டிகாரர்களும் தங்களது வண்டியில் குத்துகாலிட்டு உட்கார்ந்து கொள்கின்றனர். அப்படி உட்கார்ந்த வேளையில் ஒரு மாணவன் வந்து ஒரு வண்டியில் உட்கார வண்டி நகர்கிறது. எங்கே போக வேண்டும் எவ்வளவு கூலி என்று பேசியதாக தெரியவில்லை.  ஒரு பெண்மணி வந்து மற்றோரு மிதிவண்டியில் உட்கார அதுவும் நகர்ந்து விடுகிறது.. பழைய சாமன் வாங்குபவன் எப்போது இடத்தை விட்டு நகர்ந்தான் என தெரியவில்லை.

மழை நின்று விட்டது எனது பக்கத்து வீட்டுகாரர் ஸ்கூட்டரை வெளியே எடுத்து உதைக்கிறார். அது கிளம்புவதாக கானோம். தனது மகனை கபில் கபில் என்று கூப்பிடுகிறார். இவருக்கு நல்ல குரல்வளம். இவர் தனது வீட்டில் ரகசியமாக பேசினால், எனது வீட்டில் மிகவும் நன்றாக கேட்கும். இவர் சாதாரணமாக பேசினால், வீட்டில் ஏதொ சண்டை நடப்பது போல இருக்கும். முன்பெல்லாம் தொலைபேசியில் இவர் STD  பேசினால்,  அந்த நபருக்கு மட்டுமல்ல எங்கள் தெரு முழுவதும் கேட்கும். ஸ்கூட்டர் கிளம்பவில்லை. அதை வீட்டில் வைத்து விட்டு மிதிவண்டியில் புறப்பட்டு சென்று விட்டார்.

சிவப்பு புடவை கட்டிய பெண்மணி மழையில் நனைந்த உடையுடன் நடந்து செல்கிறார். மக்கள் நடமாட்டம் வாகன நடமாட்டம் அதிகமாகி விட்டது.

தள்ளு வண்டியில் ஒரு பெரிய பாத்திரத்தில் பிரியானி விற்கும் நபர் வருகிறார். அவரது வண்டியில் பெரிய  பானையில் பிரியானி இருக்கும். அதை ஒரு புறமாக சாய்த்து வைத்திருக்கிறார். ( இஸ்லாமிய மக்கள் தம் பிரியானி செய்ய பெரிய பித்தளை பாத்திரத்தை உபயோகிப்பார்களே அது ) இவரும் இஸ்லாமியர். பித்தளை பாத்திரத்துக்கு பக்கத்தில் மற்றோரு பாத்திரத்தில் குழம்பு இருக்கிறது. ஒரு எடை போடும் இயந்திரமும் இருக்கிறது. தினமும் வந்து என் வீட்டுக்கு எதிரில் நிறுத்துவார். என் வீட்டுக்கு எதிரில் கடைகள் இருக்கின்றன. அதில் ஒரு முடி திருத்தும் கடையும் இருக்கிறது. அது இஸ்லாமிய இளைஞர்களால் நடத்தப்படுகிறது.. இவர் வண்டியை நிறுத்திவிட்டு அந்த கடைக்கு சென்று சொல்லி விட்டு வருவார்.

அவர்கள் வந்து பிரியாணி வாங்குவார்கள். எடை போடும் இயந்திரத்தின் ஒரு பகுதியில் உள்ள கிண்ணத்தில் ஒரு துண்டு செய்தி தாளை வைப்பார். பிறகு பெரிய பாத்திரத்திலிருந்து பிரியானி சாதத்தை வைப்பார். பிறகு தேடி தேடி ஒரு துண்டு மாமிசம் வைப்பார். அது கோழி பிரியானியா ஆட்டு பிரியானியா அல்லது மாட்டு பிரியானியா என தெரியவில்லை. எவ்வளவு எடைக்கு வைக்கிறார் என தெரியவில்லை. பிறகு அதில் சிறிது குழப்பு ஊற்றுகிறார். அந்த செய்திதாளுடன் பிரியானியை மடித்து நெகிழி பையில் வைத்து தருகிறார். ஒரு முறை முடி வெட்ட சென்ற போது அந்த இளைஞர்களிடம் விசாரித்தேன். அது 20 ரூபாயம். அது அவர்கள் காலை சிற்றுண்டியாக சாப்பிடுகிறார்கள்.

காய்கறி விற்கும் இரண்டு இளைஞர்களும் வாங்கி சாப்பிடுகிறார்கள். அவர்களும் இஸ்லாமியர்கள். சாலையில் செல்பவர் நின்று விசாரித்து அவரும் வாங்கி வண்டியின் ஓரத்தில் வைத்து சாப்பிட்டுவிட்டு காசு கொடுத்து நகர்ந்து செல்கிறார்.

தெருவில் குப்பை அள்ளும் இளைஞர் என் வீட்டு வாசலில் குப்பை அள்ளுகிறார். இவர் எப்போதும் நல்ல முழு நீள கால்சட்டையும், மேல் சட்டையும் அணிந்திருப்பார். Shoe போட்டிருப்பார். என்னை பார்த்தால் ஒரு வணக்கம் சொல்லுவார். என் வீட்டின் வெளிப்பகுதியை பெருக்கி குப்பையை அள்ளுவார். அது அவரது வேலை அல்ல. எனது மனைவி சொல்லியிருப்பதால் அதை செய்கிறார். சிறிது நேரம் கழித்து வந்து, மணி அடித்து என் மனைவியை அழைத்து அதற்க்கான காசு வாங்கி செல்வார். எவ்வளவு என தெரியவில்லை.

எங்கள் தெருவில் குப்பை தொட்டி கிடையாது. சற்று தள்ளி இருக்கிறது. இங்கு காலையில் ஒருவர் வண்டி கொண்டு வந்து ஒவ்வொரு வீட்டிலும் மணி அடித்து அழைத்து குப்பையை வாங்கி செல்வார். இவருக்கு மாதா மாதம் காசு கொடுக்க வேண்டும். இவரது சேவையை உபயோகிக்காமல், குப்பை தொட்டியில் சென்று போடுபவர்களும் உண்டு. ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அவரது சம்பளத்தை கேட்பார். என் மனைவி, இன்னமும் சம்பளம் வரவில்லை இரண்டு நாள் கழித்து தருகிறேன் என்றால் ஒப்புக்கொள்ளமாட்டார். நீங்க என்ன எனக்கு ஆயிரகணக்கிலா தருகிறீர்கள் என்று வாதம் செய்து முதல் தேதியே வாங்கி செல்வார்.

இவரை காலை 11 மணி அளவில் மீண்டும் பார்க்கலாம். கருப்பு நிற Hero Honda வண்டியில் இரண்டு பெண்மனிகளுடன் சென்று கொண்டிருப்பார். அநேகமாக அது அவரது மனைவியும் மகளுமாக இருக்க வேண்டும். அவர்களும் காலையில் இந்த பகுதிக்கு வந்து துப்புரவு தொழில் செய்பவர்களாக இருக்க வேண்டும். அனைவரும் வேலை முடிந்தவுடன் ஒன்றாக வீடு திரும்புகிறார்கள் என நினைக்கிறேன். 

காவி வேட்டி கட்டிய சாமியார் வருகிறார். இவருக்கு நான் தானம் செய்வதில்லை. ஐந்து ரூபாய் தானம் கொடுத்தாலும் வாங்க மாட்டார் . குறைந்தபட்சம் பத்து ரூபாய் கொடுக்க வேண்டும். நான் இரண்டு ரூபாய் கொடுத்த போது திருப்பி கொடுத்து சென்று விட்டார். அன்றிலிருந்து நான் எதிரில் இருந்தாலும் என்னிடம் கேட்ப்பதில்லை. நானும் கொடுப்பதில்லை. எனது பக்க்துவீட்டு பெண்மணி இருபது ரூபாய் கொடுத்து விட்டு ஒரு கும்பிடு போடுவார். இவரும் ஏதோ ஆசிர்வாதம் செய்து கொண்டே நகர்வார்.

வேறு ஒரு சாமியார், பௌர்னமி, அமாவாசை , பிரதோசம் அன்று தெருவில் வந்து சங்கு ஊதுவார். குறிப்பிட்ட வீடுகளின் முன்பு தான் சங்கு ஊதுவார். அந்த வீட்டு பெண்மணிகள் காசு கொடுத்து விட்டு வணங்குவார்கள். இவர்களும் ஆசிர்வாதம் செய்வார்கள். இவர்களுக்கு எப்படி நாள் கிழமை தெரிகிறது என புரியவில்லை.

அப்போதெல்லாம் பாய்ஸ் படத்தில் வரும் செந்திலின் நகைச்சுவை காட்சி தான் நினைவுக்கு வரும். எந்த பகுதி கோயிலில் எந்த கிழமையில் என்ன பிரசாதம் கொடுப்பார்கள் எத்தனை மணிக்கு கொடுப்பார்கள் என விவரமாக கூறுவார். அதற்க்காக ஒரு குறிப்பும் வைத்திருப்பார்.  Information is knowledge என்று கூறுவார். எனக்கு ஒவ்வொரு முறையும் இந்த காட்சி தான் நினைவுக்கு வரும். இந்த சாமியார்கள் ஏதேனும் Tablet  வைத்துள்ளார்களோ என்னவோ. இதுபோன்ற சாமியார்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள BPO அமைப்பு வைத்துள்ளார்களே என்னவோ.

இத்தனை காட்சிகளையும் ஜன்னல் வழியாக பார்த்து எழுதிகொண்டிருக்கிறேன். இன்னமும் மின்சாரம் வரவில்லை. எனது சம்சாரமும் தேநீர் எடுத்துக்கொண்டு வரவில்லை. இப்போது எனக்கு புகை பிடிக்க வேண்டும். வாங்குவதற்க்காக கடைக்கு போக வேண்டும். வாங்கி வருவதற்க்குள் மின்சாரம் வந்து விட்டால் இதை முகநூலில் ஏற்றி விடுவேன். இல்லையெனில் இந்த கட்டுரையை தொடரலாம் என எண்ணுகிறேன். பொருத்திருங்கள்  சீக்கிரம் வந்து விடுகிறேன்.

புகை பிடித்தாயிற்று ஆனால் இன்னமும் மின்சாரம் வரவில்லை. என்னடா ஒன்னும் இல்லாத விசயத்த இவ்வளவு பெருசா எழுதுறான் அப்பிடின்னு தானே தோனுது. அப்பிடி தாங்க ரொம்ப பேர் எழுதுறாங்க. அவங்களுக்கு எழுத்தாளர்கள்ன்னு பேர்.

ஒரு விசயத்த பார்த்துட்ட அத சுத்தி சுத்தி ஜிலேபி மாதிரி சுத்தி சுத்தி எழுதுவாங்க. சின்னதா ஒரே ஒரு முறை மட்டும் எழுதினா அது சிறுகதை. பெரிசா எழுதினா நெடுங்கதை. அப்பப்போ, தொடர்ச்சியா எழுதினா அது தொடர்கதை. 

அதை இலக்கியம்ன்னு சொல்லுவாங்க. அவங்கள இலக்கியவாதிகள்ன்னு சொல்லுவாங்க. இதுலே என்ன இலக்கியம் இருக்குன்னு கேட்ட, ஒனக்கு இலக்கியம் பத்தி என்ன தெரியுமுன்னு நம்மள திருப்பி கேப்பாங்க. சரிப்பா நீயே சொல்லுன்னா எதோ எதோ சொல்லுவாங்க. எதுவுமே புரியாது. என்னப்பா முன்னாடி வேற மாதிரி சொல்லியிருந்தியேன்னு கேட்ட அதுவும் இலக்கியம் இதுவும் இலக்கியம்ன்னு சொல்லுவாங்க. சரி முடிவா எது இலக்கியன்னு சொல்லுன்னு கேட்டா அப்பிடி சொல்லமுடியாது. இது கலை இதுக்கு முடிவான சூத்திரம் இல்லேன்னு சமாளிப்பாங்க.

வேறோரு எழுத்தாளர் இப்படி சொல்லியிருக்காரேன்னு கேட்டா , அவன்னெல்லாம் இலக்கியவாதியான்னு ஒரு புடி புடிப்பாங்க. வாயில நொழயாத பேர்ல்லாம் சொல்லி அவங்க தான் இலக்கியவாதின்னு சொல்லுவாங்க. 

சமயத்திலே இந்த இலக்கியவியாதிகள் சண்ட போடுறத பார்த்த, சேரிலே பொம்பளங்க கொழயடி சண்ட போடுற மாதிரி இருக்கும்.

இருங்க இருங்க என்ன சொல்ல வர்றிங்க. இப்போ நான் எழுதியிருக்கிறதே இலக்கியம் மாதிரி இருக்குன்னு சொல்றிங்களா. பாத்திங்களா கலாய்கிறிங்க. இப்பிடி உசுப்பு எத்தி வுட்டதாலே தான் ஏகப்பட்ட பேர் தன்ன இல்லக்கியவாதிகள்ன்னு சொல்லிகிட்டு திரியுறாங்க.

சும்மா இருங்க என்ன ரொம்ப புகழாதிங்க. ஏற்கனவே  நான் எழுதினத படிச்ச வெள்ளகாரங்க, அட சேகர் யாருக்கும் ஒன்னும் புரியாத மாதிரி எழுதுறான் இவன் பெரிய இலக்கியவாதியா இருப்பான்னு, 2014 வருசத்துக்கான இலக்கிய நோபல் பரிசு கொடுக்கலாம்னு யோசிக்கிறதா செய்தி கசியுது.


நீங்களும் என்ன இலக்கியவாதின்னு சொன்ன அவங்க நெஜமாகவே நம்பி நோபல் பரிசு கொடுத்தாலும் கொடுத்துடுவாங்க.

என்ன நீங்க ரொம்ப தொந்தரவு செஞ்ஜா அத நான் வாங்கி தான் ஆவனும்.
சரி விடுங்க. இவ்வளவு நேரம் இத பொறுமையாக படிச்சதுக்காக உங்களுக்கு சிறந்த வாசகர்ன்னு பட்டம் கொடுக்கிறென்.