Tuesday, 11 November 2014

RANG RASIYA – ( வர்ணங்களை நேசிப்பவன் ) – இந்தி திரைப்படம்


RANG RASIYA – ( வர்ணங்களை நேசிப்பவன் ) – இந்தி திரைப்படம்



மராட்டிய எழுத்தாளர் ரஞ்ஞித் தேசாய் எழுதிய ராஜா ரவி வரமாவின் வாழ்க்கை வரலாற்று நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் .

இன்றைய காலகட்டத்தில் புகழ் பெற்ற ஓவியங்களை ஏலம் விடும் காட்சியுடன் படம் ஆரம்பிக்கிறது. அதில் ராஜா ரவி வர்மாவின் ஒவியத்தை ஏலம் விடும் போது, வெளியில் ஒரு எதிர்ப்பு ஊர்வலம் நடைப்பெறுவதும் காண்பிக்கப்படுகிறது. ஏலம் விடும் போது ஓவியரை பற்றி கூறும் போது கதை பின்னோக்கி போகிறது.

கோயில் உட்புற சுவரில் சிறுவன் ஒருவன் யானை ஓவியத்தை வரைகிறான். அதை பார்த்து அங்கு வரும் அரசன் கோபம் அடைவார் என எதிர்பார்க்கும் சமயத்தில் அரசர் அதை பாராட்டி ஊக்கமளிக்கிறார். அவரது ஒவியங்களை கண்டு மகிழும் அரசர், அவரையும் இந்த நாட்டு ராஜா என அறிவிக்கிறார். ராஜாவின் தம்பிக்கு இது பிடிக்கவில்லை.

இவரது ஓவிய புகழ் பரவுகிறது. பரோடா அரசர் அவரை வரவழைத்து தனது அரண்மனையில் ஓவியங்களை வரைந்து வைக்க சொல்கிறார். மேலை நாடுகளில் உள்ளது போல நமது நாட்டில் ஓவியங்கள் இல்லையென்றும் மேலை நாடுகளுக்கு போய் பார்த்து விட்டு வந்து அது போன்ற ஓவியங்களை தனது அரன்மனைக்கு வரைந்து கொடுக்கும் படி கேட்கிறார்.

ஓவியர் மேலை நாடுகளுக்கு செல்ல தேவையில்லை என்றும் நமது நாட்டில் இருக்கும் பழம் கதைகளை ஓவியங்களை வரையலாம் என்றும் அதற்கு நாட்டின் பல பகுதிகளை சுற்றி பார்க்க அனுமதி கேட்கிறார். அவர் அனுமதிதத்துடன் பல் வேறு பகுதிகளை சுற்றி பார்க்கிறார்.

பிரபலமடைகிறார். ஒரு இளவரசியுடன் திருமணம் நடைப்பெறுகிறது. வேலைக்காரியை பல நிலைகளில் நிற்க வைத்து ஓவியம் வரைகிறார். மனைவி ஆட்சேபிக்கிறாள்.

ராஜா இறந்து விடுகிறார். அவரது தம்பி ராஜாவாகிறார். இதனால் ஓவியர் ராஜா என்ற பட்டத்தை இழக்கிறார்.

கோவிலில் ஒரு பெண்ணை சந்திக்கிறார். ஓவியம் வரைய ஒத்துழைக்கும் படி கேட்கிறார். முதலில் மறுத்தாலும் பின்பு ஒப்புக்கொள்கிறார். அவள் ஒரு வேசி.

அவளை வைத்து கடவுள் படங்களை வரைகிறார். பரோடா அரண்மனையில் ஒவியங்கள் காட்சிக்காக வைக்கப்படுகிறது. பொது மக்கள் அனைவரும் பார்வையிடுகின்றனர். மக்கள் அனைவரும் உபயோகிக்கும் படி வேறு ஒருவருடன் கூட்டு சேர்ந்து அச்சகம் அமைத்து அதை பிரின்ட் செய்து விற்பனை செய்கிறார். மக்கள் கடவுள் படங்களை பார்த்து பக்தி பரவசமடைகின்றனர். கோயிலுக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படாத சமூகத்தினர் இந்த படங்களை வைத்து வழி படுகின்றனர்.. அதே பெண்ணை வைத்து வேறு படங்களையும் வரைகிறார். ஆடைகள் குறைவாகவும் ஆடை நெகிழ்ந்த நிலையில் உள்ளது போலவும் வரைகிறார். அந்த பெண்ணுடன் உறவு கொள்கிறார். அச்சகம் எரிந்து விடுகிறது. பின்பு ஓவியங்களை அடகு வைத்து கடன் வாங்கி அச்சகம் நடத்துகிறார்..கடன் கொடுத்தவர்  ஆடை இல்லாத படங்களை அச்சடித்து விற்பதால் பிரச்சனை ஏற்ப்படுகிறது

இது மத வாதிக்கு பிடிக்கவில்லை. ஒரு வேசியை வைத்து கடவுள் படங்கள் வரைந்ததும் அவளை வைத்தே வேறு படங்களை வரைந்தது குறித்தும் ஆட்சேபனை தெரிவித்து வழக்கு தொடர்கிறார். கடவுள்களை அவமானப்படுத்தியதால் அவர் ஓவியம் வரைவதை நிறுத்த வேண்டும் என்றும் அவரை தண்டிக்க வேண்டுமென்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார்.

வழக்கு இவருக்கு சாதகமாக அமைகிறது. அச்சகத்தை ஒரு ஜெர்மனியருக்கு விற்று விட்டு, தனது கடன் தொகையை தீர்த்து விட்டு அந்த ஓவியங்களை மீதி உள்ள பணத்தை தன்னிடம் ஓவியம் கற்றுக்கொள்ள வந்திருக்கும் பால்கே என்னும் இளைஞருக்கு கொடுத்து விடும் படி கூறுகிறார். அவர் தான் பின்பு இந்தியாவில் முதன் முறையாக திரைப்படம் தயாரித்த தாதா பால்கே ஷாகிப் என்று அறியப்படுகிறார்.

நிகழ் காலத்தில் ஓவியங்களை ஏலம் விடும் அரங்கில் , இந்த ஓவியங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்பினர் உள்ளே புகுந்து ஓவியங்களை அழிக்கும் காட்சிகளுடன் படம் நிறைவு பெறுகிறது.
ஒவியர் ராஜா ரவி வர்மாவாக நடிகர் திரு. ரந்தீப் வூடா (RANDEEP HOODA)வும், சுகந்தாவாக மாடலாக நந்தனா சென் (NANDANA SEN) ம் நடித்துள்ளனர்.

நடிகருக்கு முரட்டு தன்மையான ஆண்மை முகம் உள்ளதால் காதல் காட்சிகளில் நளினமில்லை.

நடிகை ஒரு காட்சியில் ஒரு முலையை கான்பித்து மாடலாக நிற்க்கிறார். அழகான முலை. ஒரு காட்சியில் நடிகையின் வெற்றுடம்பில் வர்ணங்களை தடவி, ஒவியர் மீதும் வர்ணங்களை தடவி, நிர்வாணம் தெரியாத அளவில் உடல் உறவு காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

இது ஒரு சுய சரிதை என்பதால் கதையில் விறுவிறுப்பு குறைவு. அடுத்து என்ன நடக்கும் என்பது போன்ற பரபரப்பு இல்லை. பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது.

இதில் வரும் காட்சிகளுக்கு ஆட்சேபனை இருந்ததால் காட்சிகள் வெட்டப்பட்டு மூன்று வருடங்கள் பிறகு தாமதமாக வெளி வந்துள்ளது.

பல ஓவியங்கள் காண்பிக்கப்படுகிறது. அது அனைத்தும் அவர் வரைந்த நிஜ ஓவியங்களா அல்லது படத்திற்க்காக இப்போது வரைந்ததா என தெரியவில்லை.
இன்றைக்கு நாம் சரஸ்வதி தேவி என்று வைத்து வணங்கும் படம் இவர் வரைந்த படம் தான். 

கோயில்களுக்கு உள்ளே கடவுள் சிலைகளை மட்டுமே வணங்கி வந்த காலத்தில் , கடவுள் படங்கள் அனைவரது கைகளிலும் கிடைக்க செய்தது அந்த காலத்துக்கு ஆட்சேபனைக்கு உரியதாக இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய நிலைக்கு அது ஒத்து வராது.

கடவுள் உருவம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டவைகளை, வேறு மாதிரியாக சித்தரிப்பது ஆடை இல்லாமல் சித்தரிப்பது அல்லது உறவு கொள்வது போல சித்தரிப்பது இன்றைக்கு அனைத்து மதத்திரனாலும் எதிர்க்கப்படுகிறது.

ஓவியர்களின் தரப்பிலிருந்து கூறப்படும் வாதம் கலைக்கு கட்டுப்பாடு விதிக்ககூடாது என்பது. காமக் காட்சிகளை வரைந்து காசு சம்பாதிக்க வேண்டும் புகழ் அடைய வேண்டுமென்றால் , வேறு மனித உருவங்களை  அது போன்று வரைந்து காசு சம்பாதிக்க வேண்டியது தானே. பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கடவுள் உருவங்களை இதற்கு ஏன் பயன் படுத்த வேண்டும்.

இதற்கு ஆட்சேபனை தெரிவிப்பதும் அவசியமற்றது. இவர்கள் இவ்வாறு வரைந்து விடுவதால் கடவுளுக்கு களங்கம் ஏற்ப்பட போவதில்லை. திரைப்படங்களில் கடவுளாக நடிப்பவர்கள் மனிதர்கள் தான் அவர்களுக்கு ஏன் ஆட்சேபனை எழுவதில்லை. கடவுள் வேடங்களில் நடிப்பவர்கள் வேறு மாதிரியான காட்சிகளிலும் நடிக்கிறார்கள். இதை ஏற்றுக்கொள்பவர்கள் சில ஓவியங்களை ஏற்றுக்கொள்வதில் என்ன தவறு.

இரு தரப்பு வாதங்களும் சரி தான். அரசாங்கமும் நீதி மன்றங்களும் இது குறித்து இறுதியான தீர்ப்புகள் வழங்க முடியாது. அவர்களும் மனிதர்களே. அவ்வப்போது அனைவரையும் சமாதானப்படுத்தும் முயற்சிகள் மட்டுமே செய்ய முடியும்.
 

Friday, 7 November 2014

விருது பெறும் திரைப்படங்கள்



விருது பெறும் திரைப்படங்கள்


உள்நாட்டு அளவிலும் வெளிநாட்டு அளவிலும் பல திரைப்படங்கள் பல விருதுகளை பெறுகிறது.

விருது வழங்கும் அமைப்புகள், விருதுக்காக வரும் அனைத்து படங்களையும் பார்த்து விட்டு தான் விருதுகளை வழங்குகிறார்களா ? ஒரு குறிப்பிட்ட மொழி படங்கள் பல விருதுக்கு வருகிறது. அந்த மொழி படங்களை பார்த்து தீர்மானிப்பவர்கள் அனைவருக்கும் அந்த மொழி தெரிந்திருக்கிறதா ? அந்த மொழியின் தொன்மை, வட்டார வழக்கு, பழமொழிகள், குறியீடுகள், மண் பெருமை, கலாச்சாரம், நம்பிக்கைகள் , சடங்குகள் சம்பிரதாயங்கள் அனைத்தும் உணர்ந்தவர்களாக உள்ளனரா ? இவைகளை உணராதவர்கள் விருதுக்கான திரைப்படங்களை எந்த வகையில் தேர்ந்தெடுக்கின்றனர்.

திரைப்படத்தை ரசிப்பதற்க்கு மொழி அவசியமில்லை என்ற வாதம் முன் வைக்கப்படுகிறது. திரை மொழி என்ற ஒன்றை வைத்து கணக்கிட முடியும் என்று கூறுகின்றனர். திரை மொழி என்றால் என்ன என்பதை யாரும் விளக்க முடியாது.

எந்த உணர்ச்சியாக இருந்தாலும் எல்லோரும் ஒரே விதமாக வெளிப்படுத்துவதில்லை. சந்தோசத்தை வாய்விட்டு சிரிப்பவர்கள் இருக்கிறார்கள். மௌனமாக புன்னகைப்பவர்களும் உண்டு. உணர்ச்சிகளை கான்பிக்காமல் மனதுக்குள் ரசித்து செல்பவர்களும் உண்டு. சோகத்தை கண்ணில் கான்பித்து விட்டு கடந்து செல்பவர்கள் உண்டு . ஒப்பாரி வைத்து பாடி செல்பவர்களும் உண்டு. இது இயற்கை தானே என்ற நிலையில் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் கடந்து செல்பவர்களும் உண்டு. இது எல்லா உணர்ச்சிகளுக்கும் பொருந்தும்.

சிறந்த நடிகன் நடிகையாக தேர்ந்தெடுப்பவர்கள் கதைக்கு ஏற்ப எவ்வாறு உணர்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்தே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கதையை முழுமையாக புரிந்து கொண்டால் மட்டுமே அது சிறந்த நடிப்பா என்று உணர முடியும்

ஒருவரின் இறப்பு நிகழ்வை பல வித சோக நடிப்பால் வெளிப்படுத்தலாம். விபத்தில் இறப்பு நிகழும் போது வெளிப்படுத்தும் முக பாவனையும், நோய்வாய்ப்பட்டு இறப்பு நிகழும் போது வெளிப்படுத்து முக பாவனையும், இறந்தவரின் வயது, சோகத்தை வெளிப்படுத்துபவருக்கும் அவருக்கும் உள்ள உறவுகளை பொறுத்து சோகத்தின் வெளிப்பாடு இருக்கும். ஒரு மண்ணில் மனைவி இறந்து விடுவது என்பது வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் நிகழ்வு. வேறோரு இடத்தில் அது ஒரு தற்காலிகமான சோக நிகழ்வு. அது தற்காலிகமாக அமைய காரணம் , உடனடியாக வேறு ஒரு வாழ்க்கை துனை தேடிக்கொள்ளும் மண்ணில் அத்தனை சோகத்தை வெளிப்படுத்தாது. ஆனால், சில மண்ணில் வாழ்நாள் முழுவதும் துனையின்றி குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய சூழ் நிலையில் இருப்பவனுக்கு அது வாழ்நாள் சோகம். அவன் வெளிப்படுத்தும் சோகத்தை எல்லோராலும் உணர முடியாது. இப்படிப்பட்ட நிலையில் கலாசாரத்தை உணர முடியாத நிலையில் உள்ளவர்கள் விருதை தேர்ந்தெடுக்கும் நிலையில் இருந்தால் அவர்கள் தேர்வு சரியானது என்று சொல்ல முடியுமா ? அதை அவர்களுக்கு விளக்கி சொல்லி புரிய வைக்க முடியுமா

ஒரு மொழி படத்துக்கே பல வித காரணிகள் இருக்கும் போது, சர்வதேச திரைப்பட விருதுகளில் பல நாடுகளின் பல மொழிகளின் திரைப்படத்தை பார்த்து தெர்ந்தெடுப்பவர்கள்  அனைத்து மொழி கலாச்சாரம் பண்பாடு இவைகளை அறிந்தவர்களாக இருக்கிறார்களா அல்லது அவைகளை அவ்வளவு எளிதில் புரிய வைத்து விட முடியுமா ?

சிறந்த நடிகன் நடிகையை தேர்ந்தெடுப்பதிலேயே இத்தனை சிரமங்கள் இருக்கிறது. இந்த நிலையில் சிறத்த திரைப்படத்தை எவ்வாறு தேர்வு செய்கிறார்கள்.

சிறந்த திரைப்படத்தில் நடிப்பு, இசை, ஓளிப்பதிவு, ஒலிப்பதிவு, ஓப்பனை மற்றும் எல்லா அம்சங்களும் பொருந்தியிருக்க வேண்டும். எல்லா அம்சமும் பொருந்தியுள்ளது என்ற நிலையில் ஒரு திரைப்படத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, சிறந்த நடிப்புக்காக , சிறந்த ஒளிப்பதிவுக்காக மற்றும் பல சிறந்தவைகளுக்காக எவ்வாறு தனித்தனியாக விருதுகள் வழங்க முடியும். சிறந்த திரைப்படத்தில் எல்லா விசயங்களும் சிறந்ததாக இருந்தால் தான் அது சிறந்த திரைப்படம்.

ஒரே படம் பல விருதுகளை பெறுகிறது. நடிப்பு கதை, இசை இவைகள் அனைத்தும் ஒரு படத்திற்க்கு கிடைத்த பிறகு   சிறந்த ஒளிப்பதிவு என்று எப்படி வேறு ஒன்றை தேர்ந்தெடுக்க முடியும். சிறந்த ஒளிப்பதிவு இல்லையெனில் அந்த படத்தில் காட்சியமைப்புகள் சரியாக இருக்க முடியாது. ஒளிப்பதிவு சரியாக இல்லையெனில் நடிகர்களின் உணர்ச்சிகள் சரியாக பதிவாகியிருக்காது. அப்படிப்பட்ட நிலையில் சிறந்த திரைப்படம்  என்று எப்படி கூற முடியும்.

ஒரு திரைப்படம் சிறந்த திரைப்படம் என்று தேர்வு செய்யப்படுகிறது. ஆனால் மற்ற எல்லா சிறந்த விருதுகளும் மற்ற படங்களுக்கு கொடுக்கப்படுகிறது. அப்படியென்றால் சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படத்தில் அவை சிறந்ததாக இல்லையென பொருள். இப்படி எதுவும் சிறந்ததாக இல்லாத திரைப்படம் எப்படி சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்படுகிறது.

ஐந்து திரைப்படங்களை பார்த்து சிறந்த திரைப்படமாக ஒன்றை தேர்ந்தெடுத்த பிறகு அந்த திரைப்படம் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது என விளக்கம் கொடுக்கப்படுகிறதா. மற்ற திரைப்படங்களிடமிருந்து அது எவ்வாறு வேறுப்பட்டு இருந்தது என எப்படி தெரிந்து கொள்வது. தேர்ந்தெடுத்தவர்கள் தான் விளக்கம் கூற வேண்டும்.

இவ்வாறு விளக்கம் கூறினால், அந்த விளக்கத்தை ஏற்க்காமல் மற்ற போட்டியாளர்கள் விவாதிக்க நேரிடலாம். ஏன் தேர்ந்தெடுக்கவில்லையென வழக்கு தொடர முடியாது. குறைந்த பட்சம் தங்களுடையது தேர்ந்தெருக்கப்பட்ட திரைப்படத்தை விட எந்த வகையில் சிறந்தது என விளக்கம் அளிக்க முடியும்.

அதற்கான வாய்புகள் இப்போது இல்லையென்ற காரணத்தால், தேர்வு குழுவினர் பல வித அரசியல் சமூக நிர்பந்தங்களாலும், தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையிலும், சுய நலத்திற்க்காகவும் விருதுகள் வழங்கப்படுகிறது

தேர்வு வெளிப்படை தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். எந்த திரைப்படத்தை தேர்வு செய்தாலும் விவாதங்கள் வரத்தான் செய்யும். ஆனால் குறைந்தபட்சம் தேர்வு குழுவினர் ஏன் தேர்ந்தெடுத்தோம் என விளக்கம் கூறினால் மற்ற போட்டியாளர்கள் சமாதானம் அடையக்கூடும்.
பெரும்பான்மையான மக்களால் சிறந்த திரைப்படம் என கருதப்படும் திரைபடங்கள் போட்டியின் நுழைவு தேர்வுக்குள் நுழையும் தகுதியை கூட இழக்கும் நிலை உள்ளது.

திரைப்பட ரசிகர்களும் போட்டிக்கு வந்த அனைத்து திரைப்படங்களையும் பார்த்து , விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படம் சரியானது தான என கணிக்க முடியும்.

இது சிறந்த திரைப்படம் தேர்வுக்காக மட்டுமல்ல. மற்ற எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

திரைப்பட விமர்சகர்களும் இது போன்ற நிர்பந்தம் காரணமாகவும், தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையிலேயே விமர்சனங்களை முன் வைக்கின்றனர்.

சுமார் 50 வருடங்களாக திரைப்பட துறையில் இருப்பவர் அல்லது திரைப்படங்கள் பார்த்து விமர்சனம் எழுதி வருபவர் படங்களை ஓப்பீடு செய்து விமர்சனங்கள் எழுதுவது ஏற்ப்புடையது.

25 -30 வயதுள்ளவர்கள் 50-60 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படங்கள் தான் சிறந்தது என்பதும் தற்போதைய திரைப்படங்கள் வணிக ரீதியில் எடுக்கப்பட்ட தழுவல் படங்கள் என்று விமர்சனம் எழுதுவது விசித்திரமானது.

தமிழ் நாட்டை விட்டு வெளியே போகதவர்கள் மற்ற மொழி கலாச்சாரம் இன பாகுபாடு எதுவும் தெரியாதவர்கள் மற்ற மொழி படங்களை புகழ்வதும் வெளிநாட்டு படங்கள தான் மிகவும் சிறந்தது என வர்ணிப்பதும் கேலிக்கூத்தாக உள்ளது.

இன்றைய தமிழ்பட விமர்சகர்கள் பலரும் திரைப்படத்தையே பார்க்காமல் கேள்விபட்ட விசயங்களை கொண்டு விமர்சனம் எழுதுவது அதை விட மோசமானது.

தமிழ் திரைப்படங்கள் அனைத்துமே வெளிநாட்டு திரைப்படங்களின் தழுவல் என எழுதுகின்றனர். ஒரு சில காட்சிகள் அப்படி அமையலாம் அல்லது மூலக்கதை தழுவலாக இருந்தாலும் தமிழ் சமூகத்திற்க்கு ஏற்றவாறு அதை மாற்றியமைத்து வழங்குவதும் ஒரு படைப்பே.

வெளிநாட்டு படங்களை பார்க்காத 99% மக்களுக்கு அது ஒரு புதிய கதை தான். ஓரிரு காட்சிகள் அப்படியே காப்பியடித்திருந்தாலும் அதுவும் இந்த ரசிகர்களுக்கு புதுமை தான்.

ஓரிரு காட்சிகள் ஒரே தன்மையாக இருந்தால் அந்த திரைப்படம் முழுவதும் தழுவல் என எப்படி கூற முடியும். ஒரு நடிகர் ஒரு விதமாக வண்டி ஓட்டுகிறார் என்றால் , இந்த காட்சி அந்த வெளிநாட்டு படத்தின் தழுவல் என கூறுகிறார். ஒருவர் நின்று கொண்டு சிறுநீர் கழிக்கும் காட்சி வந்தால் அது அந்த படத்தின் தழுவல் என எப்படி கூற முடியும். உலகமுழுவதும் ஆன் நின்று கொண்டு தான் சிறுநீர் கழிக்கிறான். அது பல படங்களிலும் கான்பிக்கப்படுகிறது. எனவே அது தழுவல் காட்சி என கூற முடியுமா. அப்படி பார்த்தால் விமர்சனம் எழுதும் நபரும் அப்படி தான் சிறுநீர் கழிக்கிறார். அவர் அந்த நடிகரை பார்த்து சிறுநீர் கழிக்கிறார் அவர் அப்படி செய்ய கூடாது என வாதிட்டால் அவர் நிறுத்தி விட்டு தலைகீழாக நின்று செய்வாரா அல்லது படுத்துக்கொண்டு மேல் நோக்கி சிறுநீர் கழிப்பாரா ? எனவே விமர்சனம் எழுதுபவர்களும் தங்களை அறிவு ஜீவியாக காட்டிக்கொள்ளாமல் யாதார்த்தமாக எழுத வேண்டும். வெளிநாட்டு படங்களுடன் ஒப்பிட்டி பேசுவதால் அவர்கள் உலக முழுவதும் வெளியாகும் படங்களை பார்த்து அனைத்தையும் நினைவில் வைத்துள்ள அறிவுஜீவி என்று கூற முடியாது. அது சாத்தியமுமல்ல.

தமிழ் படத்தை தழுவி வெளிநாட்டு படம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று விமர்சகர்கள் எழுதுவதில்லை. அத்தனை மொழி வெளிநாட்டு படங்களையும் இவர்கள் பார்த்ததில்லை.

தமிழ் படத்தை போன்று வெளிநாட்டு படத்துறை படங்களை தயாரிப்பதில்லை என்று ஒரு போதும் இவர்கள் விமர்சனம் எழுதுவதில்லை. தமிழ் பட நாயகன் ஆடும் நடனம் போன்று அவர்களால் ஆட முடியுமா அல்லது நகைச்சுவை காட்சிகளை தான் அவர்களால் அமைக்க முடியுமா. அவர்களை போல உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நமது நாட்டிலும் நடிக்க நடிகர்கள் உள்ளனர். ஆனால் நமது நடிகர்கள் நடிப்பது போல நடிப்பு, நடனம் வசனம் பேசுவது போல அவர்களால் முடியுமா.

அவர்கள் நாட்டுக்கு எது தேவையோ அதை செய்கிறார்கள். நமது நாட்டுக்கு எது தேவையோ அதை இங்கு செய்கிறார்கள். ஓப்பிடுது தவறில்லை ஆனால் இங்குள்ளவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று குறை கூறுவது தேவையற்றது.

Tuesday, 4 November 2014

நெடுங்குருதி புதினம் – எஸ்.ராமகிருஷ்ணன்


நெடுங்குருதி புதினம் – எஸ்.ராமகிருஷ்ணன் – எனது பார்வையில்



 

தான் பார்த்து கேட்ட கிராமங்களின் அடிப்படையில் வேம்பலை எனும் கிராமத்தை மையமாக கொண்டு இந்த புதினத்தை படைத்துள்ளார். இந்த கற்பனை கிராமம் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கதை நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.

வேம்பலை கிராமத்தின் தட்ப வெட்ப நிலைகளை விரிவாக விவரிப்பதன் மூலம் அதை சமாளித்து அதில் வாழும் களவு தொழிலில் ஈடுப்படும் மக்களின் வாழ்க்கையை சித்தப்ரிப்பது.  கதை நடந்த ஆண்டு என எதையும் குறிப்பாக சொல்லவில்லை. மன்னராட்சி, ஆங்கிலேய ஆட்சி, கிராம நிர்வாகம் போன்ற எதை பற்றியும் சொல்லவில்லை. அந்த கிராமத்தின் வாழும் சில குடும்பங்களின் அடிப்படையில் கதை புனையப்பட்டுள்ளது.

கிராமத்தின் வெயிலை விவரிக்கும் அளவுக்கு இரவையும் விவரிக்கிறார். களவுக்கு இருள் துனை புரிவதாலும், இருளில் வாழ்க்கை நடத்தும் மனிதர்களாக இருப்பதால் இருளை விவரிக்க வேண்டிய அவசியம் ஏற்ப்படுகிறது.

இந்த நாவலில் இருளை வர்ணிக்கும் போது, திரு. சு.வெங்கடேசன் அவர்கள் எழுதியுள்ள “ காவல் கோட்டம்” புதினம் நினைவுக்கு வருகிறது. அவரும் இருளை இவ்வாறு தான் விவரித்திருப்பார். ( இரண்டு நாவல்களையும் ஒன்றன் பின் ஒன்றாக படித்ததால் மிக எளிதாக இந்த ஒற்றுமையை காணமுடிகிறது  சு. வெங்கடேசன் அவர்கள் இவருக்கு நண்பர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். )

இந்த கிராமத்தை விட்டு வெளியேறும் மனிதர்களும், இந்த கிராமத்தில் குடியேறும் மனிதர்களும், தங்கள் வாழ்வில் கிராமத்தை மறக்க முடியாமல் உழன்று கொண்டிருக்கிறார்கள்.

களவு என்பதை ஒரு தொழிலாக தான் பார்த்துள்ளாரே தவிர , அதை ஒரு குற்றமாக எங்கும் வெளிப்படுத்தவில்லை. ஆனால், களவை தடுத்து நிறுத்த ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த குற்ற பரம்பரை சட்டத்தை இவர்களுக்கு எதிராக கொண்டு வந்து கொடுமைப்படுத்தியதாக உணரும் வகையில் நிகழ்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை நேரடியாக சொல்லவில்லை.

இந்த களவை தொழிலாக கொண்ட மக்கள் மதுரையை சுற்றி வாழ்ந்ததாக சுட்டி காட்டும் இவர் எந்த பகுதியென குறிப்பாக சொல்லவில்லை. ஒரு கற்பனை கிராமம் என்று முன்னுரையில் சொல்லப்படுகிறது. இவர்கள் கள ஆய்வு செய்த போது இவர்களுக்கு எந்த பகுதியென்றும் இன்றைக்கு அந்த மக்கள் எந்த ஜாதி பெயரால் அடையாளம் காணப்படுகிறார்கள் தெரிந்திருக்கும். அதை குறிப்பிடுவதால் ஜாதி பிரச்சனை ஏற்ப்படும் என்பதால் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த கற்பனை வேம்பலை கிராமத்தில் சாயம் காய்ச்சுபவர்களும் வாழ்ந்தார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் சாயம் காய்ச்சும் தொழிலும் நெசவு தொழிலும் பட்டுநூல்காரர்கள் என்று அழைக்கப்பட்ட சௌராஷ்டிரர்கள் செய்து வந்தனர் என்று பலருக்கும் தெரியும். ஆனால் அந்த இன மக்கள் தான் என்று கூட குறிப்பிடாமல் தவிர்த்திருப்பதன் மூலம், அந்த கிராமத்தை இனங்கான முடியாத படி செய்துள்ளார். 

( சு. வெங்கடேசன் அவர்களும் தனது காவல் கோட்டத்தில் வடக்கிலிருந்து வந்த நெசவாளர்கள் என்றும் பட்டுநூல்காரர்களிடம் சேலை வாங்கினார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார் )

ஜாதி பார்க்காமல் அமெரிக்க மெசினரிகள் இந்த மக்களுக்கு கல்வியறிவு வழங்கி அவர்களை மதம் மாற்ற  பயன்படுத்தியுள்ளனர் என்பதையும் குறிப்பிடுகிறார்.

புதினத்தின் கடைசி பகுதியில் “தோழர்” என்று அழைத்து பேசும் சித்தாந்தவாதியின் பகுதியை நுழைத்திருப்பது அவசியமா என்ற கேள்வியெழுகிறது. அதில் குறிப்பிடப்படும் வாசகங்களின் மூலம் ரஷ்ய புரட்சி பற்றி குறிப்பிடுவதால் கதை 1920க்கு நகர்ந்து விட்டது என அறிய முடிகிறது. கதையில் போதகர் பயிற்சி பெற்று வரும் நபர் மனம் மாற இந்த சித்தாந்தம் வழி வகுத்தது என கொள்ளலாம்

ஆங்கிலேய ஆட்சி, ரஷ்ய புரட்சியை குறிப்பால் உணர்த்தும் ஆசிரியர் இந்திய சுதந்திர போரட்ட நிகழ்ச்சியை ஒரு வார்த்தையில் கூட உணர்த்தாதது வியப்பளிக்கிறது.

மொத்த புதினத்திலும் வட்டார வழக்கு சொற்களை பயன் படுத்தாது பலமா பலவீனமா என சரியாக தீர்மானிக்க முடியவில்லை.

ஒரு கதாபாத்திரத்தின் அடிப்படையில் முழு புதினத்தையும் அமைக்காமல் ஒரு சிறு நிலப்பரப்பில் எவ்வாறு காலம் கடந்து சென்றது என்பதன் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.

மிக எளிமையான எழுத்து நடையின் மூலம் காட்சிகளை கண் முன் நிறுத்துகிறார்.

ஒவ்வொரு கதாபாத்திரத்தின் கதையும் சிறு கதைகளாக அமைகிறது.

இந்த புத்தகத்தில் திரு.பிரபஞன், திரு. தமிழ்ச் செல்வன் திரு.ந. முருகேச பாண்டியன் அவர்கள் கூறிய கருத்துக்கள் அட்டை பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்கள் குறிப்பிட்ட அளவுக்கு மாபெரும் காவியம் அல்ல. சிறந்த புதினங்களில் ஒன்றாக குறிப்பிடலாம்.