Friday 16 January 2015

ஆஷாபூர்ணா தேவி எழுதிய “ ப்ரதம் ப்ரதிஸ்ருதி - மதிப்புரை



ஆஷாபூர்ணா தேவி எழுதிய ப்ரதம் ப்ரதிஸ்ருதி

ஆஷாபூர்ணா தேவி எழுதிய ப்ரதம் ப்ரதிஸ்ருதி ” எனும் வங்க மொழி கதை தமிழில் “ முதல் சபதம் “ எனும் பெயரில் புவனா நடராஜன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
                
வங்க தேசத்தில் பழமையான சம்பிரதாயங்களில் வாழும் ஒரு பிரமாண குடும்பத்தில் பிறந்த சத்தியவதி என்ற பெண், பல தடைகளை கடந்து வாழ்க்கையில் முன்னேறுவது தான் கதை.

சத்தியவதியின் தந்தை ராம்காளி வைத்தியர் வசதியானவர். பெரிய கூட்டு குடும்பம். சகோதரர்கள், சகோதரிகள், மருமகன்கள், மருமகள்கள் மற்றும் இவர்களில் விதவையானவர்கள், இவர்களது குழந்தைகள் பேரன் பேத்திகள் என கூட்டாக வாழும் குடும்பம்.

ஒவ்வொருவரது வாழ்க்கையும் விவரிக்கப்படுகிறது. அந்த காலத்தில் எட்டு வயதிலேயே குழந்தைகளுக்கு திருமணம் செய்து, பெரியவள் ஆன பிறகு கணவன் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் பழக்கம் இருந்ததையும் , அந்த முறையினால் பலர் குழந்தை பருவத்திலேயே விதவையான விவரங்களையும் அந்த பழக்கத்தை மாற்றி கொள்ள விரும்பாத மனிதர்களையும் பற்றிய கதை.

இதில் அவரது பெண் சத்தியவதி தானாகவே எழுத படிக்க கற்று, கணவன் வீட்டுக்கு மிகவும் தாமதமாக சென்று, அங்கு தனக்கு விதிக்கப்பட்ட தடைகளை கடந்து தனது படித்த கணவனுடன் கல்கத்தா நகரம் வந்து, ஆங்கிலேய அரசு பணியாளராக அமரும் கணவருடன் வாழ்கிறார்.

கல்கத்தாவில் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் நவாபாக இருந்தாலும் தாழ்த்தப்பட்ட வகுப்பாக இருக்கும் காரணத்தால், அவர் குடியிருப்பவர்களை தனது பிரஜைகள் என்று அழைப்பதை விரும்பவில்லை. பிராமண பெண்ணுக்கு நவாபாக இருந்தாலும் காலில் விழந்து வணங்க வேண்டுமென எதிர்ப்பார்க்கிறார். 

இவருக்கு இரண்டு ஆன் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் பிறக்கிறார்கள். ஆன் பிள்ளைகள் கல்லூரி படிக்கும் வயதில் பெண் பிள்ளை சிறிய வகுப்பில் படிக்கிறார். பெண் பிள்ளைக்கு பதினெட்டு வயது வரை திருமணம் செய்ய கூடாது என்று முடிவெடுக்கிறார். அதை கணவரிடமும் தெரிவிக்கிறார். இந்த கால கட்டத்தில் குடும்ப சொத்துக்களை பகிர்ந்து கொடுத்து விட்டு தந்தை ராம்காளி காசிக்கு சென்று விடுகிறார்.

பெரிய மகனுக்கு திருமணம் நிச்சயிக்க , தந்தையும் எட்டு வயது சிறிய மகளும் கிராமத்துக்கு செல்கின்றனர். இவர் திருமணத்திற்க்கு முன்பு செல்வதாக திட்டம். ஆனால் கிராமத்துக்கு உடனடியாக புறப்பட்டு வரும்படி செய்தி வர கிளம்பி செல்கிறார். அங்கு தனது எட்டு வயது மகளுக்கு திருமணம் செய்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து யாரிடமும் பேசாமல் கல்கத்தா திரும்பி வருகிறார். தானும் காசிக்கு சென்று தனது தந்தையிடம் வாழ முடிவு செய்வதுடன் கதை முடிவடைகிறது.

பிராமண குடும்பத்திலிருக்கும் பழக்க வழக்கங்களுக்கு எதிராக போராடி செயல்படும் இந்த பெண் மற்ற சமூகத்தாரை கீழாக நினைப்பதுடன் பிராமணர்களுக்கு மரியாதை தந்து தான் வாழ வேண்டும் என்ற நிலையில் இருப்பது மிகவும் முரண்பாடு. கல்வியினால் தான் சமூகம் முன்னேற்றமடையும் என்று கருதும் இவர், கல்வி கற்று தரும் ஆசான் எடுக்கும் முடிவுகளுக்கு பல சமயங்களில் எதிராக செயல் படுவதும் பின்பு தனது தூரத்து சொந்தகார மிக இளம் வயது பெண்ணை பாதுகாப்பு கருதி, வயதில் மிகவும் மூத்தவரான ஆசிரியருக்கு மனமுடித்து கொடுப்பது நேர் முரன்.

கதாசிரியர் ஆஷாபூர்ணா தேவியும் இளம் வயதில் கல்வி கற்காதவர். பின் பகுதி வாழ்க்கையில் கல்வி கற்று 250 நூல்களுக்கு மேல் எழுதியவர். இந்த கதை மிகவும் பிரபலமடைந்துள்ளது. இது ஞானபீட விருது பெற்ற நாவல்.

பதிப்பகத்தார் பிழை திருத்தம் சரியாக செய்யவில்லை.


 

No comments:

Post a Comment