Saturday 30 August 2014

சலீம் - திரைப்படம் - சலாம் போட வைக்கும் திரைப்படம்



சலீம் – திரைப்படம். 

மாற்று சினிமாகாரர்கள் என்பவர்களது மொழியில் சொன்னால், வணிக திரைப்படம். வணிகம் இல்லாமல் விருதுகளுக்காக திரைப்படம் எடுக்க முடியாது. விருதுகளை பழைய இரும்பு கடைகளில் விற்றால் ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட பணம் கிடைக்காது.

வணிக திரைப்படம் என்று ஒதுக்கி விடாமல், ஒரு விருது பெறும் மாற்று திரைப்படத்திற்க்கு சிறந்த திரைப்படம் என்று வக்காலத்து வாங்கி அதன் அருமை பெருமைகளை எப்படி விமர்சனம் செய்வார்களோ, அதே போல இந்த திரைப்படத்திற்க்கு எனது விமர்சனத்தை வைக்கிறேன்.

இளம் மருத்துவர். கருணையுடன் நோயளிகளுக்கு சிகிச்சை அளிப்பவர். வணிக மயமாக நடத்தப்படும் தனியார் மருத்துவ மனையில் வேலை செய்தாலும் , அவசியம் கருதி இலவச மருத்துவம் செய்யவும் தயங்காதவர்.

திருமணம் நிச்சியமாகிறது. அந்த பெண் அனைத்து தகுதிகளுடனும் பையன் தேவை ஆனால் ஒரு அனாதையை போல இருக்க வேண்டும். யாரும் சொந்தக்காரர்கள் இருந்து. எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று நினைப்பவள். இந்த மருத்துவருடன் நிச்சியதார்த்தம் நடைபெறுகிறது. இந்த மருத்துவர் தனது தொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் காரணமாக அந்த பெண்ணின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றமுடியவில்லை. திருமணம் வேண்டாமென்று நிறுத்திவிடுகிறாள்.

இந்த மருத்துவரால் மருத்துவமனைக்கு எந்த லாபமும் இல்லையென்று வேலை நீக்கம் செய்யப்படுகிறார்.

இங்கிருந்து கதை திசை மாறி செல்கிறது. இப்போது இதற்கு மேல் கதை சொல்வது உசிதமல்ல. 

சர்வதேச திரைப்பட விழாக்களில் விருது பெறும், ஜப்பானி, கொரிய, ஈரானிய மற்றும் ஆங்கில திரைப்படங்களுக்கு குண்டி கழுவி விட்டு சிலாகித்து விமர்சனம் எழுதி, மற்ற திரைப்படங்களை விமர்சிப்பவர்களது பாணியில் இந்த திரைப்படத்தை பார்ப்போம்.

அழகான இளம் கதாநாயகனை தேர்வு செய்திருப்பதன மூலம் இளைய தலைமுறையும் கருணை உள்ளத்துடன் உயிர் காக்கும் மருத்துவ சேவை செய்கின்றனர் என்பதை குறியீடாக காட்டியுள்ளார். மருத்துவம் வணிகமயமாகி விட்டது என்பதையும் சமூகம் அவர்களின் கீழ் இயங்குகிறது என்பதை காட்சிகளின் மூலம் பார்வையாளனுக்கு உணர்த்துகிறார். நேர்மையாளனுக்கு இந்த சமூகம் அளிக்கும் அவமரியாதையை ஆங்காங்கே படிமங்கள் வாயிலாக உணர்த்துகிறார். நேர்மையாளன் அறச்சினம் கொள்ளும் போது, இவர்களால் எதிர் கொள்ள முடியாது என்பதையும் இது தொடரும் என்பதையும் மக்களுக்கு உணர்த்தி மருத்துவர்களை உயர்த்தி பிடித்துள்ள இயக்குனரின் சமுக அக்கறையை விளக்கும் படம்.

இந்திய சமூகத்தில் குறிப்பாக தமிழ் சமூகத்தில் கூட்டு குடும்ப வாழ்க்கை எவ்வளவு சிதைந்து போயுள்ளது என்பதை, கதாநாயகியை வைத்து பகடி செய்துள்ளார். ஒற்றை காட்சியில் ஒட்டு மொத்த இளம் பெண்களின் மனநிலையை முகத்தில் அடித்தாற் போல காட்டியிருப்பது இயக்குனரின் வெற்றி. சமூக அக்கறையுள்ள ஒரு கலைஞன் ஒருவரால் தான் இப்படிப்பட்ட காட்சிகளை அமைத்து சமூக அவலங்களை கூறமுடியும்.

தனது தேவைகள் சந்தோசங்களை மட்டுமே முன்னிறுத்தி பெண்கள் எடுக்கும் முடிவுகள், ஆண் சமூகத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை செவிட்டில் அறைந்தார் போல் காட்சிகளை அமைத்துள்ளார்.

இன்று இந்தியா முழுவதுமுள்ள பாலியல் வன்கொடுமைகள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் கதையை சில காட்சிகளின் மூலம் விளக்கியிருப்பது இயக்குனருக்கு சமூகத்தில் மீதான அக்கறையை காட்டுகிறது. அதை சமூகம் சரியான முறையில் உள்வாங்கி கொள்ளுமா என்பதை காலம் தான் நிர்னயிக்கும்.

சலீம் என்ற பெயரை கேட்ட மாத்திரத்திலேயே , அதிகார வர்கம் தீவிரவாதி என்பது, தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு படுத்த முயல்வது போன்ற காட்சியை அமைத்திருப்பதன் மூலம், அந்த மதம் சார்ந்த மக்கள் உலகம் முழுவதும் சந்திக்கும் அவல நிலையை சித்தரித்துள்ளார்

கதை முழுவதும் கதாநாயகன் இறுக்கமான முகத்துடன் வலம் வருவதன் மூலம் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சமூகத்தில் ஏற்படுத்தும் இழிவுகளை கண்டு மனம் வெதும்பி ஒன்றும் செய்ய முடியாத வாழும் வாழ்க்கையை அழகாக படமாக்கியுள்ளார்.

பாடல்களும் நடனங்களும் இந்திய திரைப்படத்துறையில் உள்ள சாபக்கேடு என்பதை, விளக்க அந்த காட்சிகளை இதில் புகுத்தியிருப்பது முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்ற யுக்தியாக தான் பார்க்க முடிகிறது.

கதையை நம்புவதை விட சதையை நம்பி தான் படம் எடுக்கப்படுகிறது என்பதை, கதாநாயகன் சட்டை மாற்றும் போது, தொப்புளுக்கு கீழ் உள்ள பாகத்தை காண்பித்து படிமம் ஆக்கியுள்ளார்.

சமூக சீர்த்திருத்தம் என்ற பெயரில் படம் எடுக்கப்படவில்லை என்பதை உணர்த்த படத்தின் பிற்பகுதியில் விறு விறுப்பான காட்சிகளை அமைத்து பார்வையாளனை தன் பக்கம் இழுத்து வைத்திருக்கும் உத்தி இந்த புதிய இயக்குனருக்கு இயற்க்கையாக அமைந்துள்ளது பாரட்டதக்கது.

இது போன்ற திரைப்படங்கள் தொடர்ந்து வருவதன் மூலம், தமிழ் திரைப்படங்களும் சர்வ தேச விருதுகள் பெறும் நாள் வெகு தூரத்தில் இல்லையென்ற நம்பிக்கையை எற்ப்படுத்துகிறது.

 சலீம் (2014) திரைப்படத்தின் டிரைலர் …

Tuesday 26 August 2014

கழிவுக்கு கால் கிலோ உணவு திட்டம்



கிராம புறங்களில் எல்லா வீடுகளிலும் கழிப்பறை கட்டிக்கொடுக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டுமென்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்

உத்திரபிரதேசத்தில், இரண்டு இளம் பெண்கள் , இயற்கை உபாதையை கழிக்க சென்ற போது, அவர்கள் கற்ப்பழிக்கப்பட்டனர். அதற்கு பிறகு வீடுகளில் கழிப்பறை இருந்தால் இது போன்ற செயல்கள் நடைப்பெறாது என்று ஒரு வாதம் வைக்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது. எனவே, கிராம புற வீடுகளில் அரசே கழிப்பறை கட்டி தரும் திட்டம் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது.

கற்பழிப்புகள் இந்த நேரங்களில் தான் நடைப்பெறுகிறது என்பது சுத்த பைத்தியகாரதனம்.

பொது இடங்களில் எவ்வளவு தான் மறைவாக செய்தாலும் அது வெட்கப்பட வேண்டிய விசயம். ரயில்வே தண்டவாளத்தின் ஓரத்தில் மக்கள் மலம் கழிப்பதை எல்லோரும் பார்த்திருக்கிறோம். இவ்வாறு, பொது இடத்தில் மலம் கழிக்க வேண்டியிருப்பதால், காலை நேரங்களிலும் அல்லது இருட்டிய பிறகும் செய்ய வேண்டியுள்ளது. ஏதேனும் காரணங்களால் மற்ற நேரங்களில் மலம் கழிக்க வேண்டுமென்றால் மிகவும் சிரமம். குறிப்பாக பெண்களுக்கு மிகவும் சிரமம்.

எனவே, இந்த கழிப்பறை கட்டி கொடுக்கும் திட்டம் மிகவும் சிறந்தது.

இதில் உள்ள பிரச்சனைகளையும் பார்க்க வேண்டும்

கிராம புறங்களிலும், சிறு நகரங்களிலும் பாதாள சாக்கடை திட்டம் கிடையாது. எனவே, வீடுகளில் கழிவறையில் இருக்கும் கழிவுகளை எப்படி சுத்தம் செய்வது. வீட்டில் உள்ள நபர்கள் அவைகளை சுத்தம் செய்ய மாட்டார்கள். யாரும் மலம் கழித்த பிறகு அதை திரும்பி கூட பார்க்க விரும்புவதில்லை. அப்படியிருக்கும் போது, அந்த கழிவுகளை எப்படி அப்புறப்படுத்துவது. யார் அப்புறப்படுத்துவது.

மனித கழிவுகளை அகற்றும் குறிப்பிட்ட ஜாதியினரை அழைத்து அதை சுத்தம் செய்ய சொல்வார்கள். கழிவுகளை எங்கே கொண்டு சேர்ப்பது.

மனித கழிவுகளை மனிதனே அள்ளும் கொடுமையை ஒழிக்க வேண்டும் என்ற கோசமும் அவ்வப்போது எழுப்பப்படுகிறது.

தோட்டிகள்::

தோட்டிகள் என்று சென்னையில் குறிப்பிட்ட வகுப்பினர் அழைக்கப்பட்டனர். நான் சென்னையில் வாழ்ந்ததால் , சென்னை என்று குறிப்பிடுகிறேன். தமிழ்நாடு முழுவதும் அவர்களுக்கு தோட்டிகள் என்று தான் பெயர் என்று நினைக்கிறேன். மற்ற மாநிலங்களில் வேறு பெயர்கள்.

வீடுகளில் கக்கூஸ் என்கிற கழிவறை கட்டப்படுவதற்க்கு முன்பு எல்லோரும் வெளியில் தான் , காலை நேரங்களிலும் இரவுகளிலும் மலம் கழித்து கொண்டிருந்தோம். இன்றைக்கும் கிராமபுறங்களில் இந்த பழக்கம் தான் இருக்கிறது.

வீடுகளில் பெரிய அறை போன்று கட்டப்பட்டு பொதுவாக மேற்கூரை இல்லாமல் , இரண்டு சுவர் புறமும் உட்காருவகற்க்கு ஏதுவாக சற்று மேலே தூக்கி கட்டப்பட்டு, அதன் மீது உட்கார்ந்து அதன் பின் பகுதியில் மலம் கழிக்கப்படும். பின்பு, சிறிய அறை போல கட்டப்பட்டு, தற்போது Wester Toilet என்று கூறப்படுவதை போல ஒரு அமைப்பை கட்டி, அதற்கு கீழே ஒரு பக்கெட் வைக்கப்பட்டிருக்கும் . அதில் உட்கார்ந்து குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் மலம் கழித்தனர்.

நாமே நமது மலத்தை திரும்பி பார்க்காமல், அவசர அவசரமாக கழுவிக்கொண்டு வெளியே வருவோம்.

இந்த அறைகளிலிருந்து மலத்தை அள்ளி செல்ல காலையில் சிலர் வருவார்கள். அவர்களை தோட்டிகள் என்பார்கள்.

அதற்கு அடுத்தப்படியாக தற்போதைய நவின கழிப்பறைகள் வந்தது. அங்கு கழுவிக்கொண்டு, தண்ணிர் ஊற்றினால், அவை தொட்டிகளில் வந்து சேரும். அவைகளுக்கு செப்டிக் டாங்க் என்று பெயர்.

ஆரம்பத்தில் தண்ணிரை மண் உறிஞ்சி விடும். திடக்கழிவுகள் மட்டும் தொட்டியில் தேங்கும். தொட்டி நிறைந்தவுடன் , இந்த தோட்டிகள் என்பவர்கள் பீப்பாய் ஒன்றை மாட்டு வண்டியில் கட்டிக்கொண்டு வருவார்கள். செப்டிக் டாங்கில் இருப்பதை அந்த பீப்பாயில் நிரப்பிக்கொண்டு போய் வேறு இடத்தில் கொட்டுவார்கள். அடுத்து, இப்போது தண்ணீர் லாரி போல் இருக்கும் வண்டி வந்து அதிலிருக்கும் குழாயை செப்டிக் டாங்கில் இறக்கி, மோட்டரை இயக்கினால், தொட்டியில் இருக்கும் கழிவுகள் லாரிக்கு சென்று விடும்.

இவ்வாறு மனித கழிவு அள்ளுபவர்களை தோட்டிகள் என்று அழைத்தார்கள். சமூகம்அவர்களை தீன்டதகாதவர்களாக கீழ் சாதியினர் என்ற நிலையில் வைத்திருக்கிறது. இன்றைக்கும் அவர்கள் கீழ் சாதியினராகவே வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது நாம் பட்டு விட்டால் தீட்டு என்று கூறுவதும், உடனடியாக குளித்து தீட்டு கழிப்பதுமாக இருந்தனர். இருக்கின்றனர். ஆனால், நகர்புறங்களில் நம்மோடு அந்த மக்களும் இனைந்து வசிப்பதால், அவர்களுடன் சேர்ந்து பழகுகிறோம். அவர்களை அடையாளம் காணமுடியாததால், குளித்து தீட்டு கழிப்பது என்ற செய்கை இல்லை. ஆனால், அவர்கள் தான் என்று தெரிந்தால், குளித்து தீட்டு கழிக்கும் பழக்கம்  இன்றும் நகர்புறங்களிலும் கிராம பகுதிகளிலும் இருக்கிறது.

இன்றும் நம் வீடுகளில் சாக்கடை அடைத்துக்கொண்டால் அவர்கள் வந்து தான் சுத்தம் செய்கின்றனர். ஏதேனும் பிரானிகள் வீட்டிலோ அல்லது தெருவிலோ இறந்து விட்டாலும் அவர்களை அழைத்து தான் அகற்ற சொல்லுகிறோம்.

நமது மலத்தை நாம் பார்க்க கூட விரும்புவதில்லை. ஆனால், நமது மலத்தை மற்றவர் வந்து அள்ளி சுத்தப்படுத்த வேண்டும் என்ற பழக்கத்தை இன்றளவும் விரும்புகிறோம். தெருவில் ஓடும் பாதாள சாக்காடையை இன்றளவும் அவர்கள் தான் சுத்தப்படுத்துகிறார்கள். அதில் அந்த பகுதியில் உள்ள அனைத்து வீட்டு மனிதர்களின் மனித கழிவுகளும் உள்ளன.

மனித கழிவுகளை மனிதரே அள்ளுவது ஜாதி கொடுமையின் உச்ச கட்டம் என்று தலைவர்கள் மேடையில் முழங்கினாலும் அவர்கள் வீட்டு கழிவை அகற்ற அந்த ஜாதியினரை தான் அழைக்கிறார்கள். இது குறித்து பொது மக்களும் ( நான் உட்பட ) பலவேறாக பேசினாலும் அந்த ஜாதியினரை அழைத்து தான் சுத்தப்படுத்துகிறோம்.

எல்லோரும் இதை ஜாதி கொடுமை என்று பேசினாலும், அவர்களின் உடல் நலத்திற்க்கு கேடு விளைவிக்க கூடியது என்று எவரும் பேசுவதில்லை. அதற்காக அவர்களுக்கு சிறப்பான மருத்துவ வசதிகள் எதுவும் செய்து தருவதில்லை.

அவர்களுக்கு அதற்கான ஊதியமும் சரியாக தருவதில்லை. ஏதோ நாம் பார்த்து கொடுப்பதை அவர்கள் வாங்கி கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்கள் அவர்களது கூலியை நிர்னயித்து கேட்டால், அதற்கு பேரம் பேசுகிறோம்

ஒரு முறை கூட, நீ கேட்கும் கூலி அதிகம் நானே என் வீட்டை சுத்தம் செய்து கொள்கிறேன் என்று கூற முடிவதில்லை. அப்படியிருக்கும் போது, அவர்களுக்கு நியாயமான கூலியை வழங்க வேண்டும்.

மனித கழிவுகளை சுத்தம் செய்பவர்களை கீழ் சாதியினர் என்று ஒதுக்கி வைப்பது என்பது எவ்வளவு முட்டாள் தனம்.

எல்லா மனிதர்களும் மனித கழிவுகளை சுத்தம் செய்கின்றனர். தனது குழந்தையின் கழிவுகளை சுத்தம் செய்கின்றனர். மலம் கழித்த இடத்திலிருந்து அவைகளை அகற்றி வெளியே போடுகின்றனர்

சில சமயம் வீட்டில் பெரியவர்கள் படுத்த படுக்கையாக ஆகி விடும் போது, அல்லது சிறு வயதினரே உடல் நலம் சரியில்லாத போது, மலம் கழிக்கும் இடத்திற்க்கு செல்ல முடியாமல் படுக்கையிலேயே மலம் கழித்தால் அதை சுத்தம் செய்கிறோம். அந்த சமயங்களில் அந்த ஜாதியினரை வீட்டிற்க்குள் அழைத்து சுத்தம் செய்ய சொல்வதில்லை.

எனவே, பிறரது மலத்தை சுத்தம் செய்வதன் மூலம் நாமும் கீழ் சாதியினரே. அவர்கள் தீண்டதகாதவர்கள் என்றால் நாமும் ஒருவருக்கொருவர் தீண்டதகாதவர்களே.


கிராமபுறங்களில் வீடுகளில் கழிவறை கட்டிக்கொடுக்கும் தீட்டத்தின் கீழ் எட்டு கோடி வீடுகளில் கழிவறை கட்ட வேண்டியுள்ளது.

முந்தைய காங்கிரஸ் மத்திய அரசு ஒவ்வொரு கழிவறைக்கும் 10000 ரூபாய் என நிர்னயித்துள்ளது. இப்போதைய அரசு அது மிகவும் குறைந்த தொகை என்று உயர்த்த முடிவெடுத்துள்ளது. அநேகமா 15000 ரூபாயாக மாறும்.

மொத்தம் எட்டு கோடி கழிபறை என்றால் 80000000 X 15000 = 1200000000000 அதாவது ஒரு லட்சத்து இருபதாயிரம் கோடி திட்டம்

இவ்வளவு பெரிய திட்டத்தில் அரசியல்வாதிகள் அதிகாரிகள் பணம் சம்பாதிக்காமல் விடமாட்டார்கள். இதில் தொழிலதிபர்கள் களத்தில் இறங்குவார்கள்.   கழிவறைகள் தாயரித்து விற்கும் நிறுவனங்கள் இருக்கிறது. அவர்களும் களத்தில் இறங்குவார்கள். நேரடி அந்நிய முதலீடு இதிலும் அனுமதிக்கப்படலாம்.

சில வருடங்களுக்கு பிறகு TOILET SCAM  என்று CAG  அறிக்கை கொடுக்கும். பிறகு TIMES NEWS  தொலைக்காட்சியில் அர்னவ் கோஸ்சுவாமி TOILETGATE என்று நிகழ்ச்சி நடத்துவார். தமிழ் தொலைக்காட்சிகள் கழிவறை ஊழல் என்று விவாதம் செய்வார்கள். கழிவறை நாற்றத்தை விட இந்த நாற்றம் அதிகமாக இருக்கும்

ஒரு வீட்டில் நாலு பேர் என்றால், மொத்தம் 32 கோடி மக்கள். ஒரு மனிதன் ஒரு நாளைக்கு சராசரி அரை கிலோ திடக்கழிவு வெளியேற்றுகிறான். மொத்த கழிவு 16 கோடி கிலோ திடக்கழிவு.  ஒரு மனிதனால் சராசரி மூன்று லிட்டர் திரவ கழிவு வெளியேற்றப்படுகிறது. மொத்த திரவ கழிவு 96 கோடி லிட்டர் கழிவு. ஏற்கனவே கழிவறை உள்ள வீடுகளில் உள்ள மனிதர்களின் கழிவுகளையும் சேர்தால் இந்த கனக்கு மிகப்பெரியது. 100 கோடி மக்கள் கணக்குப்படி பார்த்தால் ……………………………………

இவை சேகரிக்கப்பட்டு திறந்த வெளி கால்வாய்கள் மூலம் நதிகளில் கலக்கப்பட்டு கடலை அடையும்.

இப்போது இந்த கழிவுகள் நிலத்தில் கலக்கிறது. இது நிலத்தில் இயற்கையான முறையில் உரமாக மாறுகிறது.

மனித கழிவுகளிலிருந்து எரிவாயுவும் (மீத்தேன் வாயு) உரமும் தயாரிக்க முடியும். இவ்வளவு கழிவுகளும் அங்காங்கே சேகரிக்கப்பட்டு எரிவாயு தயாரிக்கப்பட்டு சிலின்டர்களில் அடைக்கப்பட்டு உபயோகிக்கலாம். அதற்கு பிறகு திட கழிவுகளை காய வைத்து உரம் தயாரிக்கலாம்

இதுவும் மிகப்பெரிய தொழிலாக மாறும். எரிவாயுவாக மாற்ற கூடிய கொதிகலன்கள் மற்றும் உரமாக மாற்ற தேவைப்படும் தொட்டிகள் இவையும் பெரிய தொழிழ்கள். இதிலும் அரசும் தொழிலதிபர்களும் களத்தில் இறங்கி காசு பார்ப்பார்கள்.

இப்படி பொதுமக்களின் கழிவிலிருந்து அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் காசு பார்த்தாலும், மக்களுக்கு எதுவும் கொடுக்க மாட்டார்கள். மக்களும் தங்களது கழிவுகளுக்கு காசு கொடுக்க வேண்டும் என்பார்கள் அல்லது அரிசி கோதுமையை ஏழைகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும். நிறைய சாப்பிட்டு நிறைய கழிவுகளை வெளியேற்றினால் நீங்கள் நிறைய எரிவாயுவும் உரமும் தயாரித்து பயன் அடையலாம் என்று போராடலாம்.

கழிவுக்கு கால் கிலோ அரிசி திட்டம் என்று அடுத்து வரும் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் என்று பிரதமர் அறிவிக்க கூடும்

தஞ்சை மாவட்டத்தில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் தொடங்க உள்ளது. ஒரு வேளை சோழர்கள் அவர்களது கழிவுகளை சேகரித்து வைத்தார்களோ என்னவோ. அந்த கழிவுகளிலிருந்து உருவாகியிருக்கும் மீத்தேன் வாயு தான் இப்போது வெளியே எடுக்கப்படுகிறதோ. எப்படியோ ஏதேனும் ஒரு ஒலைச்சுவடி / கல்வெட்டு ஆதாரம் ஏற்ப்படுத்தி , அது சோழர்களின் அதாவது தமிழர்களின் கழிவுகளிலிருந்து வெளியேறும் மீத்தேன் வாயு என்று கூறி , மொத்த வாயுவையும் தமிழ் நாட்டு மக்களின் உபயோகத்திற்க்கு கொடுக்க வேண்டும் என்று போராடலாம்.

ஒரு வேளை இவ்வாறு கழிவுகள் சேகரிக்கப்பட்டு  எரிவாயுவும் உரமும் தயாரிக்கவில்லையென்றால் அவை நதிகளில் கலக்கப்படும்.

நதிகளில் இனைக்கும் திட்டமும் அரசிடம் உள்ளது. வட மாநில கழிவுகள் அதாவது தமிழ் உணர்வாளர்களின் பேச்சுப்படி ஆரியர்களின் கழிவுகள் கங்கையிலும் அதன் உபநதிகளிலும் கலக்கும்.

கங்கையும் காவேரியும் இனைக்கப்பட்டால், கங்கையில் கலந்த ஆரியர்களின் கழிவுகள் காவேரியில் கலக்கும். ஆரியர்களின் கழிவுகள் தமிழன் ஆறுகளில் வருகிறது. தமிழன் ஏமாளி என்பதற்க்காக தான் இப்படி திட்டமிட்டு செய்கிறார்கள் என்று போராடலாம்.. கங்கை தண்ணிர் காவேரி நதியில் கலக்க கூடாது என்று போராட்ட குழு அமைத்து போராடி காசு பார்க்கலாம். இதை காரணம் காட்டியும் தனி தமிழ்நாடு வேண்டும் என்று கேட்கலாம்.

உணவு சாப்பிடுதல்மலம் கழித்தல்எரிவாயு உரம் தயாரித்தல்உரம் விவசாயத்திற்க்கு பயன்படுத்துதல்உற்பத்தி அதிகரித்தல்நிறைய சாப்பிடுதல்மலம் கழித்தல்  -  இப்படி ஒரு சுழற்ச்சி திட்டம் உருவாகும்













திட்டமா - தண்டனையா ?



பிரதம மந்திரி மக்கள்-இலவச திட்டம் – PRADHAN MANTRI JAN - DHAN YOJANA

கடந்த 15.08.2014 அன்று பிரதமர் திரு. நரேந்திர மோதி அவர்கள்  டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின ( விடுதலை திருநாள் ? ) விழாவில் உரையாற்றும் போது, “ பிரதான் மந்திரி ஜன்-தான் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்பது.
அரசு தற்சமயம் ஏழைகளுக்கு வழங்கும் உதவிகளை நேரடியாக எழை மக்களின் வங்கி கணக்கில் செலுத்துவதன் மூலம் அரசு அதிகாரிகளும் இடைத்தரகர்களும் செய்யும் முறைகேடுகளை தடுக்க முடியும் என்பதே நோக்கம் இந்த திட்டத்தின் மூலம் சமையல் எரி வாயுவுக்கு கொடுக்கும் மானியம், ஊரக வேலை வாய்ப்பு திட்டம் மூலம் கொடுக்கப்படும் பணத்தை, அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்துவதன் மூலம் முறைகேடுகள் பெருமளவு குறைக்கப்படும்.
ஏழைகளுக்கு வங்கி கணக்கு இல்லாத காரணத்தால், இந்த திட்டங்களை நிறைவேற்றுவதில் கால தாமதம் ஏற்ப்படுவதால், மேற் கூரிய வங்கி கணக்குகளை ஆரம்பிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
அன்று அறிவிப்பு செய்ததுடன் நிற்காமல் அனைத்து வங்கி மேலதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் இந்த திட்டத்தை அமுல் படுத்த வற்புறுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது.

இந்த ஏழை எளிய மக்களுக்கு தொடங்கப்படும் வங்கி கணக்குகளின் என்ன விசேசம் உள்ளது.
எல்லா வங்கி கணக்குகளுக்கும் உள்ள வசதிகளுடன், ரூ.ஒரு லட்சத்துக்கான விபத்து காப்பீடு கிடைக்கும். ( காப்பீட்டுக்கான சந்தாபிரிமியம் இவர்களிடமிருந்து வசூலிக்கப்படுமா அல்லது இலவச காப்பீடா என குறிப்பிடப்படவில்லை ) இது மருத்துவ காப்பீடு அல்ல
இந்த வங்கி கணக்குகளில் குறைந்த பட்ச தொகை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. கணக்கு தொடங்கும் போது, எந்த தொகையும் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

இந்த திட்டம் அறிவிக்கப்பட்டவுடன், இதை வெற்றி பெற செய்வதற்க்காக எல்லா வங்கிகளும் இதை அமுல் படுத்த தொடங்கியுள்ளன. எல்லா வங்கி தலைமையகமும், ஒவ்வொரு கிளையும் எத்தனை கணக்குகளை தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
பொதுவாக கணக்கு தொடங்க பல வித அடையாளங்களை கேட்ப்பார்கள். புகைபடத்துடன் கூடிய அடையாள அட்டை(PHOTO IDENTITY), முகவரி சரிபார்க்க கூடிய ஏதேனும் ஒரு அடையாளம் (ADDRESS PROOF ) மற்றும் வரிமான வரி நிரந்தர கணக்கு எண் (PAN ). மேலும், அவர் வசிக்கும் பகுதியில் அல்லது அலுவலகம் உள்ள பகுதியில் தான் தொடங்கப்படும். கோடம்பாக்கத்தில் வசிப்பவர் கொருக்குப்பேட்டையில் வங்கி கணக்கு தொடங்க முடியாது. ( சில விதி விலக்குகள் உண்டு )
ஆனால், இப்போது தொடங்கப்படும் எழை மக்களின் வங்கி கணக்குகளுக்கு  ஏதேனும் ஒன்று இருந்தால் போதுமானது என்பதுடன் விதி முறைகள் சற்று தளர்த்தப்பட்டுள்ளது. மேலும் எங்கு வேன்டுமென்றாலும் வங்கி கணக்கு தொடங்கலாம்.
இவை ஏதும் இல்லாதவர்கள் கணக்கு தொடங்க முடியாது.
ஒவ்வொரு கிளையும் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய மிகவும் சிரமப்படுகின்றன. மக்கள் வங்கிகளை தேடி வரவில்லையென்றால், ஏழை மக்கள் வாழும் இடங்களில் முகாம் இட்டு அவர்களை வங்கி கணக்கு தொடங்க வைக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல வங்கி கிளைகளில் இதன் காரணமாக , வழக்கமான வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளன,

இலக்கை அடைய , அடையாளங்களை சரி பார்க்காமல் கணக்குகள் தொடங்கப்படுகின்றன.
ஊதாரனமாக, பல வெளி மாநில தொழிலாளர்கள் சென்னையில் வசிக்கின்றனர். அவர்கள் எவரிடமும் உள்ளுர் அடையாள அட்டை கிடையாது. அவர்களது சொந்த ஊர் அடையாள அட்டை ஏதேனும் இருக்க கூடும். அந்த அடையாள அட்டை அடிப்படையில் கூட வங்கி கணக்கு தொடங்க முடியும்.
இவ்வாறு இடம் பெயர்ந்து கொண்டேயிருக்கும் மக்களுக்கு அரசின் திட்டங்கள் அவர்கள் வாழும் பகுதியில் கிடைப்பதில்லை.
எழுத படிக்க தெரியாத ஏழை மக்களுக்கு தங்களது கணக்கை எப்படி இயக்குவது என்று தெரிவதில்லை. பணம் போடவோ அல்லது எடுக்கவோ அவர்களுக்கு பிறரது உதவி தேவைப்படுகிறது. எல்லா வங்கி கிளைகளிலும் எப்போது கூட்டம் உள்ளது. வங்கியில் ஒரு வேலை செய்ய வேண்டுமென்றால் குறைந்தது ஒரு மணி நேரமாகிறது. அன்று ஏழை தொழிலாளி வேலைக்கு போக முடியாது. கூலி கிடைக்காது.
இவர்களுக்கு கணக்கு தொடங்கப்பட்டால், அரசின் பணம் இதில் போடப்படாது. இவர்களும் தங்களது சொந்த பணத்தை சேமிப்பு என்று நினைத்து அதில் வைத்திருக்கப் போவதில்லை. கணக்கு தொடங்கப்படும் ஆனால் அதில் ஒன்றும் செயல் பாடு இருக்காது.

வங்கி ஊழியர்களோ அல்லது மற்றவர்களோ நிறைய வழிகளில் இதை முறை கேடாக பயன் படுத்த முடியும். உங்கள் வாடிக்கையாளரை அறியுங்கள் – KNOW YOUR CUSTOMER KYC)  பின்பற்றப்படுவதில்லை.

இதில் முறைகேடுகள் நடந்தால், கணக்கு தொடங்கப்பட்ட கிளையிலிருந்து, தொடங்கிய அலுவலகரிடமிருந்து விசாரணை தொடங்கும். நல்ல ஊழியர்கள் மீது கூட சந்தேகம் வரும். அவர்கள் மீது ஒழங்கு நடவடிக்கை எடுக்க வாய்ப்பு ஏற்ப்படும். சிரமத்திற்க்கு உள்ளாவர்கள்
ஊழியர்கள் இந்த மாதிரி பாதிப்பு எற்ப்படும் என்ற காரணத்திற்க்காக கணக்குகளை தொடங்காமலும் இருக்க முடியாது.

சாதாரண நாட்களில் எழைகள் வங்கி கணக்கு தொடங்க எந்த வங்கிக்கு சென்றாலும் , ஏதேனும் ஒரு காரணத்தை சொல்லி தட்டிக்கழிக்க தான் பார்க்கிறார்கள். எனவே, இது போன்ற திட்டங்களும் அவசியமாகிறது.

10 லட்சம் ஏழைகள் ஒவ்வொருவரும் ஒரு லட்சம் ரூபாய் வீதம் ஏமாற்றினாலும், மொத்தம் ஏமாற்றப்படும் தொகை பத்தாயிரம் கோடி. இந்த பணத்தை ஒரு தொழிலதிபர் சர்வ சாதரணமாக ஏமாற்றி விடுகிறார். எனவே ஏழைகள் ஏமாற்றி விடுவார்கள், வாங்கிய பணத்தை திரும்ப செலுத்த மாட்டார்கள் என்ற காரணம் காட்டி வங்கி கணக்கு தொடங்காமலிருப்பதோ அல்லது கடன் வழங்காமல் இருப்பதோ சரியல்ல.

பணக்கார தொழிலதிபருக்கு இருக்கும் மனசாட்சியை விட ஏழைக்கு அதிகமாக இருக்கிறது. ஏழை பணம் திருப்பி தரவில்லையென்றால், அவனது சம்பாதிக்கும் திறன் இல்லாத காரணம் தான் அதிகமேயொழிய திட்டமிட்டு ஏமாற்ற வேண்டுமென்பதல்ல.

எந்த ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் அதில் சாதக பாதகங்கள் உள்ளது. அது போலவே இந்த வங்கி கணக்கு தொடங்குவதிலும் உள்ளது. வங்கி ஊழியர்கள் தங்களை பாதுகாத்துக்கொண்டு, ஏழைகள் வங்கி கணக்கு தொடங்க உதவி செய்ய வேண்டும்