Tuesday 12 August 2014

விருதுகள் விலை – மதிப்பற்றவை



விருதுகள்  விலைமதிப்பற்றவை

பாரத் ரத்னா விருது யாருக்கு வழங்கப்பட வேண்டும் யாருக்கு வழங்க கூடாது என்ற விவாதத்தை தொலைக்காட்சியில் கான நேரிட்டது.

விருதுகளை அரசும், அரசு சார்ந்த அமைப்புகளும், தனியார் அமைப்புகளும் சில சமயங்களில் தனிநபர் தனக்கு வேண்டியவருக்கு விருதுகளையும் பட்டங்களையும் கொடுக்கிறது.

ஆரம்பங்களில் ஒரு நபருக்கு கொடுக்கப்பட்ட விருது, பின்பு நிறைய பேருக்கு கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டது. விருதுக்கு தகுதியானவர்கள் நிறைய பேர் இருப்பதாலும், ஏன் கொடுக்கப்படவில்லை ஏன் கொடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்க்கவும் ஒவ்வொரு ஆண்டும் நிறைய பேருக்கு வழங்கப்படுகிறது.

மாநில அரசு கொடுக்கும் கலைமாமனி விருதாக இருந்தாலும் சரி மத்திய அரசு கொடுக்கும் பத்ம பூசன் விருதாக இருந்தாலும் சரி , சிலருக்கு தானாக கிடைக்கிறது சிலர் கேட்டு பெறுகிறார்கள்.

இந்த விருதுகளினால் என்ன பயன்

தங்கள் பெயருக்கு முன்னாள் பின்னாள் மேலே கீழே சுற்றி வர எங்கு வேண்டுமானலும் எழுதிக்கொள்ளலாம். தங்களது அறிமுக அட்டையில் எழுதிக்கொள்ளலாம். அவர்கள் பெயரை பிரசுரிப்பவர்களிடம் தங்களது பட்டப்பெயரையும் விருதின் பெயரையும் போட வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தலாம்.

விருதும் பட்டமும் கிடைக்கும் போது அதனுடன் சேர்ந்து கிடைக்கும் பணமும் அல்லது பரிசுப்பொருளும் மன நிறைவை தரலாம்.

உண்மையில் இதனால் வேறு பயன் ஏதும் உண்டா ? இந்த பட்டத்தை வாங்கிய காரணத்தால் அவருக்கு அவர் சார்ந்த துறையில் அதிக வேலை வாய்ப்பு கிடைக்கிறதா. ஒரு பாடகருக்கு, இசை கருவி இசைப்பவருக்கு , நடிகருக்கு கிடைக்கும் விருதை பொறுத்து அவருக்கு நிறைய வாய்ப்பு கிடைக்கிறதா அல்லது அவருடைய ஊதியம் உயர்கிறதா அல்லது பதவி உயர்வு கிடைக்கிறதா ? பொது மக்கள் அதிகப்படியான மரியாதை தருகிறார்களா ?



விருதுகளும் பட்டங்களும் ஒரு அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அவை தகுதியான நபர்களுக்கு போய் சேராத போது, அந்த விருதும் பட்டங்களும் அதற்க்குரிய கௌரவத்தை இழந்து விடுகிறது.

எனக்கு மிகவும் பரிச்சயமான ஒருவர் , அவர் சார்ந்த அரசு துறையில் உச்ச கட்ட பதவி வகித்தவர். அந்த துறையில் அதற்கு மேல் பதவியில்லை. அவர் ஓய்வு பெற்ற பின் , உலகம் தழுவிய அமைப்பின் தலைவராகவும் பதவி வகித்தார்.

அவர் பணியிலிருந்த போது சம்பாதித்த பணத்தை விட புகழை விட , ஒய்வு பெற்ற பிறகு சம்பாதித்தது அதிகம்.

அவரது வீட்டில் இருந்த அலுவலகத்தை பெரிதாக அமைக்க திட்டமிடப்பட்டது.. அதற்க்காக வீட்டில் பூட்டப்பட்டிருந்த ஒரு அறையை அலுவலக அறையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. அந்த பொறுப்பு எனக்கு தரப்பட்டது.

பல வருடங்களாக பூட்டப்பட்ட அறை திறக்கப்பட்டது பழைய காலத்து பெரிய பெரிய பித்தளை பாத்திரங்கள் இருந்தது. அவை அனைத்து வேலைக்காரர்கள் எடுத்துக்கொண்டனர்.

அறை முழுவதும் அவர் வாழ்நாள் முழுவதும் வாங்கிய விருதுகள் கோப்பைகள், கேடயங்கள், பாராட்டு பத்திரங்கள், வாழ்த்து மடல்கள், பரிசுப்பொருட்கள் நிரம்பியிருந்தன. கிட்டத்தட்ட 100 பொருட்கள் இருந்தன.

தகர கோப்பைகளும் கேடயங்களும் துருப்பிடித்திருந்தன. பிளாஸ்டிக் விருதுகள் உடைந்தும் அதில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்கள் அழிந்தும் இருந்தது. வாழ்த்து பத்திரங்கள் சேதமடைந்திருந்தது.



அவைகளை எங்கு வைப்பது எப்படி பாதுகாப்பது என்ற பிரச்சனையை அவரது கவனத்திற்க்கு எடுத்து சென்றேன். என்னெவெல்லாம் இருக்கிறது என்று கேட்டு தெரிந்து கொண்டார். மனைவியிடம் கலந்தலோசித்தார். பின்பு அவைகளை தூக்கி எறிய வேண்டும் என்றும் ஆனால் அப்படியே தூக்கி எறியாமல் முற்றிலுமாக உடைத்து உருக்குழைத்து தூக்கி எறியும் படி கூறினார்.

அந்த விருதுகளை பட்டியல் தயாரிக்கிறேன் என்று கூறியதற்க்கும் மறுத்து விட்டார். அவைகளை அழித்து விடும் படி கூறினார்.

மிக உயரிய விருதுகள். அவைகளை அழிக்க மனம் வரவில்லை
ஆனால் என்னால் ஒன்றும் செய்ய இயலாது. அவர் கூறியப்படி அவைகளை அழித்து அறையை சுத்தம் செய்து , அலுவலக அறையாக மாற்றினேன்.

அவர் அந்த விருதுகளை வாங்கிய போது மகிழ்ச்சி அடைந்திருப்பார். விருது வழங்கியவர்களும் பல உண்மையான பொய்யான புகழுரைகளுடன் அவைகளை கொடுத்திருப்பார்கள்.

ஆனால், அவை அவர் காலத்திலேயே எந்த மதிப்பும் இல்லாமல் அழிக்கப்பட்டது. அவர் அழிக்கவில்லையென்றாலும் அவரது வாரிசுகள் சில காலத்திற்க்கு பின்னால் அழித்திருப்பார்கள்.

பழைய பேப்பர்காரனுக்கு போட கூட பண மதிப்பில்லாத ஆனால் புகழ் சேர்க்க கூடிய விருதுகள்.

அவர் சுய சரிதை எழுதினாலோ அல்லது அவரது வாழ்க்கையைப்பற்றி வேறு யாரவது எழுதினாலோ, அவர் வாங்கிய விருதுகளின் பட்டியலை பிரசுரிக்க கூட வழியில்லாமல், அவை அனைத்தும் அழிக்கப்பட்டன.

அந்த விருதுகளுக்கு மதிப்பில்லை. அந்த விருதுகளால் அவருக்கு மதிப்பில்லை. அவரது செயலால் தான் அவருக்கு மதிப்பு.

அவர் வாங்கிய விருதுகளை விட மிகப்பெரிய விருது எதிர்க்காலத்தில் கிடைக்க வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment