Thursday 21 August 2014

உண்ணாவிரதம்



மணிப்பூரில் கடந்த 14 வருடங்களாக உண்ணாவிரதம் இருந்த Ms. சானு சர்மிளா என்ற பெண், 19.08.2014 அன்று விடுதலை செய்யப்பட்டார்.

சமூக வலைதளங்கள் இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை காரணம் தொலைகாட்சிகளும் ஊடகங்களும் இந்த செய்தியை பெரிதாக மக்களிடம் கொண்டு வரவில்லை.

சானு சர்மிளா மணிப்பூர் மாநிலத்தில் அமுலாக்கப்பட்டுள்ள ARMED FORCES SPECIAL POWERS ACT (AFSPA)  என்ற சட்டத்தை நீக்க கோரி  கடந்த 2000 நவம்பர் மாதம் தனது உண்ணாவிரதத்தை தொடங்கினார். இம்பாலில் அவரது கண்னெதிரே பொதுமக்கள் பத்து பேர் சுட்டுக்கொள்ளப்பட்டதை பார்த்த பிறகு அவர் இந்த முடிவை மேற்க்கொண்டார்.

அரசு இது தற்கொலை முயற்சி என கைது செய்தது. அவரை சிறையில் வைத்து பாதுகாப்பது சாத்தியமில்லை என்பதால், அரசு மருத்துவமனையில் தனியறையில் வைக்கப்பட்டார். அந்த அறை துனை சிறைச்சாலை என அறிவிக்கப்பட்டது.

அவருக்கு கடந்த 14 ஆண்டுகளாக மூக்கின் வழியாக திரவ உணவு வழங்கப்படுகிறது.

தற்கொலை முயற்ச்சிக்காக கைது செய்யப்பட்டவரை ஒரு ஆண்டுக்கு மேல் சிறைக்காவலில் வைக்க சட்டம் அனுமதிப்பதில்லை. எனவே, ஒவ்வொரு ஆண்டும் 364 நாளில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகிறார். உண்ணாவிரதத்தை. முடித்து கொள்ள சம்மதமா என கேட்க்கப்பட்டாள் அவர் மறுத்து விடுகிறார். மீண்டும் ஒரு வருடத்திற்க்கு கைது செய்யப்படுகிறார். இது போன்று மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டு 14 வருடங்களாக சிறையில் இருந்துள்ளார்.


தற்போது நீதிமன்றம் அவரை விடுதலை செய்யப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லையென்றும், அவரது உண்ணாவிரதம் அரசியல் சார்ந்தது என்றும் கூறி விடுதலை செய்துள்ளது.

அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தால், அரசு அவரை நல்ல விதமாக பராமரிக்க வேண்டும் என்றும் எப்போதும் போல் அவருக்கு மூக்கு வழியாக திரவ உணவு அளிக்க ஏற்ப்பாடு செய்ய வேண்டும் என ஆனையிட்டுள்ளது.

இந்த முடிவு எடுக்க நீதிமன்றத்துக்கு ஏன் 14 ஆண்டுகாலம் பிடித்தது. ஒவ்வொரு ஆண்டும் நீதிமன்ற காவலை நீடித்த போது, இந்த எண்ணம் ஏன் ஏற்ப்படவில்லை.

நீதிமன்றம் கூறியுள்ளப்படி, அரசு அவரது உண்ணாவிரதம் தொடர்ந்து நடைப்பெற அனுமதிக்குமா ? அவருக்கு வேண்டிய பாதுகாப்பும் அவருக்கு வழங்க வேண்டிய திரவ உணவுக்கும் பொறுப்பேற்க்குமா அல்லது வேறு சட்ட பிரிவுகளை கூறி தட்டிக்கழிக்குமா என்பதை காலம் தான் நிர்னயிக்கும்.

அவர் படுத்த படுக்கையாய் இருக்கும் போது, அவரை பராமரிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. குடும்ப உறுப்பினர்கள் அவரை பராமரிக்க பொறுப்பு ஏற்றுக்கொள்வார்களா.? 42 வயதான அவர் உடல் நிலை மேலும் உண்ணாவிரதம் இருக்க இடம் கொடுக்குமா ?

இவ்வளவு ஆண்டுகள் இவர் உண்ணாவிரதம் இருந்த காலத்தில் பொது மக்களின் ஆதரவு இவருக்கு இல்லாமல் போனது ஏன். ஆரம்ப காலத்தில் ஆதரவு இருந்தாலும் தொடர்ந்து பொது மக்களால் அவருக்காகவும் அந்த சட்டத்திற்க்காகவும் போரட முடியவில்லை.

மனித உரிமை கழகங்கள் அந்த சட்டம் தவறு என்று கண்டனம் தெரிவிப்பதுடன் நின்று விடுகிறது. உலகில் எந்த அரசும் , மக்களுக்கு எதிரான எந்த சட்டம் கொண்டு வந்தாலும், அதை கண்டிப்பதுடன் நின்று விடுகிறது. அதை தடுத்து நிறுத்தும் அதிகாரம் அதற்க்கு இல்லை. இது போன்ற சட்டங்களால் மக்கள் பாதிக்கப்படும் போது, விசாரணை கமிசன் அமைக்க சொல்வதுடன் அவர்களது செயல்பாடு நின்று விடுகிறது.  விசாரனை கமிசன் முடிவுகள் குறித்தோ அல்லது தண்டனை வழங்கப்பட்டதா என்பது குறித்தோ அவர்கள் கவலைப்படுவதில்லை.

தனிமனித உரிமை மீறல்களாக இருந்தாலும், போர் குற்றங்களாக இருந்தாலும், மனித உரிமை கழகத்தின் செயல்பாடுகள் இந்த அளவே இருக்கிறது.

தனி நபராக 14 வருடங்களாக போரடி வரும் இவருக்கு அரசியல் கட்சிகள் ஏன் ஆதரவு அளிக்கவில்லை.

அரசும் இவரை 14 வருடம் சிறை வைக்க வேண்டிய அவசியமென்ன ? அவரை முதலிலேயே விடுவித்திருந்தால், அவரது குடும்பத்தார் அவரை பராமரித்திருப்பார்கள் அல்லது உண்ணாவிரதத்தை முடித்து வைத்திருப்பார்கள்.

ஒரு வேளை அசம்பாவிதமாக உயிர் துறந்திருந்தாலும், ஒரு சில நாட்களுக்கு போரட்டங்கள் நடந்திருக்கும். பின்பு பொது மக்கள் தங்களது வேலையை பார்க்க போயிருப்பார்கள். அதிகப்பட்சமாக அன்றைய முதலமைச்சரின் பதவி விலகலோடு அந்த பிரச்சனை முடிந்திருக்கும்
.
அவர் கைது செய்யப்பட்ட 2000 ஆண்டுகளில் மனிப்பூரில் மாநில காங்கிரஸ் அரசும் அதற்கு பிறகு சமதா கட்சியும் அதற்கு பின் சிறிது காலம் குடியரசு தலைவர் ஆட்சியும் அமுலில் இருந்துள்ளது. 2002 முதல் இன்று வரை 12 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.

மாநில கட்சிகளால் இந்த சட்டத்தை வாபஸ் பெற வைக்க முடியவில்லை. தனி நபராக போரடியும் இவரால் இன்னமும் சட்டத்தை வாபஸ் பெற வைக்க முடியவில்லை.

இந்த நிலையில் தன்னை வருத்தி அழித்து கொள்வதை விட போரட்ட முறையை மாற்றி அமைத்திருக்க வேண்டும்.

அவரை பாரட்டி இந்திய அமைப்புகளும் உலக அமைப்புகளும் பல விருதுகளை கொடுத்து கௌரவித்துள்ளது. ஆனால், அவரது போரட்டத்திற்க்கு ஆதரவாக செயலில் இறங்கவில்லை.

பிரிட்டீஸ் அரசாங்கம் காந்தியின் உண்ணாவிரதத்துக்கு அளித்த முக்கியத்துவம் போன்று இன்றைய அரசாங்கங்கள் அளிப்பதில்லை. 

கங்கையை சுத்தப்படுத்த வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்த சாமியார் உயிர் நீத்தார். ஆனால், மக்களோ ஊடகங்களோ அரசோ கண்டுகொள்ளவில்லை.

ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் யாரை உயர்த்தி பிடிக்கிறதோ அவர்களே இன்றைய நிலையில் உண்ணாவிரதம் இருக்க முடியும். அன்னா அசாரே இருந்த உண்ணாவிரதம் தொலைகாட்சிகளால் திருவிழா போல கொண்டாடப்பட்டது. அவரும் பல முறை உண்ணாவிரதம் இருந்துள்ளார். அவரது உடல் நிலை கருதி அவரே உண்ணாவிரத்த்தை முடித்துக்கொண்டுள்ளார்.

சில மணி நேர உண்ணாவிரதங்களும், ஒரு நாள் அடையாள உண்ணாவிரதங்களும், தொடர் உண்ணாவிரதங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் நடத்தி காண்பிக்கப்படுகிறது.

இன்றைய சூழ்நிலையில் தனிமனித போரட்டங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. அரசியல் கட்சிகளின் அடாவடிதனத்துக்கும், தொலைகாட்சிகளின் அராஜகதனத்துக்கும் தான் அரசும் பொதுமக்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர்.

அதே சமயம் ஒவ்வொரு தனி மனித கோரிக்கைக்கும் அரசு பணிந்து போக வேண்டுமென்றால், அரசு இயங்க முடியாது. எல்லோரும் ஒவ்வொரும் கோரிக்கையாக முன் வைப்பார்கள். ஒருவரது கோரிக்கையை ஏற்றால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்ப்படும். எல்லா மக்களுக்கும் திருப்தியளிக்கும் விதமாக அரசு நடத்துவதும் சாத்தியமல்ல.


No comments:

Post a Comment