Sunday 3 August 2014

BARAN - இரானிய திரைப்பட விமர்சனம்



உலக சினிமாவை பற்றி பேசும் போது தவறாமல் குறிப்பிடுவது இரான் நாட்டு படங்கள் . சில முறை பார்க்க முயற்சி செய்து பின்பு முழுமையாக பார்க்காமல் பாதியில் நிறுத்திவிடுவது வழக்கம்.

இப்போது எப்படியும் ஒரு படத்தையாவது பார்த்துவிடுவது என்ற முடிவில் BARAN என்ற திரைப்படத்தை பார்த்தேன்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அகதிகளாக வெளியேறியவர்கள் தெகரானில் (TEHRAN) பகுதியில் வசிக்கின்றனர். ஒரு அடுக்கு மாடி கட்டிட வேலையில் உள்ளூர் ஈரானியர்களும் ஆப்கான் அகதிகளும் வேலை செய்கின்றனர். ஆப்கான் அகதிகளுக்கு வேலை தரக்கூடாது என்பது சட்டம். ஆனால் கட்டிட மேற்பார்வையாளர் குறைந்த சம்பளத்தில் ஈரானியர்களை விட ஆப்கானிஸ்தர்கள் அதிக வேலை செய்வதால் அவர்களை வேலைக்கு அமர்த்தி கொள்கிறார். ஈரான் நாட்டு ஆய்வாளர்கள் வரும்போது ஆப்கான் ஊழியர்களை மறைந்து கொள்ள சொல்வார்.

இங்கு 17-18 வயது மதிக்கதக்க லத்திப் (LATEEF) என்ற ஈரானிய வாலிபன் , அங்கு வேலை செய்யும் மற்ற தொழிலாளர்களுக்கு டீ போட்டு கொடுக்கும் வேலை செய்கிறான். ஒரு நாள் ஆப்கான் தொழிலாளி ஒருவர் இரண்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்து காலை ஒடித்து கொள்கிறார். மறுநாள் வேறோரு தொழிலாளி , காயம் அடைந்த தொழிலாழியின் 14 வயது மகன் ரெகமத் ஐ (RAHMAT) அழைத்து வந்து வேலைக்கு சேர்த்து கொள்ள சொல்கிறார். கடினமான வேலை செய்ய முடியாத காரணத்தால் அவனை டீ போடும் வேலையை செய்ய சொல்லி விட்டு , லத்திப்புக்கு வேறு வேலை கொடுக்கப்படுகிறது.

இதனால் கடுப்படைந்த லத்தீப், ரெகமத்துக்கு தொந்தரவு கொடுப்பதுடன் அவனை கண்கானித்து வருகிறான். தொடர்ந்து கண்கனித்து வரும் போது ஒரு நாள் அதிர்ச்சியடைகிறான். ரெகமத் தலை வாரும் போது அவன் பெண் என்று அறிந்து கொள்கிறான். அதற்கு பிறகு அவன் போக்கில் மாற்றம் எற்ப்படுகிறது.

இந்த நிலையில் ஈரானிய ஆய்வாளர்கள் ஆய்வுக்கு வருகின்றனர். ரெகமத் தப்பி ஓடுகிறாள். அவர்கள் துரத்துகின்றனர். லத்திப் இடையில் புகுந்து அவள் தப்பி ஓட உதவி செய்கிறான்.

அதற்கு பிறகு அவள் வருவதில்லை. அவளை தேடி செல்கிறான். அவளை அழைத்து வந்த தொழிலாளி மூலமாக , ரெகமத்தின் தந்தைக்கு உதவி செய்கிறான். அவர் அந்த உதவியை பெறாததால், அந்த தொழிலாளி குடும்ப சிக்கல் காரணமாக ஆப்கானிஸ்தான் சென்று விடுகிறார்.

ரெகமத்தின் தந்தைக்கு ஊன்று கோல் வாங்கி கொண்டு அவர் வீட்டுக்கு போகும் போது அங்கு நடக்கும் பேச்சை கேட்கிறான். ரெகமத்தின் உண்மையான பெயர் பேரான் (BARAN) என்று அறிகிறான். ஊன்று கோலை அங்கேயே வைத்து விட்டு வந்து விடுகிறான். அவர்களுக்கு உதவி செய்ய அவன் சேர்த்து வைத்திருந்த ஊதிய தொகை முழுவதையும் கொடுப்பதுடன் , அவனுடைய அடையாள அட்டையையும் விற்று விடுகிறான்.

அவன் சோக நிலையில் இருக்கிறான். பேரானும் அவனது குடும்பமும் புறப்படும் போது, பொருட்களை வண்டியில் ஏற்றும் போது லத்திப்பும் பேரானும் அருகருகில் இருக்கின்றனர். இருவரும் பார்வையை பறிமாறிக்கொள்கின்றனர். காதல் உணர்த்தப்படுவதுடன் படம் முடிவடைகிறது.

கிட்டத்தட்ட இது ஒரு ஊமைப்படம். வசனங்கள் மிகவும் குறைவு.
இந்த படம் சிறந்த படமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் சிறப்பு அம்சம் என்ன.

1) நடிப்பு:
லத்திப் என்ற ஈரானிய வாலிபனை சுற்றி படம் புனையப்பட்டுள்ளது. விடலை பருவம். பொறுப்பற்று சக தொழிலாளிகளிடம் சண்டை போட்டுக்கொண்டிருக்கும் வாலிபன் , ஆன் என்று நினைத்த சக தொழிலாளி பெண் என்று தெரிந்தவுடன் அவனிடம் ஏற்ப்படும் மாற்றங்களை நன்றாக வெளிப்படுத்தியுள்ளான். அவளுக்கு உதவ எடுத்து கொள்ளும் சிரமங்கள் மற்றும் இறுதி காட்சியில் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளான்.  நடிப்பை வெளிப்படுத்த இந்த கதையில்  வாய்ப்பில்லை. பெண்ணின் முகம் மட்டுமே காண்பிக்கப்படுகிறது. உடல் முழுமையாக ஆடைகளால் மறைக்கப்பட்டுள்ளது. மாற்று சினிமா என்று கூறும் விமர்சகர்கள் எழுதும் உடல் மொழி என்ற ஒன்று இதில் சாத்தியப்படவில்லை. பேரானுக்கு லத்திப் மீது ஏற்ப்படும் ஈர்ப்பை கூட முழுமையாக வெளிப்படுத்தவில்லை.

கட்டிட மேற்ப்பார்வையாளராக நடித்திருப்பவர் அவரது அனைத்து காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். ஒரே ஒரு காட்சியில் வரும் செருப்பு தைக்கும் தொழிலாளி அவரது வசனத்தை சிறப்பாக சொல்லியதன் மூலம் , லத்திப்புக்கு மனதில் ஒரு மாற்றத்தை ஏற்ப்படுத்துகிறார்.

எந்த ஒரு கதாபாத்திரமும் தனது சோகத்தை வலிய நம்மிடம் புகுத்த முயற்சி செய்யவில்லை. அழுது புலம்பி ஆர்பாட்டம் செய்யவில்லை. தங்களது வாழ்க்கைக்கு யாரையும் குறை கூறி வசைபாடவில்லை
இரானியர்களும் ஆப்கான் மக்களும் ஆன் பெண் ஈர்ப்பை இப்படி தான் வெளிப்படுத்துவார்களோ என்னவோ.

2) இசை:
பெண் என்று அறியப்படும் போது அல்லது ஆய்வாளர்கள் வரும் போது, லத்திப்பும் பேரானும் இறுதி காட்சியில் சந்திக்கும் போது கூட உணர்வுகளை இசை மூலம் வெளிப்படுத்த தவறியுள்ளது. படம் முழுக்க வறன்ட பூமியில் நடப்பதால் பின்னனி இசைக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விட்டது.

3) ஓளிப்பதிவு:
வறன்ட பூமி, தனிமையான இடத்தில் நடக்கும் கட்டிட வேலை. ஓளிப்பதிவுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. ஆற்றுப்படுகை காட்சி சிறப்பாக உள்ளது

4) ஒப்பனை மற்றும் அலங்காரம்
கதை களம் குளிர்காலம். ஆன் பெண் அனைவரும் முழுமையான ஆடை அணிந்துள்ளனர். இஸ்லாமிய ஆன் பெண் எப்போதும் முழுமையான ஆடை அணிபவர்கள். உடல் மொழி என்று கூறும் அங்க அசைவுகளுக்கு வாய்ப்பில்லை. கதைக்கு ஒப்பனை தேவையில்லை. ஆடம்பர பளபளப்பான ஆடைகளுக்கோ ஆபரணங்களுக்கோ வாய்ப்பில்லை.

5) இயக்கம்:
ஆப்கான் அகதிகளின் வாழ்க்கையை காட்ட முயற்சி செய்த படம். ஆனால், அகதிகள் வாழ்வு அவல நிலைகளை பற்றியோ அதற்கான காரணங்களை பற்றியோ பேசவில்லை. குறியீடுகள் கூட இல்லை. அகதிகளின் வாழ்வை பற்றி கூறினால் அதற்கான பின்னனியை பற்றியும் கூற வேண்டும். அப்படி கூறினால் அது ஒரு  டாக்குமென்டரி படமாக அமைவதுடன் , அரசியல் எதிர்ப்புகளும் வரக்கூடும் என்பதால், ஒரு காதலை கூறகாதலை வெளிப்படையாக கூறாமல் ஆன் பெண் ஈர்ப்பு என்பது போல கூறியுள்ளார்.

படம் மெதுவாக சென்றாலும், இறுதி வரை பார்க்க தூன்டுவது, மனிதர்களுக்கு இயற்கையாக இருக்கும் ஆவல் தான். இது காதலாக மாறுமா காதலை பறிமாறிகொள்வார்களா மற்றும் இனைவார்களா அல்லது பிரிவார்களா என்பதை அறியும் பொருட்டு படத்தை முழுமையாக பார்க்க தூண்டுகிறது.

இதை ஒரு ஊமைப்படமாக எடுத்திருப்பதன் காரணம் கதையை காட்சிகளின் மூலமும் , உணர்ச்சிபூர்வமான நடிப்பின் மூலமாக வெளிப்படுத்த வேண்டும் என்பது காரனமாக இருக்கலாம். அது பார்வையாளர்களை எந்த வித்த்தில் சென்று அடைந்தது என்று கூற முடியாது.

ஈரானிய மக்களும் ஆப்கான் மக்களும் இந்த படத்தை எப்படி ரசித்து பார்த்தார்கள் என்று தெரியவில்லை. இது குறித்த தகவல்கள் இல்லை. பொருளாதார ரீதியில் இது வெற்றி படமாக அமைய வாய்ப்பில்லை.

இயக்கத்துக்காகவும் கதைக்காகவும் விருதுகள் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த கதையை இந்த அளவுக்கு தான் இயக்க முடியும்.
இதே கதையை வேறு நாட்டினர் எடுத்திருந்தால், அவரது இயக்கமும் கதை சொல்லும் விதமும் வேறாக தான் இருக்கும்.

மாற்று சினிமா பற்றி பேசுபவர்கள் ஈரானிய படங்களை பற்றி பேசாமல் இருப்பதில்லை. இந்தியாவில் குறிப்பாக தமிழில் இது போன்ற படங்கள் வருவதில்லையென்றும் முயற்ச்சி கூட செய்வதில்லை என்றும் வருத்தப்படுவார்கள். தமிழ் பட ரசிகர்களுக்கு படம் எப்படி பார்ப்பது என்ற அடிப்படை கூட தெரியவில்லையென்றும், இது போன்ற படங்களை ரசிப்பதில்லை என்றும் ஆதரவு தருவதில்லை என்று மிகவும் வேதனைப்படுவார்கள்.

இதே கதையை தமிழில் எப்படி எடுக்கலாம் என யோசித்தேன்.

ஆப்கான் அகதிகள் என்ற இடத்தில் இலங்கை அகதிகள் என்று வைத்துக்கொள்வோம். ஈரானியர்களை தமிழ்நாட்டு தமிழர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

நடிப்பு என்றால் அனைத்து தரப்பு மக்களும் புரிந்து கொள்ளும்படி அமைய வேண்டும். அதிலும் சோகமான நடிப்பு என்றால் பெண் நடிகைகள் கண்களால் பேச வேண்டும். உடல் மொழியால் தனது சோகத்தை, சந்தோசத்தை, காதலை வெளிப்படுத்த வேண்டும். தமிழ் நாட்டில் சிறந்த நடிகர்கள் நடிகைகள் உள்ளனர் . புதியவர்கள் நிறைய பேர் நடிக்க காத்து கொண்டிருக்கின்றனர். நிச்சியமாக இந்த ஈரானிய படத்தில் நடித்திருப்பவர்களை விட சிறப்பாக நடிப்பவர்கள் தமிழகத்தில் உள்ளனர்

இந்த கதையம்சம் தமிழர்களுக்கு பிடிக்காது. இலங்கை தமிழர்களின் வாழ்க்கையை பற்றி கூறும் போது அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூற இலங்கை அரசியலை கூற வேண்டும். அதே சமயம் தமிழ்நாட்டு அரசாங்கம் அவர்களை சகல மரியாதைகளுடன் நடத்துகிறது என்று கூற வேண்டும். அப்படி கூறவில்லையெனில் படம் வெளியிடமுடியாது.

மேலும், கட்டிட தொழிலாளியின் வாழ்க்கையை தினமும் நாம் பார்த்து கொண்டிருக்கிறோம். அகதிகளின் மோசமான வாழ்க்கையை பற்றியும் அறிந்துள்ளோம். விடலை பருவ காதலை மிகைப்படுத்த பட்ட காட்சிகள் மூலமாக பார்த்து சலிப்படைந்திருக்கிறோம் இந்த நிலையில் இயற்க்கையான கதையம்சம் நடிப்பு என்று கூறி எடுத்தால், யாரும் ரசிக்க மாட்டார்கள். அதில் சற்று கற்பனையை கலக்க வேண்டும். படம் பார்ப்பவர்களை அழ வைக்க முயற்சி செய்வது போல நடித்தால் இயக்கினால் மட்டுமே மக்கள் பார்ப்பார்கள். ஆடல் பாடல் மற்றும் சண்டை காட்சிகளை நீக்கி விட்டு படம் எடுக்கலாம். இந்த கதையில் இயக்கத்தின் மூலம் காட்சிகள் மூலம், உடல் மொழி மூலம் வசனத்தின் மூலம் பெரிய அளவில் தாக்கத்தை வெளிப்படுத்த வாய்புகள் மிகவும் அதிகம். படம்  எடுக்க செலவு குறைவாக தான் இருக்கும். ஒரு கோடி ரூபாயில் எடுத்து விடலாம்

இந்த படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் விரும்ப மாட்டார்கள். படத்தின் வெற்றிக்கு உத்திரவாதமில்லை. இலங்கை அகதி பிரச்சனை படமாக தான் பார்ப்பார்கள். உணர்ச்சிகளை தூண்டிவிட்டு படத்தை பற்றி தவறான கருத்தை உருவாக்குவார்கள்.

இது மாதிரியான படத்தை மொத்த தமிழகத்தில் 1000 பேர் விரும்பி பார்க்க கூடும். படம் பொருளாதார ரீதியில் வெற்றி அடையாது. வெற்றி அடையாது என்ற நிலையிலும், பிரச்சனைகள் வந்து படம் வெளியிடமுடியாத நிலை ஏற்ப்படும் என்றும் அறிந்தும் யார் படத்தை தயாரித்து வெளியிடுவார்கள். இதற்கு முன்னுதாரனங்கள் உண்டு.

தமிழகத்தில் நடக்கும் உலக திரைப்பட விழாவில் படங்கள் இலவசமாக காண்பிக்கப்படுகிறது. ஒரு காட்சி கூட அரங்கம் நிறைய ரசிகர்கள் இருப்பதில்லை. 100 பேர் கூட பார்க்க வருவதில்லை.
பல படங்கள் தயாரிக்கப்பட்டு , வெளியிட திரையரங்குகள் கிடைக்காமல் முடங்கி கிடக்கின்றன.

மாற்று சினிமா பற்றி பேசுபவர்களுக்கு இவை அனைத்தும் தெரியும். இருப்பினும் அவர்களுக்கு நல்ல சினிமா என்று தோன்றுபவைகளை பற்றி பேசி அது போன்ற தமிழ் படங்கள் வெளி வர வேண்டும் என்று விரும்புகின்றனர். விருப்பத்தை வெளிப்படுத்துவதில் தவறில்லை.

பணமே பிரதானம் என்று இருக்கும் சமூக சூழ்நிலையில் குறிப்பாக திரையுலகில் இது போன்ற முயற்சிகளை யார் முன்னெடுப்பது. சொல்வது சுலபம். செயல்படுத்துவது மிகவும் கடினம்.

No comments:

Post a Comment