Sunday 3 August 2014

அறிவுஜீவிகள்



அறிவுஜீவிகள்::

70 -80 களில் அழுக்கு கால்சட்டையும் ஜிப்பாவும் காலில் ரப்பர் செருப்பும் போட்டுக்கொண்டு தோளில் ஒரு ஜோல்னா பை மாட்டிக்கொண்டு கையில் ஒரு புத்தகம் பொதுவாக கடைகளில் பொதுமக்கள் படிக்காத பார்த்திராத வித்தியாசமான பெயரில் உள்ள புத்தகத்துடன் மற்றும் மழிக்கப்படாத தாடியுடனும் வெட்டப்படாத வாரப்படாத தலைமுடியுடன் திரிந்தால் அவர் எழுத்தாளர் என்று அறியலாம்.

அவர் போதை வஸ்து சாப்பிட்ட நபரை போல மௌனமான மயக்க நிலையில் இருப்பார். ஏகாந்தமாக தனக்கு தானே புன்னகை புரிந்த்த படி பூங்காக்களில் அல்லது தெருவில் பெரிய மரத்தடியில் அமர்ந்திருப்பார். உண்மையில் போதை வஸ்து சாப்பிட்டவர் அல்ல பசி மயக்கத்தில் சாய்ந்து உட்கார்ந்திருப்பார். யாராவது பக்கத்தில் போனால் சற்று புன்னகை புரிவார். இவரால் தமது கஷ்டம் தீராத என்ற மன நிலையில் புன்னகைப்பார்.

பல நேரம் டீ கடை பக்கத்தில் நின்றிருப்பார். அவருக்கு தெரிந்தவர்கள் அதாவது அவர் தெரிந்து வைத்திருப்பவர்கள் யாரவது டீ அருந்த வந்தால் புன்னகைப்பார். இவரைப்பற்றி தெரிந்தவர்கள் பதிலுக்கு புன்னகைக்க மாட்டார்கள். கொஞ்சம் பழகியவர்கள் யாரவது டீ சாப்பிடுகிறாயா என கேட்டால் பதில் சொல்லமாட்டார். டீ கடைக்காரருக்கு தெரியும் அவரே டீ போட்டு கொடுத்துவிடுவார்.

அவரிடம் பேச ஆரம்பித்தால் தான் எழுதிய கதை கவிதை பற்றி பேச ஆரம்பித்துவிடுவார் அல்லது தான் படித்தவற்றை கூறி பெரிய விமர்சனம் செய்வார்.  பேச ஆரம்பித்தவர் எப்போது இவரிடமிருந்து தப்பித்து செல்ல்லாம் என காத்துக்கொண்டிருப்பார்.

இந்த எழுத்தாளர்களில் பல வகை உண்டு

சிற்றிதழ்களுக்கு கதை கவிதை எழுதுபவர்கள். இலக்கியம் பற்றி மட்டும் பற்றியே பேசுவார்கள்

புறநானுறு அகநானுறு போன்றவற்றிலிருந்து பேசி எதுகை மோனையுடன் கவிதை எழுதியிருப்பார்கள். வசன கவிதை எழுதுபவர்களை வசை பாடுவார்கள். நீதி கதைகளை எழுதுவார்கள். இவர்களது ஜோல்னா பையில் வகைவகையான சிற்றிதழ்கள் இருக்கும். இவைகளில் சில பொதுநூலகங்களில் சீண்டுவார் இன்றி மூலையில் கிடக்கும்.

வசன கவிதை எழுதுபவர்கள் தனி ரகம். காலத்திற்க்கேற்ப்ப கவிதை எழுதுவார்கள். இவர்கள் பேச ஆரம்பித்தால் மணிக்கொடி காலம் என்று ஆரம்பித்து தனது கதை கலைமகள் பத்திரிக்கையில் பிரசரமாகியுள்ளது என்று கூறி ஜோல்னா பையை திறந்து அந்த பத்திரிக்கையை எடுத்து காட்டுவார்கள்.

அடுத்து மக்கள் பொது வெளியில் பேச தயங்கும் விசயங்களை பற்றி எழுதுவார்கள் பேசுவார்கள். பல எழுத்தாளர்களின் அறிஞர்களின் மேற்கோள்களை காட்டி பேசுவார்கள். கேட்கும் பொது மக்களுக்கு ஒன்றும் புரியாது.

இந்த எல்லா வகை எழுத்தாளர்களும் வாய் சொல் வீரர்கள் என்பது பொருள் அல்ல. இவர்களில் அறிவுஜீவிகளும் உண்டு. அவர்களை அடையாளம் கான்பது சிரமம் அவர்களை அடையாளம் கான வேன்டும் என்றால் கேட்பவருக்கும் படிப்பவருக்கும் அதை அறிந்து கொள்ளும் திறன் வேண்டும்

அறிவுஜீவிகள் பேசும் விசயங்கள் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு எந்த விசயத்திலும் பயன் இல்லை. அவர்களது பேச்சும் எழுத்தும் தத்துவம் போன்றும் வேதாந்தம் போலும் இருக்கும். வாழ்க்கையில் தோல்வி கன்டவரின் பிதற்றல் போல் இருக்கும். பெரும்பாலான சமயங்களில் அவர்களிடமிருந்து எதிர்மறை (NEGATIVE) எண்ணங்கள் நம்மிடம் விதைக்கப்படுவது போல தோன்றும்

இந்த பைத்தியகாரனிடம் ஏன் பேசுகிறாய் என்றும் அவனே உருப்படவில்லை அவனுடன் சேர்ந்து நீயும் உருப்பட போவதில்லை என்று வீட்டிலும் , நண்பர்களும் உபதேசம் செய்வார்கள்.

இந்த அறிவு ஜீவிகள் காலம் கடந்த பிறகே வாழ்க்கைக்கு தங்களது வாசிப்பும் எழுத்தும் பேச்சும் வயிற்றை நிரப்ப பயன்படாது என்று உணருவார்கள். வயிற்று பசியும் உடல் பசியும் அவர்களை யோசிக்க வைக்கும்.

பின்பு ஏதாவது பதிப்பகத்தில் அவர்கள் பிரசுரிக்கும் புத்தகங்களுக்கு பிழை திருத்தம் செய்யும் வேலைக்கு போவார்கள். அவர்களால் அங்கு தாக்கு பிடிக்க முடியாது. பிழை திருத்தம் செய்யும் போது, இப்படி குப்பையான எழுத்துக்கள் பிரசுரமாகிறதே நமது எழுத்துக்கள் பிரசுரமாகவில்லையே என்ற ஆதங்கம் மோலோங்கி நிற்கும்

அறிவு பசிக்கும் வயிற்று பசிக்கும் இடையே நடக்கும் போரட்டத்தில் வயிற்று பசியே எப்போதும் வெற்றி பெறும்.

பல அறிவுஜீவிகள் அடிமாடுகளாக ஆக்கப்பட்டிருப்பதற்க்கு சமூகமும் ஒரு காரணம்.

அடுத்த வகை எழுத்தாளர்கள் ஆரம்பம் முதலே திரைப்பட துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆவலில் படப்பிடிப்பு தளங்களில் சுற்றி வந்து கொண்டிருப்பார்கள். இயக்குனர்களையும் தாயரிப்பாளர்களையும், பிரபல நடிகர்களையும் தொடர்பு கொள்ள நாயாக அலைந்து கொண்டிருப்பார்கள். இவர்களது வசிப்பிடங்களின் முன்னால் கால் கடுக்க நின்று கொண்டிருப்பார்கள்.

வாய்பு கிடைத்தால் கதை சொல்வார்கள். சரியான பதில் கிடைக்காமல் அலைந்து கொண்டிருப்பார்கள். கதையை மாற்ற சொல்வார்கள். சிறு மாற்றம் தானே என்று ஏற்றுக்கொண்டால் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி முழு கதையையும் மாற்றி விடுவார்கள். அதற்கு பிறகும் அந்த கதை படமாகும் என்ற எந்த உறுதியுமில்லை.

பெரும்பாலும் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே பிரபலமாக உள்ள கதாசிரியர்களிடமிருந்து தான் கதையை வாங்குவார்கள். அவர்கள் திரைப்பட துறையின் நாடியை அறிந்தவர்கள். ரசிகர்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்பதை அவர்கள் மட்டுமே அறிந்தவர்கள் என்பது அவர்களது எண்ணம். தாயரிப்பாளர்களும் புதியவற்றை பரிட்சித்து பார்க்க விரும்பாமல் பழையவர்களை வைத்தே கதை எழுத சொல்வார்கள்.

இவர்களில் சிலர் புதிதாக கதை சொல்ல வந்தவர்களிடம் கதை கேட்டு அதை சற்று மாற்றி அவர்களது கதைகளாக சொல்லி திரைப்படம் எடுக்க வைத்தவர்களும் உண்டு

இப்படி அலைந்தே தங்களது வாழ்வின் வசந்த காலத்தை தொலைத்து விடுவார்கள்.

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல , வசந்தத்தை தொலைத்த பிறகு, ஏற்கனவே பிரபலமாக உள்ள திரைப்பட எழுத்தாளர்களிடம் உதவியாளர்களாக சேருவார்கள்

அவர்களது கதைக்கு திரைக்கதை எழுதுவது, வசனம் எழுதுவது போன்ற வேலைகளை செய்வார்கள். அதுக்கும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் , மற்றவர்கள் எழுதிய வசனங்களை பிரதி எடுக்கும் வேலைகளை செய்வார்கள். முன்பு, நடிகர் நடிகைகள் நீளமான வசனங்களை முன்பே வாங்கி சென்று மனப்பாடம் செய்து கொண்டு, படப்பிடிப்புக்கு வருவார்கள். தற்போது அந்த நிலை இல்லை. எனவே இந்த வாய்ப்பு கிடைக்காத எழுத்தாளர்கள், படப்பிடிப்பு தளத்தில் நடிகர் நடிகைகளுக்கு வசனங்களை எழுதி கொடுப்பதும் படித்து கான்பிக்கும் வேலையை செய்கின்றனர்.

இந்த வேலையை தொடர்ந்து செய்யும் போது, அவர்கள் கதாசிரியரின் உதவியாளர் என்ற நிலையிலிருந்து மாறி உதவி இயக்குனர் துனை இயக்குனர் என்ற நிலையை அடைவார்கள்.

திரைப்பட துறையில் மிகவும் பாவப்பட்ட மனிதர்கள் என்றால் இந்த துனை இயக்குனர்களும் உதவி இயக்குனர்களும் தான்.

இன்றைய எழுத்தாளர்கள் சாமர்த்தியமாக பிழைக்கின்றனர். எழுத்தேயே பிழைப்பாக கொண்டவர்கள் அல்ல. வயிற்று பிழைப்புக்கு வேறு தொழில் பார்க்கின்றனர். பகுதி நேரமாக எழுத்து தொழிலை செய்கின்றனர்

சிலர் தங்களது ஆத்ம திருப்திக்காக எழுதுகின்றனர். சிலர் புகழுக்காக சிலர் பணத்திற்க்காக எழுதுகின்றனர். சிலர் எந்த காரணமும் இல்லாமல் முயற்சி செய்து பார்கலாமே என்று முயற்சி செய்கின்றனர். வெற்றி அடைந்தால் மகிழ்ச்சி. அடையாவிட்டால் எந்த வருத்தமும் இல்லை என்று வாழ்கின்றனர்.

அடைந்தால் மாகதேவி அடையா விட்டால் மரண தேவி என்று யாரும் முழு மூச்சாக இயங்குவதில்லை.

இன்றைய எழுத்தாளர்களின் எழுத்துக்கள் இனையத்தில் பிரசுரிக்கப்பட்டு சற்று பிரபலமடைந்தவுடன் பத்திரிக்கைகளில் எழுத முயற்சி செய்கின்றனர். சிலருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. பின்பு புத்தகமாக வெளியிட வேண்டும் எண்ணம் ஏற்ப்படுகிறது. சொந்த செலவில் புத்தகம் அச்சடித்து விற்க முயற்சி செய்கின்றனர். இறுதியில் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இலவசமாக கொடுக்கின்றனர்.

வழக்கம் போல சிலர் வெற்றி பெறுகின்றனர். பலர் தோல்வியடைகின்றனர்.

வறுமையும் புலமையும் இனைந்தே பயனிப்பது.

இந்த எழுத்தாளர் கூட்டத்தில் உண்மையான அறிவுஜீவிகள் கானாமல் போய் விடுகின்றனர். சமூகம் அறிவுஜீவிகளை காயடித்து விடுகிறது.


3 comments: