Thursday 3 July 2014

காமட்சியம்மன் விளக்கு



காமட்சியம்மன் விளக்கு::

1980கள் வரை நான் பல வீடுகளில் பார்த்தது காமாட்சியம்மன் விளக்குகள். பொதுவாக கடவுள் சிலைகளோ படங்களோ அதிகம் வைத்து சாமி கும்பிட்டதை பார்த்ததில்லை.

வெள்ளிக்கிழமை காலையில் பெண்கள் தலைக்கு குளித்து விட்டு, ஈரத்தலையில் துண்டை கட்டிக்கொண்டு, வாசல் கால்களின் (DOOR FRAME) அடிப்பகுதியில் மஞ்சள் தடவி ( ஒரு அடி உயரத்துக்கு)  குறுக்கு வாட்டில் மூன்று குங்கும கோடுகள் இட்டு, நடுவில் குங்குமத்தால் பொட்டு வைப்பார்கள். அதன் பக்கத்திலேயே கோலப்பொடியால் சிறிய கோலம் போடுவார்கள். பெண்கள் முகம் நிறைய மஞ்சள் பூசி குளித்திருப்பார்கள். அவரவர் உடல் நிறத்துக்கு ஏற்ப மஞ்சள் பூசிய முகம் பல்வேறு அழகுடன் மினுமினுக்கும்.

பெண்கள் குளிப்பதற்கு முன்பு காலையில் வாசல் தெளித்து, கோலம் போட்டிருப்பார்கள். வீட்டை கழுவி விட்டிருப்பார்கள். ஒரு சிலர் வீடு முழுவதும் சாம்பிரானி புகை போடுவதும் உண்டு.

வீட்டின் ஒரு பக்க சுவறில் வட்டமாக மஞ்சள் பூசியிருப்பார்கள். அதன் நடுவில் மூன்று குங்கும கோடுகள் போட்டு நடுவில் புள்ளி வைத்திருப்பார்கள். அதற்கு கீழே காமட்சியம்மன் விளக்கு ஏற்றி சாமி கும்பிடுவார்கள்.

எந்த சாமி பெயரை சொல்லி கும்பிடுவார்கள் என தெரியவில்லை. குல தெய்வங்களை நினைத்து கும்பிடுவார்கள் என நினைக்கிறேன். மற்றப்படி சாமி சிலைகளோ அல்லது படங்களோ இருக்காது. கோயிலுக்கு செல்வது கூட அவசியம் என கருதமாட்டார்கள்.

அன்று பொதுவாக கவுச்சி ( மாமிச உணவு) சாப்பிடமாட்டார்கள். பருப்பு குழம்பு (சாம்பார் என சொல்ல மாட்டார்கள்) அல்லது கீரை வகை இருக்கும்.

இந்த பழக்கம் சென்னை போன்ற நகரங்களிலும் இருந்தது. காலத்திற்க்கேற்ப வாசக்காலில் மஞ்சள் பூசுவதற்க்கு பதிலாக மஞ்சள் பெயின்ட் அடித்து சிவப்பு கலரில் கோடுகள் போட ஆரம்பித்தார்கள். ஸ்டிக்கர் கோலங்களை ஒட்ட ஆரம்பித்தார்கள். 

சுவறில் மஞ்சள் பூசுவதை நிறுத்திவிட்டு புகைபடங்கள் தொங்கவிட்டார்கள். காமட்சியம்மன் விளக்குக்கு பதிலாக பல்வேறு விளக்குகள் ஏற்ற ஆரம்பித்தார்கள். அதுவும் சிரமம் என்று மின் விளக்கு பொருத்தினார்கள். இப்போது அதுவும் குறைந்து விட்டது. விளக்கு ஏற்றி சாமி கும்பிடுவது குறைந்து வருகிறது. நேரமின்மையே அனைத்துக்கும் காரணம்.

மஞ்சள் ஒரு கிருமி நாசினி. வாசக்காலுக்கு மஞ்சள் பூசுவது அழகுக்கு மட்டுமல்ல. மரத்தால் செய்யப்பட்ட வாசக்காலில் கரையான் அரிக்காமல் இருப்பதற்க்கும் தான். சிறு புழு பூச்சுக்கள் வீட்டில் வராது. சாம்பிராணி புகை போட்டால், அனைத்து பூச்சிகளும் ஓடி விடும்.

குடிசை வீடுகளிலும் இது போன்று விளக்கு ஏற்றி சாமி கும்பிடுவார்கள். அந்த காட்சி எனக்கு மிகவும் பிடிக்கும்.

No comments:

Post a Comment