Thursday 13 November 2014

இளமையின் இறுதி படியில் – முதுமையின் முதல் படியில் - 1



சீறிப்பாயும் குதிரையின் வேகத்துடன் வெளியே வந்தான். மண் சாலையில் குதிரையின் குளம்படி ஓசைகளை எழுப்பிய படி சாலையின் திருப்பத்துக்கு வந்தான்.  வந்தியதேவன் கூட இத்தனை வேகமாக குதிரை பயணம் செய்திருப்பானா என்பது ஐயம். அவனது காலடி கிளப்பிவிட்ட புழுதி மணல் புகை மூட்டம் போல சாலையெங்கும் வியாபித்திருந்தது. சாலையில் நடந்து சென்றவர்கள்சனியனேஎன சொல்லிக்கொண்டு தும்மினர். பெண்கள் தங்களது சேலை முந்தானையால் மூக்கை மூடிக்கொண்டனர். அவனுக்கு பின்னால் நாய்கள் குரைக்க ஆரம்பித்தன

காலை ஆறு மணிக்கு இத்தனை ஆரவாரத்துடன் சென்ற பதினைந்து வயது வாலிபன் மீது சில பெண்கள் தங்கள் வீட்டு ஜன்னல் வழியே பார்த்து ரசித்து பார்த்துக்கொண்டிருந்தனர். மெல்லிய உடல் ஒட்டிய வயிறு சற்று பெருத்த தலை அகன்ற தோள்பட்டைகள் மெல்லிய கைகள். தோள்களுக்கும் கைகளுக்கும் சம்மந்தமில்லாமலிருந்தது. சட்டை போடாத வெற்றுடம்பு. உள்ளாடை அணியாத லுங்கி அணிந்த கீழுடை. இவையனைத்தையும் ஜன்னல் வழியே பார்க்கும் பெண்களின் மனநிலையை அவன் அறியமாட்டான்.

சாலையின் திருப்பத்திற்க்கு வந்த அவன் எதிர்புறம் இருந்த மைதானத்தில் பசுமாடுகளும் எருமை மாடுகளும் கட்டப்பட்டு, அதற்கு அருகில் பால் கறப்பவர்கள் நின்று கொண்டிருப்பதை பார்த்தான் . பால் கறந்தவர்கள்  ஒரு மாட்டிடம் பாலை கறந்த பின்பு சாலையின் ஓரத்தில் இருந்த பால் கடையில் அளந்து கொடுத்து விட்டு மீண்டும் வேறு ஒரு மாட்டிடம் பால் கறக்க வந்தனர்.

மாட்டுகாரன் மாட்டின் முதுகில் தட்டி அதை சற்று நகர வைத்து அதன் மடியில் கை வைத்து பால் கறக்க வசதியாக குத்துக்காலிட்டு உட்கார்ந்தான். அரைகால் கால்சட்டையுடன் வெற்றுடம்பில் ஒரு துண்டு போட்டுக்கொண்டிருந்தான். மாட்டின் காம்பில் கை வைத்தவுடன் அது துள்ளி சற்று நகர்ந்து நின்று கொண்டு வாலை வேகமாக ஆட்டியது. இவனும் உட்கார்ந்த நிலையிலேயே சற்று நகர்ந்து உட்கார்ந்தான். ஜொடுதலையிலிருந்த நீரை மாட்டின் காம்புகளில் தடவி ஈரப்படுத்தினான். காம்புகளை உருவி விட்டு தயார் படுத்தினான். லேசாக தடவி விட்ட படியே இரண்டு விரல்களால் காம்பை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டிருந்தான். மாடு இப்போது அசையாமல் நின்றது. பால் சுரப்புக்கு தயாரன நிலையில் அதற்கு என்ன மனநிலை இருந்தது என தெரியவில்லை. இதை பார்த்துக்கொண்டிருந்த வாலிபன் காம்பை அழுத்தி பிடித்து கசக்கி விட்டு கீழ் நோக்கி இழுத்து விட்டான்.

பால் கடைக்காரர் பால் விநியோகம் செய்ய ஆரம்பித்து விட்டார். அவரவர் வசதிகேற்ப்ப அரை லிட்டர் ஒரு லிட்டர் இரண்டு லிட்டர் என பால் வாங்கி கொண்டிருந்தனர்

வாலிபன் அமைதியாக சற்று தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான். ஒருவர் ஒரு லிட்டர் பால் கேட்டார். அளந்து பார்த்த போது குறைவாக இருந்தது. அவரை சற்று நேரம் பொறுத்திருக்கும் படி கூறி விட்டு, வாலிபனை அழைத்து அவனுக்கு நூறு மி.லி. பால் கொடுத்தார். அவருக்கு தெரியும் எப்போதும் இவனுக்கு 100 பால் தான் கொடுக்க வேண்டும் என்று. அதிகம் கொடுத்தாலும் அவனால் வாங்க முடியாது அவன் கொண்டு வந்திருக்கும் டம்ளரில் 100 பால் தான் கொடுக்க முடியும். அதுவே தளும்பி வடியும்.

அந்த பாலை வாங்கி கொண்டு மிகவும் மெதுவாக பாம்பு போல ஊர்ந்து வருவான். பால் சிறிதும் சிந்தி விட கூடாது என மிக கவனமாக வருவான். அதை அவன் தாயிடம் கொடுத்தவுடன் அவனது வேலை முடிந்தது.

தாய். அன்றைய பாண்டிய நாடான மதுரை பட்டிணத்தில் பிறந்தவள். ஆங்கிலேய ஆட்சி காலத்தில் மதுரை கோட்டை இடிக்கப்பட்ட காலத்தில் கோட்டையின் தெற்கு பகுதியில் குடியிருந்த இருந்த ஜடாமுனி கீழிறங்கி வேகமாக ஓடி தனக்கு மாற்றிடம் தேடிக்கொண்ட இடத்தில் பிறந்து வளர்ந்தவள். அந்த சாலைக்கு பெயரே ஜடாமுனி கோயில் சாலை. மிகுந்த செல்வ செழிப்புடன் வாழவில்லையென்றாலும், உயர்தர மத்திய வர்கமான குடும்பம்.

அதற்கு அருகாமையில் அமைந்துள்ள தெற்கு மாசி வீதியில் அன்றைய திவானுக்கு கணக்கராக இருந்த குடும்பதின் வழித்தோன்றலாக 10 பிள்ளையாக பிறந்தவனுக்கு மாலையிட்டு விதி வசத்தால் , கோவலனும் கண்ணகியும் பிழைப்புக்காக மதுரை வந்தது போல், இவர்கள் கெட்டும் பட்டணம் போ என்ற முதுமொழிக்கு ஏற்ப மதுரையிலிருந்து சென்னை பட்டிணம் வந்து , ஆற்காடு சாலையின் கோடம்பாக்கம் பகுதியில் குடியேறி வாழ்க்கை நடத்தி கொண்டிருந்தனர்

அந்த தாயிடம் தான் இந்த வாலிபன் 100 மி.லி. பாலை சிந்தாமல் சிதறாமல் கொண்டு வந்து கொடுத்தான்.

அந்த தாய் அதனை காய்ச்சி வெள்ளையாக இருந்த பாலை வேறு நிறத்தில் மாற்றி ( என்ன நிறம் என்று அறுதியாக இறுதியாக என்றுமே சொல்ல முடிந்ததில்லை) அதற்கு காப்பி என பெயரிட்டிருந்தாள். வாங்கி வந்த பாலில் பாதியளவு தான் ஐந்து டம்ளர் காப்பி தயாரிக்க பயன் படுத்தியிருந்தாள். அதை ஆற்றுவதாக கூறி நான்கு முறை நன்றாக மேலே தூக்கி ஆற்றும் போது நுங்கும் நுரையுமாக வாசனையுடன் டம்ளர்களில் கொப்பளிக்கும். முக்கால் டம்ளர் காப்பியும் மீதி நுரையுமாக  டம்ளர் வழிய வழிய கணவருக்கு கொடுக்கும் போது, அவளது கணவன், பாற்கடலில் கடைந்தெடுத்து கொடுத்த அமிழ்தை போல இரு கைகளாலும்  பய பக்தியுடன் வாங்கி ஊதி ஊதி மெதுவாக ரசித்து ருசித்து குடிப்பார்.

அடுத்த பெரிய மகனுக்கும் அடுத்து மகளுக்கும் கொடுப்பார். பால் வாங்கி வந்த இளைய மகன் தூரத்தில் உட்கார்ந்திருப்பான். அவனை காப்பியை வாங்கி குடிக்கும் படி கூறுவாள் அவன் அதை வாங்கி குடிக்க மறுத்து விடுவான். அவனுக்கு நிறைய பால் போட்டு கெட்டியாக காப்பி போட்டு குடித்தால் தான் குடிப்பான் இல்லையெனில் மறுத்து விடுவான். பெரும்பாலான நாட்களில் அவன் காப்பி குடிக்க மாட்டான். அதற்கு பிறகு தாய் ஒரு டம்ளர் காப்பி குடிப்பாள். இளையவன் குடிக்காததால் மீதமான காப்பிக்கு மற்றவர்கள் டம்ளரை நீட்டுவார்கள். தாய் மறுத்து விடுவாள். அந்த மீதமான காப்பியை பகல் 11 மணியளவில் சூடு செய்து தாயும் மகளும் குடிப்பார்கள்.

மீதமுள்ள பாலில் பாதியை எடுத்து மாலை 4 மணியளவில் இரண்டு டம்ளர்கள் காப்பி தயாரித்து தாயும் மகளும் குடிப்பார்கள். அந்த நேரத்திலும் நமது வாலிபன் மறுத்து விடுவான். அந்த சமயத்தில் மூத்த மகன் சில நாட்கள் கல்லூரியிலிந்து திரும்பி வந்தால் , தாய் குடித்துக்கொண்டிருக்கும் காப்பி டம்ளரில் உள்ள மிச்சமுள்ள காப்பியை கொடுத்தால் மறு பேச்சின்றி மூத்த மகன் குடித்து விடுவான். இதை சொல்லி காட்டி இளையவனுக்கு தினமும் அர்ச்சனை நடந்தாலும் அதை அவன் காதில் வாங்கி கொள்வதில்லை.

இரவு பத்து மணிக்கு மேல் வேலையிலிருந்து திரும்பி வரும் கணவருக்கு எப்போதும் போல ரசம் சாதம் கிடைக்கும். மறு முறை கொஞ்சம் சாதம் வைத்துக்கொண்டு மனைவி முகத்தை ஏறிட்டு பார்ப்பார். அவள் புரிந்து கொண்டு உள்ளே சென்று மீதமிருக்கும் 20-25 மி.லி. பாலையும் சக்கரையும் கொண்டு வந்து கொடுப்பாள். அதை சாதத்தில் ஊற்றி நிறைய சர்க்கரையும் தண்ணீரும் கலந்து மிகவும் ஆனந்தமாக சாப்பிடுவார். அரை குறை தூக்கத்தில் இருக்கும் மகளை எழுப்பி இரண்டு வாய் ஊட்டி விடுவார்.

100 மி.லி. பாலில் காலையில் ஐந்து டம்ளர் காப்பியும், மாலையில் இரண்டு டம்ளர் காப்பியும் , மீதமிருக்கும் பாலில் கணவனுக்கு பால் சோறு கொடுக்கும் திறமை படைத்த தாய்

அவளது இளைய மகன் அந்த தாய் உயிரோடு இருந்த வரை தயாரித்த காப்பியை 90% நிராகரித்துள்ளான்.

45 வருடங்களுக்கு பிறகு இந்த நிகழ்சிகளை அவன் நினைத்து பார்த்து, உலகறிய இனையத்தில் M.S.SEKAR என்ற பெயரில், தான் எழுத ஆரம்பித்திருக்கும்இளமையின் இறுதி படியில்முதுமையின் முதல் படியில்என்ற தொடரில் முதலாவதாக எழுதுவான் என அந்த தாய் நினைத்திருக்க மாட்டாள்.
 


No comments:

Post a Comment