Tuesday 11 November 2014

ஆழி சூல் உலகு – ஜோ டி குருஸ் - புதினம்


ஆழி சூல் உலகு – ஜோ டி குருஸ்



மனித நாகரீகம் ஆற்றங்கரைகளில் தான் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. அடுத்து அதிக நீர் இருக்கும் பகுதி கடற்கரை. கடல் நீர் குடி நீராக பயன்படாவிட்டாலும், அந்த நீரில் வாழும் உயிரினங்களை கொண்டு வாழ்க்கை வாழும் சமூகம் பரதவர் (மீனவர் ) சமூகம். மீன்கள், சங்குகள், முத்துகள் மற்றும் இதர பொருட்களை கொண்டு வாழும் பரதவ இன மக்களை பற்றி கூறும் புதினம்.

கடல் நீரின் தன்மைகள் , நீரோட்டத்தின் தன்மைகள், மாறும் இயல்புகள் இவற்றை மிக விரிவாக எடுத்து சொல்கிறார்.

கடலில் பயனிக்கும் போது வீசும் காற்று படகை மரக்கலங்களை எவ்வாறு திசை திருப்புகிறது அதை எவ்வாறு சரி செய்து பயணிப்பது போன்ற விவரங்களை தந்துள்ளார்.

கடலில் ஆபத்தான சூழ்நிலையில் பல நாள் மாட்டிக்கொண்டால் எந்த வகையான உணவு உட்கொள்வது எப்படி உயிரை பாதுகாத்து கொள்வது போன்ற விவரங்களையும் தந்துள்ளார்.

கடலில் வாழும் உயிரினங்கள் அதை பிடிக்க கையாளப்படும் உத்திகள் அதன் சிரமங்கள், உயிரனங்களின் குணங்கள், உணவாக பயன்படுபவை மற்றும் நண்பனாக இருப்பவை, மீனவர்களின் உயிரை பறிப்பவை எனவும், எந்த வகையாக உயிரினங்கள் மீனவனின் வாழ்க்கைக்கு பொருளாதார ரீதியாக பயன் அளிப்பவை என்பதை விரிவாக விளக்கியுள்ளார்.

கடற்கரை சார்ந்த பகுதிகளில் வாழும் மக்கள் பரதவர்கள் கொண்டு வரும் பொருட்களின் மூலம் செல்வந்தர்களாகி, அருகில் இருக்கும் ஊர்களிலும் இலங்கையிலும் எவ்வாறு வியாபாரத்தை பெருக்கினார்கள் என்பதையும் சொல்கிறார்.

இலங்கைக்கு சென்றவர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாகவும், வியாபாரத்தில் நொடித்தும் இனகலவரங்களின் காரணமாகவும் வெளியேறி சொந்த மண்ணுக்கு திரும்பி வந்து எவ்வாறு மறுவாழ்க்கை அமைத்து கொண்டார்கள் என்பதையும் துயரத்துடன் விவரிக்கிறார்.

போர்ச்சுகீஸ்லிருந்து வந்தவர்கள் இங்குள்ள மக்களின் அறியாமை, ஏழ்மை இவைகளை பயன்படுத்தி அவர்களை மதம் மாற்றினாலும், சில போதகர்கள் உண்மையிலேயே இவர்களுக்கு நல்லது செய்துள்ளனர். இவர்கள் மூலம் தான் படிப்பறிவு பெற்று அடுத்த தலை முறை ஆபத்தான கடலில் மீன் பிடிக்கும் தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு வேலைக்கு சென்றுள்ளனர் என்பதையும் பதிவு செய்துள்ளார்.

அரசு இவர்களுக்காக கொண்டு வரும் நல திட்டங்களை இவர்களிடம் மறைப்பதில் பாதிரியார்களும், அரசியல்வாதிகளும், வங்கி துறையினரும் எவ்வாறு ஈடுப்பட்டனர் என்பதை விவரித்துள்ளார்.

இவர்களது குடும்ப உறவுகள் சடங்குகள் தனி மனித ஆசாபாசங்கள், காதல் களவு காமம் அரசியல் சண்டை, துரோகம் உதவி நட்பு போன்ற அனைத்து உணர்ச்சிகளையும் அழகாக பதிவு செய்துள்ளார். உறவுகளுக்குள் முறை தவறும் உறவுகளையும் அழகாக பதிவு செய்துள்ளார். இதை படிக்கும் போது, உறவின் சிக்கல்கள் மூலம் ஒழக்கம் என்பது சரியாக பேணப்படவில்லை என்பது போல் தோன்றுகிறது. இதில் இவர்க்ளுடன் வாழ்ந்து இவர்களை சுரண்டிய பாதிரியார்களுக்கும் பொருந்தும்.

மொத்தமும் வட்டார வழக்கு மொழியில் எழுதியுள்ளார். புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. போக போக புரிய ஆரம்பிக்கிறது. பல வார்த்தைகளுக்கு கதையின் போக்கில் இது தான் அர்தமாக இருக்கும் என்று எண்ணி கொள்ள வேண்டியுள்ளது. 117 வார்த்தைகளுக்கு பொருள் சொல்லியுள்ளார். அதற்கு மேலும் பல வார்த்தைகளுக்கு பொருள் விளங்கவில்லை.

குடும்ப வரைப்படம் கொடுத்துள்ளார். பல பெயர்கள் புதிதாக உள்ளது. பல பெயர்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. 

கடற்கரை ஊர்களின் பெயர்கள் சில கற்பனை என்றும் சில உண்மை பெயர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வட்டார வழக்கு மொழியில் 500 பக்கங்கள் எழுதுவது மிக சிரமமான காரியம். ஒரு இன மக்களின் வாழ்க்கையை இவ்வளவு விரிவாக எழுதுவது என்பது மிகவும் சிரமமான சவால். அதை எதிர் கொண்டு மிகச் சிறப்பாக செய்துள்ளார்.

இன்றைக்கும் இதே போன்ற சொற்களை தான் அந்த இன மக்கள் உபயோகப்படுத்துகிறார்களா என தெரியவில்லை. நவீன தொழிழ் நுட்பம் இருக்கும் இந்த காலத்திலும் பல இன்னல்களை சந்திக்கும் இந்த இன மக்கள் அந்த காலத்தில் சந்தித்திற்க்கும் இன்னல்களை கற்பனை செய்து பார்த்தால் மிகவும் ஆச்சரிமாய் இருக்கிறது.

இனி ஒவ்வொரு முறையும் கடல் மீன் சாப்பிடும் போது இவர்களது வாழ்க்கை முறை நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாது. நகரத்தில் அதிக விலை கொடுத்து மீன்களை வாங்கினாலும் அதை பிடித்து வரும் மீனவர்கள் இன்னமும் ஏழ்மை நிலையில் இருப்பது தான் வருத்தமளிக்க கூடிய விசயம்.

1. St. Catharine – கித்தேரியம்மன்
2. St. Andrew – பெலவேந்திர்ர்
3. Martin – மடுத்தீன்
4. Thomas Andrew – தெம்மந்திரை
5. Ignatius – இஞ்ஞாரி
6. George -  வருவேல்
7. Paradise -  பரதேசி
8. Lucia -  பிரகாசி
9. Manuel Andrew – மனவந்திரை

 


















No comments:

Post a Comment