Sunday 30 November 2014

காவியத்தலைவன்



காவியத் தலைவன் - திரைப்பட விமர்சனம்


காவியத் தலைவன் தமிழ் திரைப்படத்தை பற்றி விமர்சனம் எழுத காரணம், இயக்குனர் திரு.வசந்த பாலன் வித்தியாசமான திரைப்படங்களை வழங்குபவர் என்பதாலும் பிரபலமான எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் கதை வசனத்தில் வெளிவந்துள்ள படம் என்பது தான் காரணம். இதுவே வேறு ஒரு இயக்குனர் இயக்கியிருந்தால் இரண்டு வரி விமர்சனத்தில் முடித்திருப்பேன்.
                
கதை நடக்கும் கால கட்டம் 1900லிருந்து 1945 வரை என்று கூறப்படுகிறது. நாடகம் மற்றும் தெருக்கூத்துக்களே மக்களின் பொழுது போக்கு நிகழ்ச்சிகளாக இருந்த கால கட்டம்.

நாடக குழு நடத்துபவர் மற்றும் அதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இருவருக்குள் நடக்கும் பிச்சனையே திரைக்கதை.

நசிந்து விட்ட நாடக கலையை தூக்கி பிடிக்கவும் அதை உயிரூட்டவும் அதன் அருமை பெருமைகளை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தவும் எடுக்கப்பட்ட திரைப்படம் என்று யாராவது கூறினால் அவர்களை மனநல மருத்துவரை அனுக அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த படத்திற்க்கு ஏதெனும் விருதுகள் வழங்கப்பட்டாலும் அது போலியானதாக தான் இருக்கும்.

முக்கிய கதாபாத்திரத்துக்கு இப்போது கதாநாயகன்-ஹீரோ என்று குறிப்பிடுகிறோம். நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்துக்கு ராஜபார்ட் என்று பெயர். பொதுவாக நாடகம் ராஜாக்களின் கதையை மையமாக வைத்தே எழுதப்பட்டு நடிக்கப்பட்டது. ராஜா வேடத்தில் நடிப்பவர் தான் முக்கிய கதாபாத்திரம் . அவரை சுற்றியே அவரது அருமை பெருமைகளை கூறியே கதைகள் அமைக்கப்பட்டிருக்கும். ராஜாவின் பகுதியை தமிழ் ஆங்கிலம் சொல் கலந்து ( பகுதி =  PART ) கலந்து உருவாக்கப்பட்ட பெயரே ராஜபார்ட் என்று நிலைத்து விட்டது. இந்த முக்கிய பாத்திரத்தில் நடிக்க பல வருட உழைப்பும் ஈடுபாடும் தேவை. அந்த நிலையை அடைய மிகுந்த சிரத்தை தேவை.

இந்த படத்தில் ராஜபார்ட் வேடமிடுபவர் நாடக குழுவிலிருந்து விலகியவுடன் இளைஞர்களாக இருக்கும் இருவரில் (பிரித்திவிராஜ்-சித்தார்த்) ஒருவரான சித்தார்த் ராஜபார்ட் வேடத்திற்க்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார். பிரித்திவிராஜ் பொறாமை படுகிறார். சித்தார்த்தை எதிரியாக நினைத்து கொண்டு சந்தர்ப்பம் இடைத்தவுடன் அவரை நாடக குழுவிலிருந்து நீக்கி விடுகிறார். பல வருடங்களுக்கு பின்பு சித்தார்த் துனையுடன் நாடகம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்ப்படுகிறது. மீண்டும் சித்தார்த்தை துரத்த அவர் வேறோரு நாடக குழு ஆரம்பித்து நிகழ்கால விடுதலை போராட்ட நிகழ்ச்சிகளை நாடகமாக நடத்த அது பெரும் வெற்றியடைகிறது. பிரித்திவிராஜ் பழைய நாடகங்களையே நடித்து நட்டமடைய அவர் சித்தார்த் குழுவின் தயவில் நடிக்க வேண்டிவருகிறது. இந்த நிகழ்ச்சிகளுக்கு இடையில் நாடகத்தில் கதாநாயகியாக நடிப்பவரை மணந்து கொள்ள பிரித்திவிராஜ் விரும்பினாலும் அவள் சித்தார்த்தையே விரும்புகிறாள். பிரித்திவிராஜ் சித்தார்த்தை பழி வாங்குகிறார்.

இறுதி காட்சி இயக்குனர் திரு. மகேந்திரன் இயக்கிய உதிரிபூக்கள் படத்தின் இறுதி காட்சியின் அப்பட்டமான நகல்.

நாடகம் பார்க்க ராஜா, ராணி மற்றும் இளவரசி வருகிறார்கள். அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறவில்லை. சித்தார்த்துக்கு இளவரசியுடன் காதல் ஏற்ப்படுகிறது. சர்வ சாதாரணமாக அவரது இடத்திற்க்கு செல்கிறார். காதலிக்கிறார். சல்லாபிக்கிறார். அந்த இடத்திற்க்கு ஜமின் மாளிகை என்று கூறுகிறார்கள். ராஜா ராணி இளவரசி வாழும் இடத்திற்க்கு அரண்மனை என்று தானே கூற வேண்டும் ஜமீன் மாளிகை என்று ஏன் கூறுகிறார்கள் 

வேறு ஒரு இடத்தில், சித்தார்த்தை நாய் என்று குறிப்பிட்டு நாய் ஜமீன் மாளிகையில் வாய் வைத்து விட்டது என்று வசனம் வருகிறது. அவர்கள் ஜமின் குடும்பம் என்றால்  ஜமின்தார் என்றும் ஜமின்தார் மகள் என்று தானே குறிப்பிட வேண்டும். ராஜா ராணி இளவரசி என்று எப்படி வசனம் வருகிறது. அது மன்னர் குடும்பமா அல்லது ஜமின்தார் குடும்பமா ?

ஒரு நாடக நடிகன் அவ்வளவு எளிதில் இளவரசியின் இடத்தில் சென்று காதலித்து காமம் செய்து கர்பம் உண்டாக்கி விட முடியுமா. கதையில் இது மிகப் பெரிய சொதப்பலாக தோன்றுகிறது...

சுதந்திரப் போராட்ட நிகழ்ச்சிகளை குறிப்பிட காந்தியின் ஒரு திரைப்படத்தை காட்டுகிறார்கள். சிறையில் சந்தித்த சிலர் மூலம் சுதேசி இயக்கத்தை புரிந்து கொண்டு நாடகம் நடத்துவதுடன் சுதந்திர போராட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். அன்னிய துணி எரிப்பு போராட்டத்தில் துணிகளை எரிக்கிறார்கள். தீ வைத்தவுடன் மொத்த துணிகளும் உடனடியாக பற்றி எரிகிறது. ஒரு பக்கத்தில் தீ வைத்தால் சிறிது சிறிதாக தான் எரிந்து வரும் இதில் மொத்தமாக குப் என்று தீ பிடிக்கிறது. இது போல பல அபத்தமான காட்சிகள் நிறைய இருக்கிறது.

கிட்டப்பா பாகவதர் – கே.பி.சுந்தராம்பாள் வாழ்க்கை இந்த கதையின் அடித்தளம் என்று கூறப்படுகிறது.

இதில் எந்த கதாபாத்திரமும் வட்டார வழக்கு மொழியை பேசவில்லை. குறைந்தபட்சம் வட்டார வழக்கு இல்லையென்றாலும் அந்த கால பேச்சு மொழியாக இருந்திருக்கலாம். வசந்தபாலனின் முந்தைய திரைப்படம் அங்காடி தெருவில் துணிக்கடையில் வேலை செய்பவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் வாழும் ஏழை மக்கள் வேலை செய்கிறார்கள் என்பதை நிலைநாட்ட அந்த கதாபாத்திரங்கள் அந்த மாவட்ட மொழியை பேசுவதாக அமைந்திருக்கும். இதில் மதுரை மாவட்ட வட்டார மொழியோ அல்லது வேறு எந்த பகுதி வட்டார வழக்கு மொழியோ பயன் படுத்தப்படவில்லை என்பது ஒரு குறையாக தோன்றுகிறது.

வசனம் எழுதிய ஜெயமோகனுக்கு குழப்பம் ஏற்ப்பட்டிருக்கலாம். அந்த கால பேச்சு மொழியாக எழுதினால் ரசிகர்களுக்கு புரியாது என நினைத்திருக்கலாம். மேலும், அவர் எழுதி வரும் மகாபாரத தொடரில் உபயோகிக்கும் மொழி குறித்து விமர்சனம் உள்ளது. இவைகளை தவிர்க்க மொழியின் காலத்தை நிலத்தை நிர்ணியிக்க முடியாத அளவில் கலப்படமாக ஒரு மொழியில் வசனங்களை எழுதியுள்ளார்.

பாடல்களில் வரிகள் தெளிவாக கேட்க முடிகிறது. வாத்தியங்களில் ஓசை பாடல் வரிகளை அமுக்காமல், தெளிவாக கேட்கும் படி இசை அமைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
 
இன்றைக்கும் நாடகங்கள் நடைப்பெறுகிறது ஆனால்  மக்களிடையே போதிய ஆதரவு இல்லை. இருப்பினும் தொடர்ச்சியாக நாடகம் நடத்துபவர்களும் அதை ரசிப்பவர்களும் இருக்கிறார்கள். 
 
நிஜ நாடக நடிகர்களை நடிக்க வைத்து நாடக நடிப்பை இந்த படத்தில் உணர்த்தியிருக்கலாம்.

பிரித்திவிராஜ் மற்றும் சித்தார்த் இருவரும் நடிகர்கள் நடிக்க முயற்சி செய்துள்ளனர். இதில் கலைஞர்களை உபயோகப்படுத்தியிருக்க வேண்டும்.
 
நாடக துறையை பற்றிய விவரங்களை சொல்ல முயற்சித்தாலும் வணிக ரீதியாக வெற்றியடைய செய்ய நிறைய சமரசங்களை செய்துள்ளதால் சொல்ல வந்த செய்தி நிறைவு பெறவில்லை.






No comments:

Post a Comment