Tuesday 4 November 2014

நெடுங்குருதி புதினம் – எஸ்.ராமகிருஷ்ணன்


நெடுங்குருதி புதினம் – எஸ்.ராமகிருஷ்ணன் – எனது பார்வையில்



 

தான் பார்த்து கேட்ட கிராமங்களின் அடிப்படையில் வேம்பலை எனும் கிராமத்தை மையமாக கொண்டு இந்த புதினத்தை படைத்துள்ளார். இந்த கற்பனை கிராமம் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கதை நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.

வேம்பலை கிராமத்தின் தட்ப வெட்ப நிலைகளை விரிவாக விவரிப்பதன் மூலம் அதை சமாளித்து அதில் வாழும் களவு தொழிலில் ஈடுப்படும் மக்களின் வாழ்க்கையை சித்தப்ரிப்பது.  கதை நடந்த ஆண்டு என எதையும் குறிப்பாக சொல்லவில்லை. மன்னராட்சி, ஆங்கிலேய ஆட்சி, கிராம நிர்வாகம் போன்ற எதை பற்றியும் சொல்லவில்லை. அந்த கிராமத்தின் வாழும் சில குடும்பங்களின் அடிப்படையில் கதை புனையப்பட்டுள்ளது.

கிராமத்தின் வெயிலை விவரிக்கும் அளவுக்கு இரவையும் விவரிக்கிறார். களவுக்கு இருள் துனை புரிவதாலும், இருளில் வாழ்க்கை நடத்தும் மனிதர்களாக இருப்பதால் இருளை விவரிக்க வேண்டிய அவசியம் ஏற்ப்படுகிறது.

இந்த நாவலில் இருளை வர்ணிக்கும் போது, திரு. சு.வெங்கடேசன் அவர்கள் எழுதியுள்ள “ காவல் கோட்டம்” புதினம் நினைவுக்கு வருகிறது. அவரும் இருளை இவ்வாறு தான் விவரித்திருப்பார். ( இரண்டு நாவல்களையும் ஒன்றன் பின் ஒன்றாக படித்ததால் மிக எளிதாக இந்த ஒற்றுமையை காணமுடிகிறது  சு. வெங்கடேசன் அவர்கள் இவருக்கு நண்பர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். )

இந்த கிராமத்தை விட்டு வெளியேறும் மனிதர்களும், இந்த கிராமத்தில் குடியேறும் மனிதர்களும், தங்கள் வாழ்வில் கிராமத்தை மறக்க முடியாமல் உழன்று கொண்டிருக்கிறார்கள்.

களவு என்பதை ஒரு தொழிலாக தான் பார்த்துள்ளாரே தவிர , அதை ஒரு குற்றமாக எங்கும் வெளிப்படுத்தவில்லை. ஆனால், களவை தடுத்து நிறுத்த ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த குற்ற பரம்பரை சட்டத்தை இவர்களுக்கு எதிராக கொண்டு வந்து கொடுமைப்படுத்தியதாக உணரும் வகையில் நிகழ்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை நேரடியாக சொல்லவில்லை.

இந்த களவை தொழிலாக கொண்ட மக்கள் மதுரையை சுற்றி வாழ்ந்ததாக சுட்டி காட்டும் இவர் எந்த பகுதியென குறிப்பாக சொல்லவில்லை. ஒரு கற்பனை கிராமம் என்று முன்னுரையில் சொல்லப்படுகிறது. இவர்கள் கள ஆய்வு செய்த போது இவர்களுக்கு எந்த பகுதியென்றும் இன்றைக்கு அந்த மக்கள் எந்த ஜாதி பெயரால் அடையாளம் காணப்படுகிறார்கள் தெரிந்திருக்கும். அதை குறிப்பிடுவதால் ஜாதி பிரச்சனை ஏற்ப்படும் என்பதால் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த கற்பனை வேம்பலை கிராமத்தில் சாயம் காய்ச்சுபவர்களும் வாழ்ந்தார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் சாயம் காய்ச்சும் தொழிலும் நெசவு தொழிலும் பட்டுநூல்காரர்கள் என்று அழைக்கப்பட்ட சௌராஷ்டிரர்கள் செய்து வந்தனர் என்று பலருக்கும் தெரியும். ஆனால் அந்த இன மக்கள் தான் என்று கூட குறிப்பிடாமல் தவிர்த்திருப்பதன் மூலம், அந்த கிராமத்தை இனங்கான முடியாத படி செய்துள்ளார். 

( சு. வெங்கடேசன் அவர்களும் தனது காவல் கோட்டத்தில் வடக்கிலிருந்து வந்த நெசவாளர்கள் என்றும் பட்டுநூல்காரர்களிடம் சேலை வாங்கினார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார் )

ஜாதி பார்க்காமல் அமெரிக்க மெசினரிகள் இந்த மக்களுக்கு கல்வியறிவு வழங்கி அவர்களை மதம் மாற்ற  பயன்படுத்தியுள்ளனர் என்பதையும் குறிப்பிடுகிறார்.

புதினத்தின் கடைசி பகுதியில் “தோழர்” என்று அழைத்து பேசும் சித்தாந்தவாதியின் பகுதியை நுழைத்திருப்பது அவசியமா என்ற கேள்வியெழுகிறது. அதில் குறிப்பிடப்படும் வாசகங்களின் மூலம் ரஷ்ய புரட்சி பற்றி குறிப்பிடுவதால் கதை 1920க்கு நகர்ந்து விட்டது என அறிய முடிகிறது. கதையில் போதகர் பயிற்சி பெற்று வரும் நபர் மனம் மாற இந்த சித்தாந்தம் வழி வகுத்தது என கொள்ளலாம்

ஆங்கிலேய ஆட்சி, ரஷ்ய புரட்சியை குறிப்பால் உணர்த்தும் ஆசிரியர் இந்திய சுதந்திர போரட்ட நிகழ்ச்சியை ஒரு வார்த்தையில் கூட உணர்த்தாதது வியப்பளிக்கிறது.

மொத்த புதினத்திலும் வட்டார வழக்கு சொற்களை பயன் படுத்தாது பலமா பலவீனமா என சரியாக தீர்மானிக்க முடியவில்லை.

ஒரு கதாபாத்திரத்தின் அடிப்படையில் முழு புதினத்தையும் அமைக்காமல் ஒரு சிறு நிலப்பரப்பில் எவ்வாறு காலம் கடந்து சென்றது என்பதன் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.

மிக எளிமையான எழுத்து நடையின் மூலம் காட்சிகளை கண் முன் நிறுத்துகிறார்.

ஒவ்வொரு கதாபாத்திரத்தின் கதையும் சிறு கதைகளாக அமைகிறது.

இந்த புத்தகத்தில் திரு.பிரபஞன், திரு. தமிழ்ச் செல்வன் திரு.ந. முருகேச பாண்டியன் அவர்கள் கூறிய கருத்துக்கள் அட்டை பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்கள் குறிப்பிட்ட அளவுக்கு மாபெரும் காவியம் அல்ல. சிறந்த புதினங்களில் ஒன்றாக குறிப்பிடலாம்.
 

No comments:

Post a Comment