Wednesday 16 April 2014

தேர்தலும் சுயேட்சைகளும்:



தேர்தலும் சுயேட்சைகளும்:

எல்லா தேர்தல்களிலும் சுயேட்சை உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர்.
பொதுமக்களில் சிலருக்கு  தேர்தலில் நிற்க வேண்டும், சட்டசபைக்கோ பாரளுமன்றத்திற்க்கோ சென்று மக்களின் பிரச்சனையை பேசி தீர்வு காண வேண்டும் என விருப்பம் ஏற்ப்படுகிறது.

பொதுமக்களில் சிலர் ஏதெனும் ஒருவிதத்தில் சற்று பிரபலமடைந்திருந்தால் (நடிகர், பாடகர் எழுத்தாளர் மற்றும் பலர்) , அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கொடுக்கும் அழுத்தத்தால் அல்லது தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெற்று விடலாம் என்ற தங்களது நம்பிக்கையாலும் போட்டியிடுகின்றனர்.

கட்சியில் இருப்பவர்கள் தங்களுக்கு கட்சி போட்டியிட வாய்ப்பு கொடுக்காத காரணத்தால் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர்.

சில சமூக (ஜாதி) அமைப்புகள் தங்களுக்கு கட்சிகள் வாய்ப்பு கொடுக்கவில்லையென்ற காரணத்துக்காகவும் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர்.

பணம் படைத்தவர்கள் தங்களது நிலையை மேலும் வளர்த்துகொள்ள , தங்களது பணத்தை செலவழித்து (பதவி கிடைத்தவுடன் சம்பாதித்து கொள்லாலாம் ) சுயேட்சையாக போட்டியிடுகின்றனர்.

சமூக விரோதிகளும் சட்டத்தின் பிடியில் சிக்காமல் இருக்க சுயேச்சையாக போட்டியிடுகின்றனர்.

சிலருக்கு எவ்வித நோக்கமும் இல்லாமல், தாங்கள் பிரபலமடைய வேண்டும் என்பதற்க்காக தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

பெரிய அரசியல் கட்சிகள் சிலரை சுயேட்சை வேட்பாளராக நிற்க வைப்பார்கள். தேர்தல் ஆனையம் வேட்பாளர்களுக்கு அனுமதிக்கும் சலுகைகளை இவர்கள் மூலம் பெற்று தங்கள் கட்சிக்கு பயன்படுத்திகொள்வார்கள். இப்படி போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் செலவை பெரிய கட்சிகள் ஏற்றுக்கொள்கின்றன. 

இப்படி போட்டியிடுகிறவர்களில் சிலர் வெற்றி பெறுகின்றனர். இவர்கள் வெற்றி பெற்ற பிறகு அவர்கள் பதவி காலம் முழுவதும் சுயேட்சை உறுப்பினராகவே இருப்பதில்லை.

தேர்தலுக்கு பிறகு யாருக்கும் ஆட்சி அமைக்க போதிய பலம் இல்லாத போது, இவர்களுக்கு யோகம் அடிக்கிறது. ஆட்சி அமைக்க உரிமை கோரும் எல்லா கட்சிகளும் இவரை தங்கள் கட்சியில் சேர அழைக்கின்றனர் அல்லது ஆட்சி அமைக்க ஆதரவு தரும் படி வேண்டுகின்றனர். இவர்களது விலையை இவர்களே நிர்ணயித்து கொள்கின்றனர். பணமோ பதவியோ எது கேட்டாலும் கிடைக்கிறது. கட்சியில் சேராமல் , பிரச்சனையில் அடிப்படையில் ஆதரவு தருகிறேன் என்று கூறி, அவ்வப்போது தங்களுக்கு வேண்டியதை சம்பாதித்து கொள்கின்றனர்.

இவற்றையெல்லாம் தவிர்த்து, எந்த கட்சியும் சரியில்லை என்று கூறி எந்த கட்சியிலும் சேரமாட்டேன், எந்த பிரச்சனைக்கும் ஆதரவு தரமாட்டேன் என்று கூறி சிலர் கடைசி வரை சுயேட்சையாகவே இருப்பார்கள். இதனால் அவர்களுக்கும் ஆதாயமில்லை அவரை தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கும் பிரயோஜனமில்லை.

சட்டசபையிலோ பாரளுமன்றத்திலோ பேசுபவர்கள் கட்சி சார்புடையவர்கள். யார் யார் பேச வேண்டும் , யார் விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதை கட்சி தீர்மானித்து வாய்ப்பளிக்கிறது. கட்சி உறுப்பினர் என்ற காரணத்தாலேயே , யாரும் நினைத்த போது விவாதத்தில் கலந்து கொள்ள முடியாது.

இந்த நிலையில் சுயேட்சைகளுக்கு பேச அல்லது விவாதத்தில் பங்கேற்க்க வாய்ப்பு எப்படி கிடைக்கும். சுயேட்சைகள் பேச வேண்டும் என்றால் சபாநாயகரின் முன் அனுமதி பெற்று அவர் வாய்பளிக்கும் போது தான் பேசவேண்டும். பொதுவாக  அரசியல் கட்சி உறுப்பினர்கள் பேசவே நேரம் கிடைக்காதபோது (நேரமின்மை காரணமாக) அவர் சுயேட்சைகளுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை. அப்படியே கொடுத்தாலும், முக்கியமான விவாதங்களுக்கு வாய்பளிப்பதில்லை. யாருமே விவாதிக்க  விருப்பமில்லாத பிரச்சனையில் இவர்கள் விவாதிக்க அனுமதியளிப்பார். அதை கேட்க முக்கியமானவர்கள் அவையில் யாரும் இருக்கமாட்டார்கள். இவரை போல வேறு வேலையில்லாதவர்கள் அல்லது வேறு ஏதேனும் நெருக்கடியின் காரணமாக சிலர் உட்கார்ந்திருப்பார்கள். பொதுவாக இப்படிபட்டவர்களுக்கு சபை முடியும் நேரத்தில் மாலை 5 மணிக்கு மேல் தான் வாய்ப்பு கொடுப்பார்கள். 

சபாநாயகர், உதவி சபாநாயகர் கூட இருக்கமாட்டார்கள். அவர்களுக்கு பதிலாக வேறு யாரவது அதிகாரி சபையை நடத்திகொண்டிருப்பார்கள். யாருமில்லாத டீக்கடையில் இவர்கள் டீ ஆற்றி இவர்களே குடித்து கொண்டிருப்பார்கள்.

இவர்கள் தொகுதி மக்களுக்காக, சம்மந்தப்பட்ட இலாக்காவின் அமைச்சரை சந்திப்பதற்க்கு கூட அனுமதி கிடைப்பதில்லை. அப்படியே சந்தித்து பிரச்சனையை கூறினாலும், அதனால் என்ன செய்து விட்டால் போகிறது, நிச்சியமாக செய்கிறேன் என்று கூறி வெளியேற்றி விட்டு, தனது செயலாளரிடம் இனிமேல் இவரை போன்றவர்களை சந்திக்க நேரம் ஒதுக்காதே என்று அவர்களை கடிந்து கொள்வார்கள்.

சுயேட்சைகள் உயர் அதிகாரிகளை அணுகினாலும் இதே நிலைமைதான். இவர்களது பிரச்சனை ஆளுங்கட்சியின் கொள்கைக்கு எதிரானதாக இருக்கும் அல்லது சம்மந்தப்பட்ட அமைச்சரின் திட்டத்திற்க்கு எதிரானதாக இருக்கும். அதிகாரி உதவ வேண்டுமென்று நினைத்தாலும் அவரால் இவருக்கு உதவமுடியாது.

உங்கள் தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளரின் கட்சி ஆட்சி அமைத்தால் உங்கள் தொகுதிக்கு சில நன்மைகள் செய்ய வாய்ப்புள்ளது.
உங்கள் தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளரின் கட்சி எதிர்கட்சியாக அமைந்தால், தொகுதியின் தேவைகளுக்கு போராட வாய்ப்புள்ளது.

உங்கள் தொகுதியில் சுயேட்சை வெற்றி பெற்றால், ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் கண்டுகொள்ளாது. சுயேட்சையால் போராட முடியாது. போராடவில்லை என்பது தான் வரலாறு.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் சுயேட்சை உறுப்பினர்களால் தொகுதிக்கு ஒன்றும் செய்ய இயலாது.

இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட சுயேட்சை உறுப்பினர்கள்  தொகுதி மக்களுக்கு ஏதேனும் நன்மை செய்துள்ளனரா ? நன்மை செய்துள்ளேன் என்று இரண்டாவது முறை வோட்டு கேட்டு வந்துள்ளனரா ? தொடர்ந்து இரண்டு மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுயேட்சை உறுப்பினர் யாரவது உள்ளனரா ?

சட்டசபை அல்லது பாரளுமன்ற உறுப்பினர் ஆவதன் மூலமாக தான் மக்களுக்கு சமூக சேவை செய்ய முடியும் என்று கருதினால், ஏதேனும் கட்சியில் சேர்ந்து போட்டியிட்டால் தான் , வெற்றி பெற வாய்பிருக்கும். கட்சியின் கொள்கைகள் அல்லது செயல் திட்டங்கள் பிடிக்கவில்லையென்றாலும் , கட்சி சார்பாக போட்டியிட்டால் தான் வெற்றி பெற வாய்ப்பு கிடைக்கும்.

குறிப்பிட்ட தொகுதியில் ஒரு சமூகத்தை சார்ந்தா வாக்காளர்கள் அதிகம் இருக்கும் காரணத்தால், அந்த சமூகத்தை சார்ந்தவர் சுயேட்சையாக போட்டியிட முனைகிறார். அந்த சமூக மக்கள் அனைவரும் அவருக்கே வாக்களிப்பார்கள் என நம்புகிறார். வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறார். பொது வெளியில் சாதி பாகுபாடு கூடாது என்று பேசும் இவர்கள், சாதி அடிப்படையில் தனக்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் வைப்பது இரட்டை வேடம். இப்படி சாதி அடிப்படையில் தனக்கு வாக்களிக்க வேண்டும் என கோருபவர்கள், சாதி அரசியல் செய்யும் கட்சிகளில் சேர்ந்து தேர்தலை சந்திக்கலாமே ?

பொதுவாக சுயேட்சைகளிடம் பண பலமும் ஆள் பலமும் கிடையாது. எந்த காரணத்திற்க்காக சுயேட்சையாக போட்டியிட்டாலும், இன்றைய நிலையில் சில லட்ச ரூபாய்களை செலவழிக்க வேண்டியுள்ளது. அவர்கள் சேர்த்து வைத்துள்ள சொந்த பணத்திலிருந்து செலவழித்தாலும் சரி அல்லது கடன் வாங்கி செலவழித்தாலும் சரி, வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியாது.

தேர்தலில் வெற்றி பெற்று விட்டால், செலவழித்த பணத்தை எப்படியாவது சம்பாதித்து விடலாம். ஆனால், தோல்வியடைந்து விட்டால் இழந்த பணத்தை மீட்பது எப்படி ? 

இப்படி சூதாட்டம் போன்ற அரசியலில் பணத்தை இழப்பதை விட, தங்களிடமிருக்கும் பணத்தை கொண்டு தாங்கள் வாழும் பகுதியில் சிறிய அளவில் சமூக சேவை செய்தாலும் மிகுந்த மன நிறைவை தரும்.

சமூக சேவை செய்ய பணமும் பதவியும் அதிகாரமும் தேவையில்லை. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என நினைத்தால் எப்படி வேண்டுமானலும் சேவை செய்யலாம்.

பெரிய கட்சிகளின் மீது இருக்கும் வெறுப்பின் காரணமாக, சிறிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கோ அல்லது சுயேட்சைகளுக்கோ வோட்டளிப்பது சரியா என யோசித்து வாக்களியுங்கள்.

No comments:

Post a Comment