Saturday 26 April 2014

அவனி சுந்தரி - சாண்டில்யன்



அவனி சுந்தரி – சாண்டில்யன் 

திரு. சாண்டில்யன் எழுதிய அவனி சுந்தரி எனும் நாவல் ராணி முத்து பதிப்பகத்தின் சார்பில் ரூ.1.25 வெளியிடப்பட்டிருக்கிறது. எப்போது வெளியிடப்பட்டது என தெரியவில்லை. 

புறநானூறு நூலிலிருந்து கண்ட முக்கிய பாடல்களின் அடிப்படையில் திரு.கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியாரும் டாக்டர்,என் சுப்பிரமணியமும் எடுத்து தந்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்த நாவல் எழுதப்பட்டதாக திரு. சாண்டில்யன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

சோழர் குலத்து பங்காளி சண்டையின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள நாவல். ஒரு பங்காளிக்கு உதவும் வகையில் கன்னர நாட்டு இளவரசி மற்ற பங்காளி நாட்டுக்கு வந்து , அந்நாட்டை ஆளும் சகோதரர்களுக்கிடையே பகைமையை ஏற்படுத்தி, சோழ நாட்டை அடைவதே கதையின் கரு. கன்னர நாடு என்பது எந்த பகுதி என தெரியவில்லை. ஒரு வேளை இன்றைக்கு கர்நாடகம் என்று அழைக்கப்படும் பகுதியாக இருக்கலாம்.

இதில் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி என்ற பெயர் மாறி மாறி வருவதால் சற்று குழப்பம் ஏற்ப்படுகிறது. மேலும், பொதுவாக இது மாதிரி சரித்திர நாவல்களில் மன்னனின் போர் திறமையும் அவனது அறிவு திறமையையும் வைத்தே கதை முன்னெடுத்து செல்லப்படும். சில சமயங்களில் அவரது மந்திரி அல்லது தளபதி அல்லது மன்னரின் மனைவி, தமக்கை போன்றோரின் அறிவு திறனில் அடிப்படையில் அந்த மன்னனின் புகழ் பாடப்படும்.

இந்த நாவலில் கோவூர் கிழார் எனும் புலவரின் அறிவுதிறன் அடிப்படையில் மன்னன் வெற்றி கொள்வதாக அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எதிரி மன்னன், இந்த புலவர் எழுதிய ஒரு பாடலால், தனது பெயர் சரித்திரத்தில் அவப்பெயருடன் குறிப்பிடப்படும் என பயந்து ஓடி விடுவதாகவும், பின்பு அவனை துரத்தி சென்று அவனை கொன்று வருவதாகவும் எழுதப்பட்டுள்ளது.

நாட்டை பிரிக்க வந்த கன்னரக இளவரசி மேல் காதல் கொண்டு அவளையே மணப்பதாக கூறி கதை முடிவடைகிறது.

திரு.சாண்டில்யனின் தலைசிறந்த சரித்திர நாவல்களை படித்தவர்களுக்கு இது மிகவும் ஏமாற்றம் தரும் நாவல். 

இவர் சரித்திர நாவல்கள் எழுதிய தருணங்களில் மிகவும் புகழ் பெற்றவர். காற்றுள்ள போதே தூற்றிகொள் என்பது போல புகழின் உச்சியில் இருந்த போது தனக்கு கிடைத்த சந்தர்பங்களை எல்லாம் பயன்படுத்தி கொண்டு, சரித்திர நாவல் என்ற பெயரில் இது போன்ற சிறு நாவல்களை சிறு பத்திரிக்கைகளில் எழுதி பேரும் பணமும் பெற்றிருப்பார் என தோன்றுகிறது.

இந்த நாவல் அவருக்கு எந்த விதத்திலும் புகழ் சேர்த்திருக்க முடியாது.
                                                            
இந்த நாவலை இனையத்தில் 20.04.2014 அன்று படித்தேன்.

No comments:

Post a Comment