Wednesday 24 December 2014

நகுலன் கதைகள்



எழுத்தாளர் திரு. நகுலனின் எட்டு கதைகள் அடங்கிய புத்தகம் படிக்க வாய்ப்பு கிடைத்தது.
1. நிழல்கள் 1965
2. நினைவுப்பாதை 1972
3. நாய்கள் 1974
4. நவீனன் டயரி 1976
5. சில அத்தியாயங்கள் 1983
6. இவர்கள் 1992
7. வாக்கு மூலம் 1992
8. அந்த மஞ்சள் நிற பூனைக்குட்டி 2002

இலக்கியம் என்றால் என்ன என்ற குழப்பம் எனக்கு தொடர்ந்து இருந்தாலும் கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து புத்தகங்கள் படித்து வருகிறேன். இதன் மூலம் ஏதேனும் ஒரு கால கட்டத்தில் இலக்கியம் என்றால் என்ன என்பது புரியும் வாய்ப்பு ஏற்ப்படும் என்ற நம்பிக்கை.
எந்த புத்தகமாக இருந்தாலும் முழுவதுமாக படித்து முடித்து விடுவேன். சில புத்தகங்களை தொடர்ச்சியாக படித்து விட்டு தான் கீழே வைப்பேன். சிலவற்றை சிறிது சிறிதாக படிப்பேன். பொதுவாக முழுமையாக படித்து விடுவேன்.
முழுமையாக படிக்க இயலாத புத்தகம் இந்த ஒன்று தான். இதில் இருந்த நிழல்கள், நினைவுப்பாதை இரண்டு கதைகளை படிப்பதற்க்குள் எனக்கு ஏற்ப்பட்ட அனுபவங்களை வெளிப்படையாக கூறினால், யாராவது வழக்கு தொடரலாம் அல்லது அடிக்க வரலாம். என்னால் தொடர்ந்து படிக்க இயலவில்லை மற்ற கதைகளை படிப்பதில்லை என முடிவு செய்து விட்டேன்.
படித்த கதைகளை பற்றி விமர்சனம் எழுதலாம் என நினைத்தால் என்ன படித்தோம் என்று நினைவுக்கு வர மறுக்கிறது. இத்தனைக்கும் பத்து நாட்களுக்கு முன்பு தான் படித்தேன். இந்த நிலையில் தற்போது சென்னையில் நடந்து வரும் புத்தக கண்காட்சியில் ஒரு பதிவாளர் இவர் எழுதிய “நாய்கள்” என்ற கதை புத்தகத்தை விரும்பி விலை கொடுத்து வாங்கியதாக படித்தேன்.
எனக்கு புரியாத ஒரு புத்தகத்தை சிலர் இன்றைக்கும் விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்றால் அதில் ஏதேனும் சிறப்புகள் இருக்கும் என தோன்றியது. எனவே, இனையத்தில் இவரைப் பற்றியும் இவரது எழுத்துக்களைப் பற்றியும் யார் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம் என தேடிப்பிடித்து படித்தேன்.
இதற்க்கிடையில் அந்த “ நாய்கள் ‘ என்ற கதையையும் படித்தேன். இது ஒரு சிறந்த கதை என்று தான் இனையத்தில் சிலர் எழுதியிருந்தனர். எனக்கு சுத்தமாக புரியவில்லை.
இதை எழுதுவதற்க்கு ஒரு மணி நேரம் முன்பு ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தேன். ஒரு ஓட்டையை முகர்ந்து கொண்டு எட்டு நாய்கள் விரட்டிக்கொண்டிருக்கும் காட்சியை பார்த்தேன். என்னுடன் அங்கு நின்று கொண்டிருந்த பத்து பதினைந்து நபர்களும் பார்த்து கொண்டிருந்தனர். எந்த நாய்க்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆவல் பார்த்துக்கொண்டிருந்த அனைவருக்கும் இருந்தது. போக்கு வரத்து அதிகமாகி விட்டதால் நாய்களும் மனிதர்களும் கலைந்து சென்று விட்டனர்.
ஏதோ ஒரு நாய்க்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். பார்த்து கொண்டிருந்த பத்து நாய்களில் பலவற்றுக்கு இந்த டெல்லியின் ஏழு டிகிரி குளிரில் இன்று இரவு வாய்ப்பு கிடைக்கும்.
“நாய்கள்” கதையிலும் கிட்ட தட்ட இது தான் சொல்லப்பட்டிருப்பதாக தோன்றுகிறது. ஆனால் சொன்ன விதம் கொடுமை. புரியவில்லை.

தமிழ் மொழி எழுத படிக்க பேச தெரிந்தாலே அனைத்தையும் படித்து புரிந்து கொள்ள முடியும் என்ற எனது எண்ணத்தை சிதறடிக்க செய்து விட்டார். இவர் எழுதியுள்ள மொழி நடையே பிடி படவில்லை புரியவில்லை என்கிற போது அதில் உள்ள இலக்கிய தன்மையை புரியாதது ஒன்றும் ஆச்சரியமில்லை.
இவரது எழுத்துக்கள் நிஜத்தையும் புனைவும் கலந்தது என்று கூறப்படுகிறது. ஒரு வித மனநிலை பாதிக்கப்பட்டவர் அல்லது வயதான நிலையில் சுய நினைவில்லாமல் , பழைய நினைவுகளையும் தற்கால நிகழ்ச்சிகளையும், கற்பனைகளையும் கலந்து பேசிக்கொண்டிருப்பது போல உள்ளது இவரது எழுத்துக்கள்.
எழுத்தில் இது ஒரு யுக்தி என்று சொல்லப்படலாம் அல்லது கதை சொல்லும் பாணியில் இது ஒரு புதிய முயற்ச்சி என்று சொல்லலாம். ஆனால் வாசகனுக்கு எந்த அளவு அது சென்றடையும் என்பதை அவர் உனர்ந்திருப்பாரா என தெரியவில்லை. வாசகனுக்கு புரியாமல் அல்லது அவனை குழப்புவதின் மூலம் தன்னுடைய படைப்புகளை இலக்கிய படைப்புகளாக அவர் சமூகத்தின் முன் வைத்திருந்தாலும், என்னை பொருத்த வரை சாதாரண வாசகனுக்கு புரியாது.
வாசகனோ அல்லது வேறு எழுத்தாளர்களோ தனக்கு புரியவில்லை அல்லது பிடிக்கவில்லை என்று நேரடியாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அப்படி ஒப்புக்கொண்டால், அவர்களது இலக்கிய அறிவும் ரசனையும் கேள்விக்குறியாக்கப்படுவதுடன் ஏளனத்துக்கும் ஆளாவர்கள். எனவே, அவரைப்பற்றி எழுதியவர்கள் அவரது படைப்பை பற்றி எழுதியவர்கள் , பொதுவாக அவரை பற்றியே எழுதியுள்ளார்கள். அவரது எழுத்துக்கள் மூலம் என்ன அறிந்து கொண்டார்கள் என்பதை இனையத்தில் யாரும் எழுதி வைக்கவில்லை.
பத்து சிறந்த வாசகர்களும் பத்து இன்றைய எழுத்தாளர்களும் அவரது கதைகளை படிக்க வைத்து விவாதிக்க ஏற்ப்பாடு செய்தால் அதை கேட்கும் மற்றவர்கள் நேரடியாக அவர்களே சென்று மனநோய் மருத்துவமனையில் சேர்ந்து விடுவார்கள்.
எனக்கு இலக்கியம் புரியவில்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment