Tuesday 12 November 2013

சௌராஷ்ட்ரா சமூகம் - ஜாதிகள்

சௌராஷ்ட்ரா ஜாதிகள்::


சௌராஷ்ட்ரா மொழி பேசும் சமூக மக்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வசிக்கின்றனர்..
வரலாற்று குறிப்புபடி இவர்கள் 1300 வருடங்களுக்கு முன்பு சௌராஷ்ட்ரா தேசத்திலிருந்து (இன்றைய இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் சௌராஷ்ட்ரா பகுதியிலிருந்து) வந்தவர்கள்.
எதற்காக இங்கு குடிபெயர்ந்தார்கள் என்பதற்கு இருவைகையான காரணங்கள் கூறப்படுகின்றன.
1) விஜய நகர பேரரசின் அழைப்பை ஏற்று, மன்னர் வம்சத்திற்கு ஆடை நெய்து கொடுப்பதற்க்காக அழைத்து வரப்பட்டனர்.
2) கஜினி முகமது படையெடுப்பின் போது, அங்கிருந்து அகதிகளாக வெளியேறியவர்கள் இங்கு வந்து வாழ்க்கை அமைத்து கொண்டனர் என்பது.
முதலில் கூறப்பட்டுள்ள காரணத்தின்படி பார்த்தால், நெசவாளர்கள் அதைசார்ந்த தொழில் செய்பவர்கள் சிலரை அழைத்து வந்திருந்தால், அவர்கள் மூலம் இவ்வளவு மக்கள் தொகை பெருக்கம் ஏற்பட்டிருக்குமா ? வாய்பில்லை என்றே தோன்றுகிறது. எனவே , முதல் கூற்றுப்படி இவர்கள் இந்த முறையில் வந்திருக்கமுடியாது.
எனவே, இரண்டாவது காரணமே சரியென தோன்றுகிறது. போர் காலங்களில் பயந்துகொண்டு வெளியேறிய அகதிகளே சௌராஷ்ட்ரா சமூக மக்கள்.
இப்படி அகதிகளாக வெளியேறுபவர்கள், சௌராஷ்ட்ரா தேசத்திலிருந்து, தமிழகத்தை குறிவைத்து வெளியேறியிருக்கமாட்டார்கள். உயிருக்கு பயந்து கும்பலாக வெளியேறியிருப்பார்கள்.
தமிழகத்தில் வந்து சேரும் வழியில் பல்வேறு இடங்களில் பல மக்கள் தொடர்ந்து பயணம் செய்ய இயலாமலும், நோய்வாய்பட்டும் பல இடங்களில் தங்கியிருப்பார்கள். பிறகு அந்த இடமே பிடித்திருந்தால் அங்கேயே நிரந்தரமாக தங்கியிருப்பார்கள். மேலும், பல இடங்கள் பலருக்கும் பிடித்த காரணத்தால் பல்வேறு இடங்களில் தங்கியிருப்பார்கள்
இப்படி பயணம் மேற்கொண்ட போது, உறவுகள் பிரிந்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
இவர்கள் எப்படி பயணம் செய்திருப்பார்கள். பெரும்பான்மையினர் கால்நடையாக வந்திருப்பார்கள். சிலர் குதிரைகளின் மீதும், குதிரைவண்டி, மாட்டு வண்டி மூலமும் வந்திருப்பார்கள். வசதி படைத்தவர்கள் அந்த அகதி நிலையிலும் பல்லக்கிலும் வந்திருக்க வாய்புண்டு.
போர்காலத்தில் அகதிகளாக வெளியேறுபவர்களில் அனைத்து தரப்பு மக்களும் இருப்பார்கள். நிச்சியமாக ஒரு தொழில் செய்யும் மக்கள் மட்டும் வெளியேறியிருக்கமாட்டார்கள்.
மன்னர் ஆட்சி காலத்தில் எல்லா பகுதிகளிலும் எல்லா வர்ண மக்களும் வாழ்ந்திருப்பார்கள். அப்படி பார்க்கும் போது, சௌரஷ்ட்ரா பகுதியிலிருந்து வெளியேறிய மக்களில் நான்கு வர்ண மக்களும் இருந்திருப்பார்கள்.
பிராமினர், சத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர் எனப்படுபவர்கள் அனைவரும் தான் வெளியேறியிருப்பார்கள் .மன்னர் ஆட்சி காலத்தில் இந்த நான்கு வர்ண மக்கள் இருந்திருப்பதால், அவர்களிடையே ஜாதி பெயர்களும் இருந்திருக்கும்.
பிராமண வகுப்பில் இரு பெரும் பிரிவுகள் இருக்கிறது. அவர்களில் உயர்வு தாழ்வு இருக்கிறது. ஆனால், மற்ற வர்ண மக்களுடன் தொடர்பு கொள்ளும் போது ஒரே பிரிவாக, பிரமண பிரிவாக கூறிகொள்வர். இவர்கள் தான் உயிருக்கு பயந்து முதலில் அகதிகளாக வெளியேறியிருப்பார்கள்.
சத்திரியர்களில் பொதுவாக போர்களில் ஈடுபடுபவர்கள் என்றும் போர்குணங்கள் கொண்டவர்கள் என்பதும் அறிந்ததே. கூடியவரையில் கஜினியின் போர்காலத்தில் போரிட்டு மீதமிருந்தவர்கள், உயிருக்கு பயந்தவர்கள் வெளியேறியிருக்கலாம். பிராமணர்களுக்கும், சத்திரியர்களுக்கும் வழிபயணத்தில் பாதுகாப்பு கொடுக்கும் பொருட்டும் வெளியேறியிருக்கலாம்.
வைசியர்கள் பொதுவாக வியாபாரிகளாக, செல்வந்தர்களாக வாழ்பவர்கள் என்பது நம்பிக்கை. போர் காலங்களில் வேறு ஆபத்து காலங்களிலும், அவர்களது செல்வங்களை பாதுகாக்கும் பொருட்டு , வேகமாக வெளியேருபவர்களில் குறிப்பிடதக்கவர்.
சூத்திரர்கள் எனப்படுபவர்கள், மற்ற மூன்று வர்ண மக்களை சார்ந்து வாழ்பவர்கள். எனவே  பிராமணர்கள், சத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் வெளியேறியபோது இவர்களும் அவர்களுடன் வெளியேறியிருப்பார்கள்.
எனவே, போர்காலத்தில் அகதிகளாக வெளியேறியவர்களில் அனைத்து வர்ண மக்களும் இருந்திருப்பார்கள். அவர்களில் செய்யும் தொழிலை பொறுத்து பல்வேறு ஜாதி பெயர்கள் இருந்திருக்கும். சுருங்கசொன்னால், சௌராஷ்ட்ரா மொழி பேசிய மக்களில் அனைத்து தொழில் செய்பவரும் ஜாதி பெயரை சமந்து கொண்டுதான் வெளியேறியிருப்பார்கள்.
ஆனால், தமிழ் நாட்டு சௌராஷ்ட்ரா வரலாறு என்ன சொல்கிறது. சௌராஷ்ட்ரா பகுதியிலிருந்து வெளியேறி இங்கு வந்தவர்கள் என்றும், அவர்கள் பேசும் மொழிக்கு சௌராஷ்ட்ரா / சௌராஷ்ட்ரினி  பெயர் என்றும் கூறுகிறது. அதாவது இந்த சௌராஷ்ட்ரா என்பது பொதுவில் ஒரு ஜாதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, அதில் நான்கு வர்ணகளின் அடிபடையில் அமைக்கப்பட்ட ஜாதிகள் இல்லையென்பது போல கூறப்படுகிறது. மொழிவாரி சிறுபான்மையினர் ஜாதி என்றும் அதன் அடிப்படையில் வாழ்வியல் முறை அமைக்கப்பட்டுள்ளதாக சரித்திரம் எழுதப்பட்டுள்ளது.
ஆரம்பகாலங்களில், சரித்திரம் எழுதியவர்கள் இந்த மொழி பேசுபவர்கள் ஒரு மொழி இனமாக  சமூகமாக காட்டப்பட்டுள்ளனர். அதன் உட்பிரிவுகள் குறித்து வெளிகாட்டாமல், மொழி இன சமூகமாக அடையாளப்படுத்திகொண்டுள்ளனர். அதற்கு அந்த காலகட்டங்களில் இருந்த பல்வேறு அரசியல், சமூக நிர்பந்தங்கள் இருந்திருக்ககூடும். அல்லது வாழ்க்கை போரட்டத்தில் அது முக்கிய விசயமாக இருந்திருக்காது. அல்லது அறியாமையாக இருந்திருக்கலாம். ஒற்றுமையை காண்பித்ததன் மூலம் சில பல அனுகூலங்கள் அமைந்திருக்கலாம்.ஆனால், அனைத்து தொழில் செய்பவர்களும் அதன் ஜாதி பெயரை தாங்கி கொண்டுதான் இங்கு வந்து வாழ்க்கையை அமைத்துகொண்டுள்ளனர்.

சௌராஷ்டிரர்கள் நெசவு தொழில் செய்பவர்கள் என்பது எப்படி ஏற்ப்பட்டது அன்றைய காலகட்டங்களில், அனைத்து மொழிபேசுபவர்களும் முன்று முக்கிய தொழில் செய்தே வாழ்க்கை முறையை அமைத்துகொண்டுள்ளனர். அது மக்களின் முன்று அடிப்படை தேவைகளான, உணவு, உடை மற்றும் இருப்பிடம். 1000 ஆண்டுகளுக்கு முன்பு என்ற அடிப்படையில் இவைகளை கவனிப்போம்.
உணவு என்பது விவசாயம் சார்ந்தது. விவசாயம் செய்ய நிலம் வேண்டும். அகதிகளாக வந்து தஞ்சம் அடைந்தவர்கள் இந்த தொழிலை வந்தவுடன் நிலம் வாங்கி செய்திருக்க முடியாது. விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில்களில் கூலிவேலை செய்து வாழ்க்கை நடத்தியிருக்கலாம்.
இருப்பிடம் என்பது வீடு. அன்றைய கால கட்டங்களில், பொதுமக்களின் இருப்பிடம் பொதுவாக குடிசைகளாகவே இருந்திருக்கும். சில ஓட்டு வீடுகள் இருந்திருக்கலாம். பொதுவாக கல்வீடுகள் மாளிகைகள் இருந்திருக்க முடியாது. குடிசைகள் கட்ட தனிப்பட்ட திறமை படைத்த தொழிலார்கள் தேவையில்லை. பொதுமக்கள் சிலரின் உதவியுடன் அவர்களே குடிசைகளை கட்டிகொள்வார்கள். எனவே இங்கு வந்த சௌராஷ்ட்ரா மக்கள் இத்தொழிலில் சிறப்புரிமை பெற்றவர்களாக இருந்திருக்கமுடியாது.
அடுத்து மிகவும் முக்கியமானது உடை. உணவு இல்லாமல் கூட ஒருநாள் இரண்டு நாள் சில சமயங்களில் வாழ முடியும். ஆனால் ஆடை இல்லாமல் மனிதனால் வாழமுடியாது. ஆடை தயாரிப்பது முக்கிய தொழில். எல்லோரும் கூலி வேலை செய்ய முடியும். ஆனால், ஆடை நெய்ய முடியாது. அதற்கு சிறப்பு பயிற்சி தேவை. அதில் வண்ணங்கள் ஏற்றுவது, வேறு சில வேலைபாடுகள் செய்வதற்க்கு தினித்திறமை வேண்டும். சௌராஷ்ட்ரா பகுதியிலிருந்து வந்தவர்களில் பலருக்கு இந்த தொழிலில் நல்ல அனுபவம் அமைந்திருக்கும். ஏற்கனவே, சொல்லப்படும் வரலாற்றில், சௌராஷ்ட்டிரர்கள் நெசவு தொழிலில் சிறந்தவர்கள் என கூறப்படுவதால், மன்னர்கள் மற்றும் செல்வந்தர்கள் நெசவாளர்களுக்கு தொழில் செய்ய ஆதரவு கொடுத்ததுடன் உதவிகளும் செய்திருப்பார்கள். வேறு வேலை செய்ய வாய்பும் ஆதரவில்லாமல், வந்திருந்த மக்கள் நெசவாளிகளுக்கு உதவியாகவும் அதன் உப தொழில்களில் ஈடுபட்டும் வாழ்வை அமைத்து கொண்டனர். எனவே பெரும்பாலனோர் செய்த தொழிலே சௌராஷ்ட்ரர்களின் தொழில் என ஆகிவிட்டது.
வாழ்க்கை நிலைபடுத்தபட்ட பின்பு, அவர்களில் ஜாதி பிரிவினைகள் நிச்சியமாக எழுந்திருக்கும். இந்த நிலையில் அவர்கள் என்ன செய்திருப்பார்கள் என்பது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.
அந்த காலகட்டங்களில் கல்வியறிவு குறிப்பிட்ட வகுப்பினருக்கே கிடைத்தது.. அதில் ஆரம்பகாலமுதலே முன்னனியில் இருப்பவர்கள் பிராமனர்களே. அவர்களது தொழில் கல்விகற்பது, கல்வி கற்பிப்பது  கடவுள் வழிபாடு மற்றும் புரோகிதம். இதை உயர்ந்த தொழில் என்றும் மற்ற வகுப்பினரை விட ஜாதியை விட உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் இவர்களுக்கு உண்டு. இவர்களது தொழில் மற்ற வகுப்பினரை, ஜாதியினரை சார்ந்தது தான் என்றாலும் இவர்கள் அவர்களிடமிருந்து தனித்து வாழவே எப்போதும் விரும்பியுள்ளனர். ஆனால் வந்த இடத்தில் இருந்த உயர் வகுப்பினர் என்று சொல்லப்படும் தமிழ் மொழி பேசிய பிராமணர்கள் சௌராஷ்ட்ரா மொழி பேசும் பிராமணர்களை அவர்களுக்கு இணையான பிராமணர்களாக ஏற்றுகொள்ளவில்லை. பின்பு, ராணி மங்கமாள் சாசனப்படி சௌராஷ்ட்ரா பிராமனர்களும் தமிழ் பிராமனர்களுக்கு இனையானவர்கள் என்று பிரகனபடுத்தப்பட்ட பின்பு ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.
சௌராஷ்ட்ரா மொழி இன சமூகத்திலும் ஜாதிகள் உண்டு என்பதற்கு இது ஒரு சான்று. இதற்கு உதாரணமாக நமது மக்கள் ஒற்றுமைக்காக கூட்டப்பட்ட முதல் கூட்டமே பிராமண மாநாடு என்று கூட்டப்பட்டுள்ளது. பிராமணர்கள் என்று கூறப்பட்டதன் மூலம் வேறு ஜாதியினரும் சௌராஷ்ட்ரா மொழி இன சமூகத்தில் இருந்துள்ளனர் என்று உறுதியாகிறது.
அடுத்தபடியாக, அகதிகளாக வெளியேறிய போது, அனைத்து ஜாதியினரும் மொத்தமாக வெளியேறியிருந்தாலும், இங்கு வந்து வாழ்க்கை நிலைபடுத்தபட்ட பின்பு பிரிவினைகள் வந்து விட்டது. சூத்திரர்கள் எனப்படும் ஒதுக்கப்பட்ட இனம் இங்கு வந்த பின்பும் ஒதுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தனியாக வாழ்ந்துள்ளனர். எப்படி பிராமணர்கள் தமிழ் பிராமணர்களுக்கு இனையானவர்கள் என்று சொல்லப்பட்டதோ, அதே போல சௌராஷ்ட்ரா மொழி இன சூத்திரர்களும் இங்கிருந்த சூத்திரர்களுடன் இனைந்து வாழ ஆரம்பித்துள்ளனர். இன்றைக்கும் அவர்கள் அரை சௌராஷ்ட்ரார்கள் என்று அழைக்கப்படுகின்றனர். மற்ற சௌராஷ்ட்ரா மக்களுடன் இனைந்து வாழ அனுமதிக்கப்படவில்லை.
சௌராஷ்ட்ரா மொழி இன சமூகத்தில் ஜாதிகள் இல்லையென்ற தோற்றம் இருந்தாலும், சூத்திரர்கள் முழுமையாக மொழி இன சமூகத்திலிருந்து அப்புறபடுத்தப்பட்டதால், சௌராஷ்ட்ரா மொழி இன சமூகத்தில் ஜாதிகள் இல்லையென்ற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.
பிராமணர்கள் தங்களை தனியாக அடையாளப்படுத்தி கொண்டாலும், அவர்களால், சத்திரியர், வைசியர் ஜாதி மக்களிடமிருந்து தனித்து வாழ இயலவில்லை.  எனவே, சௌராஷ்ட்ரா மொழி இன பிராமணர்கள், வைசியர்கள், சத்திரியர்கள் தங்களது தொழில் சார்ந்த ஜாதி வேறுபாடுகளை களைந்து இனைந்து வாழ்கின்றனர். இந்த மூன்று பிரிவு மக்களும் ஒரே சடங்கு சம்பிரதாயங்களை கடைபிடித்து, திருமண உறவுகளை ஏற்படுத்திகொண்டு , ஜாதிகளற்ற மொழி இன சமூக பிரிவாக வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால், சௌராஷ்ட்ரார்கள் அனைவருக்கும் குடும்ப பெயர்கள் உண்டு. நூற்றுக்கும் மேற்ப்பட்ட குடும்ப்பெயர்கள் உள்ளது என்று கருதுகிறேன். ஆனால், குடும்ப பெயர்கள் செய்யும் தொழிலின் அடிப்படையில் அமைந்ததாக தெரியவில்லை. அவை காரணப்பெயர்களாக இருக்கின்றன. இந்த குடும்ப பெயர்கள் எப்படி ஏற்பட்டது என்பதற்க்கு எந்த விளக்கமும் இல்லை. எப்போது, எங்கு , யாரல் ஏற்படுத்தப்பட்டது என்று யாருக்கும் தெரியாது. சௌராஷ்ட்ரா பிரதேசத்திலிருந்து வெளியேறிய போதே இந்த பெயர்கள் இருந்ததா அல்லது இங்கு வந்த பிறகு ஏற்ப்பட்டதா என்பதும் தெரியவில்லை. சௌராஷ்ட்ரா பிரதேசத்திலேயே இருந்தது என்றால், அதன் பொருள் என்ன. அவை ஜாதி பெயர்களா. அவை ஜாதிபெயர்கள் என்றால் , செய்யும் தொழில் மூலம் வகுக்கப்பட்ட பெயர்களா ? இவைகளுக்கு இன்றைக்கு விடை காண முடியாது.
இங்கு வந்த பின்பு ஏற்பட்ட பெயர்களாக இருந்தாலும், அந்த பெயர்கள் காரணமாக உயர்வு தாழ்வு இல்லை. அனைவரும் சமமாகவே கருதப்படுகின்றனர். திருமண உறவுகள் குடும்ப பெயர்கள் அடிப்படையில் நடைபெறுவதில்லை. சடங்கு சம்பிரதாயங்கள், அனைத்து குடும்ப பெயர் கொண்டவர்களுக்கும் ஒன்றே. வித்தியாசம் ஏதும் கிடையாது. கோத்திரங்களின் அடிப்படையிலும் , பொருளாதர அடிப்படையில் மட்டுமே திருமண உறவுகள் ஏற்படுகின்றன. ஆனால், இதே மொழி இன சமூகத்தினர் தமிழ் நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் வாழும் மக்களிடேயே திருமண உறவுகளை ஏற்படுத்திகொள்ள தயங்குகின்றனர்.
அது ஜாதி சார்ந்த வேறுபாடு காரணமல்ல. பேசும் மொழி ஒன்றாக இருப்பினும், சில பல சொற்கள் வேறுபாடுகளுடன் இருப்பதுடன் , பழக்க வழக்கங்களில் வித்தியாசம் இருப்பதும் காரணம்.

புறப்பட்ட இடத்தில் சௌராஷ்டிரர்களிடம் ஜாதிகள் இருந்திருந்தாலும், தற்போது வாழும் இடத்தில் தொழிலை அடிப்படையாக கொண்ட ஜாதி பிரிவுகள் இல்லை.
சௌராஷ்டிரர்களிடையே குடும்ப பெயர்களையே ஜாதிபெயர்கள் என்று கூறி அதில் உயர்வு தாழ்வு ஏற்படுத்த யாரேனும் முயற்சி செய்தால் அதை சௌராஷ்டிரர்கள் ஒப்புகொள்ள மாட்டார்கள்.
ஆனால், சமூக முன்னேறத்திற்காக அரசிடமிருந்து சலுகைகளை பெறுவதற்காக சௌராஷ்ட்ரர்கள் மொழிவாரி சிறுபான்மையினர் என்று அடையாளப்படுத்தி கொண்டு சலுகைகளை பெற்றுள்ளனர். தொழில் சார்ந்த ஜாதி அடிப்படையில் சலுகைகளை பெறவில்லை. எந்த பிரிவில் எந்த விதமான சலுகைகள் கொடுப்பது என்ற நிலையில், தமிழ் மக்களுடன் பொருளாதார நிலையிலும், மொழி காரணமாக முன்னேற்றம் அடைய முடியாமல் பின் தங்கிய நிலையில் இருந்த காரணத்தாலும் சௌராஷ்ட்ரா, மொழி இன சமூகத்தைபின் தங்கியவர்கள் “ (backward class) பிரிவில் இனைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அரசு சலுகைகளை வழங்கியுள்ளது.
எனவே சௌராஷ்ட்ரா என்பது ஜாதியல்ல. சௌராஷ்ட்ரா என்பது ஒரு மொழி இன சமூகம். ஆனால், காலபோக்கில் அது பொதுபெயராக மாறி ஜாதியாக தமிழ்நாட்டில் உருவாகிவிட்டது. சௌராஷ்ட்ரா என்பது மொழி. சௌராஷ்ட்ரா என்பது வாழும் நிலப்பகுதியின் பெயர். ஜாதி பெயர் அல்ல.
சரி அதனால் என்ன ? இப்போது என்ன பிரச்சனை ? ஏன் இந்த விளக்கம் ?
காரணத்தை அடுத்த பகுதியில் தெரிவிக்கிறேன். அதற்கு முன்பாக இது குறித்து உங்களது கருத்துகளை தெரிவிக்கவும். மற்ற இடங்களுக்கும் பகிரவும்



1 comment:

  1. முதுல்லொ அவ்ரெ ஜாதும் மெனத்தெ ஹிப்3பி3 ர:வட்ணொ. அவ்ரெ வத்தாம் மெனி மென்னொ.

    ReplyDelete