Saturday 15 March 2014

பருக்கள் வந்த பருவத்தில்



1970ளின் ஆரம்பங்களில் பள்ளி இறுதி வகுப்பை நோக்கி எவ்வித பயமும் இல்லாமல் நகர்ந்து கொண்டிருந்த காலகட்டம்.

அரசு பள்ளிகளில் தமிழ் வழி கல்வி கற்றுக்கொண்டிருந்த நான் 9ஆம் வகுப்பில்  தியாகராயா நகரில் அமைந்திருந்த THE RAMAKRISHNA MISSION (BOYS) HIGH SCHOOL, MAIN, T.NAGAR பள்ளியில் சேர்க்கப்பட்டேன். அதுவும் திமிழ் வழி கல்வி பள்ளி தான். 10 மற்றும் 11ஆம் வகுப்பில் மட்டும் சிறப்பு பாடம் (ELECTIVE SUBJECT) ஆங்கிலத்தில் படிக்க வேண்டும். அப்போது 10 + 1 + 3 கல்வி முறை. அதாவது 11வது வகுப்பு வரை பள்ளிகளில் படிக்க வேண்டும். பின்பு ஒரு வருடம் P.U.C  எனப்படும் PRE UNIVERSITY COURSE கல்லூரிகளில் படிக்க வேண்டும். பின்பு 3 வருட பட்டப்படிப்பு அல்லது 5 வருட படிப்புகள் ஏதேனும் படிக்கலாம்.

நான் படித்த பள்ளியில் உயர் வகுப்பு பிராமண சமூகத்தை சார்ந்தவர்கள் அதிகம் படிக்கும் பள்ளி. அந்த பள்ளியின் நிர்வாகம் பொதுவாக உயர் வகுபினரிடம் இருக்கும். மேலும், பள்ளி அமைந்திருந்த பகுதியில் நிறைய பிராமண வகுப்பை சார்ந்தவர்கள் இருந்ததால் அது இயற்கையாக அப்படி அமைந்து விட்டது. ஆனால், அரசு ஆணைப்படி அனைத்து சமுதாயத்தினரும் படிக்க சேர்க்கப்படவேண்டுமென்பதால், மற்ற சமுதாயத்தினரும் சேர்ந்து படிக்க வாய்பிருந்தது. அதே போல மற்ற சமூக வகுப்பை சேர்ந்தவர்களும் ஆசிரியர்களாக பணியாற்றினார்கள். ஆனால், பிரமாண சமூக ஆதிக்கம் இருந்தது என்பது அனைவருக்கும் தெரிந்தது. அந்த பள்ளியில் இடம் கிடைத்து படிப்பது அந்த காலத்தில் பெருமையான விசயம்.

பள்ளி காலை 10 மணி முதல் 4 மணி வரை. உணவு இடைவேளை உண்டு. 6 மணி நேர படிப்பில் ஒரு மணி நேரம் உணவு இடைவேளை. மீதி 5 மணி நேரத்தில் ஐந்து பாடங்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம், பூகோளம் மற்றும் சரித்திரம். 10 ஆம் வகுப்பிலும் 11ஆம் வகுப்பிலும் சிறப்பு பாடம் ஒருமணி நேரம். அதாவது வாரத்திற்க்கு இரண்டு நாள் அந்த இரண்டு நாளில் பூகோளம் அல்லது சரித்திர பாட வகுப்பு இருக்காது.

இதில் விசேசம் என்னவென்றால், சில நாட்களில் பள்ளி ஆரம்பமாகும் நேரம் காலை 11 மணிக்கு என்று அறிவிப்பு பலகையில் எழுதியிருப்பார்கள். அது எனக்கு முதலில் தெரியாமல் 10 மணிக்கு சென்று காத்திருப்பேன். அநேகமாக ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் இப்படி அமைந்துவிடும்.

அதாவது பிராமண ஆசிரியர்கள்  தலைமை ஆசிரியர் உட்பட ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று பூஜை செய்துவிட்டு வருவதற்க்கு ஏதுவாக ஒரு மணி நேரம் பள்ளியை தாமதமாக ஆரம்பிப்பார்கள். சில மாதங்களில் 2 நாட்கள் கூட இப்படி அமைந்துவிடும்.

பொதுவாக பஞ்சகட்சம் வேட்டி கட்டி, பூஜை செய்துவிட்டு அதே கோலத்தில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவார்கள். சில மூத்த வயதான ஆசிரியர்கள் சட்டை போடாமல், அங்கவஸ்திரத்தை போர்த்திகொண்டு வருவார்கள். குடுமியும் நாமுமும் அங்கவஸ்திரமும், பஞ்சகட்ச வேட்டியும் கட்டிக்கொண்டுவந்து வகுப்பில் பாடம் நடத்தும் போது, கோயிலில் அர்ச்சகர் மந்திரம் சொல்வது போல இருக்கும். அவர் கேள்வி கேட்பது அர்ச்சனை செய்வதற்க்கு ராசி கோத்திரம் கேட்பது போல இருக்கும். பதில் சொல்லாவிட்டால் அவர் நமக்கு அர்ச்சனை செய்வார்.

இந்த தினங்களில் மாணவர்களுக்கிடையே ஒரு போட்டி நடக்கும். அதாவது, இன்று ஆசிரியர் எந்த  கலர் ஜட்டி போட்டுகொண்டுவருவார் என்பதே. காரணம் 8 முழ வேட்டியை ஒற்றபட்டையாக பஞ்சகட்சம் கட்டுகொண்டு வருவதால் அவர் உள்ளே போட்டிருக்கும் ஜட்டி அப்பட்டமாக தெரியும். அதனால், இப்படிபட்ட நாட்களில் இது குறித்து மாணவர்களுக்கிடையே இப்படியான போட்டி நடக்கும்.

நான் 11ஆம் வகுப்பு படிக்கும் போது, 10 வகுப்புகள் (செக்சன் ஐ வகுப்பு கிடையாது) இருந்தது. ஒரு ஆங்கில வகுப்பு (ENGLISH MEDIUM) ஒரு தெலுங்கு (TELUGU MEDIUM) மற்றவை தமிழ் வகுப்பு(TAMIL MEDIUM). நான் K  பிரிவில் தமிழ் மீடியம் படித்தேன்.

ஜாதி, மதம், கடவுள், பூஜைகள் இவை பற்றி எதுவும் தெரியாமல்  மிகவும் சந்தோசமாக இருந்தேன். அவைகளை அடுத்த பகுதிகளில் தெரிவிக்கிறேன்.


No comments:

Post a Comment