Sunday 9 March 2014

திரைப்பட விமர்சனம் - நிழழ்குத்து (மலையாளம்)

நிழல்குத்து::


தூர்தர்சன்(Doordarshan) ஏற்பாடு செய்திருந்த சிறந்த இந்திய திரைப்படங்கள் (Best of Indian Cinema) மற்றும் இயக்குனர்களை சந்தியுங்கள் என்ற நிகழ்ச்சி டெல்லியில் 7,8,& 9 மார்ச் 2014 தேதிகளில் INDIRA GANDHI NATIONAL CENTRE FOR ARTS அரங்கத்தில் நடைப்பெற்றது.

முதல் நாளன்று 07.03.2014 அன்று திரையிடப்பட்ட இயக்குனர் அடூர் கோபலகிருஷ்ணனின்நிழழ்குத்துதிரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இது 2002ஆம் ஆண்டு வெளிவந்த படம்.

திரு. அடூர் கோபலகிருஷ்ணன் விழாவினை தொடங்கிவைத்து தலமையுரையாற்றினார். முதலில் இவரது திரைப்படம் நிழழ்குத்து திரையிடப்பட்ட பின்பு இவருடன் கலந்துரையாடல் நடைப்பெற்றது.

இந்த திரைப்படம் எடுத்த பின்னனி பற்றியும் குறிப்பிட்டார். கேரளாவிலிருந்து வெளிவரும் மலையாள மனோரமா தினசரியில் வெளிவந்த தூக்குதண்டனையை நிறைவேற்றும் ஒரு நபரின் செய்தியை படித்ததாகவும், பின்பு அதற்கான திரைக்கதையை எழுதிவிட்டு பின்பு இரண்டாண்டுகளுக்கு பிறகு எடுத்து படித்த போது, அது முழுமையான கதையமைப்பு கொண்டமையாக இல்லாத காரணத்தால், தூக்குதண்டனையை நிறைவேற்றும் நபரை சந்தித்ததாகவும், சிறைச்சாலை ஆவனங்களையும் மற்றும் சட்ட விவரங்களையும் தெரிந்துகொண்டு பின்பு இதை திரைப்படமாக எடுத்ததாகவும் கூறினார்.

மேலும், இத்திரைப்படம் பிரான்ஸ் நாட்டு திரைப்பட துறை உதவியுடன் எடுத்ததாக கூறினார்.

இந்த திரைப்படம் , 1941ஆம் ஆண்டு திருவாங்கூர் சமஸ்தானதில் நடந்ததாக கதை அமைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு மலையாள படம் போல இல்லை. இதில் வரும் கதாபாத்திரங்கள் பலரும் தமிழ் மொழி பேசுகின்றனர் குறிப்பாக முக்கிய கதாபாத்திரம் தமிழ் பேசும் குடும்பம். ஒரு தமிழ் படத்தில் சில வசனங்கள் மலையாளத்தில் வருவது போல அமைந்துள்ளது. ஆனால், தமிழில் மலையாள வாடை வீசுகிறது.

இனி திரைக்கதையை பார்ப்போம்.

தூக்கு தண்டனையை நிறைவேற்றும் வேலையை செய்யும் நபர் காளியப்பன் குடித்துவிட்டு காளியை கும்பிட்டுக்கொண்டு வாழ்க்கையை நடத்திகொண்டிருக்கிறார்..  அவருக்கு தங்க வீடும், வருமானம் ஈட்டுக்கொள்ள நிலமும் அளித்து அரசு பாதுகாக்கிறது. அவரது மனைவி, மகன், இரண்டு மகள்கள். பெரிய மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. இளைய மகள் பள்ளியில் படித்துகொண்டிருக்கிறாள். மகன். காந்தியின் பால் ஈர்க்கப்பட்டவன் என்பதை அவன் ராட்டையை கொண்டுவந்து நூல் நூற்பதன் மூலமும், மரண தண்டனையை எதிர்த்து பேசுகிறான் என்ற விசயத்தை மூன்றாவது நபர் மூலம் சொல்வதன் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தூக்கு தண்டனையை நிறைவேற்றும் நபர் தான் கதாநாயகன். ஆரம்ப காட்சியில் , ஒரு பெண் மழையில் நனைந்துகொண்டு இவரது வீட்டு வாசலுக்கு தனது குழந்தையுடன் வந்து, குழந்தைக்கு காய்ச்சல் என்றும், விபூதி போட வேண்டும் என்று கேட்க, அவர் பூசை அறையில் சாமி படத்திற்க்கு மேலே தொங்கிகொண்டிருக்கும் ஒரு கயிற்றில் இருந்து ஒரு சிறிய துண்டு எடுத்து, தீயில் பொசுக்கி அந்த தூளை குழந்தையின் மீது தெளித்து, காய்சல் சரியாகிவிடும் என்று கூறி அனுப்புகிறார். பின்பு ஒரு பித்து பிடித்த (பேய் பிடித்த) பெண்ணுக்கும் இதே போன்ற சிகிச்சை செய்கிறார். அவர் உபயோகிக்கும் கயிறு, தூக்கு கயிரு. அதாவது, தூக்கு தண்டனை நிறைவேற்றிய பிறகு, அந்த கயிற்றை இவர் எடுத்துவந்து பூசை அறையில் வைத்து உபயோகிக்கிறார். இதன் கயிற்றை சாம்பல் ஆக்கி காளி கடவுளை கும்பிட்டு பூசினால், நோய் குணமாகும் என்று இவரும் மக்களும் நம்புகிறார்கள்.

இவர் ஒரு நிரபராதிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியதை அறிந்து மன உளைச்சலில் வாழ்ந்து வருகிறார்.

இவரது மகள் பள்ளியில் வகுப்பில் இருக்கும் போது, வலியால் துடிக்கிறார். பின்பு கால் பகுதி காண்பிக்கப்படுகிறது. தொடை வழியாக ரத்தம் வழிந்து கால் முழங்கால் பகுதிக்கு வருகிறது. அடுத்த காட்சியில் பெண் பெரியவளான சடங்கு நடைப்பெறுகிறது. அந்த சடங்கு நிகழ்ச்சிக்கு வரும் பெரிய பெண்ணின் கணவன் , இந்த பெண்ணை பார்க்கும் பார்வையில் வீபரீதம் உணர்த்தப்படுகிறது. பெண்ணின் தாயும் இதை கவனிக்கிறாள். இந்த பெண் பள்ளிக்கு செல்வது நிறுத்தப்படுகிறது. வீட்டு வேலையை செய்துகொண்டும், ஆடு மேய்பதும், பூப்பறிப்பதுமாக இவளது வாழ்க்கை ஓடுகிறது. ஆடு மேய்க்கும் இடத்தில், புல்லாங்குழல் வாசிக்கும் ஒரு அனாதை பையனிடம் பேசி பழகும் வாய்ப்பு கிடைக்கிறது.

இதற்கிடையில் அரசாங்கத்திடமிருந்து ஒரு குறிப்பிட்ட தினத்தில் , ஒரு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வரவேண்டும் என செய்தி வருகிறது. குற்றம் சந்தேகத்திற்க்கு இடமில்லாமல் நிருபிக்கப்பட்டிருக்கிறது என கூறப்படுகிறது.அவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறினாலும், அரசின் உத்தரவை மதித்து ஒப்புக்கொள்கிறார்.

தண்டனையை நிறைவேற்ற இவரை அழைத்து செல்கிறார்கள். அவரது மகனும் உடன் செல்கிறார். தூக்கு தண்டனை நிறைவேறும் இடத்தை சரிபார்ப்பதுடன், கயிற்றின் தன்மையையும் பரிசோதிக்கிறார். மறுநாள் விடியற்காலை சரியான நேரத்தில் தூக்குதண்டனையை நிறைவேற்ற வேண்டும். அப்படி தவறினால், தண்டனை ரத்து செய்யப்படும் வாய்ப்பு இருப்பதுடன், பொருப்புள்ள அதிகாரி வேலை இழக்க நேரிடும். அதனால், அவர் தூங்காமல் விழித்திருக்க வேண்டும் என்பதற்க்காக, இரவில் அவருக்கு குடிப்பதற்க்கு சாராயம் கொடுத்து அவருடன் சிறை அதிகாரிகள் விழித்திருக்க கதை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். வேறு ஒரு சுவாரசியமான கதை சொல்லும்படி கூறுகிறார். சிறை அதிகாரி கதை சொல்லுகிறார்.

ஆடு மேய்க்கும் இடத்தில், புல்லாங்குழல் வாசிக்கும் ஒரு அனாதை பையனிடம் பேசி பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. அனாதை பையனுடன் பழகும் பெண், அவனிடமிருந்து புல்லாங்குழல் வாசிக்க கற்றுத்தரும் படி கேட்கிறாள். அவனும் கற்றுத்தருகிறான். வாசிக்க கற்றுதந்துவிட்டு , நீ பயிற்சி செய்துகொண்டிரு நான் சிறிது நேரத்தில் வந்து விடுகிறேன் என்று வெளியேறுகிறான. இதை எல்லாம் மறைவிடத்திலிருந்து பார்த்துகொண்டிருக்கும் அக்கா கணவர், அந்த பையன் வெளியேறியதும், பெண்ணிடம் ஆசையை தீர்த்துகொண்டு கொன்றுவிடுகிறார்.

அந்த பையன் வாங்கிகொடுத்த பரிசு பொருள், புல்லாங்குழல் இவைகளை சாட்சியாக வைத்து , அந்த பையன் தான் கொலைகாரன் என்று முடிவு செய்து தூக்கு தண்டனை நிறைவேற்ற முடிவுசெய்யப்பட்டுள்ளது.. இந்த தண்டனையை நிறைவேற்ற தான் இவர் வந்துள்ளார்.

இந்த தூக்கு தண்டனையை நிறைவேற வந்த இடத்தில் இந்த கதையை கேட்ட காரணத்தினால், உடல்நிலை பாதிக்கப்படுகிறார்.

ஆனால், தூக்கு தண்டனையை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்ற நிலையில் இருக்கும் சிறை அதிகாரிகள், அவரது மகனை வைத்து தண்டனையை நிறைவேற்றுவதாக காட்சி முடிகிறது.

தனக்கும் தூக்கிலப்பட்டவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லாமல் , அதிலும் நிரபராதியை தூக்கிலிட்டதற்க்காக மன உளைச்சலில் வாழும் நபரின் வாழ்க்கையையும், தூக்கு தண்டனையை எதிர்க்கும் அவரது மகனே அதே தொழில் செய்ய நிர்பந்திக்கப்பட்ட அவலத்தையும் எடுத்துரைக்கும் கதை.
சந்தர்ப்ப சூழ்நிலைகளால், நிரபராதி தூக்கிலிட வாய்ப்பிருப்பதால், இதுபோன்ற தண்டனைகள் தேவையா என்ற கேள்வியையும் எழுப்புகிறது. ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது என்று தான் சட்டம் சொல்கிறது.


சிறை அதிகாரி, கதை சொல்லும்போது, அவரது கதையில் வரும் கதாபாத்திரங்கள் அவரது இளைய மகளாகவும் மருமகனாகவும் உள்வாங்கிகொள்கிறார்..

இயக்குனர் திரு.அடூர் கோபலகிருஷ்ணன் படம் திரையிடலுக்கு நிகழ்த்திய கலந்துரையாடலில், இந்த கதை மகாபாரதத்தில் வரும் ஒரு கிளை கதையை அடிப்படையாக கொண்டது என்றும் கூறுகிறார்.

மகாபாரதத்தில், கௌரவர்கள் பாண்டவர்களை அழிக்கும் பொருட்டு ஒரு மந்திரவாதியை கொண்டு (witch hunter) பாண்டவர்களின் நிழலை உருவாக்கி கத்தியால் குத்தி கொல்ல சொல்கின்றனர். ஆனால், மந்திரவாதியின் மனைவி, இது தவறு என உணர்ந்து, பாண்டவர்களின் தாய் குந்தியின் மனநிலையை உணர்த்த, அதே போன்று தனது குழந்தைகளையும் இதே போல செய்கிறார். இந்த படத்தில் மந்திரவாதியின் மனைவிக்கு பதிலாக, காளியப்பனின் மகனாக சொல்லப்பட்டுள்ளது. அதாவது, காளியப்பன் இதற்கு முன் நிறைவேற்றிய தண்டனைகளும் இது போன்றது தான்.  உண்மை நாம் நினைப்பது போல அல்ல என்பது தான் கரு. இது சற்று குழப்பமான தத்துவம்.


இது விருது வாங்குவதற்கென்றெ தாயரிக்கப்பட்ட படம். இது போன்ற படங்கள் வெகுஜன ரசிகர்களை கவர்வதில்லை.

விருதுக்களுக்காக தயாரிக்கப்படும் படங்கள் வாழ்வின் அவலங்களை சித்தரிக்கும் படங்களாக இருக்கவேண்டும் என்பதுடன், வாழ்வில் நிகழும் நிகழ்வுகளை யாதார்தமான முறையில் காண்பிக்கவேண்டும் என்பதற்க்காக வக்கிரங்களுடன் மிக மிக மெதுவாக ஊர்ந்து செல்லும் பாணியில் படங்களை தயாரிக்க வேண்டும் விதி முறையை திரு.அடூர் கோபலகுருஷ்னனுக்கு யார் சொல்லி கொடுத்தது என தெரியவில்லை. இதே படத்தை விறுவிறுப்பாகவும், அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும்படியாகவும் சொல்லலாம்.

யதார்த்த வாழ்க்கையில், ஆடல், பாடல், சண்டை காட்சிகள் மற்றும் உணர்ச்சிகளை மிகையாக வெளிப்படுத்தும் நிலை இல்லையென்றாலும், மக்களின் வாழ்க்கை பல வித உணர்ச்சிகளுடனும் உணர்வுகளுடனும் வேகமாக நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்த படம் வெகுஜன ரசிகர்களை கவரும் படமாக இல்லையென்ற குறையை தவிர வேறு எந்த குறை சொல்லும்படியாக இல்லை.

.

No comments:

Post a Comment