Thursday 6 March 2014

புத்தக ஆய்வு - பாமரன் பார்வையில் கம்பர் - டி.என். கிருஷ்ணமூர்த்தி



திரு.டி.என். கிருஷ்ணமூர்த்தி எழுதியுள்ளபாமரன் பார்வையில் கம்பர்என்ற புத்தகத்தை பற்றிய ஒரு பாமரனின் கருத்துக்கள்.

பொதுவாக எழுத்தாளர்கள் , வாசகனின் கருத்துக்களை அறிய விரும்புவதில்லை. அப்படியே வாசகர்கள் அல்லது சக எழுத்தாளர்கள் கருத்துக்களை கூறினாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் பெரும்பாலான எழுத்தாளர்கள் இருப்பதில்லை. கருத்துக்களை கூறுபவர்களும் விருப்பு வெறுப்பு இல்லாமல் கருத்துக்களை கூறுகிறார்கள் என்று கூறமுடியாது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நேரில் அறிமுகமில்லாத என்னை போன்ற ஒருவருக்கு புத்தகத்தை இலவசமாக அனுப்பி கருத்துக்களை கேட்டுள்ள திரு.டி.என்.கி. அவர்களின் நேர்மையை பாரட்டதான் வேண்டும். அவரது எழுத்துக்களின் மீது அவருக்குள்ள தன்நம்பிக்கையை காட்டுகிறதா அல்லது எந்த விதமான கருத்துகள் வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவத்தை பெற்றுள்ளாரா என தெரியவில்லை. மேலும், காப்பியம் எழுதிய கம்பனையே நாம் கலாய்த்திருக்கும் போது, நமது எழுத்தை இவர் கலாய்த்தால் என்ன நடந்துவிடும் என்ற பரந்த மனப்பான்மையாக கூட இருக்ககூடும்.

கம்பன் தனது காப்பியத்திற்க்கு காப்புரிமை பெறதா காரணத்தினால், என்னை போன்ற அவரது வாரிசுகள் இவர் மீது வழக்கு தொடர முடியாமல் போய்விட்டது

காப்பியத்தை பல ஆண்டுகள் படிக்காமல் இருந்த இவர், விதிவசத்தால் படிக்க நேர்ந்த காரணத்தால், இன்று இவரது கலக்கல் புத்தகத்தை படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இவரது கூற்றுப்படி 10 தலை கொண்ட இராவணன் தலை எந்த நிலையில் வைத்தாலும் பேலன்ஸ் ஆகாது என்ற கூற்றில் தொடங்கி, அவரது பாடல்களை இன்றைய நடைமுறையில் இருக்கும் நிகழ்சிகளுடன் தொடர்புபடுத்தி எழுதியிருப்பது சிறப்பானது

இராமயணத்தில் சொல்லியிருப்பவற்றை இன்றைய நடைமுறை வாழ்க்கையில் இருக்கும் நிகழ்சிகளுடன் தொடர்புபடுத்தினாரா அல்லது இன்றைய நடைமுறை வாழ்க்கையில் இருக்கும் நிகழ்வுகளை தொடர்ப்பு படுத்த இராமயணத்தில் செய்யுள்களை தேடினாரா என தெரியவில்லை.
இந்த அடிப்படையில்  பார்க்கும் போது, கவிஞர் கண்ணதாசன் கூறியது நினைவுக்கு வருகிறது. அவர் ஒரு காலத்தில் கடவுளையும், இந்து மதத்தையும் கடுமையாக விமர்சித்து வந்தார். அவரது எதிர்ப்பாளர்கள்  இவர் எதையும் சரியாக படிக்காமல், புரிந்துகொள்ளாமல் பேசுவதாக கூறியதால், இவர் காப்பியங்களையும், இலக்கியங்களையும்,  இந்து மத தர்மங்களையும் படித்துள்ளார். படிக்க படிக்க அதில் உள்ள கருத்துக்கள் புரிய ஆரம்பித்தவுடன் தனது தவறுகளை உணர்ந்து , அவர் ஆத்திகனாக மாற அதற்கு பின்பு அவர் எழுதிய பாடல்களிலும், புத்தகங்களிலும் அவரது மனமாற்றத்தை காண முடிந்தது.

அது போன்றே திரு. டி.என்.கி. ஆரம்பகாலத்தில் இராமயணத்தை ஒதுக்கியிருந்தாலும் , இப்போது அதுவே அவரை சற்று புகழுக்கு இட்டுசென்றுள்ளது.

தினசரி வாழ்க்கையில் மக்கள் பயன்படுத்தும் பழமொழிகள், அர்த்தமுள்ள மற்றும் அர்த்தமற்ற சொல்வழக்குகள், குத்து வசனங்கள், திரைப்பாடல்கள் இவைகளுடன் கட்டுரையை ஆரம்பித்து அதை கம்பரின் செய்யுளுடன் இனைப்பது நல்ல முயற்சி. இதில் எவ்வளவு தூரம் வெற்றி கண்டுள்ளார் என்பது தான் கேள்வி.

பல கட்டுரைகளில், முதலில் கட்டுரை தலைப்புடன் தொடர்புடையதாக ஆரம்பித்தாலும், அடுத்தடுத்து வரும் பத்திகளில் தொடர்பு இல்லாதது ஒரு குறை. பல கட்டுரைகளில் கம்பரின் செய்யுள்கள் சரியான விதத்தில் பொருந்துவது கையில் காப்பு கட்டியது போல அமைகிறது. பல கட்டுரைகளில் வலுக்கட்டாயமாக எப்படியாவது கம்பரை இனைத்து விட வேண்டும் என்று மிகவும் முயற்சி செய்துள்ளார். அவை அவிழ்த்து வீசிய கோவணம் போல தனியாக கிடக்கிறது. எது சரியாக பொருந்தியது எது சரியாக பொருந்தவில்லை என்று பட்டியலிட முடியாது. படிப்பவர்கள் புரிந்துகொள்வார்கள்.

பெர்முடாஸ் போட்டால் தொடை தெரியுமா ? நான் நினைக்கிறேன் boxer உள்ளாடையை நீங்கள் அந்தமானில் பெர்முடாஸ் என்று சொல்வீர்கள் என நினைக்கிறேன்

கம்பர் செய்யுளை முழுமையாக தான் எழுதியுள்ளார். ஆனால், இவர் இரண்டு மூன்று இடங்களில் ஒரு பிட்டு நடுவுலெ சொருகிறார் என்று எழுதியுள்ளார்.(ஹீரோ, ஹீரோதான்)

கிஷ்கிந்தாவில் உள்ள படை அளவை சொல்ல சூத்திரம் விளக்கம் தேவையா (கணக்கு புலிகள்) அதுதான முதலிலேயேவெள்ளம்கணக்கில் சொல்லியாகிவிட்டதே.

நீரை நெருப்பு தோற்றுவிக்கிறதா, நெருப்பை காற்று தோற்றுவிக்கிறதா ,(வாழைப்பழத்தில் ஊசி) எனக்கு புரியவில்லை. கம்பரின் செய்யுள் இதைதான் கூறுகிறதா ?

இந்த பெண்களுக்கு இடை இருக்கிறதா இல்லையா என்ற விசயத்தை பலரும் பலவிதமாக எழுதியுள்ளனர். சீதைக்கு இடை இருக்கிறதா இல்லையா என்பதை தடவி பார்த்து தான் சொல்லமுடியும் என்றால், இந்த சந்தேகம் வரும் போது, மற்ற பெண்களின் இடையை தடவி பார்த்து அறிய முயன்றால் , கன்னத்தில் அறை விழும். அது சரி, இடை இல்லையென்றால், அல்லது இந்த மெல்லிய இடை எப்படி அந்த இரண்டு இளநீர் காய்களை சுமந்துகொண்டிருக்கிறது. கரண்ட் இல்லாத நேரங்களில், அடுத்தவன் பெண்டாட்டியிடம் கூட லாஜிக் விளையாட்டு விளயாட முடியுமா. லாஜிக் இல்லாத விளையாட்டு தான் விளையாட முடியும்(இடை இருக்கா இல்லையா)

இலங்கையில் நுழைவாயில் விவரம், காம்பரின் பாடல் உவமை கூட தவறாக இருக்கிறது ( நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே)
மணிமேகலையை ஒரு வரவேற்ப்பு வளைவிலேயே கவிழ்த்துள்ளார்.
கம்பரின் செய்யுளில் வரும் சில வார்த்தைகள் உண்மையில் அவருடைய வார்த்தைகள் தானா என்று சந்தேகம் வருகிறது. உதாரணமாக, மெழுகு, இயந்திரம் போன்ற சொற்கள் சமீப கால சொற்களாக படுகிறது. மூல கம்ப ராமயணத்தில் இவை இருந்திருக்குமா ? சரிபார்க்க வேறு ஆசிரியர்களின் புத்தகத்தை படிக்கிறேன்.

பல வட்டார வழக்கு சொற்களுடன் , இன்றைய கலவையான தமிழ் மொழியில் எழுதியிருப்பது சரளமாக அமைந்திருக்கிறது. முதுமையின் முதல் படியில் இருப்பவர் இளமையுடன் எழுதியுள்ளார் என்பதும் சிறப்பு.
ஆனால், கம்பரை வம்படியாக ஒவ்வொரு இடத்திலும் அழைத்து வருவதுமொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுபோடுவது போல உள்ளது

இவரது R.T.I.பணியில் இவர் கோடு போட்டால், இவரது மகன் ரோடு போட்டது அருமை.

இது நகைச்சுவையாக எழுதப்பட்டது என்ற காரணத்தினால், ஒவ்வொன்றையும் அலசி ஆராய்ந்து எழுதுவதற்கு வாய்ப்பு இல்லாமல் அமைந்துவிட்டதுஈரை பேனாக்கி, பேனை பெருமாளக்கி இவர் எழுதியிருப்பது போல முழுவதுமாக பாரட்டவும் முடியமால், குறை சொல்லவும் முடியாமல் இருக்கிறது. பல நல்ல விசயங்கள் நகைச்சுவை நடிகர்களின் மூலம் கூறுவதால் எப்படி எடுபடாமல் போய்விடுகிறதோ  அதுபோல இவரது நகைச்சுவை மட்டுமே மோலோங்கி நிற்கிறது.

இவர் வலைப்பூவில் எழுதும் போது அடுத்து என்ன எழுதுவார் என்ற ஆவல் இருந்தது. ஆனால், அவையனைத்தையும் ஒன்றாக படிக்கும் போது, எப்படியும் கம்பரை இழுத்துவிடுவார் என்பதால், ஒருவித சலிப்பு ஏற்ப்படுகிறது. எனவே, இந்த புத்தகத்தை படிப்பவர்கள் ஒரே மூச்சில் படிக்காமல், மனம் சங்கடத்தில் இருக்கும் போது படித்தால் மகிழ்ச்சியை தரும்.

இவர் கம்பரின் செய்யுளை விளக்கியிருப்பது சரிதான என சரிபார்க்கும் வகையில் செய்யுளை கவனமாக படித்ததன் மூலம், கம்பராமயணத்தை மீண்டும் ஒருமுறை படிக்க வாய்ப்பு கிடைத்தது. இதற்கு முன்பு திரு.ராஜாஜி எழதியுள்ள கம்பராமயணத்தை படித்துள்ளேன். பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் சரியாக நினைவில்லை. ஆனால், அவர் இராமயணத்தை , கடவுளின் அவதார மகிமையை விளக்கும் வகையில் எழுதியிருந்தார் என்பது நினைவிலிருக்கிறது.

எல்லோரையும் திருப்திபடுத்தும் விதத்தில் யாரும் எழுதிவிட முடியாது. ஆனால் தனக்கு தானே திருப்தியடையும விதத்தில் எழுத வேண்டும்.
இவர் தொடர்ந்து எழுதும் போது, தனக்கென ஒரு பாணியை உருவாக்கிகொண்டு சிறந்த படைப்புக்களை தருவார் என நம்புகிறன்.

உங்களிடம் ஒரு கேள்வி. இதை பலரிடம் கேட்டேன். யாரும் பதில் சொல்லவில்லை. கம்பராமயணத்தை நீங்கள் அன்மையில் படித்துள்ளதால் உங்களிடமும் கேட்கிறேன்.

ராமர், சீதையை மீட்டுக்கொண்டு வருவது, சரியாக 14வது வருடம் முடியும் கடைசி நாளில். பரதன் அக்னி பிரவேசம் செய்ய தயாரா இருக்கிறான். 

எனதுகேள்வி.

இராவணன் சீதையை எந்த ஆண்டு கடத்திகொண்டு போனான். வனவாசத்தில் இருந்த முதல் ஆண்டிலா, இரண்டாவது ஆண்டிலா அல்லது எந்த ஆண்டில், சீதை எத்தனை ஆண்டுகள் இராவணம் சிறையில் இருந்தார் என்று கம்பர் எங்காவது குறிப்பிட்டுள்ளாரா ?

No comments:

Post a Comment