Thursday 27 February 2014

புத்தக ஆய்வு - "தடா கைதிக்கு எழுதிய கடிதங்கள் " - சுந்தர ராமசாமி

ஒரு தடா கைதிக்கு எழுதிய கடிதங்கள்::


அண்மையில் திரு. சுந்தர ராமசாமி எழுதிய “ ஒரு தடா கைதிக்கு எழுதிய கடிதங்கள் “ என்ற புத்தகத்தை படிக்கும் வாய்ப்பு ஏற்ப்பட்டது.(காலச்சுவடு பதிப்பகம்)

அந்த புத்தகத்தை பற்றிய எனது எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

இதை புத்தக விமர்சனமாக பார்க்கவேண்டாம். யாரும் யாரைப்பற்றியும், குறிப்பாக அவரது எழுத்துக்களை (எழுத்துக்கள் என்பது ஒரு குறிப்பிட்ட விசயத்தை பற்றிய எழுத்தாளனின் சிந்தனைகள்) பற்றி விமர்சிக்கமுடியாது. அது குறித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளாலாம். இது குறித்து திரு. சுந்தர ராமசாமி எழுதியுள்ளதை இங்கு பயன்படுத்திகொள்கிறேன். அவரது எழுத்துக்கள பற்றிய விமர்சனங்கள் குறித்து அவர் இவ்வாறு கூறுகிறார்.

“ படைப்பாளியின் மொத்த எழுத்தைப் பற்றிய உணர்வுகளில் பிடிப்பில்லாமல், சந்தர்ப்பம் சார்ந்த கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு – பல சமயம் அவற்றையும் திரித்து – விமர்சனத்தை முன் வைப்பது இன்று சர்வசாதாரணமாக நடந்துகொண்டிருக்கிறது “:

அவருடைய இந்த கருத்து எனக்கும் பொருந்துவதால், அவருடைய இந்த புத்தகத்தை பற்றிய கருத்துக்களை விமர்சனமாக பார்க்காமல், ஒரு வாசகனுடைய கருத்துக்களாக மட்டுமே பார்க்கவும்.

முதலில், இந்த புத்தகத்தின் தலைப்பை படிக்கும் போது, “ தடா கைதி “ என்றால் என்ன என்று தோன்றும், இன்றைய வாசகர்களுக்கு – இளைய தலைமுறைக்கு “தடா” என்றால் என்ன என்று தெரிய வாய்ப்பில்லை.

தடா என்றால் Terrorist and Disruptive Activities (Prevention) Act - பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (தடா)

இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர். - கன்னட நடிகர் திரு.ராஜ்குமார் கடத்தல் வழக்கு உள்பட பலவழக்குகளில் விசாரணை கைதியாக இருந்த அன்றில் என்கிற தே.ஏழுமலை என்கிற ஒன்பதாம் வகுப்பு வரை படித்த 30 வயது நிரம்பிய ஒரு கைதி. இவருக்கும் எழுத்தாளருக்கும் நடந்த கடித போக்குவரத்தின் தொகுப்பு தான் இந்த புத்தகம்.

கைதி சுமார் 57 கடிதங்கள் எழுதியுள்ளார். முதல் கடிதம் 14.10.2002 அன்று எழுதப்பட்டுள்ளது. முதல் கடிதம் எழுதும் போது, அவருக்கும் எழுத்தாளருக்கும் எவ்வித பரிச்சயமும் இல்லை. எழுத்தாளரின் ஒரு கட்டுரையால் ஈர்க்கப்பட்டு முதல் கடிதத்தை எழுதியுள்ளார். எழுத்தாளர் பதில் கடிதம் எழுதியதன் விளைவாக கடித உரையாடல் தொடங்கியுள்ளது.

கைதி எழுதிய இரண்டு கடிதமும் , எழுத்தாளர் எழுதிய முப்பத்தி நான்கு கடிதங்களின் தொகுப்பே இந்த புத்தகம்.

இந்த புத்தக வெளீயிட்டிற்க்கு என்ன காரணம். புத்தகத்தின் பின் அட்டையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

“ இலக்கிய பரிச்சயமோ, முக அறிமுகமோ இல்லாத – கோவை மத்தியச் சிறையில் தடா கைதியாக இருந்த – ஏழுமலை என்பவருக்கு இரண்டாண்டுகளுக்கும் மேலாக சுந்தர ராமசாமி எழுதிய கடிதங்களின் தொகுப்பு இந்நூல். இந்தக் கடித வரிகளில் வெளிப்படுபவை சுந்தர ராமசாமியின் இலக்கிய ஆளுமை மட்டுமல்ல, வாழ்க்கை குறித்த நுட்பமான பார்வையும் சக மனிதனின் மீது அவர் எப்போதும் கொண்டிருந்த அக்கறையும் நேசமும் தான். அவ்வகையில், துக்கத்தில் ஆழ்ந்திருந்த ஒரு மனித ஜீவனுக்கு இதம் தந்த இந்தக் கடித உரையாடல்கள் நம் எல்லோருக்குமானவையே. “

இது நிச்சியமாக இலக்கியதன்மை கொண்டதல்ல. (இலக்கியம் என்றால் என்ன என்ற கேள்வியை யாரும் இங்கு எழுப்ப வேண்டாம் அல்லது உனக்கு இலக்கியம் பற்றி என்ன தெரியும் என்ற கேள்வியை எழுப்ப வேண்டாம். இந்த புத்தகத்தை நீங்கள் படிக்க நேர்ந்தால் இதில் இலக்கிய தன்மை ஏதுமில்லை என்பதை அறிவீர்கள். எழுத்தாளர், இலக்கியவாதி என்று அங்கீகாரம் பெற்றுள்ளதால், அவர் எழுதிய அனைத்தும் இலக்கியம் என்று கூறப்படுகிறதோ என்னவோ) சாதரணமாக ஒருவர் மற்றவருக்கு எழுதும் கடிதம் போலவே உள்ளது. நலம் நலமறிய அவா அல்லது நீ இங்கு நலம் நான் அங்கு நலமா என்பது போலவே ஆரம்பித்து, வெளியூரில் இருக்கும் மகளுக்கு ஊறுகாய் கொடுத்தனுப்பிய பிறகு அம்மா எழுதும் கடிதத்தில், நான் கொடுத்தனுப்பிய ஊறுகாய் வந்து சேர்ந்த்தா என்று எழுதி கேட்பது போல, நான் அனுப்பிய புத்தகங்கள் உங்களுக்கு கிடைத்ததா என்ற பாணியிலேயே எழுதப்பட்டுள்ளது.

: “வாழ்க்கை குறித்த நுட்பமான பார்வையும் , சக மனிதனின் மீது அவர் எப்போதும் கொண்டிருந்த அக்கறையும் நேசமும்” என்பதை ஏற்றுக்கொள்ளமுடிகிறது. முன்பின் அறிமுகமில்லாத தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவருடன் இரண்டு ஆண்டுகள் கடித போக்குவரத்து வைத்துக்கொள்ள நிச்சியமாக தைரியம் வேண்டும். இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் அனைவரையும் குற்றவாளிகளாக பார்க்கப்பட்ட கால கட்டத்தில், ஒரு கைதியின் மனநிலையை அறிந்து, அவருக்கு ஆறுதல் சொல்லும் விதமாகவும், கைதியை படிக்க தூண்டி, அவரது கருத்துக்களை எதிர்கொண்டதற்க்காகவும்  பாராட்டலாம்.

கைதி எழுதிய கடிதங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டவை என்ற காரணத்தால், இலக்கியம் சார்ந்த, கலைகள் சார்ந்த, வெகுஜன ஊடகங்கள் சார்ந்த பகிர்வுகள் வெளிப்படையாகவும், அரசியல், அதிகாரம் , கொள்கைகள், இயக்கங்கள் சார்ந்த பதிவுகள் கட்டுபாடுகளுடனும் எழுதப்பட்டுள்ளதாக திரு. ராஜமார்த்தாண்டன் தந்து முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

கைதி எழுதிய கடிதங்கள் தணிக்கை செய்யப்பட்டிருப்பதால், எழுத்தாளரும் அவரது கடிதங்களை தானாகவே தணிக்கை செய்துகொண்டு, தமக்கு பிரச்சனை ஏற்படாதவாறு எழுதியுள்ளதாக தோன்றுகிறது.

கைதி எழுதிய கடிதங்கள் இந்த புத்தகத்தில் பிரசுரிக்கப்படவில்லை. அவர் எதை குறித்து எழுதினார் என்பது அறிய முடியவில்லை. அவரது கடிதங்கள் ‘காலச்சுவடு  6 இதழ்களில் வெளியிடப்பட்டதாக பின்குறிப்பு கூறுகிறது. என்னைப்போல இன்றைக்கு இந்த புத்தகங்களை படிப்பவர்கள் , கைதியின் கடிதங்களை படிப்பதற்க்காக 2002-2004 ஆண்டுகளில் வெளிவந்த காலச்சுவடு இதழ்களை தேடிக்கொண்டிருக்கமுடியுமா ?.

கடிதப்போக்குவரத்தின் அடிப்படையில் பிரசுரிக்கப்பட்டுள்ள புத்தகத்தில், இருவரும் எழுதிய கடிதங்களை ஒன்றன் பின் ஒன்றாக பிரசுரித்திருந்தால் தான் இருவரது எழுத்துக்களையும், அவைகளின் காரணமாக இருவருக்கும் ஏற்ப்பட்ட தாக்கத்தை அறிய முடியும். ஒருதலை பட்சமாக எழுத்தாளரின் 34 கடிதங்களும் கைதியின் 2 கடிதங்களும் 1 : 17 என்ற விகிதத்தில் பிரசுரிக்கப்பட்டிருப்பதால், கைதியின் எண்ணங்களை, அவர் பல்வேறு விசயங்கள குறித்து எழுதிய கருத்துக்களை அறிய முடியாததால் இப்புத்தகம் முழுமை அடையவில்லை.

கடிதங்கள் இலக்கிய தன்மை கொண்டவையாக இருக்கமுடியுமா ? முடியும் என்கிறது “ஆல்ம்பொழில்” – இது குறித்த கருத்துக்கள் அடுத்த பதிவில்


No comments:

Post a Comment