Saturday 22 February 2014

ஆலய தரிசனம் - ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில்

தஞ்சை பெரியகோயில்::


அண்மையில் மேற்கொண்ட தமிழக சுற்றுப்பயணத்தில், ஆறாவதாக   (06.02.2014) சென்ற கோவில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். 12 ஜோதிர்லிங்க தலங்களில் ராமேஸ்வரமும் ஒன்றாகும். ராமாயணம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது ராமேஸ்வரம். ராமபிரான் சிவலிங்கம் ஸ்தாபித்து அவரை வழிபட்ட காரணத்தினால் இத்தலத்திற்கு ராமேஸ்வரம் என்று பெயர் ஏற்பட்டது

காலை நேரத்தில் சென்றோம். கூட்டம் இருந்தது. ஆனால், வரிசையில் நின்று போக வேண்டிய அவசியம் ஏற்ப்படவில்லை. இங்கு இரண்டு சிவலிங்கங்கள் இருக்கிறது. ஒன்று ராமலிங்கம் என்றும் மற்றோன்று காசி விஸ்வநாதர் என்றும் அழைக்கப்படுகிறது.

சிவலிங்கம் பெரிதாக இருந்தது. அருகிலிருந்து தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அம்பிகை பர்வதவர்த்தினியின் சந்நிதி ராமநாதரின் வலப்பக்கம் அமைந்திருக்கிறது. அம்பிகை கோவிலின் வடமேற்கு மூலையில் பள்ளிகொண்ட பெருமாள் ஆகாயத்தை நோக்கியபடி  திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். சிவனும், பெருமாளும் ஒரே இடத்தில் இருப்பது சிறப்பு


தென்மேற்கு மூலையில் சந்தான கணபதியின் சந்நிதி அமைந்திருக்கிறது. ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. ராமநாதர் சந்நிதிக்கு பின்புறம் இரண்டாவது மற்றும் மூன்றாவது  பிரகாரங்களுக்கிடையே சேதுமாதவர் சந்நிதி அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு 1212 தூண்களைக் கொண்ட இக்கோவிலின் மூன்றாம் பிரகாரம் ஆகும். உலகிலேயே மிக நீளமான பிரகாரம் என்ற பெருமையைப் பெற்ற இப்பிரகாரம் உலகப்பிரசித்தி பெற்றதாகும்.

முத்துராமலிங்க சேதுபதி அவர்களால் 1740- 1770 ஆண்டுகளில் இந்த மூன்றாம் பிரகாரம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த பிரகாரம் வெளிப்புறத்தில் கிழக்கு, மேற்காக 690 அடியும், வடக்கு தெற்காக 435 அடி நீளமும் கொண்டது. உள்புறத்தில் கிழக்கு மேற்காக 649 அடியும், வடக்கு தெற்காக 395 அடி நீளமும் கொண்டது.

இந்த பிரகாரங்கள சுற்றி வர நீண்ட நேரம் எடுத்துக்கொண்டோம். தற்போது வண்ணப்பூச்சுகள் நடைப்பெறுகிறது. பிரகாரங்கள் சற்று இருண்டு காணப்படுகிறது. தீப ஓளியுடன் பார்த்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனத்தை விட தீர்த்தமாடுவது தான் மிக சிறப்பாக கருதப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே 22 தீர்த்தங்களும் வெளியே 22 தீர்த்தங்களும் உள்ளன. ஆலயத்தின் உள்ளே உள்ள தீர்த்தங்கள் எல்லாம் கிணறுகளாகவே அமைந்துள்ளன.  பக்தர்கள், கோவிலின் உள்ளே உள்ள தீர்த்தங்களில் நீராடுவதால், கோவில் பிரகாரங்கள் எல்லாம் ஈரமாக உள்ளது.
கோவிலில்உள்ள22தீர்த்தங்கள் :

1.மகாலட்சுமிதீர்த்தம்
2.சாவித்திரிதீர்த்தம்     
3.காயத்திரிதீர்த்தம்     
4.சரஸ்வதிதீர்த்தம்     
5.சங்குதீர்த்தம்     
6.சக்கரதீர்த்தம்     
7.சேதுமாதவர்தீர்த்தம்
8.நளதீர்த்தம்     
9.நீலதீர்த்தம்     
10.கவயதீர்த்தம்     
11.கவாட்சதீர்த்தம்
12.கெந்தமாதனதீர்த்தம்
13.பிரமஹத்திவிமோசனதீர்த்தம்
14.கங்காதீர்த்தம்
15.யமுனாதீர்த்தம்
16.கயாதீர்த்தம்
17.சர்வதீர்த்தம்
18.சிவதீர்த்தம்
19.சாத்யாமமிர்ததீர்த்தம்
20.சூரியதீர்த்தம்
21.சந்திரதீர்த்தம்
22.கோடி தீர்த்தம்  

பக்தர்கள் ஒவ்வொரு தீர்த்தம் உள்ள கிணற்றுக்கு சென்றால் அங்குள்ள ஊழியர்கள் கிணற்றிலிருந்து நீர் இறைத்து, பக்தர்களின் தலையில் ஊற்றுகின்றனர். பக்தர்கள் ஆண் பெண் குழந்தைகள் வித்தியாசமின்றி அனைத்து தீர்த்தங்களுக்கும் சென்று குளிக்கின்றனர்.

பக்தர்கள் ஈர உடையுடன் கோவிலை சுற்றி வரும் போது கவர்ச்சியாகவும், அசிங்கமாகவும் தெரிகின்றனர். அவர்களின் உள்ளாடை அப்பட்டமாக தெரிகிறது. 

பொதுவாக பெண்களை குளிப்பதை பார்க்க கூடாது என்பார்கள். அப்படி எவேரேனும் பார்த்துவிட்டால், மிகப்பெரிய பிரச்சனையாக்கி விடுகிறார்கள். அப்படியிருக்கும் பொது இவர்கள் பொது இடத்தில் அனைவர் முன்பும் குளிப்பதும் ஈர உடையுடன் வலம் வருவது தவறல்லவா. இவர்கள் பொதுஇடத்தில் ஆண்களுடன் சேர்ந்து குளித்தால், அதை மற்றவர்கள் பார்த்தால் தவறில்லை ஆனால், ஆணகள் வேறு இடத்தில் பெண்கள் குளிப்பதை பார்த்தால் குற்றம். எப்போதும் நியாயம் ஒரே மாதிரி இருக்கவேண்டும். இது கோயிலில், தீர்த்தத்தில் குளிப்பதை இப்படி காமகண்களுடன் பார்க்ககூடாது, அதை பற்றி விமர்சிக்க கூடாது என்றால், இவர்கள் குற்றால அருவியிலும் (தனியாக) குளிக்கிறார்கள். அங்கும் பல ஆண்களின் பார்வையில் படுகிறார்கள். இவர்கள் செய்தால் சரியானது. ஆணகள் செய்தால் தவறானது என்ற போக்கு மாற வேண்டும்.

கோவிலுக்கு உள்ளே செல்லும் முன்பு பொருட்களை வைத்து விட்டு போக பெட்டகங்கள் இருக்கின்றன. கிட்டதட்ட எல்லா மாநில மக்களும் தங்கும் படியாக விடுதிகளும் சத்திரங்களும் உள்ளன. கோவிலுக்கு உள்ளே செல்லும் முன்பு சோதனையிட்டு அனுப்புகின்றனர். பல மொழிகளில் வழிகாட்டி அறிவுப்புகள் செய்யப்படுகிறது. வெளிமாநில பக்தர்கள் நிறைய பேர் இருந்தனர்.

ஒரு வெளிநாட்டு பெண்மணி, சிவப்பு நிற புடவை கட்டி, பொட்டு வைத்து, தலைநிறைய மல்லிகை பூ வைத்து கொண்டு நடந்து சென்றுகொண்டிருந்தார். பார்க்க மிகவும் அழகாக இருந்தது.

கடற்கரைக்கு சென்றோம். 4 படித்துறைகள் இருந்தன. கடற்கரை அமைதியாகவும் அழுக்காகவும் இருந்தது. அலைகள் இல்லாத கடற்கரை. அலைகள் இல்லாததால் அது கடலா குளமா என சந்தேகமாக இருந்தது. 4 படித்துறைகளும் வட இந்திய சாமியர்களின் ஆசிரமத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும், சாமியார்கள் கோடிக்கணக்கில் பணம் சேர்த்துள்ளனர். ஆனால், அவர்கள் படித்துறைகளோ, சத்திரங்களே, அன்னதான்ங்களோ செய்யவில்லை. வட இந்திய ஆசிரமத்தை சார்ந்தவர்கள் இலவச சாப்பாட்டுக்கு பக்தர்களை வருந்தி வருந்தி அழைத்துகொண்டிருந்தனர். நாங்களும் உள்ளே சென்று சாப்பிட்டோம். சாதம், சாம்பார், மோர், முட்டைகோஸ் பொரியல், சப்பாத்தி, சுமாராக இருந்தது. வயிறு நிறைய சாப்பாடு போடுகிறார்கள். ஆனால், தினமும் வந்து சாப்பிடும் உள்ளூர்காரர்களை இனி வரக்கூடாது என எச்சரிக்கிறார்கள்.

பின்பு பாம்பன் பாலம் பார்க்க சென்றோம். கடலில் இருக்கும் பாலம் . ரயில் வண்டி இதில் வருகிறது. கப்பல வரும் போது, ரயில் பாலம் தூக்கப்பட்டு கப்பல் சென்ற பிறகு மீண்டும் ரயில் பலமாக மாறுமாம். பாலம் திறக்கப்படும் போது பார்க்க வாய்ப்பு ஏற்ப்படவில்லை. இதன் அருகில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன வழியாக தான் இப்போது அனைத்து வாகனங்களும் சென்று வருகிறது. கடற்கரை வழியே பயனம் செய்வது நிறைவை தந்தது வழியெங்கும் மீன் வாடை அடித்தது. மீன் சாப்பிட வாய்ப்பு கிடைக்கவில்லை.

ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் துற்புறுத்தப்பட்டார்கள், சிறைபிடிக்கப்பட்டார்கள் என்ற செய்தி நினைவுக்கு வந்தது..

http://upload.wikimedia.org/wikipedia/commons/3/3e/Rameswaram_temple_%2811%29.jpg



No comments:

Post a Comment