Saturday 22 February 2014

ஆலய தரிசனம் - தஞ்சை பெரியகோயில்

தஞ்சை பெரியகோயில்::


அண்மையில் மேற்கொண்ட தமிழக சுற்றுப்பயணத்தில், ஐந்தாவதாக   (04.02.2014) சென்ற கோவில் தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில்  அல்லது தஞ்சை பெரிய கோயில்  தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும்.

இதன் பிரமாண்டத்தையும் நிர்மானத்தையும் பற்றி எழுத பலநாட்கள் ஆகும். இது குறித்து நிறைய தகவல்கள் இனையத்தில் உள்ளன. 1000 வருடம் பழைமையான கோயில். 10ஆம் நூற்றண்டில் இராஜராஜ சோழ மன்னனால் 7 ஆண்டுகளில் கட்டப்பட்டது. இந்தக் கோயிலில் பிற்காலத்தில் கட்டப்பட்டவை - முன் தாழ்வாரம், நந்தி மண்டபம், கருவூர்த் தேவர் கோயில, அம்மன் கோயில், சுப்பிரமணியர் கோயில்  சண்டிகேஸ்வரர் அம்மன்,  சுப்பிரமணியர்,  கணபதி,  மற்றும் கருவூர்த் தேவர் கோயில்களும், இவ்வளாகத்துள் அமைந்துள்ளன.
.

கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே பெரிய சிவலிங்கமாகும். 6 அடி உயரம், 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 23 அரை அடி உயரம் கொண்ட லிங்கம் ஆகியன தனித்தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.. பெரிய அளவில் கூட்டம் இல்லை. சில அர்ச்சகர்கள் தீபாரதனை தட்டுடன் இருந்தனர். விபூதி பிரசாதம் அளித்தனர். மற்ற கோயில்களில் உள்ளது போன்ற ஆர்பாட்டம், பண வசூல் வேட்டை ஏதும் கிடையாது.

தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நந்திமண்டபத்திற்கு தெற்கே உள்ள திருச்சுற்று மாளிகையில் வடதிசையை நோக்கியபடி உள்ள நந்தியே இராஜராஜனால் பெருவுடையாருக்கு எதிரே அமைக்கப்பட்டதாகும். பின்னாளில் நாயக்கர்கள் சிவலிங்கத்துக்கு இணையான பெரிய நந்தியை நிறுவினர். முதலில் அமைக்கப்பட்ட நந்தி கேரளத்தான் மற்றும் இராஜராஜன் வாயில்களுக்கு வாயில்களுக்கு இடைப்பட்ட பகுதிக்கும் பின்னர் திருச்சுற்று மாளிகைக்கும் மாற்றபட்டது.

கோயிலின் சுற்று பிரகாரத்தில் நிறைய சிவலிங்கங்களும் எண்ணற்ற பல தெய்வங்களும் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளன.

கோயில் இவ்வளவு பெரிதாக இருந்தாலும் கூட்டம் அதிகம் இல்லை. உல்லாச பயணிகள் ஒரு கலைகூடமாக பார்க்க வந்துள்ளது போல தோன்றியது. உள்ளூர் மக்கள் பெரிவாரியாக தினமும் அல்லது எதெனும் ஒரு குறிப்பிட்ட தினத்தில் வரும் வழக்கம் இல்லை என்று தோன்றுகிறது. மகாசிவராத்திரி அன்றும் பிரதோசம் நாட்களிலும் உள்ளூர் மக்கள் அதிகம் வருவார்கள் என தெரிவித்தனர். இவ்வளவு பெரிய கோயிலில் ஆயிரம் பேர் இருந்தாலும் , ஜனநடமாட்டம் இருப்பது போல் தோன்றாது.

சோழர் கால ஒவியங்களை விளக்கும் மண்டபம் ஒன்று உள்ளது. பெரிய அளவிளான ஒவியங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை அழிந்த நிலையில் உள்ளன. அவை நகல் ஓவியங்கள் என்றும் , மூல ஓவியங்கள் கோயிலின் மேல் பகுதியிலும் உள்ளதாக பொருப்பாளர் கூறினார்.

கோயிலில் சுவாமி சிலை இருக்கும் மண்டபங்கள் தவிர சுற்றுப்பிரகாரத்தில் மேற்கூரை இல்லாத வெளிபரப்பு அதிகமாக உள்ளது. சுற்றுப்பிரகாரத்தை தூய்மையாக வைத்துள்ளனர். நமது தற்கால இந்திய மரபுப்படி, பொதுமக்கள் தங்கள் பெயரையும் காதலியின் பெயரையும் சுவர்களில் எழுதி வைத்துள்ளனர். இரண்டு காதல் ஜோடிகள் பொழுது போக்கி கொண்டிருந்தன நாங்கள் சென்ற போது, ஒரு வெளிநாட்டு பெண்மணி, கையில் சிறிய காகிதத்தை (பேருந்து சீட்டு அளவு) எங்கே போடுவது என தெரியமால் தவித்துகொண்டிருந்தார். அருகில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குப்பை தொட்டியில் போடலாம என கேட்டு அதில் போட்டார். அவர்கள் தூய்மையை கடைபிடிப்பதில் இருக்கும் கவணத்தில் சிறிதளவு நமக்கு இருந்தால் இந்த கோயில் இன்னமும் தூய்மையாக இருக்கும்.

அடுத்து சரஸ்வதி மகால் நூலகத்தை பார்பது என்று அங்கு சென்றோம். பழைய கட்டிடம். அங்கு பழைய ஓலை சுவடிகள்சிறியது, பெரியது, நீளமானது, சுருட்ட கூடியது ஆகியவனவையும், ஓலைச்சுவடிகள் எடுத்து செல்லும் தோல் பை, ஓலைச்சுவடியில் எழுதிய ராமயணம், மகாபாரதம் மற்றும் எண்ணற்ற ஓலைச்சுவடிகள் இருந்தன.

பல நாட்டு மொழிகளில் எழுதிய பழைய புத்தகங்கள், ஓவியங்கள், நாணயங்கள் என்று கண்காட்சி அறை பிரமிப்பாக இருந்தது

நூலகத்தில் ஏதேனும் புத்தகத்தை படிக்க விரும்பினால், புத்தகத்தின் பெயரை சொன்னால் எடுத்து தருவார்களாம். அங்கேயே படித்துவிட்டு திருப்பி தரவேண்டும் என்று கூறினார்கள். சுமார் 50000/ ஒலைச்சுவடிகள் இருப்பதாகவும் அதில் சுமார் 500க்கு மேற்ப்பட்ட ஓலைச்சுவடிகள் படிக்கப்பட்டு, புத்தகங்களாக வெளியிடப்பட்டிருப்பதாக கூறினார்கள். ஒரே ஒரு பண்டிதர் மட்டும் படித்து மொழிபெயர்த்து கொண்டிருப்பதால், வேலை மிகவும் தாமதமாக நடைப்பெறுவதாக கூறினார்கள். அவர்களால் வெளியிடப்பட்ட புத்தகங்கள் அங்கு வெளியில் விற்றுக்கொண்டிருந்தனர். பொதுவாக, ஜோதிடம், மருத்துவம், கடவுள் பாடல்கள் அதிகம் இருந்தன.

அடுத்து, இந்த நூலகத்தை ஏற்படுத்திய சரபோஜி மன்னரின் அரியாசனத்தையும் , அங்கு இருப்பதாக கூறப்படும் சுரங்கபாதை இடத்தையும் பார்த்தோம்.

வேறு ஒரு இடத்தில் சரபோஜி மன்னர் பயன்படுத்திய பொருட்கள் கண்காட்சியாக வைத்திருந்தனர்.

இந்த கண்காட்சி அரங்கத்திற்க்கு வெளியே உள்ள பகுதியில், பக்கத்திலிருக்கும் பள்ளி மாணவர்கள் வந்து மதிய உணவு அருந்திகொண்டிருந்தனர். அரண்மனையின் பல பகுதிகள் தொல்பொருள் துறையிடமும், அரசு அலுவலகங்களாகவும் மாறியுள்ளன.


பெரிய கோயிலுக்கு அருகே ஒரு கிராமத்தில் இராஜராஜ சோழனின் சமாதி கவனிக்கப்படாமல் இருப்பதாக கேள்விப்பட்டுள்ளேன். அங்கு செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், அங்கு சென்றிருக்கும் போது இது நினைவு வரவில்ல.
எனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியதில் மிகவும் மகிழ்ச்சியடைந்து திரும்பினேன்.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D


No comments:

Post a Comment