Tuesday 21 October 2014

தீபாவளி

தீபாவளி கொண்டாடலாமா கூடாதா, பட்டாசு வெடிக்கலாமா கூடாதா என்ற விவாதம் அவ்வப்போது சிலரால் விவாதிக்கப்படுகிறது.

தீபாவளி கொண்டாட கூடாது என்பது தான் எனது நிலை -
அதாவது , தீபாவளி கொண்டாடபடுவதற்க்கு சொல்லப்படும் காரணங்களுக்காக , இந்த தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடில்லை.

தீயவன் ஒருவனை நல்லவன் ஒருவன் கொன்று வெற்றி வாகை சூடிய தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது என்பது ஏற்ப்புடையது அல்ல. ஒரு துயர சம்பவத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது தவறு என்பது எனது எண்ணம்.

அவன் தீயவன் என்று எப்படி முடிவெடுக்கப்பட்டது. நல்லவர்களை கொடுமை படுத்தினான் பிறன் மனைவியை அபகரித்தான் என்பது குற்றச்சாட்டு. பிறன் மனைவியை அபகரிக்கும் வழக்கத்தை இந்த மன்னன் தான் ஆரம்பித்து வைத்தானா? அதற்கு முன் இந்த வழக்கம் பூமியில் இல்லாமல் இருந்ததா ? கடவுள் அவதாரம் எடுத்து, பிறன் மனைவியை அபகரிப்பவனுக்கு இது தான் கதி என்று நீதி புகட்டியதாக இருந்தாலும், இந்த நிகழ்ச்சிக்கு பின்பு பிறன் மனைவியை அபகரிக்கும் செயல்கள் நின்று விட்டதா ? இன்றும் தொடர்கிறது. நாளையும் தொடரும். கடவுளின் அவதாரத்தால் நிரந்தரமாக ஒழிக்க முடியாத ஒரு செயலின் நிகழ்ச்சியின் அடிப்படையில் ஒரு தினத்தை விழாவாக கொண்டாடுவது எத்தனை மூடநம்பிக்கை ?

இதை சொன்னால் இது நாத்திக வாதம் என்றும் , இந்து மத பண்டிகையை மட்டும் ஏன் குறை சொல்கிறாய் என்று கேட்பார்களே தவிர பதில் சொல்ல மாட்டார்கள். அவர்களிடம் பதில் இல்லை.

நல்லவன் தீயவனை ஒழித்தது கொண்டாட படும் நிகழ்ச்சி என்றால் அப்படி நிறைய நிகழ்ச்சிகளை மகிழ்ச்சியாக கொண்டாடலாம்.

அன்மை கால வரலாற்றில் இது போன்று பல தீயவர்கள் போரில் கொல்லப்பட்டுள்ளார்கள். அமெரிக்கா தினமும் தீபாவளி கொண்டாடலாம். ஸ்ரீலங்காவும் வெற்றி தினத்தை கொண்டாடலாம்.

வெற்றி பெற்றவன் எல்லாம் ராமனும் அல்ல. தோற்றவன் எல்லாம் இராவனனும் அல்ல. தோற்றவர்கள் போர் திறமை இல்லாமல் தோற்கடிக்கப்பட்டவர்கள் அல்ல. துரோகத்தாலும், சூழ்ச்சியாலும், வஞ்சகத்தாலும் கொல்லப்பட்டவர்கள்.

காட்டிக் கொடுப்பவனுக்கும் கூட்டி கொடுத்தவனுக்கும் சரித்திரத்தில் நல்ல பெயர் இருக்கிறது.

இராவணன் சகல துறைகளிலும் சிறந்து விளங்கியவன். அவனது புகழ் சரித்திரத்தில் நீங்கா இடம் பெற கூடியவை. அதை பொருத்து கொள்ள முடியாத ராமன் என்னும் அரசன், அவனை தந்திரத்தால் கொல்ல நினைத்து செய்த ஏற்பாடே சீதையின் கடத்தல் நாடகம். பெண்ணை கடத்தினான் என்றால் அவன் அயோக்கியன் என்ற விசம பிரச்சாரத்தை தூண்டி விட்டு, மற்றவர்களின் ஆதரவை நாடியதல்லாமல், அவனுக்கு யாரும் ஆதரவளிக்க முடியாத சூழ்நிலைய ஏற்ப்படுத்தினான். பெண்களை தவறாக பயன் படுத்திய முதல் அரசனாக தான் ராமனை பார்க்க முடிகிறது. அது இன்றளவும் தொடர்கிறது.

ஒருவனின் புகழுக்கு களங்கம் விளைவிக்கவும், அவனது செல்வத்தை கவரவும் இன்றும் பெண்களை பயன்படுத்தி பாலியல் புகார் கொடுக்கப்பட்டு அவனை ஒழித்து கட்டுகின்றனர். அந்த வகையில் எல்லா வகையிலும் சிறந்து விளங்கிய இராவணனை ஒழிக்க திட்டமிட்டு செய்யப்பட்ட சதி தான் , சீதையின் கடத்தல் , வீபுசனின் துரோகம், இறுதி போர் அனைத்துமே.
எனவே இந்த காரணத்துக்காக கொண்டாடப்படும் தீபாவளியை நான் ஏற்க்கவில்லை. எனினும் மற்றவர்களை போல நானும் தீபாவளி கொண்டாட போகிறேன்.

எல்லா நாட்களை போல வருடம் முழுவதும் வாழ்க்கையை நடத்தாமல் சில நாட்களை சந்தோசமாக வாழ்வதை பண்டிகை என்று கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடு உண்டு. அந்த வகையில் நான் நாளை தீபாவளி கொண்டாட போகிறேன்.

இருப்பவனுக்கு எல்லா நாளும் தீபாவளி என்பார்கள். உண்மை தான். அதற்க்காக மற்ற நாட்களில் பட்டாசு வெடித்து புது ஆடை அணிந்து நமக்கு பரிசு பொருட்களை கொண்டு வந்து கொடுத்தால் அவர்களை நாம் பைத்தியகாரர்கள் என்று தான் சொல்வோம். எனவே பெரும்பான்மையினர் ஒரு குறிப்பிட்ட நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் போது, அதில் அனைவரும் பங்கு கொண்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இது சமூக நிர்பந்தம்.

எந்த தினமாக இருந்தாலும் இரண்டு வேளை சாப்பாட்டுக்கு அவதி படும் மக்கள் உலகம் முழுவதும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு இருக்கும் போது, ஒரு பகுதியினர் ஆடம்பரமாக கொண்டாடுவது தேவையா என்ற எண்ணமும் ஏற்ப்படுகிறது. அவர்கள் அனைவருக்கும் நல்ல வாழ்க்கை அமைந்த பிறகு தான், கொண்டாட்டங்கள் நிகழ்த்த வேண்டும் என்று நினைத்தால் அது எப்போதும் நடைப்பெறாது. அலை ஓய்ந்த பிறகு தான் கடலில் குளிப்பேன் என்பது போல் காத்திருக்க வேண்டியது தான்.
மிகவும் ஆடம்பரமாக கொண்டாடாமல் இந்த தினத்தை மகிழ்ச்சியாக அமைத்து கொள்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

பொருளாதார ரீதியில் வசதி படைத்த உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பரிசுகளை கொடுத்து வாழ்த்தி கொண்டாடும் மக்களை தடை செய்ய முடியாது. ஆனால் அவர்கள் அவற்றில் பத்தில் ஒரு பகுதியையாவது ஏழைகளுக்கு கொடுத்து அவர்கள் வாழ்விலும் ஒரு நாள் மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தலாம்.

நமக்கு வீட்டு வேலை செய்யும் பெண்கள், தெரு கூட்டுபவர்கள், துணிகளை இஸ்திரி செய்து கொடுப்பவர்கள் இன்னும் பல விதத்தில் உதவியாக இருப்பவர்களின் குடும்பங்களுக்கு நாம் செய்யும் கொண்டாட்ட செலவில் ஒரு பகுதியை அவர்களுக்கு கொடுக்கலாம். தீபாவளிக்கு மறு நாள் அவர்கள் வந்து தீபாவளி இனாம் கேட்கும் போது முகம் கோனாமல் முடிந்த அளவுக்கு கொடுக்கலாம்.

வாழ்க்கையின் அடிப்படை தேவைகளான உணவு, உடை இருப்பிடம் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும். உடை இருப்பிடம் இல்லாமல் கூட பல நாட்கள் இருந்து விட முடியும். உணவு இல்லாமல் உறங்குவது என்பது கொடுமையானது. ஒருவன் பசியுன் உறங்க கூடாது என்பது எனது எண்ணம்.

அனைவருக்கும் அந்த அடிப்படை தேவைகள் நிறைவேற வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த நாளில் உங்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களை கூறுகிறேன்.

No comments:

Post a Comment