Thursday 30 October 2014

சு.வெங்கடேசன் – காவல் கோட்டம் புதினம் – எனது பார்வையில்



சு.வெங்கடேசன் – காவல் கோட்டம் புதினம் – எனது பார்வையில்

1000 பக்கங்களுக்கு மேல் உள்ள ஒரு நாவலை சில பக்கங்களில் யாருக்கும் புரிய வைத்து விட முடியாது. தலைப்பு செய்திகளாக சிலவற்றை கூற முடியும்.
              
மதுரையை ஆண்ட மன்னர்கள், மதுரை மீது நடந்த படையெடுப்புகள், விஜய நகர சாம்ராஜ்யத்தின் ஆட்சியின் வரலாறு. திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் ஒர் சமூகத்துக்கு கொடுக்கப்பட்ட அந்தஸ்து அந்த சமூகம் வாழ்ந்த தாதனூர் என்னும் பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை.

மதுரை கோட்டை உருவாகிய விதம், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நகர விரிவாக்கம் என்று கூறி கோட்டையை இடித்த வரலாறு. அவர்கள் அரசு அமைத்த முறை. புகை வண்டி கொண்டு வருதல் , காவல் நிலையங்களை ஏற்ப்படுத்துதல், காவல் கூலி முறையை ஒழிக்க முயல்வது, தோல்வி அடைவது போன்றவை விவரிக்கப்படுகிறது.

வரி வசூல் அமைப்பில் வர மறுக்கும் மதுரை புறநகர் பகுதிகளுக்கு நீர்பாசன வசதி செய்து கொடுத்து, நில அளவை செய்து கொடுத்து அவர்களை ஆங்கிலேய ஆட்சி முறைக்கு கொண்டு வருவது விவரிக்கப்படுகிறது.

இதே நேரத்தில் அமெரிக்க மெசினரிகாளால் மக்கள் மத மாற்றம் செய்யப்படுவது குறித்தும் விவரிக்கிறது.

இதில் மன்னராட்சி பற்றிய வரலாற்று உண்மைகள் என்றும், தாதனூர் என்ற நிலப்பரப்பை கற்பனையில் உருவாக்கி, இந்த நாவல் உருவாக்க உழைத்த பத்தாண்டுகளில் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் , சொல் வழி மூலம் கேட்டறிந்த மக்களை கதாபாத்திரங்களாக தாதனூர் பகுதி மக்களாக சித்தரித்துள்ளார்.

அவர்களது தொழில் களவு செய்வது மற்றும் மதுரை நகரை காவல் காப்பது. மதுரை நகரை காவல் காக்க மக்களிடம் காவல் கூலி பெறுவது, கூலி கொடுக்க மறுக்கும் வீடுகளில் களவு செய்வது, பின்பு சமரச பேச்சு வார்த்தையில் ஈடு பெற்றுக்கொண்டு களவு செய்த பொருளை திரும்ப கொடுப்பது. தினமும் களவு செய்து தான் வாழ்க்கை நடத்துகின்றனர். பொருள் சேர்த்து எதிர்கால திட்டத்தை வகுப்பது என்ற வாழ்க்கை முறை இல்லை.

பஞ்ச காலத்தில் இந்த பகுதியின் பல மக்கள் கூலித் தொழிலாளிகளாக வெளியேறுவது விவரிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேயே ஆட்சி காவல் கூலி முறையை ஒழிக்க பாடுபடுவது, அதை தாதனூர் மக்கள் இறுதி வரை எதிர்ப்பது மற்றும் அவர்களது வாழ்க்கை முறையை விவரிப்பது தான் கதை. 

இறுதியில் அவர்கள் குற்ற பரம்பரையினராக அறிவிக்கப்பட்டு சிறிது சிறிதாக கைது செய்து தண்டிப்பது, நாடு கடத்துவது, தூக்கிலிடுவது இறுதியாக வேறு பகுதிக்கு அழைத்து சென்று அவர்கள் இருக்கும் இடம் எதுவென்று அவர்களும் அறியாமல் வெளியுலகமும் அறியாமல், அதிகாரத்தின் கீழ் அடிமைகளாக அழிந்து மடிவதை மிகவும் எளிமையான வார்த்தைகளால் விவரித்துள்ளார்.

மதுரையில் வாழும் மக்களுக்கு கூட மதுரையில் கோட்டை இருந்ததும் அது தகர்த்தப்பட்டு மதுரை விரிவாக்கம் செய்யப்பட்டது என்ற வரலாறு தெரிந்திருக்காது. மதுரையின் விரிவாக்க பகுதியாக கூறப்படும் இன்றைய பகுதிகளையும் கணக்கிட்டால் கூட , மதுரையின் பரப்பளவு அம்மன் கோயிலை மையமாக கொண்டு 5 கிலோமீட்டர் சுற்றளவு தான் இருக்கும். விரிவு படுத்தப்படாத மதுரை என கணக்கிட்டால் 3 கி.மீ சுற்றளவு தான் இருக்கும். அந்த நிலப்பரப்புக்கு தான் இத்தனை போர்கள் நடந்ததா என்று நினைக்கும் போது, இன்றைய நிலையில் வேடிக்கையாக இருக்கிறது.

மங்கம்மாள் காலத்துக்கு முன்பு முன்பு ஆண்டவர்கள் பொது மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த எதுவும் செய்யவில்லை என்றே நான் புரிந்து கொள்கிறேன். போர் புரிவதை மட்டுமே கடமையாக கொண்டு வாழ்ந்துள்ளனர்

இந்த கதையை படிக்க ஆரம்பிக்கும் போது இது குறித்து விரிவாக எழுத வேண்டும் என நினைத்தேன். சாகத்திய அகதெமி பரிசு பெற்ற கதை. இதைப்பற்றி எழுதுவதறக்கு முன்பு மற்றவர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என இனையத்தில் பார்த்தேன்.

பிரபல எழுத்தாளர்கள் ஜாதிய அடிப்படையிலேயே இதை அணுகியுள்ளார்கள். கதை விருது பெற தகுதியுடையதா என்ற வாதங்களையும் எழுப்பியுள்ளனர். ஒருவொருக்கொருவர் அடித்துக்கொண்டு குற்றுயிரும் கொலையிருமாக இனையத்தில் உலா வருகிறார்கள். எனவே, அந்த விமர்சனங்களை படித்து பாருங்கள்.

சரித்திரத்தை பின்னனியாக கொண்டு எழுதப்பட்ட கதை என்ற அளவில் எனக்கு பிடித்தது.

கடந்த கால சரித்திரத்தில் எந்த பகுதியை யார் ஆண்டார்கள் , யார் யாரை ஆதிக்கம் செலுத்தினார்கள் என்பதை விட, நிகழ்காலத்தில் ஆள்பவர்கள் சரியாக ஆள்கிறார்களா என்பதை ஆராய்ந்து, எதிர் காலத்தில் அனைத்து மத ஜாதி இன மொழி மக்களும் அமைதியுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம்.


 .

No comments:

Post a Comment