Monday 13 October 2014

தாய் – மாக்ஸிம் கார்க்கி Maxim Gorky – மொழிபெயர்ப்பு-ரகுநாதன்

தாய்மாக்ஸிம் கார்க்கி Maxim Gorky – 
தமிழ் மொழிபெயர்ப்பு திரு.ரகுநாதன்


கதை சுருக்கம்:

ஒரு தொழிற்சாலைக்கு அருகில் இருக்கும் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் கதை ஆரம்பிக்கிறது. ஆலையிலிருந்து சங்கு ஊதியவுடன் தொழிலாளர்கள் வேலைக்கு செல்கின்றனர். அனைவரும் ஏழைகள். சுகாதாரமற்ற குடியிருப்பு பகுதி.

வேலை செய்து விட்டு வீட்டுக்கு வரும் தொழிலாளர்களின் பெரும் பகுதி வோட்கா மதுபானம் அருந்திவிட்டு மனைவிகளை துன்புறுத்துகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தின் மனைவியே தாய் என்ற கதாபாத்திரமாக இதில் உருவாக்கப்பட்டுள்ளது

தாயின் கணவர் இறந்துவிடுகிறார். அவனால் அதிக துன்பத்திற்க்கு உள்ளானதால் அது குறித்து கவலைப்படவில்லை.

தாய்க்கு ஒரு மகன் இருக்கிறான். கணவனிடம் துன்பப்படும் கால கட்டத்தில் அவனது தேவைகளையும் கவனிப்பதிலும் அவனிடமிருந்து அடி உதை வாங்காமல் தப்பிக்க முயற்சி செய்வதிலுமே காலம் கழித்ததால் மகனை சரியாக கவனிக்கவில்லை.

தாய்,  கணவன் இறந்து பிறகு மகனை கவனிக்கிறாள். அவன் மிகவும் அமைதியாய் இருக்கிறான். மிகவும் அன்பாக நடந்து கொள்கிறான். புத்தகங்கள் கொண்டு வந்து மறைத்து வைத்து படிக்கிறான். எந்த கெட்ட பழக்கமும் இல்லை.நிறைய நல்ல மாறுதல்கள் தெரிகிறது. அதுவே தாயை கவலை கொள்ள செய்கிறது.

மகன் தாயின் கவலையை அறிந்து அவளது சந்தேகத்தை போக்குகிறான். தொழிலாளர்கள் ஏன் ஏழைகளாகவே இருக்கிறார்கள் என்றும் பணக்காரர்கள் தொழிலாளிகளை அடிமைப்படுத்தி சுரண்டுகிறார்கள் என விவரிக்கிறான். புத்தகங்களை படித்து கான்பிக்கிறான். தாய்க்கு சரியாக புரியவில்லை ஆனால் இது போல் பேசுவதால் ஆபத்து இருக்கிறது என்பதை மட்டும் உணருகிறாள்.

அவனை தேடி நிறைய பேர் வருகிறார்கள். நிறைய விவாதம் செய்கிறார்கள். விவாதம் தீவிரமாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் எல்லோரும் நட்புடன் இருக்கின்றனர். அவனை பார்க்க வருபவர்களில் பல தரப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்கள். இளம் பெண்களும் இருக்கிறார்கள். பணக்கார வீட்டு பெண்களும் அரசு அதிகாரியின் பெண்ணும் இருக்கிறாள்.

இவர்களது தொடர் வருகையாலும் அவர்களது விவாதங்களை தொடர்ந்து கேட்பதன் மூலம் தாய் அவர்களது பேச்சுக்களையும் அவர்களது நல்ல குணங்களையும் புரிந்து கொள்கிறாள். அவர்கள் அனைவரையும் மிகவும் நேசிக்கிறாள். சிலரது தோற்றமும் பேசும் முறையும் அவளுக்கு பிடிக்கவில்லையென்றாலும் அவர்களது சிந்தனையும் விவாத திறமையும் அவளை மிகவும் கவர்கிறது.

தனது மகன் மிகவும் அமைதியாகவும் ஆனித்தரமாகவும் பேசுவது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறாள். அவனது கருத்தை அனைவரும் மிகுந்த ஆவலுடன் கேட்பது குறித்து மிகுந்த பெருமையடைகிறாள். தனது கணவனிடம் துன்பப்பட்ட கால கட்டத்தையும் இன்றைய கால கட்டத்தையும் ஒப்பிட்டு ஒரு சிறப்பான வாழ்க்கையை தாம் மகன் மூலம் பெற்றது குறித்து மகிழ்கிறாள்

இவையனைத்தும் காவலர்களுக்கு பயந்து ரகசியமாகவே நடக்கிறது. உளவாளிகளும் இவர்களை கவனிக்கிறார்கள்

இந்த நடவடிக்கைகள் ஜார் மன்னருக்கு எதிராக நடப்பதாக கருதி இவர்கள் கண்கானிக்கப்படுகிறார்கள். இதில் சிலர் ஏற்கனவே சிறை தண்டனை அனுபவித்தவர்கள். சிலர் சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டு தப்பி வந்தவர்கள்.

தொழிலார்கள் அனைவரும் முதலாளிகளுக்கு எதிராக ஒன்று திரண்டு உரிமைகளை பெற வேண்டும் என்பதே எண்ணம். இவ்வாறு உலகின் பிற நாடுகளில் நடக்கும் செயல்களை குறித்து விவாதிக்கிறார்கள். உலக தொழிலார்கள் அனைவரும் ஒன்று திரண்டு புதியதோர் உலகை அமைக்க வேண்டுமென பாடுப்படுகிறார்கள். மகன் சிறைப்படுகிறான்.

இவர்களது எண்ணங்களை துண்டு பிரசுரங்களாக வெளியிட்டு, தாய் மறைத்து தொழிற்சாலைக்குள் எடுத்து சென்று விநியோகிக்கிறாள். தொழிற்சாலை நிர்வாகம் குழம்புகிறது. மகன் விடுதலையாகிறான்.

தொழிலாளர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி மே தினத்தில் சிவப்பு கொடியேந்தி ஊர்வலம் செய்வது என முடிவாகிறது. மகன் முன்னாள் கொடியேந்துவது என்றும் வேறு ஒருவன் அவனுக்கு துனையாக இருப்பது என்றும் முடிவாகி அதற்கான ஏற்ப்பாடு செய்யப்படுகிறது.

கொடி ஊர்வலம் நடக்கிறது. காவலாளிகள் கலைந்து செல்ல உத்திரவிடுகிறார்கள். மக்களிடையே இவர்களுக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருக்கிறது. மகன் கைது செய்யப்படுகிறான். அவன் சைபீரியாவுக்கு நாடு கடத்தப்படலாம் என உணருகிறாள். மகனின் கைதுக்கு பிறகு அவனது விருப்பப்படி அவனது நண்பர்களுடன் நகரத்தில் சென்று வசிக்கிறாள்.

அங்கிருந்து கொண்டு அவர்களுக்கு உதவியாக அனைத்து வேலைகளையும் துணிச்சலாக செய்கிறாள். மகனை சிறைச்சாலையில் தொடர்ந்து சந்தித்து வருகிறாள். அவனை தப்பிக்க வைக்க திட்டம் இருக்கிறது என்று தாய் சொல்லிய போதும் , மகன் தான் தப்பிக்க விரும்பவில்லையென்று கூறுகிறான். அவன் எவ்வித கவலையுமில்லாமல் விசாரணை தினத்தை எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறான்.

மகன் தனது தனிப்பட்ட ஆசாபாசங்களை துறந்து வாழ்வது கண்டு நண்பனிடம் முத்தமிட்டு உறவு கொள்ள சொல்கிறாள்.

மகனை சக போராளி விரும்புகிறாள். தாய் அறிவாள். மகனும் அறிவான். சொல்லப்படாத காதல். அவர்கள் இனைந்து வாழ வேண்டும் என தாய் விரும்புகிறாள்.

தாயும் மற்றவர்களும் துண்டு பிரசுரங்கள் மூலமும்  பேச்சுகளின் மூலமும் தொழிலார்ளிடையே கொள்கையை பரப்புகின்றனர்.

விசாரணை ஆரம்பமாகிறது. நீதிமன்றத்தில் தனது வாதத்தில் அவர்கள் செய்யும் கொடுமையை விவரித்து தங்களது எண்ணத்தை கூறி அவர்கள் அழிவார்கள் என்றும் ஒன்றுப்பட்ட தொழிலாளி வர்கம் புதியதொரு உலகை படைக்கும் என்றும் கூறுகிறான்.

காமம் இல்லாத கதையாக சென்று கொண்டிருக்கும் கதையில், விசாரனை நிகழ்வுகளை குறிப்பிடும் போது, - " அந்த பசி வெறிகொண்ட மங்கிய கண்கள் அவனது உடம்பின் மீதும், மார்பின் மீதும் தோள்களின் மீதும், கைகளின் மீதும் ஊர்ந்து தவழ்ந்து, அவனது ஜீவ சக்தி நிறைந்த சதைக் கோளத்தின் ஸ்பரிசத்தை நாடி, அவன் உடம்போடு ஒட்டி உராய்ந்து தமது உடம்பிலும் , தங்களது தொய்ந்து தொள தொளத்துப் போன தசைக்கோளங்களிலும், வலியிழந்து போன நரம்புகளிலும் புது வலுவை ஏற்றிக்கொள்ளும் விருப்பத்தோடு பற்றிப் பிடித்துப் பார்த்துக் கொண்டிருப்பதாகவே அவளுக்குப் பட்டது " என்று நீதிபதிகள் குறித்து தாய் நினைக்கிறாள்.

அனைவரும் சைபீரியாவுக்கு நாடு கடத்தப்படுவதாக தீர்ப்பு கூறப்படுகிறது.

தாய் அதற்கு பிறகும் பிரச்சாரத்தை தொடர்கிறாள். மகனது நீதிமன்ற பேச்சை துண்டு பிரசுரம் மூலம் விநியோகிக்க செல்லும் போது, அவள் திருடி என்று குற்றம் சாட்டப்பட , அவள் தனது பையில் இருக்கும் பிரசுரங்களை காட்டி அதை வீசியெறிந்து பிரசங்கள் செய்கிறாள். பிரசுரங்களை வீசியேறிவதும் பேசுவதுமாக இருக்கிறாள். காவலர்கள் அவளை அமைதி காக்கும் படி கூறினாலும் இவள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறாள்.

இறுதி வரிகளாக

, முட்டாள்களே நீங்கள் வீணாக எங்கள் பகைமையைத் தான் தேடிக்கொள்கிறீர்கள். உங்களது கொடுமைகளெல்லாம் ஒரு நாள் உங்கள் தலையிலேயே வந்து விடியப்போகின்றன

ஒரு போலீஸ்காரன் அவளது தொண்டையைப் பிடித்து அவளது குரல்வளையை நெரித்துத் திணறடித்தான்.

அதிருஷ்டங்கெட்ட பிறவிகளேஎன்று அவள் திணறினாள்.

யாரோ ஒரு உரத்த பெருமூச்சால் அதற்குப் பதில் அளித்தார்கள்
மாக்ஸ்ம் கார்க்கியின் உண்மை பெயர் அலேக்ஸி மாக்ஸிமோவிச் பெஷ்கோவ்.1868ல் பிறந்து 1936ல் மறைந்தார். ரஷ்ய விடுதலை போரில் கலந்து கொண்டார். லெனின், ஸ்டாலின் மற்றும் எழுத்தாளர்கள் கொரொலெங்கோ, ஆன்டன் செகாவ், டால்ஸ்டாய் முதலியவரோடு பழகியவர்.  1905 வருடத்து ரஷ்ய புரட்சியின் போது வெளிநாட்டுக்கு தப்பி ஓடி , அமெரிக்காவில் வாழ்ந்த போது இந்த கதையை எழுதியுள்ளார். இது தடை செய்யப்பட்ட புத்தகமாக இருந்துள்ளது.

கார்க்கி படைத்த இலக்கியம் மக்களைக் கொண்டே மக்களுக்காகவே மக்களின் நலன் கருதியே சிருஷ்டித்த இலக்கியம். கார்க்கி மக்களை மறந்து இலக்கியம் செய்யவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
============================================================================
கதைகளம் நிஜ்னி நோவ்கிராடு. இது கார்க்கி பிறந்த இடம். இதில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் உண்மையானவை. தாய் என்ற கதாபாத்திரம் பல பெண்களின் தொகுப்பு. இவைகளை கொண்டு புனையப்பட்ட நாவல்.

இந்த நாவல் பிரபலமடைய காரணம் எந்த ஒரு தனிப்பட்ட தொழிலாளியின் வாழ்க்கையை பற்றியும் துயரங்களை பற்றியும் எழுதாமல் ஒட்டு மொத்த தொழிலார்கள் நலன் பற்றி எழுதியது. இவர் பழகிய மனிதர்களையே கதாபாதிரங்களாக உருவாக்கியதாலும் மேலும் இவரே ஒரு தொழிலாளியாக வாழ்ந்ததாலும் அவர்களின் வாழ்க்கை முறையை நன்கு அறிந்தவர்.

தொழிலாயின் அவல நிலையை மட்டுமே எழுதினால் அதன் தாக்கம் குறைவாகவே இருக்கும் என்பதால்,  அந்த காலத்தில் வாழ்ந்த தொழிலாளி வர்க வீட்டு பெண்களின் தொகுப்பாக தாய் என்ற கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளார். கற்பனை பாத்திரம் என்பதால் சற்று மிகைப்படுத்துதலும் இருக்க கூடும்.

தொழிலாளிகளின் வாழ்க்கையை சித்தரித்து அவர்களை புரட்சிக்கு தயார் படுத்த எழுதப்பட்ட நாவலில் ஒரு தொழிலாளியை முக்கிய கதாபாத்திரமாக செய்யாமல் ஒரு பெண்ணை அதுவும் நடுத்தர வயதுள்ள பெண்ணை கதாபாத்திரமாக வடிவமைத்ததுக்கு காரணம் – (1) தாய் என்ற சொல்லுக்கு இருக்கும் மகத்துவம். அனைத்து மக்களும் தனது தாயை போற்றுவார்கள். அவளுக்காக இரக்கப்படுவார்கள். (2) ஒரு தாயின் துயரத்தை போரட்டத்தை அவளது துணிச்சலை விவேகத்தை சொல்வதன் மூலம் படிக்கும் தொழிலாளிகளை உணர்ச்சி வச பட செய்வதே முக்கிய நோக்கமாக இருந்திருக்கும். ஒரு தாய் இவ்வளவு தியாகம் செய்து உழைக்கும் போது, நாம் தொழிலார்கள் சும்மா இருப்பதா என்ற உணர்வை ஏற்ப்படுத்த செய்யப்பட்ட கதாபாத்திரம்.

ஆனால், இந்த உத்திகளை கையாண்டா எழுத்தாளர், ஜார் மன்னர் காலத்தில் தொழிலார்கள் எந்த வகையான அடக்கு முறைக்கு ஆளானர்கள் என்று எங்கும் குறிப்பிடபடவில்லை. பணக்காரர்கள் தொழிலாளிகளின் மூலம் சுகமாக வாழ்கிறார்கள் ஆனால் அந்த தொழிலார்கள் ஏழைகளாக வாழ்கிறார்கள் என்று கூறுகிறார். இந்த வாதத்தை இன்றும் உலகமெங்கும் சொல்ல முடியும்.

புரட்சி செய்து இவர்களின் சோசலிச ஆட்சி அமைந்த பிறகு ஏழைகள் எல்லாம் பணக்காரர்களாக மாறி விட்டார்களா என்றால் நிச்சயமாக இல்லை என்று கூறு முடியும். ஒரு அடக்கு முறையிலிருந்து அதை விட மோசமான அடக்கு முறைக்கு ஆளானர்கள் என்பது சரித்திரம். இன்றைக்கும் சோசலிச ஆட்சி நடக்கும் நாட்டில் தொழிலாளிகள் அடிமைகளாக தான் வாழ்கிறார்கள். இந்த காரணத்தால் தான் மீண்டும் புரட்சி ஏற்ப்பட்டு நாடு உடைந்து ஜனநாயக ஆட்சி அமைந்துள்ளது. இன்றைக்கும் சோசலிச ஆட்சியின் கீழ் இருக்கும் பகுதிகள் ஜனநாயகம் வேண்டும் என்று போராடி வருகிறது. கம்யுனிச ஆட்சியில் தொழிலார்கள் சுகமான வாழ்க்கை வாழ்ந்தால் அவர்கள் ஏன் ஜனநாயக ஆட்சியை விரும்ப வேண்டும்.

இந்த கதையில் கம்யுனிசம் என்ற வார்த்தையை பயன் படுத்தவில்லை. தோழர் என்ற சொல்லும் காம்ரேட் என்ற சொல்லும் ஒரே ஒரு முறை பயன் படுத்தப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதால் இவை தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

இந்த கதையில் மொழிபெயர்ப்பாளர் இவரை பற்றி குறிப்பிடுகையில் “கார்க்கி படைத்த இலக்கியம் மக்களைக் கொண்டே மக்களுக்காகவே மக்களின் நலன் கருதியே சிருஷ்டித்த இலக்கியம்" என்று கூறுகிறார். இந்த சொல் ஜனநாயகத்துக்கு உபயோகப்படுத்த படும் சொல். 

ஜனநாயகம் என்றால் “ மக்களுக்காக மக்களால் மக்களே ஆட்சி செய்யும் முறை. இதையே சோசலிச தத்துவத்தை விளக்கும் புத்தகத்துக்கு முன்னுரையில் பயன் படுத்தியிருப்பதன் மூலம், ஜனநாயக ஆட்சியே சிறந்தது என்பதை அவரே அறியாமல் ஒப்புக்கொள்கிறார்.

உலகம் முழுவதும் உள்ள தொழிலார்களை ஒன்று திரட்டி புதியதோர் உலகை படைப்போம் என்று கூறுவது எவ்வளவு நடைமுறை சாத்தியமென்பது இவர்களுக்கு புரியாமல் போனது ஆச்சரியமானது. குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களையே ஒன்று சேர்த்து ஒரு முடிவுக்கு வர முடியாமல் இருக்கும் கால கட்டம்.

இந்த கம்யுனிச சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவான நன்மை என்று பார்த்தால் தொழிலார்கள் எல்லாவற்றையும் பொறுத்து போக வேண்டும் என்ற நிலை மாறி, நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி அல்லது வேலை நிறுத்தம் செய்து உரிமைகளை பெற வழி வகுத்துள்ளது. 

இந்த செய்கைகளுக்கு கம்யுனிஸ்டுகள் தலைமை தாங்கி, தொழிலாளிகள் முதலாளிகளுக்கு இடைத்தரகர்களாக இருந்து அவர்கள் கொழுத்த லாபம் அடைகின்றனர். இதனால் கம்யுனிச தொழிற் சங்கங்கள் தவிர்த்து, அரசியல் கட்சி ரீதியாக பல தொழிற் சங்கங்கள் தோன்றியுள்ளன. இவை அனைத்து ஒரே மாதிரியாக சிந்தித்து செயல் படுவதில்லை. 

இந்த கதையில் கார்க்கி இந்த சித்தாந்தத்தை மதமாக உருவகப்படுத்துகிறார். (page 59) கம்யுனிஸ்டுகளுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. கடவுள் என்பதே மத அடிப்படையானது. அப்படியிருக்கும் போது தங்களது சித்தாந்தத்தை ஒரு மதமாக உருவாக்கினால் பின்பு கடவுள் என்பவரும் உருவாகும். ஒரு வேளை ஸ்டாலினும் லெனினும் கடவுளாக உருவாக்கப்படுவார்களோ என்னவோ. அவர்களுக்கு கம்யுனிச நாடுகள் அனைத்திலும் பொது இடத்தில் பெரிய சிலைகள் உருவாக்கப்பட்டது. அவை இன்று இடித்து தரை மட்டமாக்கப்படுகிறது.

இதில் வரும் தாய் கதாபாத்திரம் கதை முழுவதும் கர்த்தரை தினமும் பிராத்திக்கிறாள். மகனும் மற்றவர்களும் பிராத்திக்கவில்லை என்று வருத்தப்படுகிறாள்.

மொழி பெயர்ப்பாளர் ஒரு தவறு செய்துள்ளார். கதை முழுவதும் கர்த்தர் என்று குறிப்பிடும் அவர் ஒரு இடத்தில் ஈசன் என்று குறிப்பிடுகிறார்.(page 195) மொழிபெயர்ப்பாளர் இந்து மதத்தை சார்ந்தவர் என்பதால் அவரையும் அறியாமல் இந்த பிழை ஏற்ப்பட்டுள்ளது.

ஒரு இடத்தில் தாய் என்ற கதாபாத்திரம் “ பெண்களாகிய எங்கள் அன்பு பரிசுத்தமான அன்பு அல்ல; நாங்கள் எங்களுக்காகத்தான் பிறரை நேசிக்க வேண்டியிருக்கிறது. (page 135) இந்த கருத்தில் எனக்கு முழு உடன்பாடு உள்ளது. ( இது குறித்து வேறோரு பதிவில் எழுதுகிறேன் ) 

“ உலகில் எத்தனையோ பேர், அத்தனை பேரும் அவரவர் துக்கத்தால் அழுதுகொண்டே இருக்கிறார்கள். ஆழாமல் இருக்கும் அந்தப் பாக்கியசாலிகள் எங்கே தான் இருக்கிறார்களோ ‘ என்ற கார்க்கியின் சிந்தனை உண்மை.

 உலகை யார் எந்த கொள்கையின் அடிப்படையில் எந்த காலத்தில் ஆட்சி செய்தாலும் எல்லா மனிதர்களின் துயரங்களையும் ஒழித்து விட முடியாது. இதை ஆட்சியாளர்களின் தவறு என்று சொல்வதை விட, இறை நம்பிக்கை உள்ளவர்கள் சொல்லும் விதிப்பயன் என்று தான் கொள்ள வேண்டும்.

இறுதியாக, எல்லா காலங்களிலும் ஆட்சியாளர்களிடம் அதிருப்தி அடையும் மக்கள் இருந்து கொண்டேயிருப்பார்கள். ஏதேனும் ஒரு சித்தாந்தத்தை சொல்லி அவர்களை ஒன்றினைத்து ஆட்சி மாற்றம் செய்ய விரும்பும் மக்களும் இருப்பார்கள். 

இவை ஆள்பவனுக்கும் ஆள துடிப்பவனுக்கும் நடக்கும் போராட்டமாகவே இருக்கும். இந்த போரட்டத்தில் துன்பப்படும் எவரும் அதை விட்டு வெளிவருவதில்லை. சந்தர்ப்பங்களை பயன் படுத்தி சுய புத்தியுடன் உழைக்கும் மக்களே முன்னேற்றம் கான முடியும். எந்த ஆட்சியாளரும், எந்த சித்தாந்தமும் மக்களை முன்னேற்ற முடியாது. அது ஒரு மாயை.

தாய் – மாக்ஸிம் கார்க்கி Maxim Gorky

 – மொழிபெயர்ப்பு-ரகுநாதன்

ஸ்டார் பிரசுரம் 1968 பதிப்பு
நிறைய பிழைகள் உள்ளது. பிழை திருத்தம் பார்த்திருக்க வேண்டும்.



 Михаил Трояновский

No comments:

Post a Comment