Saturday 20 September 2014

பின் தொடரும் நிழலின் குரல் - ஜெயமோகன் புத்தக ஆய்வு



பின் தொடரும் நிழலின் குரல் ::

பொது உடமை கொள்கை என்கிற கம்யுனிச சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் கம்யுனிசம் வளர்ந்த கதை, அதை அமுல் படுத்த அவர்கள் எடுத்துக்கொண்ட சர்வதிகார முறை, மக்களின் தியாகங்கள், கம்யுனிசத்தால் மக்கள் அடைந்த துன்பங்கள், அதிகார போட்டி இறுதியில் கம்யுனிசம் வீழ்ந்த வரலாறு இவைகளை, இந்தியாவில் இந்த கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு வாழ்ந்த அருனாசலம் என்பவர் மூலம் கூறப்பட்டுள்ளது.

அருனாசலம் கம்யுனிச கொள்கைகளை முழுவதுமாக நம்பி தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்கிறார்.

இந்தியாவில் கம்யுனிச கட்சியில் , கட்சி முடிவுகளுக்கு மாறாக கருத்து சொல்பவர்களை கட்சி எவ்வாறு ஒரங்கட்டியது என்பதுடன், அவர்களை கட்சியின் வரலாற்றிலிருந்தே அகற்றி விடுகிறது என்பதை வீரபத்திர பிள்ளை என்பவர் மூலம் விவரிக்கிறார்.

ரஷ்யாவில் , கம்யுனிச வரலாற்றில் புகாரின்என்பவர் எவ்வாறு பொய் குற்றம் சாட்டப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார் மற்றும் அவரைப்பற்றி வரலாற்றில் எந்த சுவடுகளும் இல்லாமல் அழிக்கப்பட்டது என்பதை விவரிக்கிறார். 30 ஆண்டுகள் சைபீரியாவின் வதை முகாமில் வாழ்ந்த அவரது மனைவி , புகாரின் வாழ்வில் நடந்தவைகளை கூற அதற்கு பிறகு புகாரின் குற்றம் அற்றவர் என்பதை அரசு ஒப்புக்கொள்கிறது.

புகாரினின் இந்த வாழ்க்கை சரித்திரத்தை வீரபத்திர பிள்ளை ஆதாரங்களுடன் வெளிக்கொன்டு வந்து பிரசுரிக்க முயலும் போது, தமிழக கம்யுனிஷ்டு கட்சி அதை தடுத்து,  கட்சிக்கு எதிராக செயல்பட்டார் என்று பொய் குற்றம் சாட்டி அவரை அவமானப்படுத்தி வெளியேற்றுகிறது. அவர் நிறைய எழுதுகிறார். கட்டுரைகள், கதைகள், கவிதைகள் மற்றும் நாடகங்கள் எழுதி வைத்துள்ளார். இறுதியில் மனநிலை பாதிக்கப்பட்டு பிச்சையெடுத்து வாழ்ந்து தெருவில் அனாதையாய் மடிகிறார்.

வீரபத்திர பிள்ளையை பற்றி அறிந்த அருனாசலம் அவரை பற்றிய முழு விவரங்களை அறிந்து அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஆண்டு மலரில் எழுத முயற்சி செய்கிறார். அதை கட்சி தடுக்கிறது. கட்சியில் புறக்கணிக்கப்படுகிறார். மன உழைச்சலுக்கு அடிமையாகி, மன நல மருத்துவமனையில் சிகிக்சை பெறுகிறார். மனைவியின் அன்பாலும் அரவனைப்பிலும் அதிலிருந்து மீண்டு வருகிறார்.

வீரபத்திர பிள்ளை எழுதிய பல கட்டுரைகள், கதைகள், கவிதைகள் மற்றும் நாடகங்கள் புத்தகத்தில் இனைக்கப்பட்டுள்ளன.

இறுதியில் அருனாசலம் கடவுள் நம்பிக்கை கொண்டு வாழ்க்கையை தொடர்கிறார். இவரைப்போல கட்சியால் அவமானப்படுத்தப்பட்ட  மூத்த தியாகியும் கடவுள் நம்பிக்கையுடன் வாழ்வதாக குறிப்பிடுகிறார்.

கொள்கைக்காக உயிர் நீத்த தீயாகிகளின் வாழ்க்கைக்கு பொருள் என்ன என்ற கேள்விக்குபிதாவின்உபதேசங்களையே பதிலாக தருகிறார்.

தியாகிகள் அறிக. அடைவடற்காகத் தியாகம் செய்பவன் அனைத்தையும் இழக்கிறான். இழப்பதற்காகத் தியாகம் செய்பவன் அனைத்தையும் அடைகிறான்.

தியாகிகள் அறிக. இலக்குகளுக்காகத் தியாகங்கள் செய்யப்படுவதில்லை. இலக்குகளோ மண்ணில் குறிக்கப்படுகின்றன. தியாகங்ககளோ என் பிதாவிற்கு முன்பாகக் கணக்கிடப்படுகின்றன.

ரஷ்யாவில் நடந்த நிகழ்ச்சிகளையும் அக்டோபர் புரட்சியையும் விவரிக்கிறார்

கம்யுனிசத்தில் மேலிருந்து ஆனைகள் பிறப்பிக்கப்படுகின்றன. கீழ் மட்டத்தில் கருத்துக்கள் கேட்கபடுவதில்லை, கருத்துக்கள் சொன்னாலும் புறக்கனிக்கப்படுவதுடன் தண்டிக்கப்பட்டனர் என்கிறார்.

விவசாயிகளை சுரண்டி தொழிலாளிகளுக்கு ஆதரவு தருவதாக கூறி, ராணுவ ஆட்சியை அமைத்து கொண்டனர் என்கிறார்.

மக்கள் லட்ச கணக்கில் கொல்லப்பட்டதுடன் , சைபீரியாவின் வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர் என்கிறார்.

ஸ்டாலின் , லெனின் மற்றும் பல தலைவர்களுக்கிடையேயான அதிகார போட்டியை விவரிக்கிறார்.

                    ============================
தோழர்களே,

கற்பனை நிரம்பியவர்கள் தங்கள் ஆகச் சிறந்த காமத்தின் தருணங்களை சுயபோகத்தின் போது தான் அடைகிறார்கள். எழுதும் கரத்தால் சுயமைதுனம் செய்யும் போது தான் எழுத்தாளன் பூரண இன்பம் அடைகிறான்.” ----(page 247)

இவர் சமூகத்தில் வெட்ட வெளியில் அனைவர் முன்பும் சுயபோகம் செய்து பீச்சியடித்திருக்கும் விந்துக்களின் நெளியும் தன்மைகளை கவனிப்போம்

இதன் அடிப்படையில் , எழுத்தாளன் தனது சிந்தனையில் உதித்த எண்ணங்களை எழுத்துக்களாக சமூகத்தில் பீச்சியடிக்கும் போது, அவனது உயிரனுக்கள் வாசகனின் மூலையில் வெவ்வேறு வடிவங்களில் கருக்கொள்கிறது எனக் கொள்ளலாம்.

எழுத்தாளனுக்கு இன்பம் கிடைத்தாலும், உருவான பல கருக்கள் சமூகத்தில் பல தாக்கங்களை ஏற்ப்படுத்தும். உருவாகிய கரு ஆரோக்கியமானதா, ஊனமானதா, கடவுளா சைத்தானா என்பது எழுத்தாளனுக்கு தெரிய வாய்ப்பில்லை. சமூகமும் இனம் கான முடியாது. அது சமூகத்தில் பொது கருத்துக்கு மாறாக எதிர் வினையாற்றி கொண்டிருக்கும்.

நாசிசம், பாசிசம் ஸ்டாலினிசம் மூணையும் ஒண்ணா சேத்துச் சொல்ல முடியுமாஎன்ற கேள்விக்கு –-----

கண்டிப்பா. பேருதான் வேற வேற . மத்தப்படி கொள்கை நடைமுறை எல்லாமே இந்த மூணிலயும் ஒண்ணுதான். சமூகத்தையும் பிரபஞ்சத்தையும் பெரிய யந்திரமா உருவகிக்கிற போக்கு இது மூணுக்கும் அடிப்படை. அந்த எந்திரத்தோட இயங்குமுறை என்னான்னு புரிஞ்சுக்கிட்டு அதை இஷ்டப்படி ஆட்டி வைக்கலாம், மாத்தியமைக்கலாம்னு இந்த சர்வாதிகாரிகள் நம்பினாங்க.  முஸ்தபா கமால் பாஷா, மாவோ, கரிபால்டி எல்லோரும் இந்த  வம்சம்தான். இடி அமீனும், போல்பாட்டும் கூட இந்த வம்சத்தில உதிச்சவங்கதான். ---- என்று பதில் கூறுகிறார்.

கம்யுனிசத்தை பற்றி கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால், முற்றிலும் நிராகரிக்கப்பட்டது அல்ல. ஆனால், நாசிசம், பாசிசம் எவராலும் யாராலும் ஏற்க்கப்பட்டதல்ல. அது கண்டிக்கப்பட்டது. இன்று வரை அந்த செயல்களுக்கான பலன்கள் அனுபவிக்கப்படுகிறது. அதில் ஈடுப்பட்டவர்கள் இன்றளவும் அதற்க்காக மன்னிப்பு கோருகின்றனர். தண்டிக்கப்படுகின்றனர்.

ஆனால், எழுத்தாளர் இந்த மூன்றையும் ஒன்றாக பாவிக்கிறார். அதை வெளிப்படையாகவும் தெரிவிக்கிறார்.

கம்யுனிசத்தை மூர்க்க தனமாக எதிர்ப்பதற்க்கு, அதை விட மிக மோசமான வேறு சித்தாந்தத்துடன் சமன் செய்கிறார்.

கம்யுனிச கொள்கை நன்மையை ஏற்ப்படுத்தவில்லை என்றும் மாறாக தீமையை தான் ஏற்ப்படுத்தியது என்பதற்கு சாதகமாக வரலாற்று நிகழ்சிகளை தொகுத்துள்ளார். ஆனால், எந்த இடத்திலும் கம்யுனிசம் என்றால் என்ன மார்க்சிசம் என்றால் என்ன என்பதை குறிப்பிடவில்லை. கொள்கைகள் முற்றிலும் தவறானவையா அல்லது நடைமுறை படுத்த எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததா என கூறவில்லை. இன்றைய கால கட்டத்தில் நடைமுறை படுத்த முடியாது என்பவர் ஒரு காலத்தில் அதற்கு சாத்தியம் இருந்தது என்பதை ஒப்புக்கொள்கிறாரா, பொது உடமை சித்தாந்தமே தவறு என்று தனிமனிதன் எவ்வாறு தீர்மானிக்க முடியும். அதை நடைமுறைப்படுத்தினால் தான் சமூகம் அதை எப்படி எதிர் கொள்கிறது என்று அறிய முடியும்

பிடிக்காத உணவையும் மருந்தையும் உடலுக்கு கொடுக்கும் போது அது ஒவ்வாமையை வெளிப்படுத்தும். அதற்கு பிறக்கும் வலுக்கட்டாயமாக திணிக்கும் போது , அதன் விளைவுகள் மரணமாக கூட இருக்கலாம். மேலும் ஒருவருக்கு ஒவ்வாமையானால் அனைவருக்கும் அவ்வாறே இருக்க வேண்டிய அவசியமில்லை. சிலருக்கு அது பயன் தரக்கூடியதாக கூட இருக்கலாம்.

அதை பரிட்சித்து பார்க்க சமூகம் கொடுக்கும் விலை என்னவென்று பார்க்க வேண்டும். லட்சக்கணக்கான மக்களை பலிகொடுத்து, ஒரு சித்தாந்தத்தை திணிப்பது ஒரு வரலாற்று பிழை. அது தான் ரஷ்யாவில் நடந்ததாக தோன்றுகிறது.

கம்யுனிசத்தின் அடிப்படை தத்துவமானஅனைத்தும் அனைவருக்கும் சொந்தம்என்ற பொது உடமை கொள்கையை இவ்வாறு நையான்டி செய்கிறார்.

மண் பொண் இவையனைத்தும் அனைவருக்கும் சொந்தமானது என்று கட்சி தலைவர் கொள்கையை விளக்கிய பிறகு, அடுத்த கட்ட தலைவர்கள் பொண் பொதுவென்றால், பெண்ணும் பொது தானா, தலைவரின் மனைவியும் பொதுவானால் நாமும் ………………………………………. இப்படி குதர்க்கமான உரையாடலை திணிக்கிறார். பொது உடமை கொள்கையை இந்த அளவுக்கு விமர்சிக்க முடிகிறதென்றால், அதிகாரதில் இருந்தவர் செய்த அயோக்கியதனங்களே காரணம்.

கம்யுனிச கொள்கையே பிதற்றல் என்கிறார்.  பைத்தியகரமான கொள்கை, செய்கை பேச்சு என்பதை, இருவர் மூலம் நீருபிக்கிறார். கம்யுனிச கொள்கையை நேசித்து அதற்க்காகவே வாழ்ந்த வீரபத்திர பிள்ளை என்பவர் பித்து பிடித்து பிச்சையெடுத்து அனாதையாய் தெருவில் மடிந்தார் என்கிறார். அருணாசலம் என்பவரும் மனநிலை தவறி , சிகிச்சை பெற்று திரும்புகிறார். இதன் மூலமாக இது பைத்தியகரமான  கொள்கை என்பதை நிருபீக்க முயல்கிறார்.

கம்யுனிஷ்டுகள் கடவுள் நம்பிக்கையற்றவர்கள், சடங்கு சம்பிரதாயங்களை புறக்கனிப்பவர்கள் என்ற எண்ணம் சமூகத்தில் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், கம்யுனிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் புறக்கணிக்கப்பட்டவர்கள் இறுதியில் கடவுளிடம் தங்களை ஒப்படைத்துக்கொண்டு சடங்கு சம்பிரதாயங்களை ஏற்றுக்கொள்கின்றனர் என்கிறார்

கம்யுனிஷ்டுகள் போலி என்பதுடன் அவர்களது கொள்கையும் போலியானது என்பதை இதன் மூலம் நிருபிக்க முயல்கிறார். எல்லாம் இறைவன் செயல் என்பதும், இறைவன் விதித்தப்படி தான் நடக்கும் என்றும் , அவனை சரனடைவது தான் சாத்தியம் மற்ற கொள்கைகள் சித்தாந்தங்கள் அனைத்தும் போலி என்பதை வலியுறுத்துகிறார்..

கம்யுனிஷ்டுகளை போல ஆயுதம் ஏந்தி போரடிய மாவோயிஸ்டுகளை இரண்டு கம்யுனிஷ்டுகள் தான் காட்டிக்கொடுத்தனர் என்கிறார்.

சோவியத் ரஷ்யா உடைந்தது ஐரோப்பிய நாடுகளின் சதி என்பது போல கருத்து கூறுகிறார். எனக்கும் அந்த சமயத்திலும்  இப்போதும் அந்த கருத்து தான் இருக்கிறது.

சக்தி வாய்ந்த நாடாக விளங்கிய U.S.S.R  உடைந்த போது, வேலையிழந்த ராணுவத்திற்க்கும் அரசு ஊழியர்களுக்கும் சம்பள பாக்கி கொடுக்க முடியாமல், தொழிற்சாலைகளில் தேங்கியிருந்த தொலைகாட்சி பெட்டிகளும், உள்ளாடைகளும், ஆணுறைகளும் கொடுத்து வெளியேற்றினர். விபச்சாரமே முக்கிய தொழிலாக மாறியது.

உலகில் இரண்டு சக்தி வாய்ந்த நாடுகள் மட்டுமே இருந்தது. ஒன்று U.S.A. இரண்டாவது U.S.S.R . மற்ற நாடுகள் இவர்களுடன் அணி வகுத்து நின்றன. இரண்டிலும் சேராமல் இருந்தவர்கள் அணி சேரா நாடுகள் என அழைக்கப்பட்டன. இந்தியாவும் அணி சேரா நாடுகளில் ஒன்று என்று அறிவித்துக்கொண்டது. உண்மையில் அது ரஷ்யா சார்புடையதாகவே இருந்தது. திட்டமிட்டு USSR அழிக்கப்பட்டவுடன் இன்று ஒரே ஒரு நாடு மற்ற நாடுகளை ஆட்டிப்படைக்கும் நாடாக விளங்குகிறது.

இதற்கு அடங்காத நாடுகளையும் மனிதர்களையும் தீவிரவாதிகள் என்ற பட்டத்துடன் மற்ற நாடுகளின் உதவியுடன் அடக்க முயற்சி செய்கிறது.

இந்த புத்தகம் வெளி வந்த காலகட்டத்தில் (1999) தமிழகத்தில் இருந்த கம்யுனிஷ்டுகள் எதிர் வினை செய்தார்களா அல்லது உண்மையை தான் எழுதியுள்ளார் என சும்மா இருந்தார்களா என தெரியவில்லை.

உலகத்தில் இனி கம்யுனிச கொள்கையுடன் ஆட்சி செய்யப்படும் நாடு இருக்க முடியாது. இந்தியாவில் அது முற்றிலுமாக சாத்தியமில்லை. சில மாநிலங்களில் ஆட்சி செய்ய முடிகிறது.

சில மாநிலங்களில் ஆட்சி நடைபெற காரணம் கொள்கையல்ல. அந்த மாநிலத்தில் செயல்படும் தலைவர் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையே காரணம்.

அகில இந்திய கட்சியாக இருந்து இன்று மாநில கட்சியாக கூட அங்கீகாரம் அற்று இருக்கிறது. காரணம் அவர்கள் கொள்கையை கைவிட்டதல்ல. அவர்களது சந்தர்ப்ப வாத கொள்கையே காரணம், சுயமாக நிற்க தெம்பின்றி பிறர் தோள் மீது சவாரி செய்வதே .

தொழிலாளிகளுக்கு பாடுபடுவது என்ற கொள்கையை கைவிட்டு விட்டனர். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாதிரியாக பேசுகின்றனர். இப்போதெல்லாம் சில மணி நேர அடையாள உண்ணாவிரதம், சில மணி நேர ஊர்வலங்கள் மூலம் தங்களது இருப்பை காட்டிக்கொள்கின்றனர்.

சில வருடங்களுக்கு முன்பு இவர்கள் வங்கி துறையில் கனினி பயன் படுத்த எதிர்ப்பு தெரிவித்தனர். வேலை இழப்பு நேரிடும் என்பதும் புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படாது என்பதும் இவர்கள் கூறிய காரணம். இவர்கள் பேச்சை நம்பி இவர்களது போரட்டத்திற்க்கு செவி சாய்த்திருந்தால் இன்றைக்கு வங்கி துறை எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

இவர்கள் முழுமையாக ஆட்சி செய்ய முடியாது என்ற காரணத்தால் சில பதவிகளுக்காக சமரசம் செய்து கொள்கின்றனர். ஆனால், கொள்கையை சமரசம்  செய்து கொள்ளவில்லை என்கின்றனர்.

இவர்கள் ஆட்சி செய்த மாநிலங்களின் வளர்ச்சி மற்ற மாநிலங்களின் வளர்ச்சியை விட குறைவாகவே இருக்கிறது.

நேர்மையாளர்கள் மற்றும் ஊழல் செய்யவில்லையென்று சிலரது பெயரை பட்டியலிடலாம். உண்மை. ஆனால், அவர்கள் கம்யுனிஷ்டு கொள்கையை கடைப்பிடிப்பதால் தான் நேர்மையாளர்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் எந்த கொள்கையை கடைப்பிடித்தாலும் நேர்மையாளர்களாக தான் இருப்பார்கள். இதர கட்சிகளில் மற்ற கொள்கையை கடைப்பிடிப்பவர்களிலும் நேர்மையாளர்கள் இருக்கிறார்கள். பொதுமக்களிலும் நேர்மையாளர்கள் இருக்கிறார்கள். நேர்மைக்கும் கட்சி கொள்கைக்கும் சம்மந்தம் இல்லை. இவர்கள் நேர்மையாக வாழ்வதற்க்காகவே பிறந்தவர்கள்.

இன்றைய சமூக சூழ்நிலையில், உலகமயமாக்குதல் தாரளமயமாக்குதல் என்ற கொள்கையுடன் நாடு முன்னேறி கொண்டிருக்கையில், கம்யுனிச கொள்கை ஒரு காலாவதியான கொள்கையாகவே தொழிலார் வர்கமும் கருதும்.

அனைத்தும் அனைவருக்கும் சமம் என்ற கொள்கையை ஏற்க முடியாது. உழைப்பவனையும் அறிவை பயன் படுத்துபவனையும் ஒன்றாக கருதி ஒரே ஊதியத்தை கொடுக்க முடியாது. பாகுபாடு இருந்தால் தான் அதை அடைய போட்டி போட்டுக்கொண்டு உழைத்து முன்னேற வேண்டும் என்ற துடிப்பு இருக்கும். சமூகமும் நாடும் வளரும். அனைவரும் சமம் எனும் போது எவனும் தனது திறமை உபயோகப்படுத்த மாட்டான். உழைக்க மாட்டான். வளர்ச்சி இருக்காது.

ரஷ்யா வளர்சியடைந்த வலிமையான நாடாக கருதப்பட்டது. வீக்கத்தை வளர்ச்சி என்று காட்டியுள்ளார்கள். அது விரை வீக்கம் என்பது இரும்பு திரை வீழ்த்தப்பட்ட போது தெரிந்தது.

தோழர்களே, உங்களுக்கு இறுதியாக ஒன்றை சொல்கிறேன். செங்கொடி அதன் நிறத்தை இழந்துவிட்டது. காவி நிறமாக மாறி வருகிறது என்பதை அறிவீர்களாக.

எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்கள் அவரது கருத்தை துணிச்சலாக கூறியுள்ளார். பிறர் தம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படாமல், அவரது கருத்தை நேர்மையாக கூறியுள்ளதை மனதார பாரட்டுகிறேன்.


No comments:

Post a Comment