Monday 29 September 2014

மோகமுள் - புத்தக ஆய்வு



எழுத்தாளர் திரு. தி.ஜானகிராமன் சக்தி வைத்தியம் என்ற சிறுகதைத் தொகுப்புக்காக தமிழுக்கான சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர். அவர் எழுதிய கதைகளில் மிகவும் புகழ் பெற்றது “ மோகமுள் “

இந்த கதை திரைப்படமாகவும் வெளி வந்துள்ளது.
1970களின் ஆரம்ப கால கட்டத்தில் எழுதப்பட்ட நாவல். கதை நடக்கும் காலம் இரண்டாம் உலக போர் நடக்கும் கால கட்டம்.

கிராமிய கதை நகர கதை என்று பிரிக்க முடியாது. குறிப்பிட்ட இனம், தொழில் சார்ந்த கதையல்ல. குறிப்பிட்ட இன மக்களின் வட்டார வழக்கில் எழுதப்பட்டதல்ல. ஆனாலும் மிக சில இடங்களில் பிராமண மொழி வருகிறது.

கதாபாத்திரங்கள் நேரடி உரையாடல்களின் மூலமாகவும், இவராகவும் கதையை நகர்த்தி செல்கிறார். 850 பக்கங்கள் கொண்ட நாவல். 

கதையில் எந்த போதனையும் சொல்லவில்லை. 20 வயது இளைஞனுக்கு 30 வயது பெண்ணிடம் ஏற்ப்படும் ஈர்ப்பு . அவனது ஈர்ப்பு அவனது 28 வயதில் அந்த பெண்ணுடன் “ உறவு “ கொள்வதுடன் முடிகிறது.

சமூகத்தில் எல்லா கால கட்டங்களிலும் இது போன்ற உறவுகள் இருக்கிறது. வெளிப்படையாக யாரும் சொல்லிக் கொள்வதில்லை. 1970ல் இதை வெளிப்படையாக கதையாக எழுதியிருப்பதால் மிகவும் பிரபலமடைந்துள்ளது. இந்த உறவை சொல்ல , கிட்ட தட்ட 700 பக்கங்கள் கதையை இழுத்து வந்து அவர்களிடையே உறவு ஏற்ப்பட்டதை சொல்கிறார்.

சமூகம் அங்கீகரிக்காத உறவை வாசகனுக்கு சொல்லி எற்க வைக்க 700 பக்கத்திற்க்கு சூழ்நிலைய உருவாக்கி இறுதியில் அந்த உறவை வாசகனை ஏற்க வைக்கிறார்.

அனைத்து கதாபாத்திரங்களையும் மனதில் பதிய வைக்கும் வகையில் சரளமான எளிய நடையில் கதையை நகர்த்தி செல்கிறார். தேவயற்ற வர்ணனைகள் கிடையாது.

கதை எழுதப்பட்ட காலத்தில் இது முற்போக்கு கதையாக கருதப்பட்டதால் மிகவும் பிரபலமடைந்துள்ளது. இன்றைய கால கட்டதில், காதலும் காமமும் பொது வெளியில் தாரளமாக கிடைப்பதால் இன்றைய வாசகனுக்கு புதுமையாக தெரிய வாய்ப்பில்லை. இது போன்ற கதைகளையும் நிகழ்வுகளையும் நேரிடையாக பார்க்க முடிகிறது.

மோகமுள் – தி. ஜானகிராமன் – கதை சுருக்கம்



 

பாபு – 20 வயது கல்லூரி மாணவர். இவரது அம்மா அப்பா மற்றும் விதவை அக்கா பாபநாசத்தில் வாழ்பவர்கள்

பாபுவின் அப்பாவின் சிநேகிதர் சுப்புரமணி – அவருக்கு இரண்டு குடும்பங்கள். முதல் மனைவி அவரது வாரிசுகள் கிராமத்தில் வசிப்பவர்கள்.

இரண்டாவது குடும்பம் – மனைவி பார்வதி மற்றும் மகள் யமுனா. இவரகள் மராட்டியர்கள் இரண்டு குடும்பங்களும் தனித்தனியாக வாழ்ந்தாலும் , இரண்டையும் காப்பாற்றுகிறார். 

பாபுவின் அப்பா வைத்தி , சுப்புரமனியத்தின் விவசாய நிலங்களை பார்த்துக் கொள்கிறார். வைத்தியின் குடும்பமும் பார்வதியின் குடும்பமும் ஒருவருக்கொருவர் நன்றாக அறிந்தவர்கள்.

பாபுவின் உயிர் நண்பன் ராஜம்.

பாபு கல்லூரியில் படிக்கிறான். யமுனா குடும்பமும் அதே ஊரில் இருக்கிறது. இருவருக்கும் வயது வித்தியாசம் 10 ஆண்டுகள். பாபுவுக்கு 20 வயது. யமுனாவுக்கு 30 வயது. 

பாபுவுக்கு யமுனா மீது ஈர்ப்பு வருகிறது. நண்பன் ராஜத்திடம் சொல்கிறான். எதையும் ஆராய்ந்து அறிவுரை சொல்லும் ராஜம் இந்த எண்ணம் வேண்டாம் என்கிறான். அவன் பெண்களை தெய்வமாக நினைக்கிறான். ( ஒரு முறை தவறான எண்ணத்துடன் ஒரு பெண்ணை அனுக, அவள் கூறும் அறிவுரை மூலம் மாறியவன்)

அதே ஊரில் இசை மேதை ஒருவர் இருக்கிறார். அவரிடம் பாபு இசை கற்றுக்கொள்கிறான்.

பாபு தங்கியிருக்கும் வீட்டிற்க்கு பக்கத்து வீட்டில் ஒரு பெரியவர் இளம் பெண்ணை திருமணம் செய்து குடியேறுகிறார். இளம் பெண் பாபுவுடன் மையல் கொண்டு திருட்டு தனமாக மொட்டை மாடி வழியாக வந்து பாபுவை கட்டாயப்படுத்தி உறவு கொள்கிறாள். இதை ராஜத்திடம் சொல்கிறான். அந்த பெண் தொடர்ந்து உறவு கொள்ள முயற்சிக்கையில் பாபு மறுத்து விடுகிறான். அவள் தற்கொலை செய்து கொள்கிறாள்.

யமுனாவுக்கு திருமணம் தடைப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. அந்த நேரம் பாபு யமுனாவிடம் தனது காதலை சொல்கிறான். அவள் மறுத்து விடுகிறாள். இதிலிருந்து மீள இசைப் பயிற்சியில் கவனம் செலுத்துகிறான். யமுனாவை சந்திப்பு குறைகிறது. வட இந்திய இந்துஸ்தானி பாடகர்கள் வருகிறார்கள். பாபு அவர்களது திறமையை கண்டு வியக்கிறான். அவர்களிடம் இசை கற்றுக்கொள்ள வேண்டும் என விரும்புகிறான். அவர்கள் எப்போது வேன்டுமானலும் பூனா வந்து இசையை கற்கலாம் என கூறுகிறார்கள்.

இந்த நிலையில் யமுனாவின் தந்தை சுப்புரமனி இறந்து விடுகிறார். அவரது மகன் யமுனா குடும்பத்திற்க்கு  தொடர்ந்து உதவி செய்ய மறுத்து விடுகிறான். இவர்கள் தங்களிடமிருக்கும் நகைகளை விற்று வாழ்க்கையை ஓட்டுகின்றனர்.

கல்லூரி படிப்பையும் இசை பயிற்ச்சியையும் முடித்த பின்பு சென்னையில் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை செய்கிறான். அங்கு யமுனா பாபுவை தேடி வருகிறாள். அவளது அம்மா திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு பணக்காரருக்கு மனைவியாக இருக்கும் படி வற்ப்புறுத்துவதால் சென்னை வந்துள்ளாள். பாபு அவளை ஒரு சமூக சேவை நிறுவனத்தில் சேர்த்து விடுகிறான்.

பாபுவுக்கு காய்ச்சல் வருகிறது. அவனுக்கு உதவி செய்ய யமுனா வருகிறாள். பாபு மீண்டும் தனது ஆசையை கூறுகிறான். அன்று இரவு அவர்கள் உடல் உறவு கொள்கிறார்கள். இப்போது பாபுவுக்கு வயது 28 யமுனாவுக்கு 40 யமுனா இதற்கு தானே ஆசைப்பட்டாய் என்று பாபுவை திரும்ப திரும்ப கேட்கிறாள். தான் இவைகளை கடந்து விட்டதாக கூறுகிறாள் 

வேலையில் திருப்தியில்லாமல் விட்டு விடுகிறான். பூனா சென்று இந்துஸ்தானி இசை கற்க விரும்பி அவருக்கு கடிதம் எழுதுகிறான். அவர் இசையை கற்க நாலு வருடத்திற்க்கு வர வேண்டும் என்று கூறுகிறார். ஒப்புக்கொண்டு கடிதம் எழுதுகிறான். கிராமத்திற்க்கு சென்று அம்மா அப்பாவிடம் விடை பெறுகிறான்.

புகை வண்டி நிலையத்தில் யமுனா வழியனுப்ப வருகிறாள். பாபுவுடன் இருக்கும் நண்பர் யார் என கேட்கிறார். வயதான பெண்ணாக இருக்கிறாள் அவளது கணவன் எங்கே என கேட்கிறார். பாபு அவளுடைய கணவனுடன் தான் பேசிக்கொண்டிருக்கிறிர்கள் என்று கூறுகிறான்.

யமுனா பாபுவுடன் தனியாக பேசும் போது, எல்லா விவரங்களையும் பாபுவின் அப்பாவுக்கு கடிதம் மூலம் தெரிவித்து விட்டதாக கூறுகிறாள்.

இத்துடன் கதை நிறைவு பெறுகிறது.


 http://upload.wikimedia.org/wikipedia/ta/c/c4/TJanakiraman.jpg

No comments:

Post a Comment