Monday 13 January 2014

போகி பண்டிகை



போகியோ போச்சு பொங்கலோ போச்சு பொண்ணு குட்றி கெய்வி       (பொண்ணு குடு கிழவி)

1965-70களில் சென்னை, வடபழனி பகுதியில், சிங்காரவேலர் திடல் அருகில் இருந்த பூக்கார தெருவில் வசிக்கும் போது, போகி பண்டிகை கொண்டாடும் போது , குத்தாட்டம் போட்டு கொண்டு பாடும் பாடல் வரி இது.
போகி பண்டிகை என்றால், வீட்டில் இருக்கும் பழைய சாமன்களை போட்டு எரிப்பது என்று பொதுவாக சொல்வார்கள். எழையின் வீட்டில் புதிய பொருள் என்ன பழைய பொருள் என்ன இருந்ததே சில பொருட்கள் தான். எனவே வீட்டு பொருட்களை போட்டு எரிக்கும் பழக்கம் இல்லை. தோட்டத்தில் இருக்கும் காய்ந்த மரம் கிளை, செடி கொடிகள சேகரிப்பது, வீட்டில் இருக்கும் பழைய காகிதங்கள், தேவைப்படும் போது குப்பை தொட்டியில் இருந்த எரிக்க தகுந்த பொருட்களை சேகரித்து, எந்த இடத்தில் வேண்டுமானலும் எரித்து இரவில் போகி கொண்டாடியது எனது அனுபவம். நானும் நண்பர்களும், இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே பொருட்களை சேகரிப்பதும், சேகரித்த பொருட்கள வீட்டின் அருகில் குவித்து வைப்பதால், பெரியவர்களிடம் அடிவாங்குவது சகஜம்.
போகி பண்டிகை கொண்டாட மேளம் தேவை அல்லது உடுக்கை தேவை. அதன் அன்றைய விலை ஒரு அணா (6 காசு) அதற்காக வீட்டில் அடி உதை வாங்கி காசு வாங்க வேண்டும்.
வாங்கிவிட்டால், இரவு பகல் பாரமல் 2-3 நாட்கள் மேளம் கொட்டி மக்களின் தூக்கத்தை கெடுப்பது ஒரு சந்தோசமான விளையாட்டு.
காகிதங்களை எரித்து, அதில் மேளத்தை சூடி காட்டி, குச்சி வைத்து தட்டி நெருப்பை சுற்றி வந்து நடனம் ஆடுவது ஒரு ஆனந்த கூத்து.
நடனம் என்றால், இன்றைக்கு திரைப்படங்களில் வருவது போன்ற குத்துபாட்டு. அன்றைய திரைப்படங்களில் இது போன்ற குத்து பாட்டுகள் கிடையாது. இது போன்ற நடனங்கள், சாவு ஊர்வலத்தின் முன்பு பறையடித்து, குடித்து விட்டு ஆபாசமாக நடனம் ஆடுவார்கள். பறை ஒலி இனிமையாக இருக்கும். குடுத்துவிட்டு, தன்னை மறந்த நிலையில் , வெளி ஆடை விலகி உள்ளாடையும், உள்ளாடையுள்ளும் வெளியே தெரிய தன்னை மறந்த நிலையில் ஆடும் ஆட்டம் சாவு ஆட்டம். இதை தான் இன்றைய திரைப்படங்களில் குத்தாட்டம் என்ற பெயரில் வருகிறது.

அந்த நடனத்தை அடிப்படையாக கொண்டு, மேளம் அடித்து கொண்டு, நெருப்பை சுற்றிவந்து நடனம் ஆடுவது மற்றும் மற்ற வீடுகளின் முன்பு நடனம் ஆடுவதில் ஒருவிதமான இன்பம். இந்த மேளம் அடித்து நடனம் ஆடுவது, பொங்கலுக்கு பின்பும் தொடரும். பெரியவர்களிடம் பொங்கல் இனாம் (காசு) வாங்கி அதில் திரைப்படம் பார்ப்பதுடன் பொங்கள் விழா முடிவடையும்.
நான் வசித்த பகுதியில் தெருவில் கடைசி வீடு பெரிய தோட்டத்துடன் கூடிய வீடு. அதில் ஒரு கிழவியும் அவள் பேத்தியும் வசித்து வந்தார்கள். அவர்கள் வீட்டு முன்பு தான், “போகியோ போச்சு பொங்கலோ போச்சு பொண்ணு குட்றி கெய்வி ‘ என்று பாடி காசு கேட்போம். கிழவி விரட்டி விடுவாள். நாங்கள் தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டிருப்போம்.  அதனால், கிழவி, பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி வைத்திருப்பாள். நாங்கள் இவ்வாறு தொந்தரவு செய்யும் போது, எங்கள் மீது தண்ணீர் வாரி இறைத்து விரட்டி விடுவாள். சில சமயம் சிரித்துகொண்டே 2 காசு இனாம் கொடுப்பாள்.
இன்று இது போன்ற ஆட்ட பாட்டம் இல்லாமல், எவ்வித மகிழ்ச்சியும் இல்லாமல், போகி பண்டிகை கொண்டாடப்படுக்கிறது.

போகி பண்டிகை மற்றும் பொங்கள் பண்டிகை நல்வாழ்த்துக்கள்       


 



No comments:

Post a Comment