Friday 24 January 2014

இலக்கியம் - எழுத்து

சென்னை புத்தக கண்காட்சி::


சென்னை புத்தக கண்காட்சி பற்றி முகநூலில் ஏகப்பட்ட பதிவுகள். நிறைய எழுத்தாளர்கள் தங்கள் நூல் வெளியீட்டு விழாவை பற்றியும், மற்ற எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு விழா பற்றியும் நிறைய எழுதியுள்ளனர்.

பலர் தங்களது புத்தக கண்காட்சி விஜயம் குறித்தும் பதிவுகள் எழுதியுள்ளனர். புத்தகம் வாங்கியதாக கூறி சாட்சியாக புத்தகங்களுடன் புகைப்டங்கள்  வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் உண்மையிலேயே இதையெல்லாம் படிக்க தான் வாங்கினார்களா அல்லது பெருமை பேச வாங்கினார்களா என தெரியவில்லை.

இதே தருணத்தில் கோவையில், தமிழ் பண்பாட்டு மையம் , “தாயகம் கடந்த தமிழ்என்ற தலைப்பில் உலகத்தமிழ் எழுத்தாளர்கள் கருத்தரங்கு ஒன்றை மூன்று நாட்கள் நடத்தியுள்ளது.

இதில் வெளிநாட்டில் வாழும் தமிழ் எழுத்தாளர்களும் ,, சில உள்ளூர் எழுத்தாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

ஆனால், இது குறித்து முகநூல் எழுத்தாளர்கள் எவரும் எதையும் குறிப்பிடவில்லை என்பது வருந்தத்தக்கது.

இந்த நிகழ்ச்சி குறித்து இந்த உள்ளூர் எழுத்தாளர்களுக்கு தெரியாதா அல்லது தனிப்பட்ட முறையில் இவர்களுக்கு அழைப்பு அனுப்பவில்லை என்ற காரணமா ?  தாயகம் கடந்த எழுத்தாளர்களுக்கும் தங்களுக்கும் சம்மந்தம் இல்லையென நினைத்துவிட்டார்களா

சென்னை புத்தக கண்காட்சியில் புத்தக வெளியீட்டு விழாவிலும், புத்தக அரங்குகளில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்த காரணத்தாலும் இது குறித்து கவனம் செலுத்த முடியாமல் போயிவிட்டதா ?

அல்லது எழுத்தாளர்களுக்கிடையே உள்ள அரசியலா ? எதுவாக இருந்தாலும் இப்படி வேற்றுமை காட்டி வாழும் இவர்களால், சமூகத்திற்க்கு நல்ல எழுத்தை அளிக்கமுடியுமா ?

அண்மையில் எழுத்தாளர்களின் பட்டியல் தயாரிக்கலாம் என முயற்சிசெய்து இனையத்தில் தேடினேன்.

என் மண்டையில் உள்ள மயிரை கூட எண்ணிவிடலாம் ஆனால் இந்த எழுத்தாளர்களின் எண்ணிக்கையை எண்ண முடியவில்லை. அத்தனை எழுத்தாளர்கள். எழுத்தாளர்களை என்னுவதைவிட வாசகர்களை எண்ணிவிடலாம் அதனால் அந்த முயற்ச்சியை தற்காலிமாக நிறுத்திவிட்டேன். எழுத்தாளர்களை மூன்று விதமாக பிரிக்கலாம்.

1. கவிஞர்கள் 
பலர் எல்லோருக்கும் புரியும் படி எழுதுகிறார்கள். சாதரணமாக எழுத படிக்க தெரிந்தவர்கள் அனைவரும் புரிந்துகொள்ளமுடியும். இவர்கள் பொதுவாக எழுதும் தலைப்பு, தாய், தந்தை மற்ற உறவுகள் குறித்து, அந்த நாளைய வாழ்க்கை முறை, மொழி , இனம், ஜாதி ? கல்வி, கலவி, இயற்கை, அன்றாட சமூக நிகழ்வுகள் போன்றவை.

சிலர் தங்களது இலக்கிய அறிவை பயன்படுத்தி, பொதுவாக மக்கள் பயன்படுத்தாத சொற்களை கொண்டு, கவிதை எழுதுவது. இதை எல்லோராலும் படித்து புரிந்துகொள்ள முடியாது. இதை சொன்னால், உனக்கு இலக்கிய அறிவு இல்லையென்றும், உனக்கு இலக்கியம் பற்றி என்ன தெரியும் என்றும் விவாதத்திற்க்கு அழைப்பார்கள். பொதுவாக காதல் அல்லது காமம் சார்ந்தே இவர்களது கவிதைகள் இருக்கும்.

மிக சிலர் எழுதுவது வெகு சிலருக்கே புரியும். தங்களது இலக்கிய மேதாவிதனத்தை பறைசாற்றி கொள்ள வார்த்தைகளை வாடகைக்கு வாங்கி கோர்த்திருப்பார்கள்.  வார்த்தைகளும் வாக்கியங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கும். இதையும் பலரும் பாரட்டியிருப்பார்கள். பாரட்டாவில்லையென்றால், இந்த கவிஞர்கள் தங்களை தற்க்குறி என நினைத்துவிடுவார்கள் என்று பாரட்டிவிடுவார்கள். என்ன எழுதியிருந்தது அதன் பொருள் என்ன தான் எவ்வாறு புரிந்துகொண்டார்கள் என்று எதையும் எழுதி புகழமாட்டார்கள். கவிதையில் இருந்து ஒரு வாக்கியத்தை எடுத்துகாட்டி – “ எப்படி உங்களால் இப்படி கற்பனை செய்ய முடிந்த்துஇதைவிட அழகாக ஆழமாக சொல்லமுடியாது அப்படி இப்படி என்று ஏகத்துக்கு பாரட்டியிருப்பார்கள். கடைசிவரை அந்த வரிக்கு என்ன அர்த்தம் எப்படி புரிந்துகொண்டார்கள் என்று விளக்கவேமாட்டார்கள். அது எதோ ரகசிய ஆவண குறி சொல் போல் பாதுகாப்பார்கள். காரணம் அது அவர்களுக்கும் விளங்கவில்லை என்பதுதான் பொருள். இதை செய்பவர்கள் பெரும்பாலும் சக எழுத்தாளர்களாக தான் இருப்பார்கள். இப்படி பாரட்டினால்தான் பதிலுக்கு இவர்களது எழுத்துக்களுக்கு அவர்களிடம் பாரட்டு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பாரட்டி எழுதியிருப்பார்கள்.

பள்ளியில் செய்யுள் பகுதி பொதுவாக மாணவர்களுக்கு புரிவதில்லை. அதனால், விளக்கவுரை, பொழிப்புரை கொடுப்பார்கள். அதுவும் புரியாதபட்சத்தில் கோனார் உரை உதவிகரமாக இருக்கும். எனவே, இது போன்று கவிதை எழுதுபவர்கள் தனியாக கோனார் உரை போன்று ஒன்று கொடுத்துவிடலாம். அல்லது கவிதைக்கு கீழ் செய்யுளுக்கு கொடுப்பது போல் பொழிப்புரை கொடுத்துவிடலாம்.

அண்மை காலத்தில் சிலரது கவிதைகளை படிக்கும் போது இப்படிதான் உணர்ந்தேன். பின்பு ஒருவழியாக மற்றவர்களுடைய கருத்துக்களுடன் சேர்த்துபார்த்து பொருள் புரிந்துகொண்டேன். அத்தனையும் அங்கங்களை வர்ணிப்பது, அங்கங்களை இனைக்கும் செயலை விவரிப்பதுமான கவிதைகள். சொற்கள் ஆடையிழந்து அம்மனமாக வலம் வந்துகொண்டிருக்கும். அவர்கள் பயன்படுத்திய சொற்களை நீக்கிவிட்டு , மிகச் சாதரணமான மக்கள் பயன்படுத்தும் சொற்களை பயன்படுத்தி படித்துபார்த்தேன். ( அதாவது தமிழிலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு ) மிகவும் கொச்சையாக பச்சையாக காமத்தை விளக்கும் கவிதைகள். இப்படி நான் மாற்றுசொல் பயன்படுத்தி படித்ததை இங்கு எழுதினால் (எங்கு எழுதினாலும்) அது மஞ்சள் பத்திரிக்கையில் எழுதப்படும் எழுத்துக்களாக இருக்கும். நிச்சியமாக தடைசெய்யப்படவேண்டிய எழுத்துக்களாக இருக்கும் . காமலோகம் என்ற இனையதளத்தில் வேண்டுமானால் எழுதலாம்.

சரி, நமது செய்யுள்களும், கடவுளை பாடும் பக்தி பாடல்களிலும், தற்போது திரைப்படங்களில் வரும் பாடல்களும் அப்படிதானே இருக்கிறது என விவாதம் செய்வார்கள். உண்மை தான். அதனால் இதையும் ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது.

ஆனால், நேரடியாக அனைவரும் புரிந்துகொள்ளும் வார்த்தைகளை உபயோகித்தால், அனைவரும் புரிந்துகொள்ளமுடியும். அவர்களுக்கு வாசகர் வட்டமும் பெரிதாக இருக்கும். அவர்களது எழுத்துக்களை தேடிப்பிடித்து படிப்பார்கள். புத்தக விற்பனையும் நன்றாக நடக்கும். வருமானமும் கிடைக்கும்.

2. சிறுகதை  எழுத்தாளர்கள்:

சிறுகதையில் எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். பொதுவாக 5 முதல் 10 நிமிடத்தில் படித்துவிடலாம். இப்போதெல்லாம் மின்னல் வேக கதைகள், ஒரு பக்க கதைகள் என்றெல்லாம் கதைகள் வருகிறது. படிக்க சுவையாக இருக்கும். பெரிதாக ஒன்றும் பாதிப்பை ஏற்ப்படுத்தாது. விதிவிலக்காக  சிந்திக்கவைக்கும் வகையில் சில கதைகள் படிக்க நேரிடுகிறது. எழுதுவதற்க்கு அனுபவத்தை ஏற்படுத்திகொள்ள இது போன்ற கதைகள் உதவும்.

பொதுவாக சமூக சிந்தனை என்ற பெயரில் தங்களது விருப்பு வெறுப்புகளை பதிவு செய்வதுதான் இந்த சிறுகதைகள். ஆனால், நான் நட்ட நடு சென்டராக விருப்பு வெறுப்பு இல்லாமல் கதை எழுதியுள்ளேன் என்று கூசாமல் பொய் சொல்வார்கள். கதைக்கு தலைப்பு வித்தியாசமாக கவர்ச்கிகரமாக கொடுப்பார்கள். எப்படி எழுத்துக்கள் புரியாதோ அதே போல கதைக்கு போடும்படங்களும் ஒன்றும் புரியாது. சம்மந்தமே இருக்காது. தனது குறியை தானே சுவைப்பது போன்ற படங்கள் இருக்கும். சாத்தியமே இல்லாத இந்த நிலை போல , கதைக்கும் படத்திற்க்கும் சம்மந்தமே இருக்காது.

3 நெடுங்கதை நாவல் எழுத்தாளர்கள் நாவல் என்ற பெயரில், நெடுங்கதை எழுதுபவர்கள் மிகச்சிறந்த இலக்கியவாதிகாளாக அங்கீகாரம் பெற, சம்பவ இடத்தின் வர்ணைகளை அவர்களுக்கு தெரிந்த வார்த்தைகள் அனைத்தையும் பயன்படுத்தி எழுதியிருப்பார்கள். அதிலும் கொடுமை, வட்டார வழக்கு மொழியில் எழுதியிருப்பார்கள். அந்த கதை என்ன அந்த வட்டார மக்களுக்கு மட்டும் தான் எழுதப்படுகிறதா ? அந்த வட்டாரத்தை சார்ந்த இன்றைய இளைய தலைமுறைக்கு கூட அது புரியாது.

வேறு ஒரு பிரபலமான எழுத்தாளர் அவரது சமூக வழக்க சொற்களை பயன்படுத்திஅவா ஆத்துலே வெறுஜ் மோருஞ்சாதம்என்று எழுதினால், வர்க்க ரீதியாக பாகுபடுத்தி வசைபாடுவார்கள். ஆனால், இவர்கள்  ஏலே, கருக்காலே கஞ்சி குடிச்கிட்டுபோலேஎன்று எழுதி தான் ஆதி தமிழன் என்று பறையடிப்பார்கள்.

சமூக சாடல், வர்க போரட்டம், மொழி இன போரட்ட கதைகளில் வார்த்தைகளில் வன்முறையிருக்கும். எதிரிகளை தோலுரித்து தொங்கவிடுவார்கள். மை கொண்டு எழுதாமல் திராவகத்தை கொண்டு எழுதி உணர்ச்சிகளை தூண்டிவிட்டு குளிர்பதன அறைகளில் ஓய்வெடுப்பார்கள்.

எல்லோருக்கும் வெகுஜன ( குமுதம், ஆனந்தவிகடன் போன்ற ) பத்திரிக்கையில் எழுத ஆசை. ஆனால், வாய்ப்பு கிடைப்பதில்லை. சீ சீ இந்த பழம் புளிக்கும் என்பது போல , இந்த பத்திரிக்கைகள் இலக்கிய தரம் வாய்ந்தது அல்ல என்றும் நடிகையின் அக்குளுக்குள் இருக்கும் அசிங்கத்தை எழுதுபவர்கள் என்று தூற்றுவார்கள்.

தங்களது எழுத்து பிரசுரமாகும் சிற்றிதழ்கள் ( இது தான் உலக இலக்கியம் பேசும் இதழ்கள் என்பது இவர்களது கருத்து ) இலக்கிய இதழ்கள் என்பார்கள். அனைவரும் படிக்க வேண்டும் என்பார்கள். ஆயுள் சந்தா செலுத்த சொல்வார்கள். அந்த இதழ்களின் ஆயுள் 2-3 இதழ்களுடன் முடிந்துவிடும். அடுத்த இதழ் வெளிவர பொருளுதவி செய்யும்படி வேண்டுகோள் விடுவார்கள். இந்த மாதிரியான சிற்றிதழ்களிலும் இவர்களது எழுத்துக்கள் வெளிவரவில்லையென்றால் இவர்களே சிற்றிதழ் தொடங்கிவிடுவார்கள். பாதி இதழில் பலபெயர்களில் இவர்களே எழுதிக்கொண்டிருப்பார்கள். தனது நட்பு வட்டத்தை பயன்படுத்தி  புகழாரம் சூட்டி கொள்வார்கள். இதுவும் முடியவில்லையென்றால், இனையத்தில் இருக்கும் சிற்றிதள்களில் எழுதுவார்கள். அதிலும் முடியவில்லையென்றால், தனது வலைப்பூவில் எழுதுவார்கள். அதை முகநூலில் பிரபலப்படுத்துவார்கள்.

அதே சமயம் பிரபல வணிக இதழ்களுக்கு தங்களது எழுத்துக்களை அனுப்பிகொண்டேயிருப்பார்கள். தப்பி தவறி ஏதேனும் பிரசுரமாகிவிட்டால் அதை முகநூலில் பகிர்ந்து விளம்பரபடுத்திகொள்வார்கள். அதுவரை மஞ்சள் பத்திரிக்கையாக இருந்த இதழ்கள் தற்போது இலக்கியத்திற்க்கு முக்கியத்துவம் தருவதாகவும் இது தொடர வேண்டும் என பாரட்டி எழுதுவார்கள்.

இவர்களது எழுத்துக்களை தவிர மற்றவர்கள் எழுத்து பிரபல பத்திரிக்கைகளில் வெளிவரும் போது, ஜால்ரா பார்ட்டி என்றும் சொம்பு தூக்குகிறான் என்றும் , அவர்களது அரசியல், மதம் ஜாதி பின்புலத்தை சொல்லி அதனால் தான் அவரது எழுத்துக்கள் வெளியாகிறது என்று அவர்களது மேதாவிதனத்தை வெளிப்படுத்துவார்கள்.

இவர்களது எழுத்து பிரபல பத்திரிக்கையில் வெளியானவுடன் அத்துடன் திருப்தியடையமாட்டார்கள் தங்களுக்கு சன்மானம் தரவில்லை என்றும், எழுத்தாளர்களை மதிக்காத பத்திரிக்கைகள் என்றும் வசைபாடுவார்கள்.

ஒருசிலர் தொலைகாட்சிகளில் தலைகாட்ட வாய்ப்பு கிடைக்கும். சமுதாயம் ஒட்டுமொத்தமாக ஒரு கருத்தை சொல்லிகொண்டிருக்கும் போது, மாறுபட்ட கருத்து என்ற முறையில் நடைமுறைக்கு ஒத்துவராத கருத்துக்களை பதிவு செய்துகொண்டிருப்பார்கள்.

காயடிக்கப்பட்ட காளைமாட்டுக்கு கையடித்து விட்டு காமதேனுவை போல் பால் கறக்கிறது என்ற ரீதியில் சம்மந்தமே இல்லாமல் காமத்தை விவரித்து கதை எழுதி, வாசகர் வட்டம் என்று ஒன்றை தானே உருவாக்குவார்கள்.

இப்படியெல்லாம் செய்து சிறிது பிரபலமான பிறகு அடுத்த இலக்கு புத்தகம் வெளியிடுவது. இதுவரை எழுதிய கவிதைகளிலிருந்து சிலவற்றை தேர்ந்தெடுத்து கவிதை தொகுப்பு வெளியிடுவது அல்லது சிறுகதை தொகுப்பு வெளியிடுவது என்று தங்களது சொந்த காசில் சூனியம் வைத்துகொள்வார்கள். அப்படியே சில பதிப்பகங்கள் பிரபலமாகிவிட்ட எழுத்தாளர்களின் தொகுப்வை வெளியிட்டால்,, அதற்க்குறிய சன்மானம் தரவில்லை என்று ஒரு புலம்பலை ஆரம்பித்துவிடுவார்கள்.

இவர்களது அடுத்த நோக்கம் இவர்கள் திட்டி தீர்க்கும் திரைப்பட துறையில் நுழைவது . இவர்களது கவிதையை திரைபடபாடலாக்கி புகழ் பெற வேண்டுமென்பது. அதற்காக தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருப்பார்கள். ஆனால், வெளியே சொல்லி கொண்டிருக்கமாட்டார்கள். தங்களது கதை திரைப்படமாக வேண்டும் என்ற விருப்பத்திலும் பலர் சுற்றிக்கொண்டிருப்பார்கள்.

தினமும் திட்டிதீர்க்கும் தொலைகாட்சி, தொடர்கள், மாமியார் மருமகள் கதைகளையும், தவறான உறவு முறை கதைகளையும் மெகா தொடர்களாக வெளியிடுகிறது என்றும் நல்ல சிறுகதைகளை தொலைகாட்சியில் காண்பிக்க வேண்டும் என்று கூறி பலரது கதைகள கூறும் போது தங்களது கதைகளையும் இடைய புகுத்திவைப்பார்கள்.

பெண் எழுத்தாளர்கள் முன்பெல்லாம சமையல் குறிப்பும் கோலம் போடுவது எப்படி என்றும் பண்டிகைக்கு பட்சனம் தாயரிப்பது எப்படி என்றும் எழுதிகொன்டிருந்தார்கள். இப்போது ஆணுக்கு பெண் சரிநிகர் சமானம் என்று புறப்பட்டு வந்து, பெண்ணியம், பெண்விடுதலை, மனித உரிமை, பெண்ணின் பார்வையில் காமம் அப்படி இப்படி என்று எழுதி அவர்களும் பிரபலமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் புதிதாக எழுதவருபவர்களுக்கு, ஆலோசனை சொல்வார்கள். நிறைய படிக்க வேண்டும் என்பார்கள். எதை படிக்க வேண்டும் என்று பட்டியல் கொடுப்பார்கள். சிலர் ஆரம்பிக்கும் போதே மணிக்கொடி காலம் என்று ஆரம்பிப்பார்கள். சமூகத்தை உற்று நோக்கி அதிலிருந்து அனுபவங்களை பெற்று எழுத வேண்டும் என்பார்கள்

இவர்கள் எதை எதையெல்லாம் படித்துள்ளார்கள் என்று கேட்டால் நிறைய சொல்வார்கள். அதாவது, கதை புத்தகத்தின் தலைப்பை மட்டும் படித்துவிட்டு கதையை படித்தது போல நாடகம் போடுவார்கள். கதையை பற்றி பேச ஆரம்பித்தால், படித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது என்றும் ஞாபகம் இல்லையென்றும் கழன்டு விடுவார்கள். இவர்களிடம் குறிப்பிட்ட எழுத்தாளர்கள் என்ன என்ன எழுதியுள்ளார் என்று கேட்டால் சொல்ல தெரியாது. ஏதாவது கதையை குறிப்பிட்டு இதை யார் எழுதியது என்று கேட்டாலும் சொல்ல தெரியாது. இதில் விசேச அம்சம் என்னவென்றால், இவர்கள் எழுதிய பழைய எழுத்துக்களை குறிப்பிட்டு யார் எழுதியது என்றும் இது குறித்து உங்கள் அபிப்பிராயம் என்ன என்று கேட்டால், இது போன்ற குப்பைகளை படிப்பதில்லை என்பார்கள். இது நீங்கள் எழுதியதுதான் என்று கூறினால், இது எழுத்துலக வாழ்வில் ஆரம்ப காலத்தில் எழுதியது என்றும் அதனால் ஞாபகம் இல்லையென்றும், தனது ஆரம்ப கால எழுத்தை தாங்களே கிண்டலடித்து சாமாளிப்பார்கள்.

அதிகமாக விற்கும் புத்தகங்கள் எல்லாம் சிறந்த இலக்கியங்களும் அல்ல. விற்காத புத்தகங்கள் எல்லாம் இலக்கியதன்மை அற்றது என்ற பொருளும்  அல்ல .

பதிப்பகங்களுக்கு பொருளாதார ரீதியில் பல பிரச்சனைகள் இருந்தாலும், அவைகள் புது எழுத்தாளர்களை ஊக்குவிக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால், எழுத்தாளர்களுக்கு சன்மானம் வழங்கும் அளவிற்க்கு விற்பனையாகிறதா என தெரியவில்லை.

பகுதி நேர எழுத்தாளர்களுக்கு கொடுக்கவில்லையென்றாலும், முழு நேர எழுத்தாளர்களுக்கு, இலக்கியத்திற்க்காக வாழும் எழுத்தாளர்களுக்கு அவர்களின் வாழ தேவையான அளவு சன்மானம் கொடுக்கவேண்டும்.

இவர்கள் இப்படியெல்லாம் கூத்தடித்தாலும், மிக அதிகமாக இவர்களை கொடுமை செய்வது வாசகர்களே. காசு கொடுத்து புத்தகம் வாங்குவதில்லை. யாரவது வாங்கினால் அதை சுட்டுகொண்டு வருவது அல்லது பழைய புத்தக்கடைகளில் தேடுவது இதனால் எழுத்தாளர்களுக்கு போதிய வருவாயும் பதிப்பகங்களுக்கு லாபமும் கிடைப்பதில்லை. அரசு நூலகங்கள் புத்தகங்களை அதிக அளவில் வாங்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தாலும், அரசும் எத்தனை புத்தகங்களை தான் வாங்கமுடியும். வாங்கினாலும் வாசகசாலைகளில் அதை வைத்து பாதுகாப்பதற்க்கும் இடம் வேண்டும். எந்த வகையில் தேர்வு செய்து வாங்கினாலும், யாரவது ஒருவர் குறை சொல்லிகொண்டுதான் இருப்பார்.

ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களிடமிருந்து ஆயிரக்கனக்கான புத்தகங்கள் வெளியிடப்படுகிறது. ஒரு சாதாரண வாசகன் எப்படி எது நல்ல புத்தகம் என்று இனம் கான்பான். அவனுக்கு பிடித்த விசயத்தை கூறும் புத்தகம் அவனளவில் நல்ல புத்தகம் ஆனால் மற்றவர்கள் அதை குப்பை என்று ஒதுக்கியிருப்பார்கள். நல்ல புத்தகத்தை அடையாளம் கான்பதும் அதை தேடிப்பிடித்து படிப்பதும் இன்றைய நிலையில் மிகவும் சிரமம். படித்தவர்கள் யாரவது அது குறித்து குறிப்பு எழுதினால் அதன் அடிப்படையில் வாங்கலாம். படித்த புத்தகத்தை பற்றி விருப்பு வெறுப்பு இல்லாமல் நேர்மையான விமர்சனத்தை எழுத்தாளனுக்கும், மற்ற வாசகர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.

இயற்கை வளம் அழிக்கப்படுவதற்க்கு எழுத்தாளர்களும் ஒரு காரணம். குப்பையான எழுத்துக்களை பிரசுரிக்க மரங்களை வெட்டி காகிதம் தயாரிப்பதன் மூலம் , காடுகள் அழிகின்றன. காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் இந்த மர அழிப்பின் மூலம் தாயரித்த காகிதங்கள் மூலம் தான் தெரிவிக்கப்படுகிறது.

இலக்கியம் வளர எழுத்தாளர்கள், பதிப்பகங்கள், அரசு மற்றும் வாசகர்கள் இனைந்து செயல்படவேண்டும். புத்தகங்கள் பொழுதுபோக்குக்காக படிப்பது என்பது வேறு. அது தனி மனிதனை சிந்திக வைக்கவும் அதன் மூலம் தனது வாழ்க்கையில் மாறுதல்களை ஏற்படுத்திகொள்ள கூடியதாகவும் இருக்கவேண்டும். தனிமனிதன் மாறினால் சமூகத்தில் மாற்றம் ஏற்படும்.

சங்க கால இலக்கியம் முதல் இன்றைய நவீன இலக்கியம் வரை பல புத்தகங்கள் வந்துவிட்டன. அவைகள் பலராலும் படிக்கப்பட்டிருக்கிறது. அதனால், சமூகத்தில், தனிமனித வாழ்க்கையில் மாறுதல்கள் ஏற்ப்பட்டுள்ளதா என தெரியவில்லை. இது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

இன்னமும் நிறைய சொல்ல வேண்டும். இதுவரை படித்தவர்களுக்கு அலுப்பும் சலிப்பும் ஏற்ப்பட்டிருக்கும், என்ன சொல்ல வருகிறான் எல்லாவற்றையும் குறை கூறும் இவன் என்ன சாதித்துவிட்டான என்ற கேள்வியும் உங்களுக்குள் எழுந்திருக்கும். நான் யாருக்கும் எதையும் உபதேசம் செய்யவில்லை. சில வருடங்களாக படிக்க முயற்சி செய்ததில், நல்ல எழுத்துக்களை மிகவும் சிரமப்பட்டு தேட வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளதால் இதை எழுதினேன். 

மேலும் இலக்கியம் எழுத்து என்று வாழ்க்கையை வீணடிக்கவேண்டாம் என்பது எனது வேண்டுகோள். 

எல்லா எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துகள்





.

No comments:

Post a Comment