Wednesday 15 January 2014

கடற்கரை - காதலுடன் கடல்கன்னிகள்



கடற்கரை ::

இயற்கையின் படைப்பில் கடற்கரை ஒரு அற்புத படைப்பு.  மனிதன் கடற்கரையை காணாமல் இவ்வுலகை விட்டு மறைந்து போனல், அவண் தான் மிகவும் பாவம் செய்தவன் என கூறுவேன்.

கடற்கரை சார்ந்த அனுபவங்கள் வெவ்வேறு விதமாக அமைகிறது. அங்கேயே அதிலேயே வாழும் மனிதர்களுக்கு அதை சரிவர அனுபவிக்க பலசமயம் வாய்ப்பு கிடைப்பதில்லை

சாதாரண மனிதர்களுக்கு நிறைய நீரை பார்ப்பதற்க்கும், அலைகளில் காலை நனைப்பதற்க்கும் , காதலர்களுக்கு பொழுதுபோக்கு இடமாகவும் பார்க்கப்படும் இடத்தை அனுபவித்து வாழும் இடமாக பார்க்க சில பேருக்கே வாய்ப்பு கிடைக்கிறது.

நான் பல கடற்கரைகளை பார்த்துள்ளேன். சென்னை மெரினா கடற்கரை, பெசன்நகர் கடற்கரை, வி.ஜி.பி. தங்க கடற்கரை, கன்னியாகுமரி கடற்கரை, திருச்செந்தூர் கடற்கரை, மகாபலிபுரம் கடற்கரை.

அண்மையில் நான் பார்த்த ஒரிசா மாநிலம், பூரி நகர கடற்கரை. மறக்கமுடியாத அனுபவம்.

இந்த கடற்கரையை தவிர மற்ற கடற்கரைகளுக்கு, குடும்பத்துடனும், நண்பர்களுடனும், தனியாகவும் சென்றுள்ளேன். அந்த வயதில் அதில் கிடைத்த மகிழ்சியான தருணங்கள் அருமையானவை.

ஆனால், அண்மையில் கிடைத்த பூரி கடற்கரை அனுபவம் அலாதியானது.
திட்டமிடாத பயணத்தில் பூரி நகரம் வந்து சேர்ந்த போது இங்கு கடற்கரை இருப்பதே தெரியாது. காலையில், வெளிச்சம் வராதா நிலையில் ரயில் நிலையத்தில் இறங்கி, தேனீர் அருந்தி, புகை பிடித்துவிட்டு அமைதியாக அடுத்து தங்குமிடம் செல்வது குறித்து யோசித்தோம்.

ஒரு மொழி தெரியாத ஒரிசாகாரனிடம், போகவேண்டிய இடத்தை குறிப்பிட்டோம். அவரும் ஒப்புகொண்டு, அமரசொல்ல பல வீதிகளின் வழியாக மெதுவாக சென்றுகொண்டிருந்தோம். குளிர்ந்த காற்று. வெளிச்சம் பரவ தொடங்கியிருந்தது. மெதுவான பயணம். நீண்ட கால நண்பன். நாளைய நிகழ்சிகள் பற்றிய எந்த ஏற்பாடும் இல்லாமல் மெதுவாக பயனித்தோம். குளிர்காற்றை அனுபவித்த போதும் இங்கு கடற்கரை இருக்கும் என தோன்றவில்லை.. மிதிவண்டிகாரன், ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு , இதற்கு மேல் போகமுடியாது மேடான இடம் என்றும் உங்கள் இடத்திற்க்கு நடந்தே போய்விடலாம் என கூறி இறக்கிவிட்டார். நாங்களும் சம்மதித்து இறங்கி புகைபிடித்துகொண்டே வழிகேட்டு நடந்தோம்.

பொழுது புலர்ந்த வேளையில், வலதுபுறம் பார்த்தால், ஆரவாரமற்ற கடல் அலைகள் வரவேற்றது. வியப்பு. சொல்லவொண்ணா வியப்பு. ஆனந்தம்.

அறையில் பொருட்களை வைத்துவிட்டு கடற்கரைக்கு வந்தோம். கடற்கரை முழுக்க கடைகள். தேநீர் கடைகாரர்கள் அவர்கள் கடைக்கு முன்பு கடற்கரையை பார்த்தது போல நாற்காலிகள் போட்டிருந்தார்கள். கடற்கரை மணல்வெளி சிறியது. மிக அருகில் அலைகள். அலைகள் எங்கள் கால்களை முத்தமிட செய்தோம். ரம்மியமான காட்சி. காலை நேரம் . சூரியன் கண்விழித்து கொண்டிருந்தான். இதமான குளிர். ஆரவாரமில்லாமல் மக்களை தாலட்டிய அலைகள். மக்கள் கூட்டம் கும்மாளமிட்டது. சில படகுகள்.  அது ஒரு தென்றலை அணக்கும் சுகம். வார்த்தைகளால் வர்ணிக்க சிலரால் மட்டுமே முடியும். எத்தனை நேரம் நின்றாலும் மனதை விட்டு அகலாத காட்சிகள். மாறும் காட்சிகள் அதற்க்கேற்றார் போல் மாறும் மனநிலைகள். கவிதை உருவானது. கதை உருவானது. காதல் உருவானது. இயற்கை அள்ளி தரும் காட்சிகள் இதயத்தில் மட்டுமே படம் பிடிக்க முடியும். சிப்பிகள் இல்லை. நத்தைகள் இல்லை. சென்னை கடற்கரை போல் பொருட்களை விற்போர் இல்லை. மாங்காய், பட்டாணி சுண்டல் இல்லை. அமைதி அமைதி உற்றுபார்த்து விமர்சனம் செய்யும் கூட்டம் இல்லை. மறைவிடம் தேடும் காதல் ஜோடிகள் இல்லை

சங்கு விற்பவனின் சங்கு சத்தம் மட்டும் சிலமுறை. ஊதும் சங்குகள்,  பூஜை அறையில் வைக்கும் சங்குகள் என சிலர் விற்றுகொண்டிருந்தனர். அமைதியான பேச்சு. மொழி தெரியமால், புரிந்தும் புரியாமலும் விலை பேசி பூஜை அறையில் வைக்கும் சங்கு வாங்கினோம்

இது உல்லாசபயணிகள் அதிகமாக வரும் காலம் போலும். கடற்கரை முழுக்க கடைகள். விழா காலங்களில் வரும் ராட்டுணங்கள், ரயில்கள், மற்றும் பல திருவிழா கடைகள். கடற்கரை கோலகலமாக இருந்தது.

கடற்கரையை ரசித்துவிட்டு, ஊரை சுற்றிபார்க்க பேருந்து பற்றி விசாரித்தோம். காலை 06.30 மணிக்கு புறப்பட்டு விட்டது என்றும் இனிமேல் இல்லையென்றும், நாளை காலை தான் அடுத்து ஏற்பாடு செய்யமுடியும் என்று கூறியதால், வேறு எங்கு செல்லலாம் என்று அவரிடமே விசாரித்து, பின்பு ஜெகநாத் கோவிலுக்கு சென்று வந்தோம். மதிய உணவுக்கு திரும்பி விட்டோம்.

உணவுக்கு பின்பு, சற்று தூரத்தில் புதிதாக கட்டிய மடம் ஒன்று உள்ளது என்றும் அவசியம் பார்க்கவேண்டும் என்று கூறியதால், எங்களுக்கும் வேறு வேலை ஒன்றும் இல்லாததால், கடற்கரை ஓரமாகவே நடந்துசென்றோம். தேநீர் குடிப்பதும், புகைபிடிப்பதும் நடப்பதும் பேசிகொண்டே போவதும் இனிமையாக இருந்தது.

நண்பருக்கு கடலில் குளிக்க வேண்டும், நீந்த வேண்டும் என்ற ஆசை. அதனால் அவருக்கு மடத்துக்கு சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசையில்லை. கடலில் குளித்தே ஆகவேண்டும் என்று கூறினார். எனக்கும் ஆவல் வந்துவிட்டது. அங்கேயே டை களைந்து அம்மணமாக குளிக்க வேண்டும் என்ற ஆசை. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம். பெண்களும் இருந்தார்கள். எனவே எனது ஆசையை நிறைவேற்றிகொள்ளமுடியவில்லை. எங்களிடம் மாற்று துணியும் இல்லை. வேகமாக அறைக்கு திரும்பினோம். திரும்பும்வழியில் கடலில் குளிக்க அரைகால் டவுசர் வாங்கினோம். அறையில் துணிமாற்றிகொண்டு, கடற்கரை அடைந்தோம். கையில் இருந்த கசையும், துண்டையும் தேநீர் கடைகாரரிடம் ஒப்படைத்துவிட்டு  கடலில் இறங்கினோம்.

குளிர்ச்சியான தண்ணீர். நண்பருக்கு நீச்சல் தெரியும் என்று முயற்சித்தார். ஆனால், நீண்ட நாட்களாக பழக்கம் இல்லாததால், நிறுத்திகொண்டார். ஆனந்தமாக குளித்தோம். அலைகளை எதிர்த்தோம். தோற்றோம். அலைகள் உடன் அழைத்து செல்வதும் வெளியில் கொண்டுவந்து விடுவதுமாக தாலாட்டியது. மிக குறைவானவர்களே குளித்துகொண்டிருந்தார்கள். நாங்கள் தனிமையில் குளித்துகொண்டிருந்தோம். நிலை தடுமாறி நீரில் முழ்க, கடற்கன்னிகள் காத்திருக்க கண்டேன். நிலைதடுமாற செய்தது அலைகள் அல்ல என்பதை உணர்ந்தேன். யுகம் யுகமாய் காத்திருந்த காதலிகள் தங்கள் எண்ணத்தை வண்ணமயமாக சொல்லிகொன்டே , வண்ணத்துபூச்சியின் பென்மை கொண்ட முதுகில் சுமந்துகொண்டு அவர்கள் உலகத்தை காட்டி காமம் கலந்த காதல் மொழி பேசினார்கள். தங்களது சல்லாப மொழியை சலனமில்லாம் சொல்லி சொல்லி மாய்தனர். அவர்களது வால் பகுதியின் வர்ண ஜாலங்கள் இது வரை மனித இனம் கானாதது. அள்ளி அனைத்தால் வழுக்கி செல்வதும், விலகி சென்றால், கட்டி அனைப்பதுமாக காதலும் ஊடலுமாய் பயனித்தோம்,. அவளது ஏக்க பெருமூச்சால் கடல் அலைகளின் வீரியம் கூடியது. பிரிய மனமில்லாமல் அவள் சிந்திய கண்ணிரால் கடலின் நீர் மட்டம் உயர கண்டேன்.



கற்பனை சிறகடித்து பறந்தது. இதுதான் இந்த பயணத்தின் இனிமையான நேரம் என்பதை அப்போதே உணர தொடங்கினோம். வாழ்வின் மறக்கமுடியாத தருணம் என்பதையும் உணர்ந்தோம்

சில கவிதைகள் தோன்றின. அந்த தண்ணிரிலேயே எழுதினேன. அலைகள் அவைகளை அபகரித்துசென்றுவிட்டது. கடல் எப்போதாவது, அதை பிரசுரிக்கும். எங்களை போல வருபவர்கள் வாசிப்பார்கள். கதை எழுத ஆடை அவிழ்த்த வார்த்தைகள் வம்புக்கிழுத்தன. நீரில் மிதந்தேன் நிலத்தில் மிதந்தேன் காற்றில் மிதந்தேன், காதல் கண்டேன், காமம் கண்டேன். கடவுளை கண்டேனா ? எதை அடைந்தேன். எதை இழந்தேன்

உப்பு நீர் உள்தொண்டை வரை இறங்கியது. கடல்நீர் அனைத்தும் குடிநீராக வேண்டுமென நினைத்தேன்.

மாலை மங்க தொடங்கியது. இருள் பரவ தொடங்கியது. தேநீர் குடித்தோம். புகைத்தோம். அறை திரும்பி குளித்தோம். மீண்டும் வெளியே வந்தோம். வெளியே வந்தால் கடற்கரைதான். தேநீர் புகை, மீண்டும் மீண்டும்.
மது வாங்கினோம். அறைக்கு வந்தோம். அமுதம் அமிழ்தம் காவேரி பூம்பட்டிண கடற்கரையில், அரேபிய புரவியில் யவணம் முதிர்ந்த இருவர் நிதானமாக கடைவீதிகளை கண்கானித்தவாறே மது அருந்தி நிணைவு தடுமாறாத  நிலையில் பயணித்துகொண்டிருந்தனர். 

 



பெரும்செல்வந்தரின் செல்வ புத்திரிகளும். அங்கவை சங்கவை ஆடற்கலை நங்கைகளும் யவணம் முதிர்ந்த இருவரில் யாரை காதலிப்பது என்று விவாதித்துகொண்டிருந்தனர். வட்டமாய் சுற்றி வந்த ராட்டிணத்தில் வசீகரத்துடன் அமர்திருந்தவளுடன் நண்பனின் பார்வை நொடிபொழுது சந்திக்க, வெட்கம் கலந்த புண்ணகையை நழுவ விட , மலைநாட்டு இளநீர் குடைசாய மன்மத பானம் நெஞ்சில் பாய நிலை குலைந்தான் உயிர் தோழன்.  மதுவின் போதையிலும் மங்கையின் பார்வையிலும் வானவீதியில் நடைபயில சென்றதால் அவனை தனியே விடுத்து பார்வையை சுழற்றியபோது, மேலும் கீழும் பயணித்த ராட்டினத்தின் உச்சியில் என்னவளை கண்டேன். அவள் மேலும் கீழுமாய் பயணிக்க எனது கண்கள் அவளுடன் பயனித்துகொண்டிருந்தது உணர்ச்சிகள் உசலாடிகொண்டிருந்தன. அவளின் கண்களின் போதையில் மதுவின் போதை குறைய கண்டேன்.  வானவீதியின் போக்குவரத்து நெரிசலில் சிக்குண்ட தோழனும் திரும்பிவர ………………………………….  . நிதானமான போதையுடன், வெளியே வந்தோம். பயண ஏற்பாடு செய்தோம். மீண்டும் கடற்கரையில் நின்றோம். சாப்பிட்டோம்

கடற்காற்று, அத்தனை பெரிய கூட்டத்திலும் நாங்கள் தனியாக இருந்தோம். எங்களை விமர்சிக்க யாரும் இல்லை. எங்களுக்கும் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதமான காற்று. மிதமான போதை. மொழியில் வார்த்தைகள் தீராதது போல எங்களது, எங்களது பேச்சும் தொடர்ந்தது. நாங்கள் எப்போது உறங்கினோம் என்பது அந்த இரவுக்கு மட்டுமே தெரியும்.

 




No comments:

Post a Comment