Saturday 18 January 2014

கொல்கொத்தா பயணம்



நான் ஊர் சுற்ற போனது கொல்கொத்த (கொல்கொத்தா இப்படி சொல்லும் போது சென்னையிலே சொல்லுகிற  ஒரு கெட்ட வார்த்தை தான் ஞாபகம் வருகிறது அதனால் கல்கத்தா என்று சொல்வது  நன்றாய் இருக்கும்) ஆனால் நான் பார்த்த பூரி நகர அனுபவம் ,புவனேஸ்வர் நகர அனுபவம் பற்றி  நாலு கட்டுரை எழுதிட்டேன். அதனால் இப்பொழுது என்னுடைய கல்கத்தா அனுபவத்தை சொல்லிவிடுகிறேன்.

ரயில் நிலையத்தில் நண்பன் காத்திருந்தான். முன்னவர்கள் செய்து வைத்த இனபெருக்க கூட்டத்தின் வழியே வெளியே வந்தோம். கடலில் முழ்கி அழிந்துவிட்ட நகரத்தை மீட்டெடுத்த்து போல் இருந்தது. 26 மணி நேரம் புகை பிடிக்காததால் முதலில் புகை பிடித்தோம்.
தேநீர் குடித்தோம். விலை எவ்வளவு தெரியுமா வெறும் மூன்று ரூபாய் தான். ஆனால், ஒரு வாய் தேநீர் தான். முதலில் இந்த தேநீர் /சாப்பாட்டு கதையை முடித்து விடுகிறேன். ருசியான சாப்பாட்டுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பவன்
தெருவெங்கும் தேநீர் கடைகள். அதாவது, நடைபாதையில், ஒரு கும்மிட்டி (கரி அடுப்பு) அடுப்பு வைத்து அல்லது சில இடங்களில் ஸ்டவ் வைத்து தேநீர் போட்டு கொடுக்கிறார்கள். அநேகமாக எல்லா இடங்களிலும் விலை மூன்று ரூபாய் தான். சில இடங்களில் மட்டும் நாலு ரூபாய்க்கும் 5 ரூபாய்க்கும் கொடுக்கிறார்கள். கண்ணாடி டம்ளர் கிடையாது. பிளாஸ்டிக் டம்ளர் கிடையாது. மண் கோப்பை. அதாவது, நாம் அகல் தீபம் ஏற்றுவோமே அதே மாதிரி மண்ணால் செய்தது. அகல் விளக்கு போல் சிறியது சற்று ஆழமானது. சென்னையில் கிடைக்கும் தேநீரில் இங்கு இரண்டரை கோப்பை செய்துவிடலாம். அரசன் முதல் ஆண்டி வரை இதை இங்கு தெருவில் நின்று தான் குடிக்கிறார்கள். கடைசி நாள் அன்று நண்பனின் அலுவகத்துக்கு சென்றேன். அங்கு தேநீர் வாங்கி நல்ல கோப்பையில் கொடுத்தார்கள். தேநீர் மிக ஆழத்தில் இருந்தது. எனக்கு ஒரு கதை ஞாபகம் வந்தது. கொக்கும் நரியும் ஒருவருக்கொருவர் விருந்துக்கு அழைக்கும் கதை. கொக்கு நரியை விருந்துக்கு அழைத்து, குடிப்பதற்க்கு வாய் குறுகலான மிக ஆழமான குடுவையில் தேநீர் கொடுக்கும். நரியால் அதை சாப்பிடமுடியாது. அதன் வாய் குடுவையின் உள்ளே போகாது . ஆனால், கொக்கு தன்னுடைய நீண்ட அலகை உள்ளே விட்டு மொத்த தேநீரையும் குடிக்கும். பின்பு, நரி நன்றி சொல்லிவிட்டு தனது வீட்டுக்கு வரவேண்டும் என்று கூறிவிட்டு செல்லும். கொக்கும் நரியின் வீட்டுக்கு செல்லும். நரி தேநீரை குடுவையில் கொடுக்காமல், தட்டில் ஊற்றி கொடுக்கும். கொக்கினால், அதை உறிஞ்சி குடிக்க முடியவில்லை. ஆனால், நரி அதை மிக வேகமாக நக்கி குடித்துவிடும். நரிக்கு பழிவாங்கிய மகிழ்ச்சியும் இருக்கும்.  இது ஏன் ஞாபகம் வந்தது என்றால், அவர் தேநீர் குடிக்க சொன்ன பிறகு, கொக்கு போல் கழுத்தை வளைத்து கோப்பையில் பார்த்த போது, அதன் அடியில் தேநீர் இருந்தது. அதாவது அந்த கோப்பையில் 5 தேநீர் ஊற்றினால் தான் நிரம்பும் அவ்வளவு பெரிய கோப்பையில் இவ்வளவு குறைவான தேநீர். அவரை குறைசொல்லி பயன் இல்லை. வெளியேயிருந்து வாங்கிவந்த 3 ரூபாய் தேநீர். ( நண்பரே கோபிக்கவேண்டாம்) கல்கத்தாவில் இருந்த நாட்கள் முழுவதும் இந்த தேநீர் குடிக்கதான் வாய்ப்பு கிடைத்தது நல்லவேளை, சிலசமயம் நண்பன் காப்பி போட்டு கொடுத்தான்..

அதாவது, என் மனைவி ஒரு டம்ளர் தேநீர் கொடுத்தால், நான் குடிக்காமல் மிச்சம் வைக்கும் அளவுதான் இருந்தது. நான் எப்போதும் சிறிதளவு தான் குடிப்பேன். காரணம் சுவை என்பது மட்டுமல்ல அதற்குள்ளாக, இரவு சாப்பிட்டது வெளியே வர போரடிகொண்டிருக்கும் அதனால் முழுவதும் குடிக்காமல் வேகமாக ஒடி தாழ்பாள் இட்டுகொள்வேன். உலகத்திலேயே உன்னதமான அமைதியும் ஆனந்தமும் கிடைக்கும் இடம் அதுவாக தான் இருக்கும். வெளியேற்றிய பிறகு கிடைக்கும் அமைதியும் ஆனந்தமும் ஆண்டவனை தரிசித்தது போல இருக்கும் என்று கூறலாம்.
ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து சாப்பிட இடம் தேடினோம். எல்லாம் கையேந்தி கடைகள் தான். சாப்பிட பிடிக்கவில்லை. ஒருவழியாக உட்கார்ந்து சாப்பிடும் ஒரு கடை கிடைத்தது. மிகவும் சுமாரான சாப்பாடு.
நான் தங்கியிருந்த பகுதியில் ஒருநாள் மதியம் உட்கார்ந்து சாப்பிடுவது போல இருந்த உணவுவிடுதிக்கு சென்றேன்.  மொக்கையான சாதம். மஞ்சள் தண்ணி (பருப்பாம். தண்ணியில் மஞ்சள், உப்பு கலந்து சூடு செய்து பருப்பு என்று  சொல்கிறார்கள்) மற்றும் மீன் மண்டை போட்ட ஒருவிதமான குழம்பு. மக்கள் அதை தான் சாப்பிட்டுகொண்டிருந்தார்கள். நல்ல வேளையாக எனக்கு முட்டை குழம்பு கிடைத்தது. நான் எப்போதுமே, மீன் மண்டை வால் சாப்பிடமாட்டேன். நடுபகுதிதான் சாப்பிடுவேன்.
நகரின் முக்கிய பகுதி ஒன்றில் தோசை, இட்லி வடை கிடைத்தது. ஒரு கரண்டி மாவை ஊற்றி சுற்றி சுற்றி பெரிய தோசை செய்கிறார். நடுவில் உப்புபோட்டு வேக வைத்த உருளைகிழங்கை வைத்து அதன் மேல், பட்டானி வைக்கிறார். பின்பு தக்காளியை துண்டுதுண்டாக நறுக்கி வைக்கிறார். அதே போல வெங்காயமும் வைக்கிறார். கொத்தமல்லி போடுகிறார். ஆறிபோன இட்லியும், வடையும் கிடைக்கிறது. ஆனால் சூடான சாம்பர் அதன் மேல் ஊற்றுவதால் எல்லாம் சூடாக இருப்பது போல் தெரிகிறது. சாம்பார் நல்ல சுவையாக இருந்தது. தேங்காயும் தேங்காய் மட்டையும் வைத்து அரைத்த சட்னியும், வெங்காய சட்னியும் கிடைக்கிறது. வீட்டு சாப்பாட்டை இழந்தவர்களுக்கு இது ஒரு நல்ல சாப்பாடு. விலை குறைவு தான். எல்லா மக்களும் இதை விரும்பி சாப்பிடுகிறார்கள்.
வேறோரு நாள் காலையில் ரயில்வே ஸ்டேசனில் காலையில் இட்லி சாப்பிட்டோம். ஒரு பெண்மணி சமைத்து கொண்டு வந்திருந்த உணவு. போய் கேட்டவுடன் ஒரு மசால் தோசையும், 4 இட்லியும் ஒரு வடையும் வைத்து தந்துவிடுகிறார். நன்றாக தான் இருந்தது. வரும் வழியில் வேறு ஒரு இடத்தில் சுடசுட இட்லி விற்று கொண்டிருந்தார்கள். ஆனால் இடம் சுத்தமாக இல்லை.
முதல் நாள் சரக்கு வாங்கிய போது, பக்கத்தில் மீன் கடை இருந்தது. கடலைமாவில் தோய்த்து எண்ணையில் வறுத்து கொடுத்து கொண்டிருந்தார்கள். பஜ்ஜி போல இருந்தது. உப்பு உறைப்பு ஏதுவும் இல்லை. நண்பன் சாப்பிடவில்லை. நாலு மீனையும் நானே சாப்பிடவேண்டியதாகியது. அதற்கு பிறகு மீன் சாப்பிடவேண்டும் என்ற ஆசையே தோன்றவில்லை.



பேருந்து நிலையம் முழுக்க சிவப்பு கலர் சிற்றூந்துகள். மிகவும் பழைய வண்டிகள். இது போன்ற வண்டிகளை தமிழ்நாட்டில் பார்க்கமுடியாது. நான் வசிக்கும் உத்திரபிரதேசம் நொய்டா பகுதியில் பார்க்கலாம் தமிழ்நாட்டு பேருந்துகளை குறை சொல்பவர்கள் இங்கு ஒரு முறை வந்து பயணம் செய்துவிட்டு போனால், தமிழக பேருந்துகளுக்கு நன்றி சொல்வீர்கள் .
பேருந்துகளுக்கு இணையாக, மஞ்சள் வர்ணம் பூசப்பட்ட டாக்சிகள். இந்த சிவப்பும் மஞ்சளும் தான் நகரம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கிறது.
பின்பு, ஒருவழியாக  பேரூந்தை கண்டுபிடித்து 45 நிமிடம் பயணித்து, நண்பனின் வீட்டுக்கு வந்தோம்..
பேருந்தில் பயணித்த போது, நகரத்தின் முக்கிய பகுதிகளை கடந்த பிறகு நகரம் மிகவும் பழையதாக இருந்தது. ஒவ்வொரு கட்டிடமும் 100 வருட பழைய கட்டிடம் போல இருந்த்து. சில கட்டிடங்கள் வீடுகள் குறைந்தபட்சம் 50 வருடம் பழமையானது. அதாவது, கட்டிடம் கட்டிய போது சுண்ணாம்பு  அடித்தது தான். அதற்கு பிறகு யாரும் கட்டிடங்களுக்கு வெள்ளை அடிக்கவில்லை என தோன்றியது. இப்படி நினைத்துகொண்டு வரும் போது, ஒரு கட்டிடத்திற்க்கு வெள்ளை அடித்துகொண்டிருந்தார்கள். அது உலக அதியசத்தை பார்ப்பது போல இருந்தது. மற்ற கட்டிடங்கள் எல்லாம் மிக பழமையான கட்டிடங்கள்.ஆனால் எல்லாவற்றிலும் மக்கள் இருந்தது போலதான் தோன்றியது. வியாபர நிறுவன கட்டிடங்களும் இந்த நிலையில் தான் இருந்தது.
மக்கள் மிக நிதானமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார்கள். பரபரப்பு இல்லை. ஒடிபோய் பேருந்தை பிடிக்கவேண்டிய அவசியமில்லை. நகரம் முழுவதும் ஸ்லோ மோசனின் நகர்ந்து கொண்டிருந்தது. யாரும் சத்தமாக கூட பேசவில்லை.
மக்களிடம் சுறுசுறுப்பு இல்லையென்றலூம், அவர்களது உடைகளாவது சற்று பளிச்சென்று இருந்திருக்கலாம். மிகவும் வெளுத்த நிறம் போன்ற உடைகள். கண்ணை கவரும் ஆடைகள் இல்லை. இளையவர் முதல் முதியவர் வரை, ஆண் பெண் அனைவரும் அப்படி தான் ஆடை அணிந்திருந்தனர். ஆண்களும் பெண்களும் சிலர் ஜீன்ஸ் அணிந்திருந்தனர். அனைத்தும் நடைபாதை கடையில் ரூ.250 வாங்கிய ஜீன்ஸ் போலவே இருந்தது. இளைஞர்கள் கூட நாகரீக உடை அணிந்ததாக தெரியவில்லை. ஒரு திரைப்பட அரங்கு முன்பு நின்று பார்த்த போது கூட, இருசக்கர வண்டியில் பெண்களுடன் வந்த இளைஞர் பட்டாளமும் அவ்வாறு தான் உடை உடுத்தியிருந்தது.
கல்கத்தா காதலர்களுக்கு நிச்சியமாக செலவு குறைவு தான். பெண்களின் உடை எளிமையாக இருந்தது. கடலை போட நிறைய இடங்கள் இல்லையென தெரிந்தது. சாப்பிடும் இடங்களும் இல்லை. எல்லாம் நடைபாதை கடைகள் தான்.
ஒரு நகரத்தில் வாழும் பெண்களை வைத்து தான் நகரின் கலாசாரத்தையும் செல்வ செழிப்பையும் எடை போட முடியும். சென்னை நகரை போன்று திருத்தமாக புடவை கட்டி போட்டு வைத்து, தலையில் பூ வைத்து நடக்கும் பெண்களை பார்த்த கண்களுக்கு இங்கிருந்த பெண்களின் ஆடை அலங்காரம் அவ்வளவாக ரசிக்கமுடியவில்லை. இளைய தலமுறை பெண்கள், சென்னையில் ஜீன்ஸ் அணிந்து , கொலுசு போட்டு, தலையில் பூ வைத்து பொட்டு வைத்து நடந்து செல்லும் கொடுமையும் இங்கில்லை. டெல்லியில் வாழும் கண்ணகி பரம்பரை போல தலைவிரி கோலமாய் அலையும் பெண்களையும் பார்க்கமுடியவில்லை. ஒரு வாரத்தில் ஒரு பெண்ணையும் திரும்பி பார்க்கவைக்கும் படியான அழகான பெண்கள் யாரும் இல்லை. இங்கிருக்கும் ஆண்களுக்கு பெண்களை ரசிக்க தெரியவில்லையென்பதால், பெண்களும் அதிக அக்கறை எடுத்து தங்களை வெளிப்படுத்திகொள்ளவில்லை என தோன்றுகிறது. மொத்தத்தில் காய்ந்து போன நகரம்.
இரவில் பயணம் செய்த நாட்கள் தவிர அனைத்து நாட்களும் சரக்கு வாங்கினோம். இதை பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று தான் ஆசை .ஆனால், சில உறவுகளும், குடும்பத்துடன் பழகும் நண்பர்களும் இங்கு இருப்பதால், இந்த அனுபவம் குறித்து விரிவாக எழத முடியாது. வீட்டில் போட்டு கொடுத்து விடுவார்கள். சென்னையை போல இங்கும் மது கடைகள் காலையிலேயே திறந்து விடுகிறார்கள். மக்கள் பகல் எல்லாம் வாங்கிகொண்டு தான் இருக்கிறார்கள். மாலையில் நீண்ட வரிசையில் நின்று வாங்குகிறார்கள். ஆனால், குடித்துவிட்டு கலாட்டா செய்யும் நபர்களும், கிழே விழுந்து கிடக்கும் நபர்களும் என் கண்ணில் படவில்லை. மதுவிலக்கை கொண்டு வரவேண்டும் என்று வெற்று கூச்சல் போடும் நபர்கள் இல்லையென நிணைக்கிறேன். எல்லா இடங்களையும் போல மதுவால் கெட்ட குடும்பங்கள் இங்கும் இருக்கதான் செய்யும்.
கல்கத்தாவில், சுற்றி பார்க்க பெரிய விசயங்கள் ஏதும் இல்லை. பழைய கட்டிடங்கள் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் மூலம் பாதுகாக்கப்படுகிறது. விக்டோரியா மகால் என்று ஒரு கட்டிடம் இருக்கிறது. Zoo  ஒன்று இருக்கிறது. தினமும் கூட்டம் அலை மோதுகிறது.
நதியின் மேல் கட்டப்பட்ட இரும்பாலான மேம்பாலம் பிரசித்திபெற்றது. கல்கத்தா நகரை குறிப்பிட இந்த இரும்பு மேம்பாலத்தை தான் காட்டுகிறார்கள். HOWRAH BRIDGE . இதன் மேல் நின்றுகொண்டு நதியை பார்ப்பது ஒரு பொழுதுபோக்கு.
இந்த நதியின் ஒரு பகுதியில் ஒரு பூங்கா அமைத்துள்ளார்கள். அங்கு படகு பயணம் நடைபெறுகிறது. ரயில்லே நிலையத்திற்க்கு வர பயன்படுத்துகிறார்கள். 10 நிமிட பயணம்.  நாங்கள் இரவில் பயணம் செய்தோம். மிகவும் நன்றாக இருந்தது. அந்த இடத்தில் ஒருநாள் ஒரு மணி நேரம் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துகொண்டிருந்தேன். எல்லா நதிகரை போல தான் .மக்கள் குளித்துகொண்டும், துணி துவைத்துகொண்டும், சில இளைஞர்கள் குதித்து நீச்சலடித்துகொண்டும் இருந்தனர்.
Writers Building  எனப்படும் தலைமை செயலகம், தபால் தந்தி நிலைய கட்டிடம், மற்றும் பல பழைய கட்டிடங்கள் இருந்த பகுதியை சுற்றி பார்த்தோம்.
Victoriya Hall  எனப்படும் இடத்தையும் சுற்றி பார்த்தோம். முன்பே எழுதியதை போல காளி கோவிலுக்கு சென்றோம்.
இளமையில் இறுதிபடியில் சந்தித்த நண்பன். முதுமையின் முதல் படியிலும் உடன் இருக்கிறான். 30 ஆண்டுகளுக்கும் மேலான நட்பு.  தொடர்ந்து சந்தித்துகொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறோம். அவர் வேலை காரணமாக பல ஊர்களில் வசித்துகொண்டிருப்பவர்.. 30 ஆண்டுகளாக பேசிகொண்டிருந்தாலும், பேசப்படாத பல விசயங்கள் இருந்துள்ளன என்பது இப்படி தனிமையில் சந்தித்த போது தான் அறிய முடிந்தது.
இது ஒரு அழகான அனுபவம். பேசியவைகளை மனதில் வைத்து ரசிப்பதுதான் அந்த அனுபவத்திற்க்கு தரும் மரியாதை. யாரும் யாருடைய சுதந்திரத்திலும் குறுக்கிடாமல் கழித்த நாட்கள்.

 

 

 

 



 

No comments:

Post a Comment