Tuesday 21 January 2014

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க



துன்பம் வரும் வேளையிலே சிரிங்க

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க – இப்படி யார் எதுக்கு சொன்னார்கள் என்று எனக்கு தெரியாது. துன்பம் வரும் வேளையில் மனம் நொந்து ஒன்றும் செய்யாமல் இருந்து அதனால் மேலும் துன்பங்களை எதிர்கொள்ளாமல், துன்பம் வரும் போது அதிலிருந்து வெளியே வர வேண்டும் என்பது பொருளாக இருக்கவேண்டும். அப்படி வெளி வரும் போது, தங்களது துன்பத்தை பார்த்து மற்றவர்கள் துன்பபடாமல் இருப்பதற்க்காக மன தைரியத்துடன் சிரித்த முகத்துடன் துன்பத்தை எதிர் கொள்ள வேண்டும் என்று  ஆறுதலுக்காக சொன்னதாக இருக்ககூடும்.

ஆனால், இதை நேரடி பொருள்கொண்டு பார்த்தால் விவாதம் செய்ய மட்டுமே தோன்றும். துன்பம் வரும் போது எப்படி சிரிக்க முடியும் என்று விவாதம் செய்ய முடியும்.

ஒரு சிலர் சிரிக்க முடியும் என்று வாதாடமுடியும். அதாவது, நமக்கு பிடிக்காதவர்கள் துன்பபடும் போது அதை பார்த்து சிரிப்பது. மேலே கூறிய “துன்பம் வரும் போது சிரிங்க” என்பது இதற்கு வேண்டுமானால் பொருந்தலாம்.

மாமியார் சமைத்த சாப்பாட்டை சிரித்த முகத்துடன் சாப்பிடும் போதும் இது பொருந்தும்

ஆனால், நான் எனது உயிர் நண்பன் உயிருக்கு போராடி கொண்டிருந்த போது வாய்விட்டு சிரித்தேன். தொடர்ந்து அரை மணி நேரத்துக்கும் மேலாக சிரித்தேன். அதுவும் யாருடன் சேர்ந்து சிரித்தேன். அவனது இரு மகள்களுடன். அவர்களும் சிரித்தார்கள். நான் தான் கல்நெஞ்சுகாரன். சிரித்தேன். அவனது மகள்களும் ஏன் சிரித்தார்கள்.

நண்பனுக்கு திடிரென நெஞ்சு வலி, எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நண்பனின் குடும்பம் அங்கு இருந்தது. வேறு சில நண்பர்களும் இருந்தார்கள். நண்பன் துடித்துகொண்டிருந்தான். பார்க்க அனுமதிக்கப்பட்டேன். மருத்துவரும் இருந்தார். முதல் உதவி சிகிச்சை அளிக்க அவனது மனைவியிடம் சில தாள்களில் கையெழுத்து வாங்க உதவினேன். நம்பிக்கையில்லை. பிராத்தனைகள் முடிந்துவிட்டது. கடவுள் விட்ட வழி என்று காத்திருந்தோம்.

யார் விட்ட வழியோ பிழைத்துவிட்டான். ஆனால், உடனடியாக stent  வைக்கவேண்டிய சிகிச்சை அளிக்கவேண்டும் என்றும் வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்றும் கூறிவிட்டதால், நெருங்கிய நண்பர்களும் குடும்பத்தாருடன் ஆலோசிக்கப்பட்டது. மகள்கள் பிரபல மருத்துவமனைக்கு கூட்டிசெல்வது என முடிவெடுத்தார்கள். ஆனால், எனக்கு அந்த மருத்துவமனை விருப்பமில்லை. நேரடியாக காரணமும் கூறமுடியாத நிலை. என் வீட்டுக்கு அருகில் இருக்கும், நான் சிகிச்சை எடுத்துகொண்ட மருத்துவமனைக்கு அழைத்துசெல்லலாம் என கூறினேன். ஒப்புகொண்டார்கள். (அவர்கள் கூறிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எனது மற்றோரு நண்பன் உயிரிழந்த காரணத்தால் அந்த மருத்துவமணைக்கு செல்வதில் எனக்கு உடன்பாடில்லை)

காலையில் மருத்துவமனையில் சேர்த்தோம். மதியம் மூன்று மணி அளவில் சிகிச்சை தொடங்கியது. சிகிச்சை முடிந்து நோயளிகளை வெளியே கொண்டுவரும் வழியில் காத்திருக்க சொன்னார்கள். அந்த இடத்தில் வேறு பலரும் இருந்தனர். அவர்களது உறவினர்களுக்கும் அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருப்பதாக கூறினார்கள்.

இந்த மருத்துவமனையில் மொத்தமாக 6 பேருக்கு ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை செய்வார்கள் என நினைக்கிறேன்.  

நானும் நண்பனின் இரண்டு மகள்களும் காத்திருந்தோம். யார் முதலில் அரம்பித்தது என தெரியவில்லை. எதற்க்காக சிரித்தோம் என்று தெரியவில்ல்லை. ஏதொதோ பேசிக்கொண்டிருந்தோம். சிரித்து கொண்டிருந்தோம். வாய்விட்டு சிரித்தோம். அங்கு காத்திருந்த  மற்றவர்கள் விநோதமாக பார்த்தவுடன், வெளியே படிகட்டுக்கு அருகில் வந்து பேசி சிரிக்க ஆரம்பித்துவிட்டோம். நிறைய நேரம் சிரித்துகொண்டிருந்தோம். என்ன பேசினோம். ஏன் சிரித்தோம். இந்த நேரத்தில் சிரிப்பது சரியா என்ற யோசனை கூட இல்லை. 

சிறிது நேரத்தில், மருத்துவமனை ஊழியர், நண்பனின் பெயரை சொல்லி அவரது உறவினர்கள் யார் என கேட்டு உள்ளே அழைத்தார். நாங்கள் சிரித்துகொண்டிருந்ததை பார்த்துவிட்டார். நண்பனை அறுவைசிகிச்சை அறையிலிருந்து வெளியே கொண்டுவந்து உறவினர்களுக்கு காட்ட காத்திருந்தனர். மருத்துவர் இங்கே காத்திருக்காமல் ஏன் வெளியே போனீர்கள் என கடிந்துகொண்டார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக கூறினார். அவரை வார்டுக்கு மாற்ற கொண்டுபோனார்கள்.

வெளியே வந்து நிம்மதி பெருமூச்சுடன் மீண்டும் சோகத்துடன் மெதுவாக ஒருமுறை சிரித்துகொண்டோம்.

எங்களது சிரிப்பு எங்களது பயத்தை வெளியே காட்டிகொள்ளாமல் இருப்பதற்க்காக சிரித்தோம் என்பதை பின்பு உணர்ந்தோம்.

இதுதான் “ துன்பம் வரும் வேளையிலே சிரிங்க” என்பதாக இருக்கும்.

கடவுளை கும்பிடும் பழக்கம் இல்லாத நான் இவனுக்காக கும்பிடநேர்ந்தது. கடவுளுக்கு நன்றி சொல்ல நண்பனையும் அழைத்துகொண்டு மிக விரைவில் அந்த கோயிலுக்கு செல்ல இருக்கிறேன்.

இந்த மருத்துவமனையின் விசேசம் என்னவென்றால், வாய்வு தொந்தரவால், நெஞ்சு வலித்தாலும் stent  வைத்து அனுப்பிவிடுவார்கள். எனக்கு நெஞ்சு வலி வந்தபோது, அவசரத்தில் போய் சென்று சேர்ந்துவிட்டேன். என்னுடன் மனைவிமட்டும் இருந்தார். நாளைக்கு அறுவை சிகிச்சை என்று கூறினார்கள். Mediclaim benefit இருப்பதாக கூறியிருந்தேன். அவர்களுக்கு இன்ஸ்யூரன்ஸ் கம்பெனியிடமிருந்து ஒப்புதல் கிடைத்துவிட்டதால், எதோ காரணம் கூறி பகல் இரண்டுமணிக்கு எனக்கு அறுவை சிகிச்சை செய்துவிட்டனர். யாரும் உடன் இல்லை. அறுவை சிகிச்சை சமயத்தில் தான்  நண்பர்களுக்கு சொல்லி அவர்கள் வந்தார்கள்.

இந்த மருத்துவமனை இதய நோய் சிகிச்சைக்கு பெயர்பெற்றது என்று பெயர் வாங்கியது. இவர் புதிய முறையில் அறுவை சிகிச்சை செய்வதாக சொல்லப்படுகிறது.

இதயத்தில் அடைப்பு இருக்கும் இடத்தில், stent வைக்க தொடை வழியாக அதை செலுத்தி இதயத்தில் பொருத்துவார்களாம். ஆனால், புதிய முறை என்று எனக்கு கை வழியாக (கை மடக்கும் இடத்திலிருந்து) செலுத்தி stent பொருத்தினார்கள்). இவர்கள் ஏதேனும் உள்ளே அனுப்பி பொருத்தினார்களா என்று இன்று வரை சந்தேகமாக உள்ளது. அந்த அவசரத்தில் எதை சொன்னாலும் கேட்க வேண்டிய நிலையில் இருந்தோம். எனக்கு இதய பிரச்சனை இருந்ததா  என்பதே கூட இன்றளவும் கேள்விகுறி தான்.

தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்கு செல்லும் போது, எனக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதை எப்படி அறிவது கொள்வது, எனது இதயத்தின் x-ray  காண்பியுங்கள் அதில்  stent  எங்கேயிருக்கிறது என்று காண்பியுங்கள் என்று கேட்டேன். அதற்கு மருத்துவர் கேட்டார். “நீங்கள் கடவுளை பார்த்துள்ளீரா” என கேட்டார். நான் பார்க்கவில்லை. எப்படி பார்க்கமுடியும் என்றேன். அதற்கு அவர் அதே போல தான் இதையும் பார்க்க முடியாது என்று கூறிவிட்டார்.

என்ன செய்வது இன்றளவும் எனக்கு stent வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டதா என்ற சந்தேகத்துடன் வாழ்கிறேன்.






No comments:

Post a Comment