Saturday 14 June 2014

பொழுது போகல



காலை ஒன்பது மணி. கடும் கோடையில் 45 டிகிரி வெப்ப நிலையில் தவித்த மக்களுக்கு இப்போது பெய்து கொண்டிருக்கும் மழை மிகப் பெரிய ஆறுதல்.

மழை பெய்ய ஆரம்பித்தவுடன், என் வீட்டிற்க்கு எதிரில் இருக்கும் மின்சார கம்பத்தில் வான வேடிக்கை நடந்தது. பொதுவாக நான் வசிக்கும் பகுதியில் சற்று காற்று வீசினாலோ அல்லது தூறல் போட்டாலோ மின்சாரத்தை துண்டித்து விடுவார்கள். ஆனால், காலையில் சற்று கவன குறைவாக இருந்த காரணத்தால், வான வேடிக்கை நடந்துவிட்டது. இப்போது மின்சாரம் இல்லை.

என் வீட்டு வாசலில் இருக்கும் பெரிய வேப்ப மரத்தின் கீழ் ஒரு மிதி வண்டிகாரர் மழைக்கு ஒதுங்கி நிற்கிறார்.  வீட்டிற்க்கு எதிரில் தள்ளு வண்டியில் காய்கறி விற்கும் முன்று பேரும் தங்களது வண்டியை நெகிழியால் போர்த்துகின்றனர்.

பழைய செய்திதாள்கள் மற்றும் பல்வேறு பொருட்களை வாங்கி வியாபாரம் செய்யும் நபரும், தனது வண்டியில் இருக்கும் பொருட்கள் நனையாமல் இருக்க நெகிழி கொண்டு மூடுகிறார். காற்றில் நெகிழி பறக்கிறது. மழைக்கு ஒதுங்கி நின்ற மிதிவண்டிகாரர் அவருக்கு உதவி செய்கிறார்.  அவர் நனைவதை பற்றி கவலைப்படவில்லை. உதவி செய்யும் பொருட்டு அவர் நனைவதை அவர் அறியவில்லை என தோன்றுகிறது. இருவரும் மீண்டும் மரத்தடியில் வந்து நிற்கின்றனர். போலியான நன்றி என்ற வார்த்தையை அவருக்கு உபயோகிக்க தெரியவில்லை. இருவரும் பேசிக்கொள்கின்றனர். வேறு ஒரு மிதி வண்டிகாரரும் அங்கு வந்து அவர்களுடன் பேச ஆரம்பிக்கிறார். என்ன பேசிக்கொண்டிருப்பார்கள். மழை வந்து தங்களது பிழைப்பை கெடுத்து விட்டது என்றா அல்லது மழை வந்ததால் வெப்பம் குறைந்தது என்றா அல்லது தனது கிராமத்தில் விவசாயத்திற்க்கு இந்த மழை உதவும் என்றா.  எல்லோரும் பிழைப்பு தேடி இங்கு வந்தாலும், அவர்களது சொந்த மண் வறண்ட நிலமாக இருந்தாலும், அதைப்பற்றி பேசிக்கொள்வதில் சிறிது மகிழ்ச்சி உண்டாகிறது.

இரண்டு மிதி வண்டிகாரர்களும் தங்களது வண்டியில் குத்துகாலிட்டு உட்கார்ந்து கொள்கின்றனர். அப்படி உட்கார்ந்த வேளையில் ஒரு மாணவன் வந்து ஒரு வண்டியில் உட்கார வண்டி நகர்கிறது. எங்கே போக வேண்டும் எவ்வளவு கூலி என்று பேசியதாக தெரியவில்லை.  ஒரு பெண்மணி வந்து மற்றோரு மிதிவண்டியில் உட்கார அதுவும் நகர்ந்து விடுகிறது.. பழைய சாமன் வாங்குபவன் எப்போது இடத்தை விட்டு நகர்ந்தான் என தெரியவில்லை.

மழை நின்று விட்டது எனது பக்கத்து வீட்டுகாரர் ஸ்கூட்டரை வெளியே எடுத்து உதைக்கிறார். அது கிளம்புவதாக கானோம். தனது மகனை கபில் கபில் என்று கூப்பிடுகிறார். இவருக்கு நல்ல குரல்வளம். இவர் தனது வீட்டில் ரகசியமாக பேசினால், எனது வீட்டில் மிகவும் நன்றாக கேட்கும். இவர் சாதாரணமாக பேசினால், வீட்டில் ஏதொ சண்டை நடப்பது போல இருக்கும். முன்பெல்லாம் தொலைபேசியில் இவர் STD  பேசினால்,  அந்த நபருக்கு மட்டுமல்ல எங்கள் தெரு முழுவதும் கேட்கும். ஸ்கூட்டர் கிளம்பவில்லை. அதை வீட்டில் வைத்து விட்டு மிதிவண்டியில் புறப்பட்டு சென்று விட்டார்.

சிவப்பு புடவை கட்டிய பெண்மணி மழையில் நனைந்த உடையுடன் நடந்து செல்கிறார். மக்கள் நடமாட்டம் வாகன நடமாட்டம் அதிகமாகி விட்டது.

தள்ளு வண்டியில் ஒரு பெரிய பாத்திரத்தில் பிரியானி விற்கும் நபர் வருகிறார். அவரது வண்டியில் பெரிய  பானையில் பிரியானி இருக்கும். அதை ஒரு புறமாக சாய்த்து வைத்திருக்கிறார். ( இஸ்லாமிய மக்கள் தம் பிரியானி செய்ய பெரிய பித்தளை பாத்திரத்தை உபயோகிப்பார்களே அது ) இவரும் இஸ்லாமியர். பித்தளை பாத்திரத்துக்கு பக்கத்தில் மற்றோரு பாத்திரத்தில் குழம்பு இருக்கிறது. ஒரு எடை போடும் இயந்திரமும் இருக்கிறது. தினமும் வந்து என் வீட்டுக்கு எதிரில் நிறுத்துவார். என் வீட்டுக்கு எதிரில் கடைகள் இருக்கின்றன. அதில் ஒரு முடி திருத்தும் கடையும் இருக்கிறது. அது இஸ்லாமிய இளைஞர்களால் நடத்தப்படுகிறது.. இவர் வண்டியை நிறுத்திவிட்டு அந்த கடைக்கு சென்று சொல்லி விட்டு வருவார்.

அவர்கள் வந்து பிரியாணி வாங்குவார்கள். எடை போடும் இயந்திரத்தின் ஒரு பகுதியில் உள்ள கிண்ணத்தில் ஒரு துண்டு செய்தி தாளை வைப்பார். பிறகு பெரிய பாத்திரத்திலிருந்து பிரியானி சாதத்தை வைப்பார். பிறகு தேடி தேடி ஒரு துண்டு மாமிசம் வைப்பார். அது கோழி பிரியானியா ஆட்டு பிரியானியா அல்லது மாட்டு பிரியானியா என தெரியவில்லை. எவ்வளவு எடைக்கு வைக்கிறார் என தெரியவில்லை. பிறகு அதில் சிறிது குழப்பு ஊற்றுகிறார். அந்த செய்திதாளுடன் பிரியானியை மடித்து நெகிழி பையில் வைத்து தருகிறார். ஒரு முறை முடி வெட்ட சென்ற போது அந்த இளைஞர்களிடம் விசாரித்தேன். அது 20 ரூபாயம். அது அவர்கள் காலை சிற்றுண்டியாக சாப்பிடுகிறார்கள்.

காய்கறி விற்கும் இரண்டு இளைஞர்களும் வாங்கி சாப்பிடுகிறார்கள். அவர்களும் இஸ்லாமியர்கள். சாலையில் செல்பவர் நின்று விசாரித்து அவரும் வாங்கி வண்டியின் ஓரத்தில் வைத்து சாப்பிட்டுவிட்டு காசு கொடுத்து நகர்ந்து செல்கிறார்.

தெருவில் குப்பை அள்ளும் இளைஞர் என் வீட்டு வாசலில் குப்பை அள்ளுகிறார். இவர் எப்போதும் நல்ல முழு நீள கால்சட்டையும், மேல் சட்டையும் அணிந்திருப்பார். Shoe போட்டிருப்பார். என்னை பார்த்தால் ஒரு வணக்கம் சொல்லுவார். என் வீட்டின் வெளிப்பகுதியை பெருக்கி குப்பையை அள்ளுவார். அது அவரது வேலை அல்ல. எனது மனைவி சொல்லியிருப்பதால் அதை செய்கிறார். சிறிது நேரம் கழித்து வந்து, மணி அடித்து என் மனைவியை அழைத்து அதற்க்கான காசு வாங்கி செல்வார். எவ்வளவு என தெரியவில்லை.

எங்கள் தெருவில் குப்பை தொட்டி கிடையாது. சற்று தள்ளி இருக்கிறது. இங்கு காலையில் ஒருவர் வண்டி கொண்டு வந்து ஒவ்வொரு வீட்டிலும் மணி அடித்து அழைத்து குப்பையை வாங்கி செல்வார். இவருக்கு மாதா மாதம் காசு கொடுக்க வேண்டும். இவரது சேவையை உபயோகிக்காமல், குப்பை தொட்டியில் சென்று போடுபவர்களும் உண்டு. ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அவரது சம்பளத்தை கேட்பார். என் மனைவி, இன்னமும் சம்பளம் வரவில்லை இரண்டு நாள் கழித்து தருகிறேன் என்றால் ஒப்புக்கொள்ளமாட்டார். நீங்க என்ன எனக்கு ஆயிரகணக்கிலா தருகிறீர்கள் என்று வாதம் செய்து முதல் தேதியே வாங்கி செல்வார்.

இவரை காலை 11 மணி அளவில் மீண்டும் பார்க்கலாம். கருப்பு நிற Hero Honda வண்டியில் இரண்டு பெண்மனிகளுடன் சென்று கொண்டிருப்பார். அநேகமாக அது அவரது மனைவியும் மகளுமாக இருக்க வேண்டும். அவர்களும் காலையில் இந்த பகுதிக்கு வந்து துப்புரவு தொழில் செய்பவர்களாக இருக்க வேண்டும். அனைவரும் வேலை முடிந்தவுடன் ஒன்றாக வீடு திரும்புகிறார்கள் என நினைக்கிறேன். 

காவி வேட்டி கட்டிய சாமியார் வருகிறார். இவருக்கு நான் தானம் செய்வதில்லை. ஐந்து ரூபாய் தானம் கொடுத்தாலும் வாங்க மாட்டார் . குறைந்தபட்சம் பத்து ரூபாய் கொடுக்க வேண்டும். நான் இரண்டு ரூபாய் கொடுத்த போது திருப்பி கொடுத்து சென்று விட்டார். அன்றிலிருந்து நான் எதிரில் இருந்தாலும் என்னிடம் கேட்ப்பதில்லை. நானும் கொடுப்பதில்லை. எனது பக்க்துவீட்டு பெண்மணி இருபது ரூபாய் கொடுத்து விட்டு ஒரு கும்பிடு போடுவார். இவரும் ஏதோ ஆசிர்வாதம் செய்து கொண்டே நகர்வார்.

வேறு ஒரு சாமியார், பௌர்னமி, அமாவாசை , பிரதோசம் அன்று தெருவில் வந்து சங்கு ஊதுவார். குறிப்பிட்ட வீடுகளின் முன்பு தான் சங்கு ஊதுவார். அந்த வீட்டு பெண்மணிகள் காசு கொடுத்து விட்டு வணங்குவார்கள். இவர்களும் ஆசிர்வாதம் செய்வார்கள். இவர்களுக்கு எப்படி நாள் கிழமை தெரிகிறது என புரியவில்லை.

அப்போதெல்லாம் பாய்ஸ் படத்தில் வரும் செந்திலின் நகைச்சுவை காட்சி தான் நினைவுக்கு வரும். எந்த பகுதி கோயிலில் எந்த கிழமையில் என்ன பிரசாதம் கொடுப்பார்கள் எத்தனை மணிக்கு கொடுப்பார்கள் என விவரமாக கூறுவார். அதற்க்காக ஒரு குறிப்பும் வைத்திருப்பார்.  Information is knowledge என்று கூறுவார். எனக்கு ஒவ்வொரு முறையும் இந்த காட்சி தான் நினைவுக்கு வரும். இந்த சாமியார்கள் ஏதேனும் Tablet  வைத்துள்ளார்களோ என்னவோ. இதுபோன்ற சாமியார்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள BPO அமைப்பு வைத்துள்ளார்களே என்னவோ.

இத்தனை காட்சிகளையும் ஜன்னல் வழியாக பார்த்து எழுதிகொண்டிருக்கிறேன். இன்னமும் மின்சாரம் வரவில்லை. எனது சம்சாரமும் தேநீர் எடுத்துக்கொண்டு வரவில்லை. இப்போது எனக்கு புகை பிடிக்க வேண்டும். வாங்குவதற்க்காக கடைக்கு போக வேண்டும். வாங்கி வருவதற்க்குள் மின்சாரம் வந்து விட்டால் இதை முகநூலில் ஏற்றி விடுவேன். இல்லையெனில் இந்த கட்டுரையை தொடரலாம் என எண்ணுகிறேன். பொருத்திருங்கள்  சீக்கிரம் வந்து விடுகிறேன்.

புகை பிடித்தாயிற்று ஆனால் இன்னமும் மின்சாரம் வரவில்லை. என்னடா ஒன்னும் இல்லாத விசயத்த இவ்வளவு பெருசா எழுதுறான் அப்பிடின்னு தானே தோனுது. அப்பிடி தாங்க ரொம்ப பேர் எழுதுறாங்க. அவங்களுக்கு எழுத்தாளர்கள்ன்னு பேர்.

ஒரு விசயத்த பார்த்துட்ட அத சுத்தி சுத்தி ஜிலேபி மாதிரி சுத்தி சுத்தி எழுதுவாங்க. சின்னதா ஒரே ஒரு முறை மட்டும் எழுதினா அது சிறுகதை. பெரிசா எழுதினா நெடுங்கதை. அப்பப்போ, தொடர்ச்சியா எழுதினா அது தொடர்கதை. 

அதை இலக்கியம்ன்னு சொல்லுவாங்க. அவங்கள இலக்கியவாதிகள்ன்னு சொல்லுவாங்க. இதுலே என்ன இலக்கியம் இருக்குன்னு கேட்ட, ஒனக்கு இலக்கியம் பத்தி என்ன தெரியுமுன்னு நம்மள திருப்பி கேப்பாங்க. சரிப்பா நீயே சொல்லுன்னா எதோ எதோ சொல்லுவாங்க. எதுவுமே புரியாது. என்னப்பா முன்னாடி வேற மாதிரி சொல்லியிருந்தியேன்னு கேட்ட அதுவும் இலக்கியம் இதுவும் இலக்கியம்ன்னு சொல்லுவாங்க. சரி முடிவா எது இலக்கியன்னு சொல்லுன்னு கேட்டா அப்பிடி சொல்லமுடியாது. இது கலை இதுக்கு முடிவான சூத்திரம் இல்லேன்னு சமாளிப்பாங்க.

வேறோரு எழுத்தாளர் இப்படி சொல்லியிருக்காரேன்னு கேட்டா , அவன்னெல்லாம் இலக்கியவாதியான்னு ஒரு புடி புடிப்பாங்க. வாயில நொழயாத பேர்ல்லாம் சொல்லி அவங்க தான் இலக்கியவாதின்னு சொல்லுவாங்க. 

சமயத்திலே இந்த இலக்கியவியாதிகள் சண்ட போடுறத பார்த்த, சேரிலே பொம்பளங்க கொழயடி சண்ட போடுற மாதிரி இருக்கும்.

இருங்க இருங்க என்ன சொல்ல வர்றிங்க. இப்போ நான் எழுதியிருக்கிறதே இலக்கியம் மாதிரி இருக்குன்னு சொல்றிங்களா. பாத்திங்களா கலாய்கிறிங்க. இப்பிடி உசுப்பு எத்தி வுட்டதாலே தான் ஏகப்பட்ட பேர் தன்ன இல்லக்கியவாதிகள்ன்னு சொல்லிகிட்டு திரியுறாங்க.

சும்மா இருங்க என்ன ரொம்ப புகழாதிங்க. ஏற்கனவே  நான் எழுதினத படிச்ச வெள்ளகாரங்க, அட சேகர் யாருக்கும் ஒன்னும் புரியாத மாதிரி எழுதுறான் இவன் பெரிய இலக்கியவாதியா இருப்பான்னு, 2014 வருசத்துக்கான இலக்கிய நோபல் பரிசு கொடுக்கலாம்னு யோசிக்கிறதா செய்தி கசியுது.


நீங்களும் என்ன இலக்கியவாதின்னு சொன்ன அவங்க நெஜமாகவே நம்பி நோபல் பரிசு கொடுத்தாலும் கொடுத்துடுவாங்க.

என்ன நீங்க ரொம்ப தொந்தரவு செஞ்ஜா அத நான் வாங்கி தான் ஆவனும்.
சரி விடுங்க. இவ்வளவு நேரம் இத பொறுமையாக படிச்சதுக்காக உங்களுக்கு சிறந்த வாசகர்ன்னு பட்டம் கொடுக்கிறென்.

No comments:

Post a Comment