Friday 13 June 2014

உள்நாட்டு அகதிகள்



திரு. நரேந்திர மோடியின் அரசு பதவியேற்ற பின் செயல்படுத்தும் திட்டங்களில் ஒன்று காஷ்மீர் பண்டித்களை (பிராமணர்கள்) மீண்டும் அவர்கள் வாழ்ந்த காஷ்மீர் பகுதிகளில் குடியமர்த்தும் மறுவாழ்வு திட்டம்.

1989ஆம் ஆண்டுகளில் இங்கு ஆரம்பித்த தீவிரவாத செயல்கள் காரணமாக அவர்களை எதிர்த்து போரடும் வலிமையற்ற இந்து பிராமணர்கள் அச்சத்தின் காரணமாக தாமாகவே வெளியேறினர். இஸ்லாமிய தீவிரவாதிகளால் விரட்டப்பட்டனர். அவசரத்தில் வெளியேறியவர்கள் தங்களது உடமைகளையும் சொத்துக்களையும் விட்டு விட்டு வெளியேறினாலும், பின்பு திரும்பி சென்று சொத்துக்களை விற்று விட்டு வந்தனர். சந்தை நிலவரப்படி அவர்களுடைய சொத்துக்களுக்கு பணம் கிடைக்காமல் போயிருக்கலாம்.

2008 ஆம் ஆண்டு , திரு. மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் குடிபெயர்ந்த பிராமணர்களை மறு குடியமர்த்தும் திட்டம் கொண்டுவரப்பட்டது. அங்கு மீண்டும் குடியேற விரும்பும் குடும்பங்களுக்கு, அவர்கள் வீடு கட்டிக்கொண்டு வாழ்வதற்க்கு ரூ.7,50,000/- வழங்குவதாக அறிவித்தது. இது 1989ஆம் ஆண்டு முதல் 1997ஆம் ஆண்டுக்குள் வெளியேறியவர்களுக்கே பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தொகை குறைவாக இருந்த காரணத்தாலும், பெரிய அளவில் அமைதியான வாழ்க்கைக்கு உத்திரவாதம் இல்லாத நிலையில் இந்த திட்டம் வெற்றி பெறவில்லை.

தற்போது, ஜம்மு-காஸ்மீர் அரசு இந்த தொகையை ரூ.20,00,000/-ஆக உயர்த்தியுள்ளது. அங்கிருந்து எந்த காலத்தில் வெளியேறியிருந்தாலும், அங்கு வந்து வாழ விரும்பும் அனைத்து குடும்பங்களுக்கும். இந்த சலுகை கிடைக்கும் என அறிவித்துள்ளது.

இந்த திட்டம் பொதுவாக மக்கள் நலனில் அக்கறை கொண்டு அமுல்படுத்துவதாக தோன்றினாலும் உண்மையில் இதன் பின்னனி என்னாவாக இருக்கும் என்பதை யோசிக்க வேண்டும். இந்த  திட்டத்தை அங்கிருக்கும் எதிர்கட்சியினரோ அல்லது தீவிரவாத இஸ்லாமிய குழுக்களோ எதிரிக்கவில்லை.

திரு.மோடி பதவியேற்ற பின் அரசியல் சட்டம் பிரிவு 370 நீக்க  போவதாக ஒரு துனை அமைச்சரின் மூலம் செய்தி வெளியிடப்பட்டது. அது பல விவாதங்களை எழுப்பியது. இன்றைய ஜம்மு காஸ்மீர் முதமைச்சர் , 370 பிரிவை நீக்கினால், ஜம்மு-காஸ்மீர் தனி நாடாக இயங்க வேண்டியிருக்கும் என்று ரீதியில் பேசினார். அதன் பிறகு அந்த விவாதம் தொடரவில்லை.

திரு. நரேந்திர மோடி , இந்து மத மக்களின் காவலன் என்ற மாயை ஏற்ப்படுத்தியுள்ளார். இவர் இந்த திட்டத்தை.நிறைவேற்றுவதின் மூலம் , அந்த மாயை தக்க வைத்துக்கொள்ள முடியும். மேலும், இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு தான் பயப்படவில்லையென்றும், சிறுபான்மை இனத்தவர்களிடம் பெரும்பான்மை இனத்தவர் தோற்றுவிடவில்லை என்ற செய்தியை நாட்டுக்கும் அண்டை நாடுகளுக்கும் உலக நாடுகளுக்கும் அறிவிக்கும் செயலாக இது அமைகிறது.

மேலும், சட்டபிரிவு 370 நீக்கப்பட்டால் ஜம்மு காஸ்மீர் அனுபவித்து வரும் சிறப்பு அந்தஸ்து பறி போய்விடும் என்ற நிலை இருப்பதால், மாநில அரசும் இதற்க்கு சம்மதித்துள்ளது போல் தோன்றுகிறது.

காஸ்மீர் பண்டித்துக்கள் (பிராமணர்கள்) என்று தான் சொல்லப்படுகிறதே தவிர காஸ்மீர் இந்துக்கள் என்று சொல்லப்படவில்லை. காஸ்மீரில் இந்து பிராமணர்கள் மட்டும் தான் வாழ்ந்தார்களா ? மற்ற வைசியர்கள், சத்திரியர்கள் மற்றும் சூத்திர பிரிவினர் வாழவில்லையா ?. நிச்சியமாக வாழ்ந்திருப்பார்கள். பிராமணர்களுக்கு இந்த பிரிவு மக்கள் இல்லாமல் தனித்து வாழ முடியாது. இந்த பிரிவினர் செய்யும் வேலைகளை, இஸ்லாமிய சமூகத்தை சார்ந்தவர்களும் செய்கின்றனர். ஆனால், இஸ்லாமியர்கள் இந்துக்களுக்கு இந்த வேலையே செய்து கொடுத்திருக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பிராமணர் அல்லாத மற்ற இந்துக்களும் வாழ்ந்திருப்பார்கள். அவர்களுக்கு இந்த மறு குடி அமர்வு திட்டம் வழங்கபடாதா ?. இது குறித்து ஏன் தெளிவாக அறிவிப்புகள் இல்லை என்பது புரியவில்லை.

நாட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்றோரு பகுதிக்கு இயற்கையாக குடிபெயர்வோர் உண்டு. வேலை நிமித்தமாகவோ அல்லது தொழில் நிமித்தமாகவோ அல்லது வேறு பல காரணங்களுக்காக குடிபெயர்ந்தவர்களுக் இருக்க கூடும். அவர்கள் என்ணி வந்த நோக்கம் நிறைவேறாமல், சொந்த ஊர் திரும்பி செல்ல எண்ணி கொண்டிருப்பவர்களுக்கு இந்த திட்டம் நல்ல பயனை தரும். 

தீவிரவாத செயல்கள் காரணமாக இந்து பிராமணர்கள் மட்டும் தான் வெளியேறினார்கள் என்று சொல்ல முடியாது. உயிருக்கு பயந்த இஸ்லாமிய சமூகத்தினரும் வெளியேறியிருப்பார்கள். அவர்கள் மீண்டும் காஸ்மீர் செல்ல விரும்பினால், இந்த சலுகை அவர்களுக்கு கிடைக்காதா ? ஏன் இந்த சலுகை திட்டம் காஸ்மீர் பிராமிணர்களுக்கு மட்டும் என்று சொல்லப்படுகிறது. 

இது உண்மையில் மனிதாபிமான திட்டமாக இல்லாமல், மத ரீதியாக இந்த பிரச்சனை அனுகப்பட்டு, அதிலும் குறிப்பாக உயர் சாதி மக்களுக்கு சலுகை அளிக்கும் விதமாக இந்த திட்டம் அமைகிறது.

ஒரு வேளை திரு. நரேந்திர மோடி நல்ல எண்ணத்துடன் தான் செய்கிறார் இதில் குறை காண முடியாது என்றும், உள்நாட்டில் அகதிகளாக வெளியேறியவர்களுக்கு உதவும் திட்டம் என்றால் அவர்களை பார்த்து நான் வைக்கும் ஒரு கேள்வி.

தீவிரவாதம் என்பது ஆயுதம் ஏந்திய போரட்டம் மட்டுமல்ல. சிந்தனை ரீதியாக கொடுமைப்படுத்தப்படுவதும் இதில் அடங்கும்.

தமிழ்நாட்டில் பெரியார் என்று அழைக்கப்பட்ட திரு. ஈ.வே. ராமசாமி நாயக்கர் (தெலுங்கர்) புரட்சி என்ற பெயரால் செயல்படுத்திய மத ஒழிப்பு (இந்து மதம் மட்டும்), கடவுள் மறுப்பு, ஜாதி ஒழிப்பு ?? போராட்ட காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த பிராமணர்கள் துன்புறுத்தப்பட்டனர். அவர்களது பூணூலை அறுத்ததும் குடுமியை  அறுத்ததும் , உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சிறுபான்மை இனமாக இருந்த / இருக்கும் பிராமன சமூகம் இவற்றை எதிர்த்து போராட வழி இல்லாமல் வட நாட்டுக்கு குறிப்பாக டெல்லிக்கும், மும்பைக்கும் குடியேறினர். அவர்கள் அந்த பகுதிகளில் தங்களுக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொண்டு அமைதியாக வாழ்ந்து வருகின்றனர்.

அவர்கள் நேரடியாக திராவிட கட்சிகளுடன் மோதாமல், அரசில் உயர் பதவிகளில் அமர்ந்து கொண்டு, பிராமணர் அல்லாதவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டியவற்றை கிடைக்கவிடாமல் செய்வதாக சொல்கின்றனர். தாழ்த்தப்பட்ட தலித் மக்களின் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் இந்த பிரிவினையை இன்னமும் உயிருடன் வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு தமிழ்நாட்டிலிருந்து வெளியேறிய பிராமணர்களை மீண்டும் தமிழ்நாட்டில் குடியமர்த்த ஏன் முயற்ச்சி செய்யவில்லை. அவர்களும் ஒரு விதத்தில் உள்நாட்டு அகதிகள் தானே ?

ஒரே மதத்தில் இருக்கும் ஜாதி உயர்வு தாழ்வு காரணமாக பாதிக்கப்பட்டவர்களை பற்றி கவலையில்லை. ஆனால், மத ரீதியாக வெளியேற்றப்பட்ட காரணத்தால், அவர்களுக்கு நான் இளைத்தவனும் அல்ல சளைத்தவனும் அல்ல என்று நிருபிக்க எடுக்கப்பட்ட முடிவு தான் இந்த காஸ்மீர் பண்டித் மறு குடியமர்ப்பு திட்டம்.

சொந்த நாட்டில் அகதிகளாக வாழாமல், தான் பிறந்து வளர்ந்த சொந்த இடத்தில் வாழ்வது தான் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும். அந்த வகையில் ஒரு சிறு பகுதியினருக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்படுகின்றது என்பதில் மகிழ்ச்சியே.

இந்த உள்நாட்டு அகதிகள் என்ற விசயத்தில் மற்றோரு அம்சத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

நாட்டின் வளர்ச்சிக்கு என்ற பெயரில் மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளும், விளைநிலங்களும் கையகப்படுத்தப்படுகிறது. மிகவும் சொற்பமான நட்ட ஈடு தொகை கொடுக்கப்படுகிறது. பல சமயங்களில் பலவந்தமாக வெளியேற்றப்படுகின்றனர். அவர்களுக்கு நியாயமான நட்ட ஈட்டு தொகையும், வேறு பகுதிகளில் சென்று குடியேற தேவையான வசதிகளை செய்து தருவது அரசின் பொறுப்பல்லவா ?

வனப்பகுதிகளில்  கனிம வளங்களை எடுக்கும் பொருட்டு அங்கு வாழும் மலைவாழ் மக்களை விரட்டியடிப்பது எந்த வகையில் நியாயம். அவர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல அவர்களது வாழ்வாதரமும், இயற்கை வளமும் அழிக்கப்படுகிறது என்பதாலும். அவை வருங்காலத்தில் மிக பெரிய அளவில் மனித குலத்திற்க்கு கேடாக அமையும் என்ற காரணத்தாலும் தான் எதிர்க்கின்றனர்.

விரட்டியடிக்கப்படும் மக்களுக்கு சரியான வாழ்க்கையை அமைத்து கொடுத்தால், மாவோயிஸ்டுக்கள் போன்ற ஆயுத குழுக்கள் ஏற்ப்படுவதை தவிர்க்கலாம்.

ஒரு கும்பல் தனது மதத்தின் பெயரால் மற்ற மதத்தினரை வெளியேற்றினால் அது மத தீவிரவாதம். ஆனால் அரசு, வளர்ச்சி என்ற பெயரில் மக்களை அவர்களது பகுதியிலிருந்து வெளியேற்றினால் அதை எதிர்த்து கேள்வி கேட்க முடியாது கூடாது என்பது என்ன நியாயம்.


No comments:

Post a Comment