Thursday 19 June 2014

துறவறம் கொள்வது சாத்தியமா ?



அண்மை காலமாக துறவறம் போக வேண்டும் என்று தோன்றுகிறது. துறவறம்  என்றால், காவி வேட்டி கட்டிக்கொண்டு, ருட்சாத்திர மாலை போட்டுக்கொண்டு, பஜனை செய்து கொண்டு, போலியாக ஆசைகளை விட்டு விட்டதாக வேசம் போடுவதல்ல. 

ஆசிரமம் அமைத்து கோடிக்கனக்கான பணத்தை சேமித்து அதற்க்காக குற்றங்களை செய்து மேலும் ஒரு சிக்கலான வாழ்க்கையை அமைத்து கொள்வதல்ல. 

சந்தியாசம் என்ற பெயரில் சார்ந்துள்ள மத கருத்துக்கள் தான் உயர்ந்த்து என்று மற்றவர்களை தாழ்த்தி பேசி சமுயாதயத்தில் கலவரத்தை தூண்டுவதுமல்ல.

தனித்து வாழுதல். எவ்வளவு தான் ஆசை படாமல், பிறருடைய விசயங்களில் தலையிடாமல் வாழ்ந்தாலும் தற்போதைய நடைமுறை வாழ்க்கையில் அது ஒத்து வராது. சமூகம் எப்படியாவது இந்த நரக வாழ்க்கையில் இழுத்துக்கொண்டிருக்கும். புதை சேற்றில் மாட்டிக்கொண்ட வாழ்க்கை இது. இதிலிருந்து மீளுவது எளிதான காரியமல்ல.

சந்நியாசி ஆக வேண்டுமென்றால் “ கூறாமல் சந்நியாசம் கொள் “ என்று எழுதி வைத்துள்ளனர்.  அப்படியெல்லாம் மற்றவர்களை ஏமாற்றி விட்டு ஒடி ஒளிந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் இல்லை. எல்லோரிடமும் சொல்லி விட்டு , அவ்வப்போது இருக்கும் இடத்தையும் நிலைமையும் தெரிவித்து விட்டு ஒதுங்கி வாழ வேண்டுமென்பது.

விலகி வாழ்பவன் மீண்டும் ஏன் தொடர்புகளை வைத்துக்கொள்ள வேண்டுமென்றால், வாழ்ந்த வாழ்க்கையில் என்னுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் நம்பிக்கையை அவ்வளவு எளிதில் விலக்கிவிட முடியாது என்பதுடன் என்னை சார்ந்தவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும், சடங்கு சம்பிரதாயங்களையும் விலக்கி அவர்களை துன்பத்திற்க்கு ஆளாக்க முடியாது என்பதும் காரணம். 

சுமங்கலியாக வாழ்வதா, பிண்டம் வைப்பதா இல்லையா என்ற குழப்பத்தை குடும்பத்தார்க்கு வைக்க விரும்பவில்லை.

இது வாழ்க்கையை கண்டு பயந்து ஓடுவதோ அல்லது பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் தப்பித்து ஒடும் செயலோ அல்ல.

தன்னை நம்பி வந்தவர்களை தவிக்க விட்டு வெளியேறுவது கோழைத்தனம் என்ற வாதமும் சரிபடாது. நம்பி வந்தவர்களையும், காம இச்சையால் உருவாக்கப்பட்டவர்கள் அனைவரும் வசதியாக வாழ ஏற்பாடு செய்து விட்டு , தனக்கான தனக்கு பிடித்தமான வாழ்க்கையை தேர்ந்தெடுப்பது.

இப்போது வாழ்க்கையில் என்ன குறை என்று கேட்டால் ஒரு குறையும் இல்லை. வாழ்ந்த வாழ்க்கையும், வாழும் வாழ்க்கையும், வாழப்போகின்ற வாழ்க்கையும் நன்றாகவே உள்ளது.

இந்த வாழ்க்கையை இத்தனை காலம் வாழ்ந்தாகிவிட்டது. வேறு ஒரு வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கலாம் என்ற எண்ணம் தான். இங்கு இழப்பதற்க்கு ஒன்றும் இல்லை அங்கு சென்று அடைவதற்க்கும் ஒன்றும் இல்லை. இப்படிப்பட்ட நிலையில் ஏன் புதிய வாழ்க்கையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கேள்விக்கு இறுதியான பதில் இல்லை. மாற்றம் ஒன்றே மாறாதது மாற்றி வாழ்ந்து பார்ப்பதில் என்ன தவறு என்ற எண்ணம் தான்.
சந்நியாசம் என்றால் தெய்வ நம்பிக்கை அதிகமாகி விட்டது என்று பொருள் அல்ல. சிந்தனை திறன் உடையவன் எந்த காலத்திலும் குருட்டு தனமாக எதையும் ஏற்றுக்கொள்ளமாட்டான்.

நிறைய விசயங்களை அறிந்திருப்பதால் அதை மற்றவர்களுக்கு போதித்து அவர்களை நலவழி படுத்துவதற்க்கு என்பதும் பொருள் அல்ல.

எவ்வித பந்தங்களும் இல்லாமல் , கடமைகள் என்று சுமைகளை ஏற்றிக்கொள்ளாமல் , எந்த நேரத்தில் எது தோன்றுகிறதோ அதை செய்து வாழுவது. நேற்று நடந்ததை பற்றி கவலைப்படாமல்., நாளைக்கு நடக்க போவதை பற்றி கவலைப்படாமல், வாழும் ஒவ்வொரு நிமிடத்தையும் அதன் போக்கில் வாழவேண்டுமென்பது.

மண் ஆசை, பொண் ஆசை, பெண் ஆசை இவைகளை துறந்து விட்டு போக முடியுமா என்ற கேள்வி எழும். அது அவ்வளவு விரைவில் சாத்தியமில்லைல். ஏதெனும் ஒரு சந்தர்ப்பத்தில் இவை அனைத்தும் நம்மை விட்டு விலகி செல்லத்தான் போகிறது. அவை நம்மை விட்டு விலகும் முன், நாமே அதை விலக்கி விட்டால் அது நம்மை குறைவாகவே பாதிக்கும்.

சந்தியாசம் வாங்கிவிட்டால் இந்த ஆசைகள் விலகிவிடும் என்றால் அதை விட முட்டாள்தனம் ஏதுமில்லை. எங்கு எப்படி விலகினாலும், வசிப்பதற்க்கு, இயற்க்கையில் இருந்து பாதுகாத்து கொள்வதற்க்கு தலைக்கு மேல் கூரை தேவை. அதை தேடித்தான் ஆக வேண்டும். இது தான் மண் ஆசை. ஆகாயத்தையே கூரையாக நினைத்து வெட்ட வெளியில் வாழ்ந்து விட முடியாது.

பிச்சை எடுத்து உண்டாலும் ஒரு திருவோடு  வேண்டும். அதை பாதுகாக்க சிரமப்பட வேண்டும். இது பொருள் ஆசை.

பெண் ஆசையை ஒழிக்க முடியுமா. முடியாது. நம் எதிரே வருபவர் பெண் என்று இனங்காண முடியுமென்றால், அதை தொடர்ந்து அதற்க்கான எல்லா எண்ணங்களும் தோன்ற தான் செய்யும்.

எனவே இந்த ஆசைகளை முற்றிலுமாக விலக்கி விட முடியாது. குறைத்து கொள்ளலாம். இப்படி நினைத்து வாழ வேண்டும் என்பதே ஒரு ஆசை தானே. அப்படியிருக்கும் போது ஆசைகளை ஒழித்து விட்டேன் என்பது போலித்தனம்.

முதல் படி எடுத்து வைப்பதற்க்கு, தற்போது கைவசம் இருக்கும் பொருட்கள் உறவுகளை விட்டு விலக வேண்டும். ஆசையின்றி ஆடையின்றி கூட விலகி விட முடியும். ஆனால்,

இன்று வரை சமூக நிர்பந்தத்தால் பொருள் ஈட்ட மட்டுமே பயன் படுத்த பட்ட கல்வி, அதன் மூலம் அறிந்தவை , இதன் மூலமாக அடைந்ததாக கருதப்படும் அறிவு எனும் சிந்தனை திறனையும் , இது வரை அடைந்த அனுபவங்கள் மூலம் பெற்ற அறிவையும் விட்டு விட்டு சந்தியாசம் என்ற வாழ்க்கையை நோக்கி பயனிக்க முடியுமா. அவை எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கும். இவைகள் இருக்கும் வரை, நடப்பவைகள் அனைத்தையும் அதன் போக்கிலேயே ஏற்று வாழ்வது இயலாத காரியம். நடப்பவைகள நமக்கு சாதமாக்கி கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருந்து கொண்டெயிருக்கும். அறிவு  என்ற ஒன்றை விலக்க முடியாத போது , எப்படி எல்லாவற்றையும் துறந்து விட்டு துறவறம் மேற்கொண்டதாக சொல்ல முடியும்.

இந்த அறிவையும் விலக்கி விட்டு நிகழ்கால வாழ்க்கையிலிருந்து விலக முடியுமா.

மூளைச்சாவு என்கிற நிலையில் தான் அது சாத்தியமாகும். ஆனால் அப்போது உடலும் இயங்காது. வாழும் வாழ்க்கை என்ன என்று புரியாத நிலையில் வாழ்வது சாத்தியமில்லை.

சிலருக்கு விபத்து போன்ற காரணங்களில், பழைய நினைவுகள் முற்றிலுமாக அழிந்து , புது வாழ்க்கை ஆரம்பிக்கிறார்கள். அப்போது கூட கடந்து வந்த வாழ்க்கையில் ஏதொ ஒரு நிலையிலிருந்து வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையை வேண்டுமானால் அறிவு உட்பட அனைத்தையும் துறந்து துறவறம் மேற்கொண்டதாக கூறமுடியும். ஆனால் அதை அவனாலும் உணர முடியாது. மற்றவர்களும் உணர மாட்டார்கள். மனநிலை பாதிக்கப்பட்டவன் என்ற சொல்லின் மூலம் தனியொரு அடையாளத்தை சமூகம் சூட்டிவிடும்.

எனவே எல்லாவற்றையும் துறந்து விட்டு துறவறம் மேற்கொள்வது என்பது சாத்தியமில்லை. அரண்மனை வாழ்க்கையை விட்டு வெளியேறியவர்களும், இறுதி வரை ஆசை இல்லாமல் வாழ்ந்தார்கள் என்று கூற முடியாது. தான் அடைந்த ஞானத்தை பிறருக்கு போதிக்க வேண்டும் என்று நினைப்பது கூட ஒரு வகை ஆசை தான். ஆசையை துறந்தவர்கள் என்று யாரும் இல்லை. குறைத்து கொண்டவர்கள் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

இன்றைக்கு இதை எழுதிகொண்டிருக்கிறேன் என்றால் , சிறிதளவேனும் வாழ்க்கையிலிருந்து விலக ஆரம்பித்துள்ளேன் என்று தோன்றுகிறது.
முதலில் இந்த முகநூலிலிருந்து விலகுவதே சரியாய் இருக்குமோ ?

No comments:

Post a Comment