Monday 23 June 2014

இலக்கியம் என்றால் என்ன ?



அண்மையில் எழுத்துலகில் இரண்டு முக்கிய பிரச்சனைகள் பேசப்படுகிறது.

1. திரு. நாஞ்சில் நாடன் அவர்கள் எழுத்தாளர்கள் பட்டியல் வெளியிட்டது குறித்து

2. திரு. ஜெயமோகன் அவர்கள் , அவரது எழுத்துக்களில் பெண் எழுத்தாளர்களை தரக்குறைவாக எழுதுவது குறித்து.

திரு. நாஞ்சில் நாடன் அவர்களின் பட்டியலில் பல பெயர்கள் விடுபட்டு விட்டது என்பது அதாவது தங்களது பெயர்கள் அதில் இல்லை என்று மறைமுகமாக கூறுவதுடன், தங்களால் எழுத்தாளர் என அங்கீகரிக்கப்படாத அல்லது தனிப்பட்ட முறையில் விரும்பாதவர்களின் பெயர்கள் அதில் இடம் பெற்றிருப்பது குறித்த குற்றச்சாட்டு.

ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள் இருக்கும் சூழ்நிலையில் அவர் படித்த எழுத்தாளர்களின் அடிப்படையில் அவருக்கு பிடித்த எழுத்தாளர்களை பட்டியலிட்டிருப்பார் என்ற அடிப்படை புரிதல் இல்லாமல் அவரை விமர்சிப்பது எழுத்தாளர்களின் அறியாமையை காட்டுகிறது. அவர் தெரிந்தே பல பெயர்களை குறிப்பிடவில்லையென்றாலும், அவரிடம் சான்றிதழ் பெருவதன் மூலம் தான் அங்கீரக்கப்படுவீர்கள் என்றால் , உங்களுக்கு உங்கள் மீதும் படைப்புகளின் மீதும் நம்பிக்கை இல்லை என்று பொருள். எழுத்தாளன் வாசகனால் மட்டுமே அங்கீகரிக்கப்படவேண்டும். பட்டியலில் இடம் பெற்றோ, விருதுகளை வாங்குவதன் மூலமோ அங்கீகாரம் கிடைக்காது.

திரு. ஜெயமோகன் பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களை ஏற்றுக்கொள்ளாமல் அவர்கள்பெண்என்று முன்னிலை படுத்தி கொண்டதன் மூலமே எழுத்தாளர்களாக வலம் வந்து கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ள கருத்துக்களுக்கு, பெண் எழுத்தாளர்கள் கூட்டாக கண்டன அறிக்கை தயாரித்து வெளியிட்டுள்ளனர். அதில் சில ஆண் எழுத்தாளர்களும், விமர்சகர்களும் ஆதரவு கருத்தை தெரிவித்துள்ளனர்.

இந்த சர்ச்சையை குறித்த அனைத்து தரப்பு வாதங்களையும் படித்தேன். சில சொற்களை திரு. ஜெயமோகன் பயன்படுத்தியிருக்க வேண்டாம் என தோன்றியது. ஆனால், அவரது கருத்துக்கள் அனைத்தும் எனக்கு ஏற்புடையதாக இருக்கிறது.

ஒரு தனி நபர் பெண்களின் எழுத்துக்களை அங்கீகரிக்கவில்லையென்றால். அவர்கள் எழுத்தாளர்கள் இல்லையென்று ஆகிவிடுமா. தொடர்ந்து எழுதி , வாசகர்களின் நன்மதிப்பை பெறும் போது, அவரது கருத்து தானாகவே மாறிவிடும்.

25 வருடங்களுக்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்து வரும் பழக்கத்தை கொண்டிருக்கிறேன்.

நான் வசிக்கும் டெல்லி பகுதியில் , தமிழ் வாசகசாலை இல்லாத நிலையில் இனையத்தில் இலவசமாக கிடைக்கும் அனைத்து எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் விருப்பு வெறுப்பின்றி படித்து வருகிறேன். புத்தகம் விலை கொடுத்த வாங்கலாம் என்றால் எந்த எழுத்தாளரின் எந்த புத்தகம் சிறந்தது என்று தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்ப்படுகிறது. மேலும், வாங்கிய பிறகு அந்த எழுத்து பிடிக்கவில்லையென்றால், சொத்துக்களை இழந்து விட்டது போன்ற மனநிலை ஏற்ப்படுகிறது.

எழுத்தாளர்கள் பரஸ்பரம் மற்றவர்களது எழுத்துக்களை தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தாமல் அவர்களது கருத்துக்களை மட்டும் விமர்சனம் செய்தால் எழுத்தாளர்களிடையே மோதல் ஏற்ப்படாது.  எழுத்தாளர்கள குழுக்களாக செயல்படுகிறார்கள் என்ற எண்ணம் தோன்றுகிறது.

எந்த எழுத்தாளராக இருந்தாலும் தாம் எழுதுவது இலக்கியம் என்று கூறுகின்றனர். இங்கு  எழுத்தாளர்கள் என்று குறிப்பிடபட்டிருப்பவர்கள் அனைவரையும் இலக்கிய எழுத்தாளர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்.

எழுத்தாளர்களை கீழ்கானும் முறையில் பிரித்து அவர்களுக்கான சலுகைகள் செயல் திட்டங்களை செயல்படுத்தினால் இப்பிரச்சனையை தீர்க்கலாம் என தோன்றுகிறது.

() ஆண் எழுத்தாளர்கள்
() பெண் எழுத்தாளர்கள்
() முன்றாம் பாலின எழுத்தாளர்கள்
இவர்களை மீண்டும்
() தமிழ் எழுத்தாளர்கள்தமிழில் எழுதுபவர்கள்
() தமிழ் எழுத்தாளர்கள்ஆங்கிலத்தில் / வேறு மொழியில்எழுத்தாளர்கள்    
() மொழிபெயர்ப்பு எழுத்தாளர்கள்

இவர்களை மீண்டும்
() முழு நேர எழுத்தாளர்கள்
() பகுதி நேர எழுத்தாளர்கள்
என்று வகைப்படுத்தலாம். மேலும், எழுத்தாளர்கள் என்றால், கதை, கட்டுரை, கவிதை எழுதுபவர்கள் அனைவரையும் குறிக்கும்.
மேலும், இவர்களை
() இடதுசாரி எழுத்தாளர்கள்,
() வலது சாரி எழுத்தாளர்கள்,
() நடுநிலை எழுத்தாளர்கள் ,
() பெண்ணிய எழுத்தாளர்கள்
() முற்போக்கு எழுத்தாளர்கள்
() தலித் இலக்கிய எழுத்தாளர்கள் என்று வகைப்படுத்தி அதில்
நவீனத்துவ எழுத்தாளர்கள், பின் நவீனத்துவ எழுத்தாளர்கள் என்றும் வகைப்படுத்தலாம்.
() சிறுகதை எழுத்தாளர்கள்
() தொடர் கதை எழுத்தாளர்கள்
() நெடுங்கதை எழுத்தாளர்கள்
() தொலைக்காட்சி தொடர் களுக்கு எழுதும் எழுத்தாளர்கள்
() திரைப்படத்திற்க்கு கதை / வசனம் எழுதுபவர்கள்
() இனைய எழுத்தாளர்கள் என்று வகைப்படுத்தலாம்.

எழுத்தாளர்களை ஒன்றினைக்கும் முயற்ச்சியாக பலமுறை எழுத்தாளர்கள் சங்கம் ஏற்ப்படுத்தப்பட்டாலும், இவர்களிடையே ஏற்ப்படும் சண்டை சச்சரவுகளால் அவை எதுவுமே செயல்படவில்லை.

தமிழக அரசும் , பல்வேறு தமிழ் அமைப்புகளும் எழுத்தாளர்களுக்கு விருதுகள் கொடுத்து கௌரவிக்கின்றன. இதழ்களிலும் அனைத்து தரப்பு எழுத்துக்களுக்கும் போட்டிகள் நடத்தி விருப்பு வெறுப்புடன் பரிசுகள் கொடுக்கின்றன.

இந்திய அரசும் சாகத்திய அகாதமி விருதுகளை வழங்குகிறது. உலக அளவிலும் பல விருதுகள் வழங்கப்படுகின்றன.

பல தரப்பட்ட எழுத்தாளர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் அங்கீகாரம் தேவைப்படுகிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பிரிவினருக்கும் ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கப்பட வேண்டும்.

எழுத்தாளர்கள் எவ்வளவு எழுதினாலும், பதிப்பாளர்கள் பதிப்பித்து அதை வியாபாரமாக மாற்றுவதில்லை. மேலும், சில பல எழுத்தாளர்களின் எழுதுக்கள் பிரசுரிக்கப்பட்டாலும், எழுத்தாளர்களுக்கு அவர்களுக்கு உரிய தொகைகளை வழங்குவதில்லை.

பல எழுத்தாளர்கள் தங்களது சொந்த காசில் நூல்களை அச்சிட்டு, விழா ஏற்ப்பாடு செய்து வெளியிட்டு பின்பு சக எழுத்தாளர்களுக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இலவசமாக வழங்கி வருகின்றனர்

சொந்த காசில் அச்சடிக்க அரசு உதவி தொகை வழங்க வேண்டும். மேலும், இவர்களுக்கு வங்கி கடன் வழங்க வேண்டும். புத்தகம் விற்பனை ஆகாத நிலையில் உடனடியாக வங்கி கடனை ரத்து செய்ய வேண்டும்

இந்த நிலையில் அரசு அனைத்து எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் அரசு அச்சகத்தில் அச்சிட்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து நூலகங்களிலும் புத்தகங்களை வைக்க வேண்டும். தனியார் அச்சகங்களில் அச்சிடப்படும் அனைத்து நூல்களையும் , நூலகங்களுக்கு வாங்க வேண்டும்.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டு முழுவதும் புத்தக கண்காட்சி நடத்தி புத்தக விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும், பதிபகங்களில் தேங்கி கிடக்கும் புத்தகங்களை அரசு மொத்தமாக கொள்முதல் செய்து, எல்லா அரசு விழாக்களிலும் விருந்தினர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் அவற்றை பரிசாக வழங்க வேண்டும். மேலும், பள்ளி குழந்தைகளுக்கு அந்த புத்தகங்களை இலவசமாக கொடுத்து கட்டாயமாக படிக்க உத்தரவிட வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் அரசே இலக்கிய கூட்டம் நடத்தி, அந்த மாதங்களில் அச்சிடப்பட்ட அனைத்து புத்தகங்களையும் அறிமுகம் செய்து வெளியிட வேண்டும். அரசு இதற்கென தனி வாரியம் அமைத்து, நலிந்த எழுத்தாளர்களுக்கு உதவி தொகை, ஓய்வுதியம், மருத்துவ காப்பீடு மற்றும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.

இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்களை பற்றி எழுதியதை படித்த பலருக்கும் இலக்கியம் என்றால் என்ன என்ற அடிப்படை கேள்வி மனதில் தோன்றியிருக்கும்.

எழுத்தாளர்களுகிடையே இது குறித்து மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. ஒரே எழுத்தாளரே, பல் வேறு காலகட்டங்களில் இலக்கியம் என்பதற்க்கு பல்வேறு விதமான விளக்கங்களை தருகின்றனர்.
இலக்கியம் என்பதற்க்கு உறுதியான இறுதியான விளக்கம் எதுவும் தரப்படவில்லை. ஒவ்வொரு காலகட்டத்திற்க்கும் அதன் பொருள் வேறுபடுகிறது. இலக்கியம் உரை நடையாகவும் இருக்கலாம், கவிதையாகவும் இருக்கலாம், நாடகமாகவும் இருக்கலாம்.  

ஆரம்ப கால இலக்கியங்கள் எல்லாம் செய்யுள் வடிவாகவே இருந்துள்ளது. அவை செவி வழி செய்தியாகவே பாதுகாக்கப்பட்டன. அச்சு வடிவில் புத்தகங்களாக வெளியிட வாய்ப்பு ஏற்ப்பட்ட பின்பே பல பிரதிகள் எடுக்கப்பட்டு மக்களிடையே பிரபலப்படுத்தப்பட்டன. இலக்கியத்திற்க்கு முடிவான சூத்திரங்கள் இல்லாத நிலையில் ஒர் பிரிவினருக்கு இலக்கியமாக தோன்றுவது மற்றோரு பிரிவினருக்கு வெறும் சொற்களின் கூட்டஞ்சோறாக தோன்றுகிறது.

வாசகன் என்ற முறையில், இலக்கியத்தை எந்த வகையில் படித்தாலும், எழுத்தாளர் எந்த மனநிலையில் எதை குறித்து எழுதினாரோ அது உணரப்படவேண்டும். வேறு புதிய முறையில் வாசகன் புரிந்து கொண்டாலும், எதை படிக்கிறோமோ அது காட்சிகளாக பிம்பங்களை மனதில் தோற்றுவிக்க வேண்டும். அவ்வாறு பிம்பங்களை தோற்றுவிக்க தவறினால், அது எழுத்தாளனின் குறையே தவிர வாசகனின் குறையல்ல. அவ்வாறு மனத்திரையில் காட்சிகளை உருவாக்க முடியாத எழுத்துக்கள் இலக்கியங்கள் அல்ல என்பது எனது கருத்து.

இலக்கியத்தின் வகைகள், இலக்கியத்தின் வடிவங்கள், இலக்கிய கூறுகள், இலக்கியத்தின் முக்கியத்துவம், இலக்கியத்தின் பிரிவுகள் என்று இதை விரிவாக விவாதிக்கலாம்

இலக்கியம் எத்தனை வகைப்படும் என்று பார்த்தால், ஒருவர் எழுதும் சுய சரிதம் (Autobiography) , ஒருவருடைய சரித்திரத்தை மற்றவர் எழுதுவது (Biography) வீட்டு செல்ல பிராணிகள் மூலமாக நீதி கதைகள் சொல்வது ( Fable) புனைகதைகள் (Fantasy) குறிபிட்ட வட்டார வழக்கு கதைகள் ( Folk Tale) மாவிரனின் கற்பனை கலந்த நிஜ வாழ்க்கை வரலாறு (Legend) இனம் சார்ந்த நம்பிக்கை கதைகள் (Myth) அறிவியல் கதைகள் (Scientific) 

இலக்கியத்தின் வடிவங்கள் என்று பார்த்தால், உரைநடையாகவும், கவிதையாகவும் கட்டுரையாகவும், நாடகங்களாகவும் இருக்கலாம்.

இலக்கிய கூறுகள் என்பது, சுருங்க சொல்லி நிறைய புரிய வைப்பது. தான் சொல்லியதை மட்டுமல்லாமல், படிக்கும், கேட்கும், பார்க்கும் அனைவருக்கும் மாற்று பொருளை சிந்திக்க கூடியதாகவும் இருக்க வேண்டும். அன்றாட வாழ்க்கையில் உபயோகப்படுத்தும் வார்த்தைகளாகவும் அல்லது புது வார்த்தைகளை உருவகப்படுத்தி வாசகனை இன்ப நிலைக்கு அல்லது துயர நிலைக்கு அழைத்து செல்வதாக இருக்கவேண்டும். உலக அளவில் துயரங்களை சொல்வதை தான் இதுவரை இலக்கியமாக ஏற்றுக்கொண்டுள்ளது. .

இலக்கியத்தின் முக்கியத்துவம் என்று பார்த்தால், இன்றைய நிலையில் அது பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இலக்கியங்கள் பொதுவாக மக்களிடையே படிக்கப்படுவதில்லை. இன்றைய நிலையில் தொலைக்காட்சிகளில் காட்சிகளாக பார்க்க நேரிடுவதால், எழுத படிக்க தெரியாதவர்களுக்கு கூட புரிந்துவிடுகிறது. புத்தகத்தை படிக்க எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். நேரமின்மையும் ஒரு காரணம். பல் இலக்கியங்கள் துயரத்தை சொல்கிறது. வாழ்கையில் தினமும் துயரங்களை அனுபவிக்கும் மனிதன் மீண்டும் ஒரு துயரத்தை படித்து மன வலியை அதிகமாக்கி கொள்ள விரும்புவதில்லை. மேலும், பல இலக்கியங்கள் சாதாரண மனிதனின் வார்த்தைகளில் சொல்லப்படுவதில்லை. சாதாரண மனிதனின் வார்த்தைகளால் சொல்கிறேன் என்று வட்டார வழக்கு மொழியில் சொல்லும் போது , அது அனைத்து வட்டார மக்களாலூம் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஒரு கலாச்சாரத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட இலக்கியம் மற்ற கலாசாரத்தை சார்ந்த வாசகனால் புரிந்து கொள்ள முடிவதில்லை. இப்படி பல காரணங்களை சொல்லிகொண்டே போக முடியும்.

இலக்கியத்தின் மூலம் மனித மனங்களில் மாற்றங்களை ஏற்ப்படுத்த முடியும். உணர்ச்சிகளை தூண்ட முடியும். அந்த மனித மன மாற்றங்களின் மூலம் சமுதாயத்தில் மாற்றங்களை உருவாக்க முடியும்

இடதுசாரி எழுத்துக்கள், எழுத்தாளர்கள் என்றால், குடியாட்சிக்கு ஆதரவு, சமூகத்தில் ஏற்ற தாழ்வு அற்ற சமுதாயம் அமைய வேண்டும் என்பதும், சமூகவுடமை, பொதுவுடமை, அரசின்மை, மனித உரிமைகள், போர் எதிர்ப்பு, இயற்கை சுற்றுபுற சூழல் பாதுகாப்பு, தொழிற்சங்கம், பெண்களுக்கு சொத்துரிமை,  இவைகளுக்கு ஆதரவாக எழுதுபவர்களை இடதுசாரி எழுத்தாளர்கள் என்கிறார்கள்.

வலதுசாரி எழுத்துக்கள், எழுத்தாளர்கள் என்றால், பழமை கட்டி காப்பது, குறிப்பிட்ட இனம் மேன்மையானது என்கிற இனவாதம், சர்வதிகாரம், நிற வேறு பாடு காண்பது மற்றும் மதவாதம் போன்றவற்றை ஆதரிப்பது.

நடுநிலை எழுத்துக்கள் எழுத்தாளர்கள் என்றால் இடது மற்றும் வலது கொள்கைகள் இரண்டையும் கலந்து, மத சார்பற்ற முறையில் சிந்தித்து செயல்படுவது.

இடது சாரி எழுத்தாளர்கள் வலது சாரி எழுத்தாளர்கள் என்று அணி பிரிந்து நிற்க்கின்றனர். இடது வலதை வசைபாடுவது, வலது இடதை வசைபாடுவதும் நிகல் கால நிகழ்வு. தங்களுக்கு ஆதாயம் என்றால் இருவரும் கை கோர்த்து கொள்வார்கள்.

இவர்கள் இருவரும் நடுநிலைவாதியை எப்போதும் வசை பாடிக்கொண்டிருப்பார்கள்.  நடுநிலைவாதியின் கருத்துக்கள் தங்களுடைய கருத்துக்களுடன் ஒத்து போனால் அப்போது நடுநிலை வாதிகளுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிடுவார்கள்.

தாழ்த்தப்பட்ட மக்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆதிவாசிகள் மற்றும் வறுமையில் வாடும் மக்கள் ( உயர் ஜாதி வகுப்பினர் தவிர்த்து) இவர்களை குறித்து எழுதுவது தலித் இலக்கியம்

முற்போக்கு எழுத்துக்கள் எழுத்தாளர்கள் என்றால் ஆரம்ப காலகட்டங்களில், விதவை திருமணம், குழந்தை திருமண எதிப்பு மற்றும் காதல் திருமணம் போன்றவற்றை ஆதரித்து எழுதியவை. தற்போது, காமத்தை பற்றி வெளிப்படையாக எழுதுவது , தகாத உறவு முறைகளை நியாயப்படுத்துவது போன்றவை என்ற அளவில் கருதப்படுகிறது.

பெண்ணிய எழத்துக்கள் எழுத்தாளர்கள் என்றால் பெண்கள் பிரச்சனை பற்றி எழுதுவது, அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்வது என்ற நிலையிருந்த பெண்ணியம் என்பது இன்று வெறுமனே எல்லாவற்றுக்கும் ஆண்களை எதிர்த்து, ஆணாதிக்க மனப்பான்மை என்று கூக்குரலிடுவது என்ற அளவில் நிற்கிறது.

இவைகளை கடந்தும் நல்ல இலக்கியங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அவை வாசகனை அழ வைக்கிறது. கோபப்பட  வைக்கிறது. கழிவிரக்கம் செய்ய வைக்கிறது. இப்படி எல்லா உணர்ச்சிகளையும் தூண்டுகிறது. இந்த உணர்ச்சிகள் படிக்கும் போது ஏற்ப்படுகிறது. அதன் தாக்கம் சில நாட்கள் நீடிக்கிறது. பின்பு வாசகன் தனது தினசரி வேளைகளில் முழ்கி இவற்றை மறந்து விடுகிறான். எத்தனை உபதேசங்களை கேட்டாலும் நடைமுறையில் பின்பற்றப்படுவதில்லை. அது சாத்தியமில்லை. ஒரு துயரத்திற்க்காக சிறிது நேரம் வருந்தாலாம். சிறிய அளவில் ஏதெனும் உதவிகள் செய்யலாம். அதை நிரந்தரமாக போக்கிவிட முடியாது.

இலக்கியத்தை படித்து அதன் மூலம் பாதிக்கப்பட்டு தனது வாழ்க்கையில் கடைபிடித்ததாகவோ அல்லது அதன் மூலம் தான் திருந்தி விட்டதாகவோ அல்லது சமூகத்தை சமுதாயத்தை திருத்தி விட்டதாகவோ கூறமுடியாது. அப்படி சில சமயங்களில் நடந்திருந்தாலும் அவை மீண்டும் சமூகத்தில் புகுந்து விடுகிறது. 

தீண்டாமை, விதவை திருமணம் , பிறன் மனை நோக்குதல், கள் உண்ணுதல் இப்படி பல விசயங்கள் போதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அவை நின்று விட்டதாக கூற முடியாது. உடன்கட்டை ஏறும் பழக்கம் நின்று விட்டதாக வாதத்திற்க்காக குறிப்பிடலாம். அவை இலக்கியங்களால் நிற்க்கவில்லை. மக்களின் மன மாற்றத்தாலும் சட்டங்களாலும், கல்வியறிவு போன்ற காரணங்களாலும் நின்றதே தவிர இலக்கியங்களால் நின்று விட்டதாக கூற முடியாது.

இலக்கியங்கள் உணர்ச்சிகளை தட்டி எழுப்பினாலும் அவை சமூகத்தில் தனிமனிதனிடத்திலோ அல்லது சமூகத்திலோ மாற்றங்களை ஏற்ப்படுத்த முடியவில்லை என்பதே உண்மை.

இலக்கியங்கள் குறித்த வாசகனின் கருத்தை இலக்கியவாதிகள் அறிய முயற்சி செய்வதுமில்லை அவ்வாறு விமர்சிக்கப்பட்டாலும், எதிர்வாதம் செய்து வாசகனை தன்னை விட ஒரு படி தாழ்ந்தவன் என்று காட்டவே முயற்சி செய்கின்றனர்.











No comments:

Post a Comment