Thursday 26 June 2014

சிறுகதை



தந்தையும் மகளும்

வழக்கு பதிவு செய்யப்பட்ட அன்றே அந்த வழக்கு குறித்து பரபரப்பு அதிகமாகி விட்டது.

வழக்கு தொடர்ந்தவர் மிக பிரபலமான சங்கத்தின் தலைவர். 

மிக சிறு வயதிலேயே மிகப் பிரபலாமாகி விட்டார். அவரது தந்தையின் செல்வாக்கினால் தான் பிரபலமானார் என்ற குற்றச்சாட்டு உண்டு. அவர் தனது தந்தையின் பெயரை எங்கும் உபயோகிக்கவில்லையென்றாலும், அவர் இன்னாரது மகள் என்ற காரணத்தாலேயே அவருக்கு மரியாதை கிடைத்தது. அவர்  கேட்காமலேயே அவருக்கு தலைவர் பதவி தந்தனர். அவரை தலைவராக வைத்து கொண்டு மற்றவர்கள் புகழ் அடைந்ததுடன், சங்கத்துக்கு கிடைத்த நன்கொடை பணம் மூலமாக தங்களது வசதிகளை பெருக்கி கொண்டனர். 

அவர் இந்த வழக்கை தொடர போகிறேன் என்று கூறியவுடன் மற்றவர்கள் மறுப்பு ஏதும் சொல்லவில்லை. இதன் மூலம் சங்கம் மேலும் பிரபலமடையும் என்றும் வெளிநாட்டு நிதி வரத்து அதிகரிக்கும் அதன் மூலம் தங்களது தேவைகளை நிறைவேற்றி கொள்ளலாம் என அவரவருக்கு இருந்த தனிப்பட்ட ஆசையின் காரணமாக ஆதரவு அளித்தனர்.

வழக்கு தொடரப்பட்டது ஓய்வு பெற்ற நீதியரசர் மீது . அவர் சர்ச்சைக்குரிய வழக்குகளில் அதிரடியான தீர்ப்புகளை வழங்கி புகழ் பெற்றவர். அரசியல்வாதிகளும், தொழில் அதிபர்களும் அவர் ஓய்வு பெற்ற தினத்தை விமர்சையாக கொண்டாடினார்கள்.அவர் ஓய்வு பெற்ற பின்பு , பொதுவாக கிடைக்க வேண்டிய ஏதாவது விசாரனை குழ தலைவர் பதவியோ அல்லது வேறு எந்த பதவியோ அவருக்கு வழங்கப்படவில்லை.

வழக்கை பற்றி அவரிடம் கருத்து கேட்ட போது, வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது கருத்து சொல்ல முடியாது என அறிவித்துவிட்டார்.

சங்க தலைவரிடம் கேட்ட போது, யாராக இருந்தாலும் நான் வழக்கு தொடருவேன் என்று கூறினார்.

பொது இடத்தில் நான்கு தீவிரவாதிகளை தன் கையாலேயே கொன்றுள்ளார். இதற்கு சாட்சிகள் உள்ளன. அவர்கள் தீவிர வாதிகளாக இருந்தாலும், சட்டப்படி அவர்களை அரசாங்கத்திடம் தான் ஒப்படைத்திருக்க வேண்டும் என்பதே சங்கத்தின் வாதம் என்று குறிப்பிட்டார்.

வழக்கு உடனடியாக விசாரனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சங்கத்தின் சார்பாக வாதடிய வழக்கறிஞ்சர் வழக்கின் விவரங்களை கூறி சாட்சியங்களை அழைத்து விசாரணை நடத்தினார். சாட்சிகள் அவர் தீவிரவாதிகளை கொன்றதை பார்த்ததாகவும்  தாங்கள் விலகி நின்று வேடிக்கை பார்த்ததாகவும் கூறினர்.

குற்றம் சாட்டப்பட்டவர் தனக்காக வழக்கறிங்கரை நியமித்து கொள்ளாமல் தானே வாதாடுவதாக கூறியதால், அவர் குறுக்கு விசாரணை செய்தார்.

தீவிரவாதிகளுடன் தான் பேச்சு வார்த்தை நடத்தியதை பற்றி கேட்டார். சாட்சியங்கள் பேச்சு வார்த்தி நடத்தியதாக ஒப்புக்கொண்டனர். தீவிரவாதிகளை விலகி செல்லும் படி அறிவுறுத்தியதாகவும், அனால் தீவிரவாதிகள் தன் மீது தாக்குதல் நடத்தியதால் அவர்களுடன் சண்டையிட்டு அவர்களை கொன்றதாக கூறினார். சாட்சியங்களும் அதை ஒப்புக்கொண்டனர்.

மேலும், அரசாங்கம் தீவிரவாதிகளை ஒழிக்காமல் இருப்பதால் தான் தனி மனிதர்கள் தங்களை காத்து கொள்ள இது போன்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் கூறி, தனது செயலுக்கு நியாயம் கற்ப்பித்தார். மேலும், அரசு தீவிரவாதிகளை ஒழிக்கவில்லையென்றால், பொது மக்கள் இது போன்ற செய்கைகளில் ஈடுபடுவார்கள் என்றும் வாதிட்டார்.

இவைகளை கேட்ட நீதிபதி, அரசுக்கு நோட்டிஸ் அனுப்பி ஒரு வார காலத்திற்க்குள் நேரில் வந்து பதில் அளிக்கும் படி உத்தரவிட்டு வழக்கை ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைத்தார்.

குற்றம் சாட்டப்பட்ட நீதிபதியின் வீட்டீல் அவரது மனைவி , உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை. உங்களுக்கு தெரியாத சட்டமா, நியாயப்படி செய்திருக்க வேண்டியது தானே. உங்களை யார் இப்படி செய்ய சொன்னது என்று புலம்பி கொண்டிருந்தார். மற்றவர்கள் எப்படி ஒதுங்கி சென்றார்களே அவ்வாறே நீங்களும் இருந்திருக்க வேண்டியது தானே என்று புலம்பி கொண்டிருந்தார்.

வழக்கு தொடர்ந்த சங்கத்தின் தலைவி, அவரை பார்த்து அம்மா எனக்கு காப்பி கொடு என்று கூறினார்.

ஏண்டி, அப்பாவை போட்டு ஏன் இப்படி படுத்துகிறாய். அப்பா மீது வழக்கு தொடர்ந்து அவரை அவமானப்படுத்திவிட்டாய் என்று புலம்பி தீர்த்தார்.

ஒரு வாரத்துக்கு பிறகு மீண்டும் வழக்கு விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், தீவிரவாதம் உலகெங்கிலும் இருப்பதாகவும், இந்த அரசு அவர்களை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், உலக நாடுகளின் உதவியுடன் மிக விரைவில் நாட்டில் தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்க எடுத்துள்ள விவரங்களை புள்ளி விவரங்களுடன் எடுத்துரைத்தார்.
.
சங்கத்தின் தலைவரோ இந்த வழக்குக்கு உடனடியாக தீர்ப்பு வழங்கவிட்டால் மேன்மேலும் மக்கள் இப்படி சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு தண்டனை வழங்க ஆரம்பித்து விடுவார்கள் நாட்டில் அமைதி குலைந்து விடும் என வாதிட்டார்.

வழக்கு ஒரு மாதத்திற்க்கு ஒத்தி வைக்கப்பட்டது.

வழக்கின் தீர்ப்பு வழங்கபட இருந்த நாளில் , நீதிமன்றத்தில் பெரும் கூட்டம். தொலைகாட்சி நிறுவனங்கள் நேரடி ஒளிப்பரப்புக்கு ஏற்ப்பாடு செய்திருந்தது.

எழுதி வைத்திருந்த தீர்ப்பை நீதிபதி வாசிக்க ஆரம்பித்தார்.

உயிர்களை கொல்வது சட்டப்படி குற்றம் என்றும் அதற்க்காக வழக்கு தொடர்ந்த சங்கத்தை பாரட்டினார்.

அரசும் போதுமான நடவடிக்கைகளை எடுத்திருப்பதை ஏற்றுக்கொண்டாலும் துரித நடவடிக்கை எடுத்து தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க  வேண்டும் என வலியுருத்தினார்.

எனவே,

இந்த நேரத்தில் நீதிபதி சிறிது தண்ணீர் குடித்தார். நீதி மன்றத்தில் பரபரப்பு கூடியது. நிச்சியமாக தண்டனை கிடைக்கும் என அனைவரும் காத்திருந்தனர்.

நீதிபதி கீழே குனிந்து கால்களை சொறிந்து கொண்டார். மீண்டும் கீழே குனிந்து செறிந்த இடத்தில் தடவி விட்டுக்கொண்டார்.

நீதிமன்றத்தில் பரபரப்பு கூடியது.

எனவே என்று ஆரம்பித்தவர், சற்று நிறுத்தி யோசித்து விட்டு ஆனால் என்று தொடர்ந்தார்.

ஆனால்,

தன்னை தாக்க வரும் தீவிரவாதிகளை தற்காப்புக்காக அழிப்பது சரியென்றும், உலகமுழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக கூறினார்.

சங்கம் மிருக வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளது என்றும் கொசுக்கள் மிருக வகையை சார்ந்தது அல்ல என்றும் எனவே வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் கூறினார்.

1 comment:

  1. கொசுக்களைப்போல் அழிக்கப்பட வேண்டியவர்கள் தீவிரவாதிகள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.ஆனால் இந்த வழக்கை எப்படி நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது என்ற ‘லாஜிக்’ தவிர்த்து சஸ்பென்ஸ் முடிச்சை அவிழ்த்தவிதம் அருமை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete