Friday 23 May 2014

கோச்சடையான்:



கோச்சடையான்:

முதல் நாள் (23.05.2014 ) முதல் காட்சி பார்ப்பது என்று முடிவு செய்து பார்த்தேன். Noida – U.P.  பகுதியில் இந்தி படம் தான் பார்க்க முடிந்தது.
180 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கினேன். நாலாவது வரிசையில் மத்தியில் சீட் இருக்கிறது தரட்டுமா என்று கேட்ட பெண்ணிடம், ஏதோ மகராசி முதல் நாள் முதல் காட்சிக்கு இடம் தருகிறாளே என்று மனதார நன்றி சொல்லிவிட்டு உள்ளே சென்று அமர்ந்தேன்.

உள்ளே சென்ற பிறகு தான் தெரிந்தது. இந்த காட்சி சிறப்பு விருந்தினர்களுக்கான பிரத்தியேக திரையிடல் என்று. ஆமாம். என்னுடன் சேர்த்து, மூன்று குழந்தைகளுடன் அரங்கத்தில் மொத்தம் 16 பேர். இதை வேறு எப்படி சொல்வது. VVVVVVVVVVVVVVVVVVVVVV I.P. க்கு திரையிடப்பட்ட பிரேத்தியேக காட்சி என்று தான் சொல்ல வேண்டும்.

தமிழ்நாட்டு திரையரங்கமாக இருந்தால், முதல் காட்சியில் கற்பூர ஆரத்தி எடுப்பது, மலர் தூவுவது, விசில் அடிப்பது போன்றவை இருக்கும். ஆனால் இங்கு மயான அமைதி.

சரி வந்து விட்டோம் படம் பார்ப்போம் என்று 3D கண்ணாடியை மாட்டிகொண்டு அமர்ந்திருந்தேன்.

கதை வசனம் திரு. K.S. ரவிகுமார். இயக்கம் சௌந்தரியா ரஜினிகாந்த் அஸ்வினி.

இந்த படத்தை திரு. ரவிகுமார் இயக்கியிருப்பார். ஆனால் ரஜினியின் மகளுக்காக தன் பெயரை போட்டுக்கொள்ளாமல், சௌந்தரியா என்று போட்டு கொள்ள அனுமதித்திருப்பார் என்ற நினைப்புடன் படம் பார்க்க சென்றிருந்தேன். ஆனால் உண்மையிலேயே சௌந்தரியா தான் இயக்கியிருக்கிறார். இப்படி மொக்கையான படத்தை ரவிகுமார் இயக்கமாட்டார்.

சௌந்தரியாவின் இயக்கத்தில் முதல் படம். சாதாரண படங்களை இயக்கிவிட்டு இந்த புதிய முயற்சியில் இறங்கியிருக்கலாம்.

ஒழுங்கா உக்காந்து மூச்சா போக தெரியாதவர் நின்னுகிட்டு மூச்சா போவேன் என்று அடம் பிடித்தது போல இருக்கிறது . இயக்குனரை பற்றி இதற்கு மேல் சொல்ல வேண்டுமா ?

இசை A.R.ரஹ்மான் என்று கடவுளே வந்து சொன்னாலும் நம்பமாட்டேன். ஒரு தனி அறையில் இவரை மட்டும் உட்கார வைத்து, இந்த படத்தின் முழு ஒலி நாடாவையும் கேட்க வைத்தால், எதிர்காலத்தில் இது போன்ற இசையை மீண்டும் போடமாட்டார். நல்ல இசையமைப்பாளர். ஆஸ்கர் விருது வாங்கியவர். அதற்க்காக அவருடைய எல்லா இசையையும் பாராட்ட வேண்டும் என்று அவசியமில்லை. திரைப்பட துறை சம்மந்தப்பட்டவர்கள் வேண்டுமானால் ஜால்ரா அடிக்கலாம். ஆனால், நடுநிலை ரசிகனுக்கு அந்த நிர்பந்தம் இல்லை.

யாருடைய நடிப்பை பற்றி குறிப்பிடுவது. எல்லா நடிக நடிகைகளும் பொம்மைகளாக வருகிறார்கள். அதில் எப்படி நடிப்படை கொண்டு வர முடியும். பல்வேறு கோணங்களில் நடிகர்களை கொண்டுவரவே மிகுந்த சிரமப்பட்டிருக்க வேண்டிய நிலையில் அதில் நடிப்பை கொண்டு வருவதை பற்றி மறந்து விடுங்கள்.

புதிய தொழில் நுட்பம் என்று சொல்கிறார்கள். அது எல்லாம் எனக்கு புரியவில்லை. சுருக்கமாக எனக்கு புரியும்படி கூறினால் பொம்மை படம். இதற்க்காக தொழில் நுட்ப கலைஞர்கள் சிரமப்பட்டு உழைத்திருக்கிறார்கள் என்பது புரிகிறது. அவர்களுக்கு எனது பாரட்டு.

எல்லாம் சொல்லியாகிவிட்டது கதையை பற்றி சொல்ல வேண்டும். ஒரு ஊரிலே ஒரு ராஜா அவருக்கு……………………………………………………. சரி விடுங்க. உங்க வீட்டிலே பழைய அம்புலி மாமா கதை புத்தகம் இருந்தால் அதை எடுத்து ஒரு ராஜா ராணி கதை படியுங்கள். அது தான் கதை.

ரஜினி இது போன்ற படங்களில் நடிக்க ஏன் ஒப்புக்கொள்கிறார். வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்ப்படுத்தி வாழ்க்கையை நடத்த உதவி செய்கிறாரா ? பாட்ஷா, படையப்பா போன்ற படங்களை போலவே இப்போது நடித்தாலும் ரசிகர்கள் குறை சொல்லாமல் பார்ப்பார்கள். இது போன்று , பெற்ற கடனுக்காக அவர்களுக்காக இது மாதிரி படங்களில் நடிக்காமல் இருப்பது நலம்.

இந்த படத்தை.பார்த்து தான் ஆக வேண்டும் என்ற அவசியமில்லை. இதை பார்க்கவில்லையென்றால் வாழ்க்கையில் ஒன்றும் இழந்து போக போவதில்லை.

அப்படியே பார்க்கப்போனால், பக்கத்து திரையரங்கில் பவர் ஸ்டார் நடித்த படம் ஓடிக்கொண்டிருந்தால் அதை பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பி விடவும். ஒன்றும் வித்தியாசமில்லை.

இதற்கு மேலும் இது தலைவர் படம் நான் பார்பேன் என்று கூறினால் ஒன்றும் செய்யமுடியாது. விதியை யாரால் மாற்ற முடியும்.
படம் நட்டம் அடைந்தால், நாங்கள் பொறுப்பல்ல என்று ரஜினியின் மனைவி கூறியதாக அறிந்தேன். பின்பு யார் பொறுப்பு . காசு கொடுத்து நாங்கள் பார்க்கவில்லையென்பதால், ரசிகர்கள் தான் பொறுப்பு என்று கூறுகிறாரா.

ரஜினி இனிமேல் நடிக்காமல் இருந்தால், இது வரை நடித்ததற்க்காக பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் என்ற விருதாவது கொடுப்பார்கள். கடைசி காலத்தில் இப்படி கொடுமைபடுத்தினால், அதற்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.

WATCH AT YOUR OWN RISK




No comments:

Post a Comment