Saturday 31 May 2014

மலர மறுத்த மொட்டு



சென்னை, கோடம்பாக்கம் வடபழனி பகுதிகள் இனையும் இடம். ஒரு சிவன் கோவில் இருக்கிறது. இப்போது சிவன் கோவிலின் பின்புறம் தாம்பரம் - கோயம்பேடு போகும் 100 அடி சாலை இருக்கிறது. அந்த கோவிலின் பின்புறத்தில் சற்று தள்ளி கோடம்பாக்கம் காவல் நிலையம் இருக்கிறது. இப்போது சில பேருக்கு நான் எந்த இடத்தை சொல்கிறேன் என்று தெரிந்திருக்கும்.

கோவில் எதிரே மிகப் பெரிய மல்லிகை பூ தோட்டம் இருந்தது. கோவிலுக்கு சொந்தமானது என நினைக்கிறேன். அந்த தோட்டத்தை சுற்றி குடியிருப்பு பகுதிகள் இருந்தது. அந்த மல்லிகை பூ தோட்டத்தையும் அங்கு விளையும் வேறு சில பொருட்களையும் நம்பி வாழ்ந்த குடும்பங்கள் பல.

அந்த பகுதியில் இருந்த ஒரு தெருவின் பெயர் பூக்கார தெரு. இது ஒன்றும் ஆச்சரியமான விசயம் அல்ல. ஆனால், அந்த தெருவில் நாங்கள் குடியிருந்தோம் என்பது தான் விசயம் இது 1965 -68 இடைப்பட்ட காலங்களில் வாழ்ந்த இடம் . எனக்கு 10 -12 வயது இருக்கும்.

காலையில் வெளிச்சம் பரவ ஆரம்பிக்கும் சமயம் நானும், அண்ணனும் அக்காவும் தோட்டத்திற்க்கு பூப்பறிக்க செல்வது வழக்கம். மடியில் துண்டு கட்டிக்கொண்டு, பூப்பறித்து அதில் போட்டுக்கொள்வோம். ஒரு படி பூ பறித்து கொடுத்தால் ஒரு ஆழக்கு பூ கூலி கொடுப்பார்கள். 8 ஆழக்கு ஒரு படி அதாவது 1/8 பங்கு கூலி. நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து பல படி பூக்களை பறித்து கொடுத்து கூலியாக பூக்களை வாங்கி வருவோம். 8 மணிக்கு பூ பறிக்கும் வேலை முடிந்து விடும் .சிறிது காலத்திற்க்கு பிறகு ஆழக்கு பூவிற்க்கு பதில் 5 காசு கூலி கொடுக்க ஆரம்பித்தார்கள்.

அதற்கு பிறகு தோட்டதின் உரிமையாளர், கூலிக்காக பூப்பறித்தவர்களின் இடங்களில் சென்று விடுபட்டிருக்கும் பூக்களை பறிப்பார்.

காலையில் பூ பறித்த பின்பு மீண்டும் 10-11 மணி அளவில் தோட்டத்திற்க்கு செல்வோம். விடுபட்ட பூக்களை பறித்து வருவோம். சிறிய காய் பூக்களை பறித்தால் தோட்ட உரிமையாளர் விரட்டி விடுவார். இப்படி விடுபட்ட பூக்களை பறிப்பதற்க்காகவே கொஞ்சம் பூக்களை விட்டு விட்டு தான் காலையில் பூப்பறிப்போம். அதனால் தான் நாங்கள் பறித்த பின்பு தோட்ட உரிமையாளர் ஒரு சுற்று சுற்றி வந்து விடுபட்ட பூக்களை அவர் பறிப்பார். அவர் பார்வையிலிருந்தும் தப்பிய பூக்கள் 10-11 மணிக்கு எங்கள் பார்வையில் படுவதை பறித்து வருவோம். கூலியாக கிடைத்ததும் விடுபட்ட பூக்களை பறித்ததுமாக ஒரு படி பூ சேர்ந்து விடும்.

அவைகளை மதியம் 3 – 4 மணிவாக்கில் கட்டி, இரண்டு முழ பூவை துண்டுகளாக்கி கை விரலில் மாட்டிக்கொண்டு, வடபழனி காய்கறி அங்காடி அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் விற்பது எனது வேலை. அண்ணனும் அக்காவும் பெரியவர்கள் என்பதால் அவர்கள் விற்பனைக்கு வரமாட்டார்கள்.

வடபழனி காய்கறி அங்காடிக்கு முன்புறம் நிரந்தரமாக பூ விற்பவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு அருகில் விற்க்ககூடாது. அதே போல வடபழனி கோயிலுக்கு செல்லும் சாலையின் ஆரம்பத்தில் நிரந்தரமாக பூ கடை வைத்திருப்பவர்கள் இருப்பார்கள். அங்கேயும் சென்று விற்க கூடாது. அந்த இரண்டு இடங்களுக்கு இடைப்பட்ட இடத்தில் ஓடி ஓடி சென்று விற்பேன். குதிரை வண்டியில் , பேருந்தில் வந்து இறங்குபவர்களிடம் ஓடி ஓடி விற்பது மாலை நேர வேலை.

தோட்டத்தின் உரிமையாளர்கள் காலையில் பறித்த பூவை மொத்தமாக பிராட்வே பகுதியில் உள்ள மொத்த விற்பனையாளர்களுக்கு விற்று விட்டு, கதம்பம் கட்டி விற்ப்பதற்க்காக வேறு பூக்களை வாங்கி வருவார்கள். சம்பங்கி, கனகாம்பரம், மருகொழுந்து மற்றும் ரோஜா பூக்கள். இவைகளை வாங்கி வந்து கதம்பமாக கட்டி, பழைய மாம்பலம் பகுதியில் மிதி வண்டியில் சென்று தெருக்களில் விற்ப்பார்கள்.

இந்த பூவை கட்டி கொடுத்தாலும் கூலி கிடைக்கும். ஒரு தட்டு நிறைய அனைத்து பூக்களையும் வைத்து கொடுப்பார்கள். அதை கதம்பமாக கட்டி கொடுக்க வேண்டும். வெறும் மல்லிகை பூவையும், கனகாம்பரம் பூவையும் கூட கட்டி கொடுக்க சொல்வார்கள். அதற்கு கூலி உண்டு. அந்த தெருவில் இரண்டு குடும்பங்கள் மட்டுமே காசுக்கு பூ கட்டி கொடுக்கும் வேலையை பார்த்த்து. அதில் எங்கள் குடும்பமும் ஒன்று.

நான் மிக நன்றாக நெருக்கமாக பூ கட்டுவேன். என்னிடம் கட்டும் பூ பெண்கள் கொண்டையில் சுற்றி வைத்து கொள்வதற்க்கு வசதியாக இருக்கும். அதனால் நான் கட்டி கொடுப்பதை விரும்புவார்கள் . 

பின்பு எனது அம்மா புரட்சி செய்து கூலி உயர்வு வாங்கினார்கள். குத்து மதிப்பாக ஒரு தட்டு நிறைய பூவை கட்டி கொடுப்பது சரியாக வரவில்லை. எனவே ஒரு முழம் பூ கட்டினால் ஒரு காசு கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை போட்டு கட்டினார்கள். அப்போதும் நான் கட்டும் பூவுக்கு மவுசு அதிகம். நான் நெருக்கமாக கட்டுவதால், அவர்கள்  10 முழம் என்று கணக்கிட்டு எனக்கு 10 காசு கூலி கொடுப்பார்கள். ஆனால், அதை அவர்கள் விற்கும் போது சிறிது சிறிதாக இழுத்து 15 முழம் ஆக்கி விடுவார்கள்.

பூ கட்டும் கூலி, விடுபட்ட பூக்களை கட்டி விற்ற காசு குடும்ப செலவுக்கு பெரும் உதவியாக இருந்தது. அதில் மிட்டாய் வாங்க, பொரி கடலை வாங்க காசு கிடைக்கும்.

நான் குடியிருந்த வீட்டுக்கு அருகே, வடபழனி முருகன் கோயிலுக்கு சுவாமிக்கு பூ கட்டி கொடுப்பவர்கள் இருந்தார்கள். அவர்கள் மாலையும் கட்டி கொடுப்பார்கள். மேலும், கோவில் இருக்கும் சாலையில் முதல் கடை அவர்களுடையது. அங்கேயும் பூவும் மாலையும் விற்ப்பார்கள்.

சுவாமி சிறப்பு அலங்காரம், சுவாமி ஊர்வல சமயங்களில் செய்யும் அலங்கார வேலைகள் அனைத்தும் அவர்களுடையது. அந்த வேலையை அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே செய்வார்கள். பெரிய கூட்டு குடும்பம் . நிறைய பேர் இருப்பார்கள்.

நான் அவர்களிடம் மாலை கட்ட கற்றுகொண்டேன். சமந்தி பூ மாலை, சம்பங்கி பூ மாலை கட்ட எளிதாக கற்று கொண்டேன். ஆனால், மல்லிகை பூ மாலை கட்ட மிகவும் சிரமப்பட்டேன். சிறிய பூ. கையில் பிடித்து மாலை கட்டுவது சிரமம் அதே போல் ரோஜா பூ மாலை கட்டுவதும் சிரமம். கட்டும் போதே ரோஜா பூ உதிர ஆரம்பிக்கும். கட்டி முடித்தவுடன் அதில் ஜரிகை நூல் கட்டிவிட வேண்டும். இல்லையென்றால் பூக்கள் உதிர்ந்து விடும்.. அவர்கள் மாலை கட்ட கற்று கொடுத்தார்களே தவிர , கூலி கொடுக்கவில்லை. 

நானும் பிராட்வே பூக்கடைக்கு சென்று பூக்கள் வாங்கி வந்து மாலை கட்டி வியாபாரம் செய்தேன். ஆனால் என்னிடம் மக்கள் வாங்க விரும்பவில்லை. மற்ற பூக்கடைகாரர்களும் அப்படி விற்க அனுமதிக்கவில்லை.

பூ கட்டுவது ஒன்றும் சுலபமான வேலை அல்ல. வாழை மட்டையில் இருந்து நார் உரித்து, காய வைத்து பதப்படுத்திய நாரினால் கட்ட வேண்டும். காய்ந்த நாரில் கட்டினால் பூ அறுந்து விடும். இறுக்கி கட்டினாலும் பூ அறுந்து விடும். அவ்வப்போது தண்ணிரை நாரின் மேல் தடவி ஈரப்படுத்தி கொள்ள வேண்டும். விரல்களுக்கிடையே நார் சுற்றி வரும் போது விரலை அறுத்து விடும். விரல்களின் இடைப்பகுதி சிவந்து புண்ணாகிவிடும். பூ கட்டி முடித்தவுடன் தேங்காய் எண்ணெய் தடவி கொள்வோம். உட்கார்ந்து பல மணி நேரம் பூ கட்டுவாதல் முதுகு வலியும் இடுப்பு வலியும் வரும்.

பல உரிமையாளர்களை கொண்ட மிகப்பெரிய புந்தோட்டம். அது எத்தனை ஏக்கர் என்று இப்போது சொல்ல தெரியவில்லை. அது பின்பு 1970களில் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டது. அது கோவில் நிலம் என்றும் சொன்னார்கள். எப்படி வீட்டு மனைகளாக மாறியது என தெரியவில்லை. அப்போது ஒரு கிரவுண்டு (2400 சதுர அடி ) விலை ரூ.2000/- அதை வாங்க எங்களிடம் வசதியில்லை. இன்று அது இரண்டு கோடி ரூபாய்க்கும் மேலாக விலை போகிறது. பல அடுக்கு மாடி கட்டிடங்கள் வந்து விட்டது


இந்த பூக்கார தெருவில் தெருவில் தான் , ஒரு மொட்டு பருவத்தில் மலராமல் நீண்ட காலம் காத்திருந்தது . கிட்ட தட்ட தனது 25 வயதில் தான் மலர்ந்தது என கேள்விப்பட்டேன்.

No comments:

Post a Comment